லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

30 வகை சிறுதானிய உணவுகள்!

30 வகை சிறுதானிய உணவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
30 வகை சிறுதானிய உணவுகள்!

30 வகை சிறுதானிய உணவுகள்!

30 வகை சிறுதானிய உணவுகள்!
30 வகை சிறுதானிய உணவுகள்!

ன்றைய தலைமுறையினர் ‘ஜங்க் ஃபுட்’டை தவிர்த்து ஹெல்த்தி உணவுக்கு மாறிவரும் இந்தச் சூழ்நிலையில் ஹெல்த்தி உணவு வகையில் முக்கிய இடம் வகிக்கும் நமது பாரம்பர்யமிக்க சிறுதானிய உணவு வகைகளை செய்து காட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்.

மூங்கில் அரிசி பிரியாணி

தேவையானவை: மூங்கில் அரிசி - 200 கிராம், பொடியாக நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி (எல்லாம் சேர்ந்து) - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவைக்கேற்ப, நெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

அரைக்க: பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி மற்றும் புதினா தழை இரண்டும் சேர்ந்து - அரை கப், இஞ்சி - ஒரு துண்டு, தனியா, கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்.

தாளிக்க: பட்டை - சிறிய துண்டு, ஏலக்காய், லவங்கம் - தலா 3, பிரிஞ்சி இலை - சிறிது.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை: மூங்கில் அரிசியை 6 மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்க வும். அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதங்கி, பின் காய்கறி சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும். கொதிவந்தந்தும் மூங்கில் அரிசியை சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

மூங்கில் அரிசி ஈஸி புளியோதரை

தேவையானவை: மூங்கில் அரிசி - 200 கிராம், புளி - சிறிய எலுமிச்சை அளவு, உப்பு, மஞ்சள்தூள்  - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

தாளிக்க: நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:  மூங்கில் அரிசியை 6 மணி நேரம் ஊறவைத்து, உதிரியாக சாதம் வடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்துத் தாளித்து, புளியை அரை டம்ளர் தண்ணீ ரில் கெட்டியாக கரைத்துச் சேர்க்க வும். கொதி வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியான பின் ஆறவைக்கவும். இதை மூங்கில் அரிசி சாதத்துடன் சேர்த்துக் கிளறிவிட, மூங்கில் அரிசி ஈஸி புளியோதரை ரெடி.

ராகி கொழுக்கட்டை

தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள், நெய் - தலா ஒரு டீஸ்பூன், துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை: முக்கால் கப் வெல்லத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொதிக்க வைத்து இறக்கி ஆற விடவும். பிறகு வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்க்க வும். இதில் சிறிது சிறிதாக ராகி மாவைத் தூவி, கட்டியின்றிக் கிளறவும். கலவையை இறக்கி ஆற விடவும். ஆறிய மாவை சிறு சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து 5 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அபாரமான ருசியில் இருக்கும் இந்தக் கொழுக்கட்டை இரண்டு நாட்கள்வரை கெடாது.

ராகி லட்டு

தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், பொடித்த சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்ப்பொடி - கால் டீஸ்பூன், சிறுசிறு பல்லாக நறுக்கிய தேங்காய் - 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 150 மில்லி.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துச் சூடாக்கி அதில் தேங்காய் சேர்த்து சிவக்க வறுக்கவும். இத்துடன் ராகி மாவு சேர்த்து பச்சைவாசனை போக வறுத்து, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்ப்பொடி, வறுத்த முந்திரி
மற்றும் உலர் திராட்சை சேர்த்துப் பிசிறி சுடச்சுட நெய்விட்டு விரும்பிய அளவில் உருண்டை களாகப் பிடிக்கவும்.

ராகி மெதுபக்கோடா

தேவையானவை: ராகி மாவு - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், பச்சரிசி மாவு - 20 கிராம், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, சிறிய வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) - அரைகப், நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் - தலா இரண்டு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  அகலமான பாத்திரத்தில் சோடா உப்பு, வெண்ணெய் சேர்த்து நுரைத்து வருமளவுக் குழைத்து விடவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் அதில் சேர்த்து சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

ராகி சுண்டல்

தேவையானவை: ராகி மாவு - அரை கப்,  எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், துருவிய தேங்காய், கேரட் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு. உப்பு - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - தேவையான அளவு, உடைத்த உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:  ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதை ராகி மாவில் ஊற்றி கெட்டியாகக் கிளறவும். ஆறியதும் கட்டியின்றி பிசைந்துகொள்ளவும். கையில்  எண்ணெய் தடவிக்கொண்டு, மாவை எடுத்து சிறு சிறு பட்டாணி அளவு உருண்டைகளாக உருட்டி, 5 நிமிடம் ஆவியில் வேகவிடவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், அதில் ராகி உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி, தேங்காய் மற்றும் கேரட் துருவல், எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும்.

