லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

குதிரைவாலிக்கு பத்தாளு பலம்! - பாட்டி காலத்து உணவு

குதிரைவாலிக்கு பத்தாளு பலம்! - பாட்டி காலத்து உணவு
பிரீமியம் ஸ்டோரி
News
குதிரைவாலிக்கு பத்தாளு பலம்! - பாட்டி காலத்து உணவு

ஆண்டனிராஜ், படம்: எல்.ராஜேந்திரன்

நம் முன்னோர்கள் தங்களது தினசரி வாழ்க்கைக்கான உணவாக தரமான சத்துணவுகளை எடுத்துக் கொண்டதன் மூலம்  உடலுறுதியுடன் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களது சத்துணவில் முக்கிய பங்கு சிறுதானிய உணவுகளுக்கு உண்டு. இன்றளவும் மிடுக்காகவும்  திடகாத்திரமாகவும் நடமாடிக் கொண்டிருக்கும் கிராமப்புற வயதானவர்களிடம், அன்றையகாலம் முதல் இன்றைய காலம்வரை அவர்கள் கடைப்பிடித்துவரும் உணவுமுறைகளைப் பற்றிக் கேட்டபோது வந்து விழுந்தன சுவாரஸ்யமான தகவல்கள்...

குதிரைவாலிக்கு பத்தாளு பலம்! - பாட்டி காலத்து உணவு

நெல்லை, சங்கரன்கோவில் அருகே உள்ள மூவர்விருந்தாளி கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள், ‘`எனக்கு 81 வயசாச்சு. இப்ப வரைக்கும் ஆஸ்பத்திரி பக்கமே போனதில்ல. காய்ச்சல், தலைவலின்னுகூட மாத்திரை போட்டதில்ல...’' என்றபடி பேச்சைத் தொடங்கினார்.

‘‘எங்களோடது விவசாயக் குடும்பம். என் வீட்டுக்காரர் சுப்பையா கோனார், சில வருஷங்களுக்கு முன்னாடி தவறிட்டாரு. எனக்கு மொத்தம் மூணு பொண்ணு, நாலு பசங்க இருக்காங்க. எல்லோருமே இப்பவும் விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்காங்க.

இங்க மழை கொஞ்சம் குறைவுதான். அதனால, மழை வந்தாலே சிறு தானியங்களை விதைச்சுடுவோம். இதுக்கு கொஞ்சமா தண்ணி இருந்தாலே போதும். சாணி உரம் தவிர வேற எதுவும் தேவையில்லை. 90 நாளிலேயே அறுவடையும் செஞ்சுடலாம். அதனால், வறட்சியைத் தாங்கற கம்பு, சோளம், சாமை, குதிரைவாலி, தினை மாதிரியான பயிர்களைத்தான் விதைப்போம்.

எங்க வீட்டுக்காரர் காலைல தோட்டத்துக்குப் போயிட்டா, அவருக்கு மதிய சாப்பாடா சிறுதானியத்துல சமைச்சு எடுத்துட்டு தோட்டத்துக்குப் போவேன். மத்தபடி பண்டிகைக்கு மட்டும்தான் நெல் சோறு பொங்குவோம். ஆனா, எனக்கு எப்பவும் குதிரைவாலி சோறுன்னாதான் எறங்கும். கேழ்வரகு மாதிரி இல்லாம, குதிரைவாலி அரிசி நல்லா பசி தாங்கும். அதை சாப்பிட்டா வேலை செய்யுறப்ப அலுப்பு தட்டாது.

அப்பல்லாம் காபி, டீ தண்ணி எல்லாம் கெடையாது. அதுவும் காலையிலேயே கடைக்குப் போயி டீ, காபி குடிக்கறவங்கள, வேலையில்லாதவன்னு ஊருக்குள்ள பேசிக்கிடுவாங்க. எங்க வீட்டுல ஒருத்தரும் கடைப்பக்கம் ஒதுங்க மாட்டாங்க. காலையில் எழுந்ததும் நீராகாரம்தான். குதிரைவாலி சமைக்கும்போது தண்ணிய வடிக்காம கஞ்சி மாதிரி சமைச்சு சாப்பிட்டு, அதுல கொஞ்சம் மிச்சம் வெச்சு மறுநாள் காலைல நீராகாரமா குடிச்சுக்குவோம். தேவாமிர்தம் மாதிரி இருக்கும். குதிரைவாலி சோத்துக்கு கத்திரிக்காய் பச்சடி அருமையா இருக்கும். பருப்பு, தயிர் விட்டும் சாப்பிடலாம். குதிரைவாலிய மாவா அரைச்சு தோசை, குழிப்பணியாரம்னு விதம்விதமா செய்வோம். குதிரைவாலி சோறு இல்லைன்னா எனக்கு சாப்பிட்ட திருப்தி வராது.

இந்த வயசுலயும் தோட்டத்துக்குப் போயி வெயில்ல வேலை செஞ்சுட்டு, உச்சிவேளைல நல்லா பசிக்கும்போது, நிழலா பாத்து உக்காந்து தூக்குவாளியில்  கொண்டு போன குதிரைவாலி சோறு ஒரு கவளம் அள்ளி வாயில போட்டு, வதக்குன கருவாட்டுத்துண்டை ஒரு கடி கடிச்சா போதும். வெலை செஞ்ச களைப்பு போயி, பத்தாளு பலம் வந்துடும்'' என உற்சாகமாகப் பேசினார் பேச்சியம்மாள் பாட்டி!

குதிரைவாலி சோறு

``ஒரு கிலோ குதிரைவாலியை எடுத்துக்கிட்டு, நல்லா கழுவி பத்து நிமிஷம் தண்ணியில ஊற வெக்கணும். இரண்டரை லிட்டர் தண்ணிய கொதிக்க வெச்சு அதுல குதிரைவாலி அரிசியைப் போட்டு நல்லா வேகவிடணும். சோறு மலர்ந்த பக்குவத்தில் இறக்கிட்டா குதிரைவாலி சோறு ரெடி. 5 பேருக்கு போதுமானது. தண்ணிய வடிகட்டாமலும் குடிக்கலாம். இல்ல, வடிகட்டிட்டு சாதாரண அரிசி சோறு போல பருப்பு, அசைவ குழம்பு, ரசம், தயிர் போட்டும் சாப்பிடலாம்.''