லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

30 நாள் அவள் சேலஞ்ச்

சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

வள் விகடன் நடத்திய ஜாலிடே நிகழ்ச்சி ஒன்றில் அவள் வாசகி மேடையில் ஏறி பகிர்ந்துகொண்ட செய்தி இது...

``என்னுடையது காதல் திருமணம். இரு வீட்டார் ஆதரவும் இல்லாமல் கணவரும் நானுமாகத்தான் எங்கள் வாழ்க்கை தொடங்கியது. பகலில் உழைத்தால் இரவில் உணவுச் செலவுக்குப் பணம் கிடைக்கும் என்கிற நிலை எங்களுக்கு. ஆனால், இருதரப்பு பெற்றோரும் வசதிக்குக் குறைவற்றவர்கள். அவர்கள் முன் எங்கள் நிலையை ஒப்பிட்டுச் சொன்னால், `அவர்கள் ராஜ்ஜியம்... நாங்கள் பூஜ்ஜியம்'. ஊரும் உறவுகளும் எங்களை இளக்காரமாகப் பார்த்தன. அந்த ஏளனத்தையே எனக்கான சவாலாக எடுத்துக்கொண்டேன். அதுதான் எனக்குக் கிடைத்த வரம். அதுதான் எனக்குள் கிடந்த திறமை வைரத்தை பட்டை தீட்டிய கூர் ஆயுதம்.

கடைசி வரை கணவன் - மனைவியாக எங்கள் கைப்பிடியைத் தளர்த்தாமல் வாழ்ந்து, காதலை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதே நேரம், பொருளாதார வசதியிலும் அவ்விரு வீடுகளைக் காட்டிலும் ஒரு பைசாவேனும் அதிகமாகச் சம்பாதித்துவிட வேண்டும். அதையும் முடிந்தவரை விரைவாக நிகழ்த்திட வேண்டும் என்று மனதில் ஒரு வைராக்கிய விளக்கை ஏற்றி வைத்தேன். அந்த நொடியிலிருந்து அது அணையா விளக்கானது.

கணவர், அவருக்குத் தெரிந்த தொழிலில் கவனம் செலுத்தினார். நான் அதுவரை தெரியாத தொழில்கள், கலைகள் என கண்டது, கேட்டதை எல்லாம் கற்றுக்கொண்டேன். தையல் பழகினேன். குழந்தைகள் காப்பகம் நடத்தினேன். கணவர் தொழிலையும் புரிந்துகொண்டு உழைப்பில் பங்குதாரர் ஆனேன்.

பத்து வருடங்கள்... வெறும் பத்தே வருடங்கள்... எங்கள் உழைப்பால் பெற்ற செல்வமும் செல்வாக்கும் முன்னோக்கிச் செல்ல ஆரம்பித்தன.

இன்று என்னை நான் மிகப் பெருமிதமாக உணர்கிறேன். காரணம்... என் பெயரோ, புகழோ, பணமோ அல்ல. என்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நானே கண்டறிந்து, என்னை நானே செப்பனிட்டு செதுக்கி, சரி - தவறுகள் அறிந்து சுயமாக முன்னேற்றிக்கொண்ட என் ஆளுமையை பெருமையாக உணர்கிறேன். மகிழ்கிறேன்.

‘கல்லைக்கட்டி கடலில் விடுகிறோம்... சாமர்த்தியம் இருந்தால் கரையேறு’ என்பதைப்போல எங்களை வெறுங்கையுடன் வீதியில் விட்ட உறவுகளுக்கு மனதார நன்றி சொல்கிறேன்...''

- உணர்ச்சிப் பெருக்கோடு அந்த வாசகி சொல்லி முடித்தபோது அரங்கில் எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரமானது. அந்தக் கரவொலியில் `உங்களைப் போல நாங்களும் எங்களை உற்றுநோக்கி உணர்ந்து வெற்றிபெற விரும்புகிறோம்’ என்ற புத்துணர்வு வேகம் இருந்ததை நம்மால் உணர முடிந்தது.

யெஸ்... பெண்சக்தி எனும், ஏற்றப்படாத தீபம் ஒன்று, கவனிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. என்றாவது அதன் மீது துளி வெப்பம் தெளித்தால் போதும்... அது தன்னைத்தானே பிரகாசித்து சுற்றத்துக்கும் வெளிச்சம் பாய்ச்சும். அப்படி ஒரு துளி தீயைச் சுண்டிவிடும் வேலையைத்தான் அவள் விகடன் கையிலெடுத்திருக்கிறது.

நீங்கள் யார் என்பதை எங்களுக்கு சொல்லுங்கள். `இவர்களைப் பாருங்கள்' என உங்களைப்பற்றி உலகுக்கு நாங்கள் சொல்கிறோம்.

கடந்த இதழ்களில் வெளியான அவள் சேலஞ்ச் அறிவிப்பை பார்த்த வாசகியர் பலர் அவரவருக்கு தோதான சவால்களை தேர்வுசெய்து அதை நமக்கு தெரிவித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அடுத்த பக்கத்தில் பார்க்கலாம். இந்தப் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெறலாம்... உங்களை நீங்கள் உணரத் தயாராக இருந்தால்! தீபமேற்ற நாங்க ரெடி... பிரகாசிக்க வாருங்கள்!

