லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

கேபிள் கலாட்டா - சண்டை போட்டா பிரியாணி!

கேபிள் கலாட்டா - சண்டை போட்டா பிரியாணி!
பிரீமியம் ஸ்டோரி
News
கேபிள் கலாட்டா - சண்டை போட்டா பிரியாணி!

ரிமோட் ரீட்டா, படம்: ப.சரவணகுமார்

கேபிள் கலாட்டா - சண்டை போட்டா பிரியாணி!

`சீரியலில் மட்டும்தான் இவங்க சீரியஸ் மோடில் இருப்பாங்க. செட்ல வந்து பேசிப்பாருங்க... தாங்க மாட்டீங்க... சிரிச்சு சிரிச்சே வயிறு புண்ணாகிடும்’ என்று அழைத்தவுடன் ஆஜர் ஆனோம்... `தெய்வமகள்' ஷூட்டிங் ஸ்பாட்டில்! மதிய உணவை முடித்துவிட்டு, ‘இப்போ கேளுங்க, தெம்பா பதில் சொல்றோம்’ என்று வந்து அமர்ந்தார்கள் சீரியலின் `6 பில்லர்ஸ்’ ஏகாம்பரம் (ரவி), காயத்ரி (ரேகா), பிரகாஷ் (கிருஷ்ணா), வினோதினி (சுகாசினி), சத்யப்பிரியா (வாணி போஜன்), குமார் (பிரகாஷ் ராஜன்). முதல்ல உங்களைப் பற்றிச் சொல்லுங்க என்றோம்.

``நான் அடிப்படையில பாடகர். நிறைய மேடைகளில் பாடியிருக்கேன்.  `பார்க்க அழகா இருக்கீங்க. ஏன் நீங்க நடிக்கக் கூடாது'னு பல பேர் கேட்டாங்க. அந்த நேரத்தில் ‘தென்றல்’ சீரியலில் ஒரு சின்ன வாய்ப்பு. தொடர்ந்து நிறைய படங்களில் வடிவேலு சார், விவேக் சாரோட எல்லாம் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. என்னோட லைஃப்ல பெரிய பிரேக் ‘தெய்வமகள்’. வெளில போனா... எல்லாரும் என்னை வினோதினியாதான் பார்க்கறாங்க’' என்று மகிழ்ந்தார் சுகாசினி.

ஏற இறங்க பார்த்துவிட்டு கான்செப்ட்டுக்குள் புகுந்தார் ரவி. ‘`என் பேரு உடுமலை ரவி. அங்க லோக்கல் சேனலில் எல்லாம் லைவ் புரோகிராம்ஸ் பண்ணிட்டு இருந்தேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நிறைய விளம்பரமெல்லாம் நடிச்சு, சினிமா உலகுக்குள்ள வந்தாச்சு’' என்றவரிடம், ‘பாஸ் அந்த தர்மபுரி மேட்டர்...’ என்று எடுத்துக் கொடுத்தார் கிருஷ்ணா.

‘`தர்மபுரிக்கு ஒரு ஷூட்டிங்காக போயிருந்தேன். அப்போ ஒரு பாட்டி பக்கத்தில் வந்து, ‘தம்பி, நீதானே தெய்வமகளில் வர்ற அரசியல்வாதி’னு கேட்டாங்க. நானும் சந்தோஷமா `ஆமா'னு சொன்னதுதான் தாமதம், பளார்னு அறை விழுந்துச்சு... ‘ஏண்டா... உனக்கு எவ்ளோ கொழுப்பிருந்தா அந்தப் பொண்ணு சத்யா வாழ்க்கையை கெடுப்பே’னு! அந்த அடி மறக்கவே முடியாது. அறை வாங்கியிருந்தாலும் ஜனங்ககிட்ட கொண்டு போய் சேர்த்த ஏகாம்பரம் கேரக்டருக்குதான் என் நன்றியெல்லாம்’ என்று சந்தோஷ அழுகாச்சி காட்டினார் ரவி.