ராகி ஸ்வீட் சீடை

தேவையானவை: ராகி மாவு - 5 டேபிள் ஸ்பூன் (75 கிராம்), பச்சரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன், வறுத்து அரைத்த உளுந்து மாவு - 2 டீஸ்பூன் (அனைத்து மாவுகளையும் சேர்த்து நன்கு சலிக்கவும்), பாகு வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த வெள்ளை எள் - தலா ஒரு டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் - கால் கிலோ, நெய் - 1 ஸ்பூன்.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை: வெல்லத்தைப் பொடித்து 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, 1 டீஸ்பூன் நெய், ஏலக்காய்த்தூள், எள் சேர்க்கவும். பிறகு சலித்த மாவை இதில் சிறிது சிறிதாகத் தூவி கட்டியின்றிக் கிளறவும், ஆறிய பின் சிறு சிறு சீடைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். சத்தும் சுவையும் நிறைந்த சீடை இது.

வரகரசி - மிளகு மினி இட்லி

தேவையானவை: வரகரிசி - 200 கிராம், பச்சரிசி - 50 கிராம், முழு உளுந்து - 100 கிராம், மிளகுத்தூள்,  அவல் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  பச்சரிசியுடன் அவல் சேர்த்துக் களைந்து ஊறவைக்கவும். வரகரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே ஊறவிடவும். அனைத்தும் 4 மணி நேரம் ஊறினால் போதும். எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து வைக்கவும். மாவு புளித்துப் பொங்கியவுடன் மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

வரகரசி - கொள்ளு அடை

தேவையானவை: வரகரிசி - 100 கிராம், கொள்ளு - 25 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டும் சேர்ந்து - 50 கிராம், காய்ந்த  மிளகாய் - 8, சீரகம், பெருங்காயம் - தேவையான அளவு, ஓமம் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, துருவிய கேரட் / கோஸ் /முருங்கைக் கீரை தளிர் - நறுக்கியது - ஒரு சிறிய கப். உப்பு - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  வரகரிசி மற்றும் கொள்ளுடன் காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஓமம் என அனைத்தையும் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைக்கவும். கொரகொரவென அரைக்கவும். 2 மணி நேரம் கழித்து துருவிய கேரட் அல்லது நறுக்கிய கோஸ் /முருங்கைக் கீரை தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கலந்து, தோசைக்கல்லை சூடாக்கி தேங்காய் எண்ணெய் விட்டு அடைகளாகச் சுட்டெடுக்கவும்.

வரகரசி ஆப்பம்

தேவையானவை: வரகரிசி - அரை கப், புழுங்கலரிசி மற்றும் பச்சரிசி இரண்டும் சேர்த்து - அரை கப், வெந்தயம் - கால் டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், இளநீர் - கால் கப், துருவிய தேங்காய் - கால் கப், சோடா உப்பு - தேவையான அளவு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் களைந்து கொள்ளவும். இக்கலவையுடன் தண்ணீர் விட்டு நன்கு களைந்த வரகரிசியை ஒன்றாகச் சேர்த்து மூழ்குமளவுக்கு நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிடவும். இதனுடன் தேங்காய் சேர்த்து கெட்டியாக மைபோல் அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைத்து மறுநாள் காலை இளநீர், சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து தோசை மாவைவிட சற்றுத் தளர்வாகக் கரைத்துக்கொண்டு, ஆப்பச் சட்டியில் ஆப்பமாக வார்த்து எடுக்கவும்.

வரகரசி தாளித்த பொங்கல்

தேவையானவை: வரகரசி சாதம் - ஒரு கப், பச்சைப்பருப்பு - 50 கிராம் (குழைவாக வேகவிட்டது),  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நெய் - 50 கிராம், எண்ணெய் - 25 கிராம், புளிக்கரைசல் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய் - தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் இரண்டும் சேர்த்து - அரை டீஸ்பூன், முந்திரி - தேவையான அளவு. கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: குக்கரில் வைத்த வரகரிசி சாதம் வெந்ததும், அதை அடுப்பிலிருந்து இறக்காமல் அதனுடன் வெந்த பச்சைப்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளிக்கரைசல், எண் ணெய் அனைத்தையும் சேர்த்து நன்கு சேர்ந்து வருமாறு (பொங்கல் பதம்) கிளறி எடுக்கவும். நெய்யில் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து இதில் சேர்க்கவும். சுவையான பொங்கல் தயார்.

