லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

பாவாய்... பூம்பாவாய்! - சிறுகதை

பாவாய்... பூம்பாவாய்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
பாவாய்... பூம்பாவாய்! - சிறுகதை

ஓவியம்: ஸ்யாம்

பாவாய்... பூம்பாவாய்! - சிறுகதை

விறுவிறுவென வீசிக்கொண்டிருந்த ஊதக்காற்றோடு போராடி, திமிலர்கள் கரை நோக்கி திமிலைச் செலுத்திக்கொண்டிருந்தனர். இன்னும் சில வங்கங்களும் வல்லங்களும் நாவாய்களும் கடலில் மிதந்து கொண்டிருந்தன. பரதவ குலப் பெண்கள் இரவு ஆகாரத்துக்காகப் புளியும் மிளகும் சேர்த்துக் குழம்பு செய்துகொண்டிருந்தனர். ஆங்காங்கே இருளை விரட்ட தீச்சுளுந்துகள் ஏற்றப்பட்டிருந்தன. கடலோடிவிட்டு வந்த பரதவர் கைகளில் விரால், கனவா, மத்தி மீன்களும், சிலரிடம் சிவப்பு இறால்களும் நிறைந்திருந்தன. இரை தேடிச் சென்ற குருகுப் பறவை கூட்டங்களும், கடலின் மேற்பரப்பில் நீந்திய மீன்குஞ்சுகளைப் பசியாற உண்டுவிட்டு, புன்னைத் தோப்புக்கு விரைந்துகொண்டிருந்தன.

பாவாய்... பூம்பாவாய்! - சிறுகதை நெய்தல் நிலமே இரவை வரவேற்க ஆயத்தமாக இருக்க, மங்கை ஒருத்தி மட்டும் அலங்காரம் செய்துகொண்டு, யாரையோ எதிர்பார்க்கும் விழிகளுடன், புறப்பட்டுக்கொண்டிருந்தாள்... அவள் பூம்பாவை. வந்தாள் தோழி குழலி.

``நீ காதல் கொண்டுள்ளவர் யாரென்று திட்டமாகத் தெரியாத போதும், அவரது உயர்குலத்துக்கு முன்னே நிச்சயமாக நம்மால் நிற்க இயலாது... ஒருநாளும் இஃது ஈடேற சாத்தியமில்லை, புரிந்துகொள்ளடி'' என்று அலுப்புத் தட்டிய குரலில் குழலி எச்சரித்துக்கொண்டிருந்தாள்.

``பாங்கி! உனது அச்சம் வீண். நான் என்னவரை சந்தித்துவிட்டு விரைவில் வந்துவிடுகிறேன்....'' என்று கூறி, நிற்காமல் நழுவி நழுவிச் செல்லும் வாளை மீனைப் போல, அவ்விடம் விட்டு விலகினாள்.
தோப்புக்குள் ஊடுருவியவளை எதிர்பாராவண்ணம் பின்னிருந்து இரு வலிய கைகள் அள்ளி அணைக்க, அந்த அணைப்புக்குள் விருப்பத்துடன் சிறைப்பட்டபடியே, ``தங்களை வெகு நேரமாகக் காத்திருக்க வைத்துவிட்டேனா?'' என்று கொஞ்சினாள்.

``உனக்காகக் காத்திருப்பதும் சுகம்தானடி பெண்ணே" என்று கூறிய கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரன், பாவையின் தலைவன். 

``எங்கே எனது பரிசு..?'' என்று வழமையான குரலில் கண்களில் ஆவல் மின்ன, தலைவனிடம் கேட்டாள் பாவை. அடும்பக்கொடி அருகே மறைத்து வைத்திருந்த அழகிய தாழை மலரை கைகளில் எடுத்தவன், அதைத் தானே பாவையின் குழலில் சூட்டினான். மெள்ள மெள்ள காதல் உலகிலிருந்து விடுபட்ட வேந்தன், பாவையிடம், ``கண்மணி, முக்கிய அலுவலாக தந்தை செல்கிறார். அவருக்கு உறுதுணையாக நானும் இன்றே புறப்படுகிறேன். எனது பணி நிறைவுபெறும் தருணம் உன்னைத் தேடி வருவேனடி. எனக்காகக் காத்திருப்பாய்தானே?'' என்று காதலுடனும், கண்களில் ஒருவித உறுதியுடனும், கூற்றின் இறுதியில் ஏக்கத்துடனும் கேள்வியை முன்வைத்தான்.

``நிச்சயமாக... ஆயினும் தங்களைக் காணாது எவ்வாறு என் நாட்கள் கழியும்? தங்களைக் காண இப்பேதை காத்திருப்பாள்" என்று பிரிவினால் ஏற்பட்ட கலக்கம் கலந்து கூறினாள் பாவை.