`‘இதுக்குதான் நான் நடிக்கற வேலையை மட்டும் பார்க்கறேன். இல்லைன்னா இப்டிதான் கலாய்ச்சுகிட்டே இருப்பாங்க’' என்று ஜாலி குரலில் சீரியஸ் காட்டினார் சுகாசினி. இடைமறித்த பிரகாஷ் ராஜன், ‘`ஹைய்யோ அந்த பிரியாணி மேட்டரை மறக்க முடியுமா? என்னனு கேளுங்களேன்’' என்று எடுத்துக் கொடுத்தார்.

`‘அட... சண்டையே பிரியாணிக்கு தாங்க. நாங்க யார் சண்டை போட்டாலும் சமாதானம் பண்ண பிரியாணி வாங்கி கொடுக்கணும். அப்டி சுகா வாங்கிக் கொடுத்த பிரியாணி தீர்ந்து போகவும், மறுபடியும் கிருஷ்ணாவுக்கும் சுகாவுக்கும் சண்டை... பிரியாணி தீர்ந்து போச்சுனு. அவ்ளோதாங்க!’' என்று முடிக்கிறார் ரேகா.

ரேகாவைப் பேசவே விடாமல் கிருஷ்ணா,  ‘`ஒருநாள் செம ஆக்ரோஷமான ஸீன்ங்க. இவங்க பேசி முடிச்சதும் நான் கோவமா பேசணும். அப்போ அவங்க டயலாக்... ‘இந்த வீட்டோட நிர்வாகம் என்னோடதுதான்’. ரொம்ப ஆர்வமா பேசிட்டே இருந்தவங்க, நிர்வாகத்துக்கு பதிலா சொன்ன வார்த்தையைக் கேட்டதும் நான் சிரிக்கறேன்... சிரிக்கறேன்...நிறுத்தாம சிரிக்கறேன்... செட்டே கலகலனு ஆய்டுச்சு’' என்று மீண்டும் சிரிப்பைக் கன்டினியூ செய்தார் கிருஷ்ணா.

``ஸ்டாப் இட் கொழுந்து... அதெல்லாம் தமிழ் கத்துக்கிட்டிருந்த நேரம். இப்போ பின்றோம்ல! தெய்வமகளில் நடிக்க ஆரம்பிச்சப்புறம், என்னை எல்லாம் ‘அண்ணியார்’னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அளவுக்கு தெய்வமகள் சக்சஸ்’' என்று தங்குதடையின்றி தமிழில் ரேகா பேசுவதை எல்லாரும் ரசித்துப் பார்த்தனர்.

`‘கொழுந்தனாரே... நானே பேசிக்கிட்டு இருக்கேன். உங்களைப் பத்தி சொல்லுங்க...இல்ல... என்ன நடக்கும் தெரியுமா?’' என்று போலி கோவம் காட்டினார் ரேகா. ‘காயத்ரி... நிறுத்து. என்னைப் பத்தியும், அவரைப் பத்தியும் ஊருக்கே தெரியும்'' எங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியும்’ என்று பதிலடி கொடுத்தார் வாணி @ சத்யப்ரியா. உடனே களத்தில் மற்றவர்களும் குதிக்க, ஆளாளுக்கு முறைத்துக்கொண்டு, அடித்துக் கொண்டு ரீல் சண்டையை  ஆன் தி ஸ்பாட் ஆரம்பிக்க, இயக்குநர் குமரன் ‘`என்னம்மா அங்க சத்தம்?’' என்று கேட்கவும்... எல்லாரும் சைலன்ட்.

நாம் சத்தம் போடாமல் எஸ்ஸானோம்!

அலற வைக்கிற மருமகள் அழுத கதை!

கேபிள் கலாட்டா - சண்டை போட்டா பிரியாணி!