வரகரசித் தட்டை

தேவையானவை: வரகரசி மாவு (கடைகளில் கிடைக்கிறது) - ஒரு கப், பச்சரிசி மாவு - 3 டீஸ்பூன், பொட்டுக் கடலை மாவு - கால் கப், ஊறவைத்த உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - தேவையான அளவு, கொத்த மல்லித்தழை மற்றும் பச்சைமிளகாய் விழுது இரண்டும் சேர்த்து - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 300 கிராம், தண்ணீர் மற்றும் உப்பு - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை: வரகரசி மாவைச் சலித்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறிய பின் எண்ணெய் தவிர பிற பொருட்கள் அனைத்தையும் கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்கு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கைகளில் எண்ணெயைத் தடவிக்கொண்டு, மாவை சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, தட்டையாகத் தட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.

கம்பங்களி

தேவையானவை: கம்பு நொய் (கடைகளில் கிடைக்கிறது) - ஒரு கப், பச்சரிசி நொய் - 3 டீஸ்பூன், - பச்சைமிளகாய் - 4 (நறுக்கியது), பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கியது), எண்ணெய் - அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை நறுக்கியது - சிறிது, தயிர் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு, எண்ணெய் சேர்த்து கொதி வருகையில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்க வும். பின் கம்பு நொய் மற்றும் பச்சரிசி நொய் சேர்த்து, அடிப்பிடிக்காதவாறு அடிக்கடி கிளறி கெட்டியாக வேக விடவும். வெந்ததும் இறக்கி ஆறிய பின் பரிமாறவும். முதல் நாள் இரவு கம்பங்களி செய்து அது மூழ்குமாறு தயிர் விட்டு மறுநாள் காலை சாப்பிட, அமிர்தமாக இருக்கும்.

கம்பங்கூழ்

தேவையானவை: கம்பு மாவு(கடைகளில் கிடைக்கிறது) - அரை கப், கைக்குத்தல் அவல் பொடித்தது - 2 டேபிஸ்ஸ்பூன், மோர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை, மோர் - 2 டம்ளர்.

செய்முறை:  கம்பு மாவு, பொடித்த கைக்குத்தல் அவல் இரண்டையும், தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து கலவையில் சேர்க் கவும். இறுதியாக மோர் சேர்த்துக் கலந்து பருகவும்.

கம்பு ரொட்டி

தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், கோதுமை மாவு - கால் கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், மாங்காய்ப்பொடி (அமெச்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சுட்டு எடுக்க நெய்  - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:   நெய் தவிர பிற பொருட்கள் அனைத்தையும் கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ரொட்டிகளாகத் தட்டி.. நெய் விட்டு இரு புறமும் வேகவைத்து எடுத்தால் ரொட்டி ரெடி.

கம்பு - பனைவெல்லப் பணியாரம்

தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - அரை கப், கரைத்து வடிகட்டிய பனை வெல்ல நீர் - ஒன்றரை கப்(150 கிராம் பனைவெல்லம் போதுமானது), ஒன்றிரண்டாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சுக்குப் பொடி - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, சோடா உப்பு - சிட்டிகை.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  மாவு வகைகளுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, வேர்க் கடலை, சோடா உப்பு, பனைவெல்ல நீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். அரை மணி நேரம் கழித்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு ஒவ்வொரு குழியிலும், அரைக்குழி அளவுக்கு மாவு விட்டு வெந்த பின் திருப்பி, வேக விட்டு எடுக்கவும்.

குதிரைவாலி கோகனட் பாத்

தேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கப், கெட்டியான தேங் காய்ப்பால் - ஒரு கப், தண்ணீர்  - ஒரு கப், நெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, லவங்கம் - தேவையான அளவு, சர்க்கரை - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில், தண்ணீரில் நன்கு களைந்த குதிரைவாலி அரிசியுடன் தேவையான நீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம்  வெந்ததும்... உப்பு, தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்க்கவும். சாதம் வெந்தவுடன்... நெய்யில் தாளித்த ஏலக்காய், பட்டை, லவங்கத்தை கோகனட் பாத்தில் சேர்த்துக் கிளறி இறக்கினால்... வெள்ளைவெளேர் குதிரைவாலி கோகனட் பாத் ரெடி.