பூம்பாவையின் மாற்றங்களையும் ஆசைகளையும் ஓர் வலியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் குழலி.  மூன்று பௌர்ணமிகள் முழுதாக நிறைவுபெற, மன்னவன் வருகைக்காக வாசலில் காத்திருந்த பாவையிடம், ஓடோடடி வந்த குழலி, ``தோழியே! நமது அரசர் போரில் வென்றார்.... போர்க்களத்திலிருந்து நமது தலைநகர் போகின்ற வழிகளிலெல்லாம் மக்களைச் சந்தித்தபடியே செல்கிறாராம்.... திமிலர் அனைவரும் ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர். கடற்மணலில் ஆனந்தக் கூத்து ஆரம்பமாக இருக்கிறது. விரைந்து வாடி...'' என்று வருந்தி அழைக்க, அசிரத்தையாக பின்தொடர்ந்தாள் பாவை.

விடாது ஒலித்துக்கொண்டிருந்த கூச்சல்களுக் கிடையே முன்னேறி சென்ற பாவையின் கண்கள், தேரில் கம்பீரமாக வீற்றிருந்த தனது மன்னவனிடம் நிலைத்தன. உடனே சூழல் மறந்தாள். சுற்றம் மறந்தாள். தன்னிலை மறந்தாள். விழி விரித்து காதலனை பார்வையால் விழுங்கிவிட ஆர்வம்கொண்டிருந்த பாவையை, அதற்குச் சற்றும் சளைக்காத வகையில் பார்த்துக்கொண்டிருந்தான் இளவரசன்.

அப்போது , பரதவ ஆடவர் திடீரென்று எழுப்பிய புது முழக்கத்தினால், அந்த காதல் மாயவலை பட்டென்று அறுபட்டது.

``வாழ்க பட்டத்து இளவரசன், வாழ்க வாழ்க!''

முழக்கங்கள், பாவையின் தலைவனை நோக்கி எழுப்பப்பட்டன. நாட்டின் இளவரசன், பாவையின்  நாயகன் கம்பீரமாக மக்கள் கூட்டத்தைப் பார்த்து கையசைத்தான்.

`இன்றைய இளவரசனா... நாளைய மன்னனா எனது மன்னவன்?' என்கிற கேள்வி உள்ளத்தே எழ, மருண்ட விழிகளைக் கூட்டத்தை நோக்கியும், மாமன்னரை நோக்கியும், இளவரசனான தனது காதலனை நோக்கியும் ஓட்டினாள்.

`பரதவப்பெண் பட்டத்தரசியா? சாத்தியமா?' என்ற கேள்விகளை மனதோடு தொடுத்தாள்.

மறுபுறம் இளவரசனோ, என்ன கண்மணி... இன்ப அதிர்ச்சி கொண்டாயா? உன்னவன்தான் இந்நாட்டின் இளவரசன் என்று கண்டுகொண்டு ஆனந்த வெள்ளத் தினிலே மூழ்கிக்கொண்டிருக்கிறாயா? விரைவில் உன்னைக் காணவருவேனடி கண்ணே. எனக்காகக் காத்திரு....'  என மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

பாவைதான் தனது சரிபாதி என்ற தெளிவான முடிவுடன் தலைவன் காதல் நெஞ்சத்தோடு புறப்பட, அவனது எண்ணங்களை அறிய முடியாத பேதையாகி நின்றாள் பாவை. முன்பு ரசித்துப் பார்த்த அதே இடங்களும் ஜீவராசிகளும் வேப்பையாகச் சுவைக்க, ஆவிலம் போல பரிதவித்துக் கொண்டிருந்தாள்.

நீண்ட நெடிய யோசனைக்குப் பிறகு, தீர்க்கமான முடிவெடுத்தவளாக, பாவை தனக்குள் சூளுரைத்துக் கொண்டாள்.

`எக்காரணம் ஆகினும் என்னவரை நான் ஊரறிய மணக்க இயலாது. என் தலைவன் பாராளும் நாயகன். எங்களது மணமானது நிகழுமாயின் என்னை வைத்து அவருக்கு இழுக்கு ஏற்படலாம். அஃது நடக்க ஒருநாளும் நான் அனுமதிக்கமாட்டேன். அவரை என்னிடமிருந்து விலக்குவதே, அவரது வாழ்க்கைக்கு அதி உத்தமம். என் நாதனின் வளமான வாழ்வே எனது வாழ்க்கை...''

அழுது வீங்கிய கண்களை அழுந்த தேய்த்து துடைத்தவளால், துவண்டு வீழ்ந்த நெஞ்சத்தைத் தூக்கி நிறுத்த இயலாது போகவே, `ஒருநாளும் இஃது ஈடேற சாத்தியமில்லை ' என்று தனக்குள்ளே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டவள், அஃது குழலி கூறிய அதே வாக்கியம் என்றுணர்ந்து, கசப்பான முறுவல் ஒன்றை இறுதியாக அவளது அதரத்தில் மலரச்செய்தாள்.

பொருள்

திமிலர்கள், பரதவர்கள் - மீன் பிடிப்பவர்கள், படகு செலுத்துபவர்கள்

வங்கம், வல்லம், நாவாய் - மரக்கலங்கள்

குருகு - நெய்தல் நில பறவை

மத்தி - மீன் வகை

அடும்பக் கொடி - நெய்தல் தாவரம்

ஆவிலம் - கலங்கிய நீர்

வண்டல் - ஒளிந்து விளையாடும் விளையாட்டு

பாங்கி - தோழி