லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

கருத்தடை மாத்திரைகள்... - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

கருத்தடை மாத்திரைகள்... - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்தடை மாத்திரைகள்... - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

தெரியுமா?சாஹா

கருத்தடை மாத்திரைகள்... - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

முறை தவறிய மாதவிலக்கு... அதன் தொடர்ச்சியாக அதிகரிக்கிற பருமன் பிரச்னை... பின்னாளில் குழந்தையின்மையில் முடிகிற சோகம்... இப்படி பெண்கள் சந்திக்கிற அநேகப் பிரச்னைகளுக்கும் முக்கியமான காரணம் ஒன்றே என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அது, அளவுக்கு அதிகமான கருத்தடை மாத்திரை (எமர்ஜென்ஸி பில்ஸ்) உபயோகம்.

கருத்தடை மாத்திரைகள்... - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!


`கருத்தடை மாத்திரைகளை விற்கும் மருந்துக் கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களுக்கு அதன் பக்க விளைவுகளையும் பயங்கரங்களையும்  விளக்கிச் சொல்ல வேண்டும்' என்கிறது சட்டவிதிமுறை. ஆனால், 79 சதவிகித மருந்துக்கடைக்கார்களுக்கே கருத்தடை மாத்திரைகளைப் பற்றிய விழிப்பு உணர்வு இல்லை என்கிறது ஆய்வறிக்கை. மீதமுள்ளோரும் வாடிக்கையாளர் தானாக விரும்பிக் கேட்டால் மட்டுமே ஆலோசனை சொல்கிறவர்களாக இருக்கிறார்கள்.

கருத்தடை மாத்திரை என்பது தேவையின்றி கர்ப்பம் உருவாவதைத் தடுக்கக்கூடியது மட்டுமே என்பதையும், பால்வினை நோய்த்தொற்றைத் தடுக்கும் சக்தி அதற்குக் கிடையாது என்பதையும்கூட அறியாமல் இவற்றை வாங்கி உபயோகிக்கிற இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சித் தகவல்.

``ஒரு பெண் வாழ்நாளிலேயே கருத்தடை மாத்திரைகளை ஓரிரு முறைதான் பயன் படுத்தலாம். ஆனால், மாதத்துக்கு ஒரு முறை, இருமுறை பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இது ஏராளமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்'' என அவசர அவசிய எச்சரிக்கை அளிக்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜ்.

``எல்லா அபார்ஷன்களும் பாதுகாப்பான முறையில் மருத்துவர்களால், முறையான மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன எனச் சொல்ல முடியாது. அனுபவமே இல்லாதவர் களால் பாதுகாப்பு இல்லாத முறைகளில் நிறையக் கருக்கலைப்புகள் நடக்கின்றன. இன்னமும்கூட கருக்கலைப்புக்குத் தவறான வழிமுறைகளைப் பின்பற்றும் பழக்கம் நம் ஊர் பெண்களிடம் இருக்கிறது.

இந்தப் பிரச்னையை தவிர்ப்பதற்கு கருத்தடை மாத்திரைகள் உதவும் என்பது உண்மைதான். அதேநேரம், கருத்தடை மாத்திரைகளையும் மிக ஜாக்கிரதையாகத்தான் பயன்படுத்த வேண்டும். மாதத்துக்கு ஒரு முறை, இருமுறை என மிக அதிக அளவில் பயன்படுத்துபவர்கள்கூட இருக்கிறார்கள்.

இந்தக் கருத்தடை மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்கிறவர்களுக்கு ஹார்மோன் தொந்தரவுகள் ஏற்படுவது உறுதி. ஒரே மாதத்தில் இந்த மாத்திரைகளை 2 முறை எடுத்துக் கொண்டு, அது பலன் தந்திருக்கலாம். மூன்றாவது முறை எடுக்கும்போது அதே மாத்திரை வேலை செய்யாமல் போகும். பெண்களின் மாதவிலக்கு சுழற்சி, முறைதவறிப் போகவும் இது காரணமாகும். அதிக ரத்தப்போக்கு, வலி ஆகியவற்றோடு மனக்குழப்பங்கள் ஏற்படவும் செய்யலாம்.

