லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

அமெரிக்காவுக்கு பெண் அதிபர் சாத்தியமில்லையா?

அமெரிக்காவுக்கு பெண் அதிபர் சாத்தியமில்லையா?
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்காவுக்கு பெண் அதிபர் சாத்தியமில்லையா?

உலகம்வி.எஸ்.சரவணன், கே.அபிநயா

அமெரிக்காவுக்கு பெண் அதிபர் சாத்தியமில்லையா?

ந்தியா விடுதலை பெற்ற 20 ஆண்டுகளில் பிரதமராக ஒரு பெண் (இந்திரா காந்தி) தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவிலோ கடந்த இருநூறு ஆண்டுகால வரலாற்றில் ஒரு பெண் அதிபர்கூட இல்லை. இப்போது நடந்துமுடிந்திருக்கும் 45-வது அதிபருக் கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவியும் முன்னாள் செனட்டர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலரி கிளின்டனும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் போட்டியிட்டார்கள். பல்வேறு கருத்துக் கணிப்புகளும் ஹிலரியே வெற்றி பெறுவார் எனச் சொல்லி வந்தன. தேர்தல் முடிவுகளோ அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டன. ஓரிரு சதவிகித வாக்குகளே அதிகம் பெற்று ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஒரு பெண் அதிபராவது இந்த முறையும் இல்லை என்றே ஆகிவிட்டது.

ஹிலரியின் தோல்விக்கு என்ன காரணம்? பெண் என்பதாலேயே அமெரிக்கர்கள் ஒதுக்கித் தள்ளுகிறார்களா? இந்தக் கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் வாஸந்தியிடம் வைத்தபோது, “இந்தியாவில் பெண்ணுக்கு தெய்விகக் குணங்களைச் சூட்டி விடுவார்கள். பின் அதையே முன்மொழிந்து தேர்தலில் வெற்றி பெறச் செய்துவிடுவார்கள். வாக்குகளைச் சேகரிக்கும் வசீகரம்தான் இங்கு முக்கியம். அமெரிக்காவிலோ அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஒரே நோக்கம். அந்நோக்கத்துக்கு ஒரு பெண் தகுதியானவரா என்பதே அங்கு பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு பெண் அதிபர் சாத்தியமில்லையா?


அமெரிக்கா அதிபர் என்பது உலகம் தழுவிய அளவில் பெரிய அதிகாரப் பொறுப்பு என்றே அங்கு கருதப்படுவதால், அதை ஒரு பெண் ஏற்று திறம்பட செய்ய முடியும் எனும் நம்பிக்கை அமெரிக்கர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட ஆண் மனநிலையோடுதான் பெண் சமூகமும் இயங்கி வருகிறது.

தெற்கு அமெரிக்கா, டெக்சாஸ் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரம்ப்க்கு கிடைத்திருக்கும் வெற்றி ஆச்சர்யத்தைத் தருகிறது. கறுப்பின மக்கள் வாழும் பகுதியிலும் ட்ரம்ப் பெற்ற வாக்குகள் எதிர்பாராததுதான். ட்ரம்ப் வெற்றிக்கு இன்னும் சில காரணங்களைப் பார்க்க முடியும். ஜனநாயகக் கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்திருக்கிறது. அதனால், ட்ரம்ப்பை முன்னிறுத்திய குடியரசுக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. வேலையில்லாத் திண்டாட்டம், தொழிற்சாலைகள் மூடல் உள்ளிட்ட பலவும் மக்களிடையே ஜனநாயகக் கட்சிக்கு எதிரான கோபத்தை உருவாக்கியிருந்தது.

ஹிலரி கிளின்டனின் தோல்வியில், மின்னஞ்சல் விவகாரமும் ஒரு காரணம். என்னதான் ஹிலரி கிளின்டன் ஒரு பெண் என்றாலும், பெண்ணியவாதிகள் பலரும் அவரைப் பெண்களுக்கு ஆதரவான செயல்பாடுகள் கொண்டவராகப் பார்க்கவில்லை. கிளின்டன் அதிபராக இருந்தபோது, ஒரு பாலியல் புகாரில் அவர் சிக்கினார். இந்த விவகாரத்தில் ஹிலரியின் மௌனச் செயல்பாடுகள் பெண்ணியவாதிகளுக்கு அதிருப்தி தந்தன. அதிகாரத்தின் ருசியை அனுபவிப்பவராகவே ஹிலரியைப் பார்த்தனர்” என்கிறார் வாஸந்தி.

அமெரிக்காவுக்கு பெண் அதிபர் சாத்தியமில்லையா?இதுபற்றி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரான உ.வாசுகியிடம் கேட்டபோது... 

“அமெரிக்க அதிபர் தேர்தல்... ஆண், பெண் என்று பார்க்கப்படவில்லை. குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என்றுதான் பார்க்கப்பட்டது. ஹிலரி, ட்ரம்ப் இருவரும் முன்வைத்த கொள்கைகளிலும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. அமெரிக்காவில் இருக்கும் பெரும் தொழில் அதிபர்களுக்கு ஆதரவான கொள்கை களைத்தான் இருவரும் முன்வைத்து பிரசாரம் செய்தார்கள்.

`பெண் என்றால் போர் புரிய மாட்டார், ஊழல் செய்யமாட்டார் அதனால்தான் ஹிலரி வெற்றி பெறவில்லை' என்று பேசுவது அர்த்தமற்றது. அமெரிக்காவில் இருக்கும் சாதாரணப் பெண்களின் முன்னேற்றத்துக்கான கொள்கை எதையும் ஹிலரி முன் வைக்க வில்லையே? ஹிலரி ஒரு பெண்ணாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சி யினுடைய கொள்கைகளின் பிரதிநிதி தான். அக்கட்சியின் நிலைப்பாடுதான் இவரிடமும் இருக்கும்.

பெண்களை வெறும் போகப் பொருளாக பார்க்கும் ஆணாதிக்க மனநிலையும், பிற்போக்குக் கண்ணோட்டமும் கொண்டவர்தான் ட்ரம்ப். இதையெல்லாம் அமெரிக்க மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இருவரை யும் ஒப்பீட்டளவில் பார்த்தால் ஹிலரியைவிட பெரிய அபாயம் ட்ரம்ப் என்பதில் மாற்றுக் கருத்துஇல்லை. அமெரிக்காவில் முக்கியமான பொருளாதார பங்கு ஆயுதத் தொழில்தான். அதனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை உலகின் மற்ற நாடுகளில் போரை உருவாக்குவது அல்லது போருக்கான சூழலை உருவாக்குவது... இதை முன்னெடுப்பது யார் என்பதைத் தான் பெரும்பான்மை அமெரிக்க மக்கள் எப்போதுமே பார்ப்பார்கள். இந்தத் தேர்தலிலும் அப்படியொரு நம்பிக்கையோடு ட்ரம்ப்பை தேர்ந்தெடுத்திருக்கிறது அந்த பெரும்பான்மை சமூகம்” என்றார் வாசுகி.