குதிரைவாலி கோஸ், கேரட் மசாலா

தேவையானவை: குதிரைவாலி அரிசி - அரை கப், நறுக்கிய கோஸ் மற்றும் கேரட் - தலா கால் கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் - 3 டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், கடுகு, சோம்பு - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை  நறுக்கியது - சிறிது, மல்லித்தூள் (தனியா) - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் நறுக்கியது - 2 டீஸ்பூன்.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை: குதிரைவாலி அரிசியை தண்ணீரில் களைந்து கொள்ளவும். குக்கரில் நெய் விட்டு சூடாக்கி கடுகு, சோம்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய காய்களைச் சேர்த்து வதக்கி மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் தண்ணீர் சேர்த்து கொதி வந்த பின் குதிரைவாலி அரிசியைச் சேர்த்து வெந்ததும் இறக்கி தக்காளி சாஸ் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

தினை கீர்

தேவையானவை: தினை அரிசி - அரை கப், சர்க்கரை - 100 கிராம், கோவா (சர்க்கரையில்லாதது) - 50 கிராம், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர்  திராட்சை  - தலா ஒரு டீஸ்பூன், கசகசா - 10 கிராம், ஏலக்காய் - 2, பால் - 2 டீஸ்பூன், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை: தினை அரிசியை தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து, குக்கரில் குழைய வேக விடவும். கசகசாவுடன் ஏலக் காய், பால் சேர்த்து விழுதாக அரைக்க வும். கோவாவை உதிர்த்து நன்கு பிசையவும். வெந்த தினையில் அரைத்த விழுது, உதிர்த்த கோவா, சர்க்கரை சேர்த்து கொதிவந்தபின் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்க்கவும். இறுதியாக குங்குமப்பூ தூவிப் பரிமாறவும்.

தினைத் தேன் உருண்டை

தேவையானவை: தினை மாவு (கடைகளில் கிடைக்கிறது) - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன், உருக்கிய நெய் - கால் கப், தேன் - கால் கப்.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  மாவு வகைகளுடன் ஏலக்காய்த்தூள், வெள்ளரி விதை மற்றும் தேன் கலந்து பிசைந்து, உருக்கிய நெய் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான தினைத் தேன் உருண்டை  ரெடி.

தினை சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை:  திணை - 100 கிராம், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 25 கிராம், நெய் - 50 கிராம், ஜாதிக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, நெய்யில் வறுத்த முந்திரி, தினை, பாதாம் - தலா ஒரு டீஸ்பூன், துருவிய கொப்பரை - 2 டீஸ்பூன், வெல்லம் - 150 கிராம்.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை: தினை மற்றும் பருப்பு வகைகளை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தேவையான அளவு நீர் விட்டு குழைய வேகவைக்கவும். வெல்லத் தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, தினைக் கலவையில் சேர்த்து, பொங்கல் பதம் வரும்வரையில் கிளறி இறக்கவும். சூடான நெய்யில் ஜாதிக்காய்ப் பொடி, துருவிய கொப்பரை சேர்த்து வறுத்து, பொங்கலில் சேர்க்கவும். இறுதியாக வறுத்த முந்திரி, தினை, பாதாம் சேர்த்துப் பரிமாறவும்.

சாமை ஊத்தப்பம்

தேவையானவை: சாமை - 100 கிராம், பச்சரிசி, ஜவ்வரி இரண்டும் சேர்த்து - 4 டேபிள்ஸ்பூன், உளுந்து - 25 கிராம், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

மேலே தூவ: பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது), பொடியாக நறுக்கிய கேரட், தக்காளி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், பொடித்த முந்திரி - 25 கிராம், ஊறிய கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் (அனைத்தையும் கலந்து வைத்துக்கொள்ளவும்).

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  சாமை, பச்சரிசி, ஜவ்வரிசி, உளுந்து அனைத்தையும் 2 மணி நேரம்
ஊறவைத்து அரைத்து, உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் தோசைக்கல்லைச் சூடுசெய்து எண்ணெய் விட்டு, மாவை தடிமனாக வார்த்து மேலே தூவவேண்டிய பொருட்களைத் தூவி, இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.

சாமை குணுக்கு

தேவையானவை:  சாமை - 50 கிராம், பச்சைப்பருப்பு, கொண்டைக்கடலை - தலா 25 கிராம், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது), நறுக்கிய கறிவேப்பிலை - தேவையான அளவு, எண்ணெய் - 200 கிராம், உப்பு - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற விடவும். மறுநாள் சாமை, பச்சைப்பருப்பு, பச்சரிசி அனைத்தையும் அரை மணி நேரம் ஊறவைத்து, இவற்றுடன் ஊறவைத்த கொண்டைக்கடலையையும் சேர்த்து ரவை ரவையாக  கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, சீரகம், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துப் பிசைந்து, சிறிது சிறிதாகக் கிள்ளி சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