உறவு வைத்துக்கொண்ட 72 மணி நேரத்துக்குள் கருத்தடை மாத்திரை எடுக்கவில்லை என்றால், கர்ப்பம் உண்டாகி கரு வளரலாம். இடையிடையே ரத்தப்போக்கும் வரலாம். அதனால் அவசரத் தேவைக்கு கருத்தடை மாத்திரை கிடைக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், நம் ஊர் பெண்களுக்கு சரியான விழிப்பு உணர்வு இல்லாததால், இந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள். இந்த மாத்திரை களை உபயோகிப்பது தொடர்பான விழிப்பு உணர்வை அதிகரிக்க வேண்டியதும் அரசின் அவசர கடமை. மற்ற மாத்திரைகளைப் போலவே, இதையும் ஒரு டாக்டரின் வழிகாட்டுதலோடு, ப்ரிஸ் கிரிப்ஷனோடு வாங்குவதே சரி.

ஒருவருக்குத் தொடர்ந்து கருத் தடைக்கான தேவை இருக்கிறது என்றால், அவர்கள் இந்த மாத்திரைகளைத் தவிர்த்து, வேறு வழிமுறைகளைப் பின்பற்றலாம். ஆணுறை உபயோகிப்பது, குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரை எடுத்துக்கொள்வது, `காப்பர் டி' போட்டுக்கொள்வது என மூன்று முக்கியமான வழிகள் உள்ளன. இதில் ஆணுறை உபயோகிப்பதில் 20 முதல் 25 சதவிகிதம் தோல்விக்கான வாய்ப்புகள் உண்டு.

குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகளில் 0.2 சதவிகிதமும், `காப்பர் டி'யில் 1.5 முதல் 2 சதவிகிதம் வரையிலும் தோல்வி வாய்ப்புகள் உண்டு. அதிலும் `காப்பர் டி' என்பது திருமணமாகி ஒரு குழந்தை பெற்றவர்களுக்குத்தான் பரிந்துரைக்கப்படும். குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகளையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுப்பது ஆபத்தானதுதான்'' என்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜ்.

ருத்தடை மாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன? மகப்பேறு மருத்துவர் ப்ரியா செந்தில் விளக்குகிறார்.

கருத்தடை மாத்திரைகள்... - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

``கர்ப்பப்பைவாய் பகுதியில் ஒருவகையான திரவம் இருக்கும். கருமுட்டை வெடிக்கிற தருணத்தில் அது மிகவும் சன்னமாக மாறிவிடும். இந்த எமர்ஜென்சி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலம்  உயிரணு உள்ளே செல்ல முடியாத அளவுக்கு அது அடர்த்தியாக மாறும். அதனால் கருமுட்டை வெடிப்பது தவிர்க்கப்படுகிறது அல்லது தாமதப்படுகிறது... இதுதான் இம்மாத்திரைகளின் அடிப்படை.

கருத்தடை மாத்திரைகளில் புரொஜெஸ்ட்ரோன் மட்டும் சேர்த்தது, ஈஸ்ட்ரோஜென் மட்டும் சேர்த்தது, இரண்டும் கலந்தது என மூன்று வகைகள் கிடைக்கின்றன. கடைகளில் பெரும்பாலும் புரொஜெஸ்ட்ரோன் மட்டும் சேர்த்ததுதான் கிடைக்கிறது. மற்ற இரண்டையும்விட இது ஓரளவு பாதுகாப்பானது என்றாலும், யாருக்கு எந்த வகையைப் பரிந்துரைப்பது என்பதை மருத்துவர் மட்டுமே அறிவார்.

கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள், வலிப்புக்கும் நரம்புக் கோளாறுகளுக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்கிறவர்கள் எல்லாம் இந்த மாத்திரைகளை எடுக்கக்கூடாது. அந்தப் பெண்களுக்கு கருத்தடை தேவைப்பட்டால் அவர்களது உடல்நலம் பற்றித் தெரிந்த மருத்துவரைக் கேட்டே எடுக்க வேண்டும்.

அவசரத்துக்கு என்று சொல்லிக் கொடுக்கப்படுகிற இந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள ஆரம் பித்தால், பருமன் அதிகரித்தல், உடல் ஊதியது  போன்ற உணர்வு, மார்பக வலி, தலைவலி, மாதவிலக்குச் சுழற்சி, முறைதவறிப் போவது, பருக்கள் உண்டாவது போன்ற பலவித பக்க விளைவுகள் வரலாம். மாதவிலக்குச் சுழற்சி முறையாக உள்ள பெண்களுக்கு மட்டும்தான் இந்த மாத்திரைகள் பலனளிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்...'' - ஏராளமான எச்சரிக்கைகளுடன் முடிக்கிறார் டாக்டர் ப்ரியா.

கருத்தடை மாத்திரைகள்... - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

கருத்தடை மாத்திரை மட்டுமல்ல... மருத்துவர் ஆலோசனை இன்றி, உடலுக்கு ஊறுவிளைவிக்கின்ற வகையில் எந்த மாத்திரையையும் உட்கொள்ளக்கூடாது என்பதே இங்கு மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய விஷயம்!