`` `இப்போ நான் ரொம்ப பொறுப்பான நாத்தனார்’ என்று அடக்கமாக பேசும் சமந்தா, அவருடைய முந்தைய சீரியல்களில் ஹீரோயின்களை ஆட்டி வைத்த வில்லி. `முதன்முதலில் சீரியல் வாய்ப்பு கிடைச்சப்போ அம்மா ரொம்பவே பயந்தாங்க. ஆனால், பிரபு நேபால் சார், குட்டி பத்மினி மேம் சீரியல்ங்கறதால மறுக்க முடியலை. முதல்நாள் ஷூட்டிங்குக்கு தைரியமா போய்ட்டாலும், அதில் வித்தியாசமான வேஷம். முகத்தில் ஏதோ வெட்டி, ஒட்டிலாம் மேக்கப் போடவும் ‘அம்மா வீட்டுக்கு போய்டலாம்’னு அழ ஆரம்பிச்சுட்டேன். அம்மாதான் ‘நாம எடுத்துக்கிட்ட வேலையை முழுசா முடிக்கணும்’னு சொன்னாங்க. அந்த சீரியலில் நல்லபடியா நடிச்சதால, நல்ல பேரும் கிடைச்சது. அடுத்ததா விஜய் டி.வி-யில், ‘அவள்’ சீரியல். மாமியாருக்கே தண்ணி காட்டற மாஸ் வில்லி வேடம் அதில். லட்சுமி ராமகிருஷ்ணன் மேடத்தையே அலற வைக்கிற மருமகளா நடிச்சிருப்பேன். அந்த சீரியல் பாப்புலர் ஆனதால, வரிசையா வில்லி கேரக்டரா கிடைச்சது. இதோ, இப்பவும் ப்ரியாவுக்கு கொஞ்ச நாள் குடைச்சல் கொடுத்துட்டு, நல்ல பொண்ணா மாறிட்டேனே....நீங்களே பார்க்கறீங்கதானே...’ - கண்களைச் சிமிட்டிச் சொல்லும்போது சமந்தா அவ்ளோ அழகு!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 150

உணவு மருத்துவம் அருமை!

``நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `உணவே அமிர்தம்’ நிகழ்ச்சியில் நமக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உணவு முறையில் உள்ள மருத்துவநுட்பங்களையும், சமையல் குறிப்புகளையும் அருமையாக காட்சிப்படுத்தி சொல்லித்தருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது’’, என்று பாராட்டுகிறார் தஞ்சாவூரில் இருந்து என்.தனலட்சுமி.

குத்துவிளக்கு ஏற்றும்போது..!

``வேந்தர் டி.வி-யில் தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி குத்துவிளக்கு ஏற்றிய பிரசன்னாவும், நரேஷ் அய்யரும் காலில் ஷூ அணிந்து மேடையில் தோன்றினார்கள். குத்துவிளக்கு தெய்வ சாங்கியத்துடன் ஒப்பிடப்படுகிறது. ஷூ அணியாமல் விளக்கேற்றலாமே! இதைப் படித்த பிறகாவது மற்ற சேனல்களும் பின்பற்றுவார்களா?’’, என்று நம்பிக்கையுடன் கேட்கிறார் சென்னை அடையாறில் இருந்து பத்மா சுப்ரமணியன்.

வருத்தத்துடன் ஒரு செய்தி!

``விஜய் டி.வி `நீயா நானா’வில் செய்தி வாசிப்பாளர்கள் கலந்துகொண்டனர். அதில், `மகிழ்ச்சியான மற்றும் கவலையான செய்திகளை வாசிக்கும்போது உங்களை எப்படி கட்டுப்படுத்திக்கொள்வீர்கள்?' என்று கோபிநாத் கேட்டார். அப்போது, ஒரு பெண், தான் பட்டுப்புடவை உடுத்தி தலை நிறைய பூ வைத்துக்கொண்டு செய்தி வாசிக்கும்போது கும்பகோண தீ விபத்து பற்றிய செய்தி வந்ததும், மிகுந்த மனவருத்தத்துடன் இருந்ததாக சொன்னது மனதுக்கு டச்சிங்காக இருந்தது’’ என்கிறார் சென்னை கண்டிகையில் இருந்து மாலா பழனிராஜ்.