சாமை டிலைட்

தேவையானவை: சாமை - 200 கிராம், பால் - அரை கப், கடைந்த தயிர் - ஒரு கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு மற்றும் பெருங் காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

மேலே தூவ: துருவிய மாங்காய், கேரட் மற்றும் வெள்ளரி - ஒரு டேபிள் ஸ்பூன். நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை: சாமையுடன் உப்பு, பெருங்காயத்தூள், பால் சேர்த்து வேக விட்டு ஆறியதும் தயிர், வெண்ணெய் சேர்க்கவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து, மேலே மாங்காய், கேரட், வெள்ளரி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

கொள்ளு - பூண்டுப் பொடி

தேவையானவை: சுத்தம் செய்த கொள்ளு - 200 கிராம், மிளகு - 20 கிராம், காய்ந்த மிளகாய் - 10, பூண்டுப்பல் - 10, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  சுத்தம் செய்த கொள்ளை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆற விடவும். 2 டீஸ்பூன் நெய்யில் பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒருசேர வறுத்துக்கொள்ளவும். இக்கலவையை ஆறவைத்து வறுத்த கொள்ளுடன் சேர்த்து மிக்சியில் போட்டுப் பொடிக்கவும். சூடான சாதத்தில் நெய் விட்டு இப்பொடியைக் கலந்து ருசிக்கலாம். இட்லி மற்றும் தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

கொள்ளு வெஜ் சூப்

தேவையானவை: ஊற வைத்த கொள்ளு - 100 கிராம், பூண்டு - 2 பல், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, வெண்ணெய் - சிறிது, மிளகுத்தூள், சர்க்கரை - தலா ஒரு சிட்டிகை, கேரட், கோஸ் நறுக்கியது - தலா ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  கொள்ளு, பூண்டு, பட்டை, லவங்கம் நறுக்கிய காய்கள் இவற்றுடன் 4 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட்டு வடிகட்ட வும். வடிகட்டிய சூப் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்துப் பருகவும்.

ஸ்வீட் கார்ன் வடை

தேவையானவை: ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - ஒரு கப், உளுந்து - ஒரு டீஸ்பூன், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப் பில்லை - அனைத்தும் சேர்ந்து ஒரு கப் (நறுக்கியது),  எண்ணெய் - 200 கிராம், உப்பு - தேவையான அளவு.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை மூழ்குமளவு நீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். இவற்றுடன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென அரைக்கவும். அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சோம்பு சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.

சோள அல்வா

தேவையானவை: சோள மாவு - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், ஃபுட் கலர் (ஆரஞ்சு)  - தேவையான அளவு, நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை - தலா அரை டேபிள்ஸ்பூன், நெய் - 100, எண்ணெய் - தேவையான அளவு, பச்சை கற்பூரத்தூள் - ஒரு சிட்டிகை.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  சோளமாவுடன் ஃபுட் கலர், பச்சை கற்பூரம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். சர்க்கரையைத் தண்ணீரில் கரைத்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும். கரைத்த மாவைச் சர்க்கரை பாகில் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் மற்றும் நெய்யைக் ஒன்றாக கலந்து, கிளறிக் கொண்டிருக்கும் மாவில் இடையிடையே சேர்த்துக் கெட்டியாகும்வரை கிளறவும். நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி வறுத்த முந்திரி, திராட்சை தூவி விரும்பிய வடிவில் கட் செய்யவும்.

வெள்ளைச்சோள பாப்கார்ன்

தேவையானவை: காய்ந்த வெள்ளைச் சோளம் - 200 கிராம், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிது.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை: குக்கரில் எண் ணெய் விடாமல், வெள்ளைச் சோளத்தைப் போட்டு மூடிவைக்க, சற்று நேரத்தில் வெடித்து பூவென மலரும். அடுப்பை அணைத்துவிட்டு, நெய், உப்பு சேர்த்து நன்கு கிளறிப் பரிமாறவும்.

சோளம் ரெடி மிக்ஸ்/கஞ்சிப் பொடி

தேவையானவை: காய்ந்த வெள்ளை மற்றும் மஞ்சள் சோளம், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பாசிப்பயறு, ராகி, ஜவ்வரிசி - தலா 100 கிராம், பச்சரிசி  - 2 டீஸ்பூன், பார்லி - 50 கிராம்.

30 வகை சிறுதானிய உணவுகள்!

செய்முறை:  மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களை யும் தனித்தனியே வெறும் வாணலி யில் சிவக்க வறுத்து, பின்னர் ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். இதை சூடான பாலில் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்தோ அல்லது மோரில் கலந்தோ சிறிது உப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.

படங்கள் : ப.சரவணகுமார்