கருத்தடை மாத்திரைக்கு தடை... கருக்கலைப்பு அதிகரிக்கக் காரணமா?

வடஇந்தியாவில் மிக இளம் வயதுப் பெண்கள் இந்த மாத்திரைகளை மாதத்தில் 3 முறைகளுக்கு மேல் எடுத்துக்கொள்கிற வழக்கம் அதிகரித்து வருவதை அடுத்து, மருத்துவரின் பரிந்துரையின்றி, இவற்றை வாங்கி உபயோகிக்கத் தடை போடப்பட வேண்டும் என மருத்துவர்கள் மத்தியிலேயே ஒரு குரல் வலுத்து வருகிறது.

அதற்கு நேர் எதிராக தமிழ்நாட்டில் இந்த மாத்திரைகளை நேரடியாக மருந்துக் கடைகளில் வாங்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக தடை நீடிக்கிறது. இந்தியாவில் அதிக அளவு கருக்கலைப்பு நடக்கும் மாநிலங்களில் முன்னிலையில் இருக்கிறது தமிழ்நாடு. இந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டும் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் கருத்தடை மாத்திரைகளை நேரடியாக வாங்கி உபயோகிப்பதற்கு 2006-ம் ஆண்டு முதல் அமலில் இருக்கும் தடையைத்தான், இதற்கு முக்கியக் காரணம் என்று சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

``இது பெண்களின் உரிமையைப் பறிக்கிற விஷயம் மட்டுமே அல்ல. அவர்களது உடல் தொடர்பான முடிவுகளை எடுப்பதில், அவர்களைக் கட்டுப்படுத்துகிற விஷயமும்கூட. ஆகவே, உடனடியாக இந்தத் தடை நீக்கப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கை இப்போது வலுப்பெற்று வருகிறது. இது பற்றி தனது வலைப்பதிவில் எழுதி, விஷயத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். எழுத்தாளரும் ஊடகவியலாளருமான வைஷ்ணவி சுந்தர்.

``அபார்ஷன் என்பது வலிகளும் வேதனைகளும் நிறைஞ்சது. எந்தப் பெண்ணும் அதை அனுபவிக்கத் தயாரா இருக்க மாட்டாங்க. அதனால கர்ப்பத்தடை மாத்திரைகளுக்கு அதிக கட்டுப்பாடு இருப்பது பெண்ணின் ஆரோக்கியத்துக்குத்தான் ஆபத்து.

என் வலைப்பூவில் இதைப் பத்தி எழுதினது வைரலாகி, பெங்களூரூவில் உள்ள ஜட்கா என்ற என்.ஜி.ஓ.வைச் சேர்ந்த ரச்சிதா தனேஜா, இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்தாங்க. கொடைக்கானல் யூனிலீவர் மெர்க்குரி பிரச்னைக்கு எதிராக, தொடர்ந்து போராட்டங்களை நடத்துறது இந்தத் தொண்டு நிறுவனம்தான். கருத்தடை மாத்திரை தடை சம்பந்தமா ஒரு பெட்டிஷனை உருவாக்கி, அதைக் கையெழுத்து இயக்கமா மாத்தியிருக்காங்க. `கருத்தடை மாத்திரைகளுக்கான தடையை விலக்கணும்’னு சொல்றவங்களோடு சேர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள்ல இறங்கவிருக்கோம்’’ என்கிறார் வைஷ்ணவி சுந்தர்.

‘‘இதை பெண்களின் உரிமைகளுக்கு எதிரான விஷயமாகப் பார்க்கக் கூடாது. கருத்தடை மாத்திரைகளுக்கான விளம்பரங்கள், பெண்களை வேறு மாதிரி சிந்திக்க வைக்கும். ‘நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். கர்ப்பமாகாமல் தப்பிக்க எனக்கு ஒரு சுலப வழி இருக்கிறது’ என்கிற எண்ணத்தை அவர்கள் மனதில் வளரவிடக் கூடாது. அதற்காகவே இந்தத் தடை’’ என்று சொல்லித்தான், பத்து வருடங்களுக்கு முன்பு நேரடி விற்பனைக்கு தடை விதித்திருக்கிறார் அப்போதைய தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் செல்வராஜு.

இந்தத் தடையை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கும் நிலையில் தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் தற்போதைய இயக்குநர் அப்துல் காதரிடம் இதைப்பற்றிக் கேட்டோம். ``தடைக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. என்றாலும், தடையை நீக்குவதுபற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும்'' என்று சொன்னார்.