வள் சேலஞ்சில் பங்கெடுக்க இந்த கேட்டகரி களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் யோசித்திருக்கும் சாதனை இப்பட்டியலில் அடங்காவிட்டாலும் கவலை வேண்டாம். அவற்றையும் சிறப்பு சேலஞ்சாக கருதி பரிசீலிப்போம்.

இவை மட்டுமல்ல... வியக்க வைக்கும், அசாதாரணமான, அபாரமான எந்தவொரு சாகச சவாலையும் தகுந்த பயிற்சி மற்றும் பாதுகாப்புடன் நீங்கள் சந்திக்கலாம்!

சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

உங்கள் சவால்களை அனுப்ப வேண்டிய முகவரி:

அவள் சேலஞ்ச், அவள் விகடன்,
757 அண்ணா சாலை, சென்னை - 600 002. email: aval@vikatan.com

எண்ணம் செயலாவது அழகு!

அவள் வாசகிகளின் அருமையான சவால்கள்

சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

வள் சேலஞ்ச் அறிவிப்பு வெளிவந்த முதல்நாளில் இருந்தே ஆயிரக்கணக்கான வாசகிகள் ஆர்வமாக விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். பலர் தங்கள் சவாலை செய்யவே தொடங்கிவிட்டார்கள். பள்ளி-கல்லூரி மாணவிகளாக உள்ள அவள் வாசகிகளிடமிருந்தும் கடிதங்கள் வந்து எங்களை ஆச்சர்யப்பட வைத்துக்கொண்டுள்ளன.

* விவசாயம் பற்றி ஓரளவாவது அறிந்து, அது பற்றி குழந்தை களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதுதான் மதுரை அருகிலுள்ள பொதும்புவைச் சேர்ந்த சக்தி மாணிக்கவல்லியின் சவால். இதற்காக 30 நாட்கள் தொடர்ந்து களத்தில் இறங்க இருக்கிறார்.

* ‘மொழி பிரிவில் எந்தச் சவாலையும் சந்திக்கத் தயார்', என்கிறார் சென்னை, வடபழனியைச் சேர்ந்த சீனியர் வாசகி சுதா விஸ்வநாதன். இதேபோல, ஆறு மாதங்களில் திருமணம் செய்ய இருக்கிற மருத்துவக் கல்லூரி மாணவி ப்ரியங்கா, தமிழ் தெரியாத புகுந்த வீட்டினரோடு சகஜமாகப் பேசுவதற்காக 30 நாட்களில் இந்தி கற்றுக்கொள்கிறார்.

* ‘பத்து வயது முதலே கார் ஓட்ட ஆசை. இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது 40 வயது. ஆனாலும், அவள் சவாலில் பங்கேற்று 30 நாட்களில் முறைப்படி கார் ஓட்டக் கற்றுக்கொள்ளப் போகிறேன்’ என்கிறார் பொன்னேரியைச் சேர்ந்த சுமதி ரமேஷ்.

* அவள் விகடனின் 30 பக்கங்களை 30 நாள் சவாலில் தயாரிக்க விரும்புகிறார் விழுப்புரம் வாசகி சுமதி கோபால்.

சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

* 30 நாள் சவாலில் குழுவாகப் பங்கேற்று பள்ளித் தோட்டம் அமைக்க இருக்கிறார்கள் சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணித் திட்ட மாணவிகள்.

* ‘நான் ஒரு சீனியர் சிட்டிசன். சாதனைக்கு வயது தடையில்லை என நிரூபிக்க ஆசைப்படுகிறேன். 30 நாட்களில் 30 பாடல்கள் பாட நான் தயார்’ என்கிற  சென்னை வளசரவாக்கம் ராஜேஸ்வரி, தான் பாடிய பாடலையும் பதிவுசெய்து அனுப்பியிருக்கிறார்,

* ‘நானே தமிழில் டைப் செய்யவும், இ-மெயில் அனுப்பவும் கற்றுக்கொண்டு, ‘இந்த முக்கால் சத வயசிலே பாட்டிக்கு என்ன, வேறு வேலை இல்லாமல்’ என்று கேலி செய்யும் பேரன் பேத்திகளிடம் என் சாதனையைக் காட்டி பெருமையடையணும் என்று  லேப்டாப்பும் கையுமாக முனைந்திருக்கிறேன்...’ என்கிறார் பெங்களூரு பாமதி நாராயணன்.

* கிளாஸ், டைல், காபி, ஃபேப்ரிக், பாட் ஆகிய பெயின்ட்டிங் முறைகளிலும், ஃப்ரிட்ஜ் மேக்னட், தோரணம், வால் ஹேங்கிங், கீ ஹோல்டர், காபி மக் என வெவ்வேறு பொருட்களிலும் 30 நாட்களில் 30 விநாயகர்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் மதுரை யாழினி. அவரது அம்மா 30 நாட்களில் 30 நெளிவு கோலங்கள் போட இருக்கிறாராம்.

(சவால்கள் தொடரும்!)