லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

எடை குறைக்க பொன் விதிகள்!

எடை குறைக்க பொன் விதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
எடை குறைக்க பொன் விதிகள்!

டயட் டூர் இளங்கோ கிருஷ்ணன்

எடை குறைக்க பொன் விதிகள்!

மச்சீர் உணவில் எவை அவசியம்? அவற்றை எப்படிச் சாப்பிட வேண்டும்? இது பற்றி சென்ற இதழில் பார்த்தோம். சமச்சீர் உணவில் வெயிட் லாஸ் டிரிக்ஸ் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம். பொதுவாக, நமது இந்திய உணவுகள் அறுசுவை நிரம்பியவை. நாக்கை மையப்படுத்திய டயட் முறை என்பது வயிற்றைப் பதம் பார்த்து எடையைக் கூட்டும். எனவே, ருசியின் மீது கட்டுப்பாடு தேவை. அதற்காக, பத்தியச் சாப்பாடு போல சாப்பிட்டால்தான் எடை குறையும் என்றில்லை. சோனம் கபூர் உள்ளிட்ட பாலிவுட் செலிபிரிட்டிகளின் டயட் ஆலோசகர் ராதிகா கர்லே சொல்லும் அருமையான ஆறு டயட் ரூல்ஸ் இதோ...

1. உணவைப் பிரியுங்கள்

பசித்துப் புசிப்பது நல்ல விஷயம்தான். ஆனால், எடைக்குறைப்புக்கு அது ஏற்ற முறை அல்ல. தினசரி மூன்று வேளை என்பதை ஆறு வேளையாகப் பிரித்துக்கொள்ளுங்கள். பொதுவாக, தினசரி 2,000-2,500 கலோரி வரை உடலுக்குத் தேவைப்படும். இதை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை உண்பது எனப் பிரித்துக்கொள்ளுங்கள். வழக்கமான அளவு உணவை இவ்வாறு பிரித்துக்கொள்வதன் மூலம், செரிமானம் எளிதாகும். வளர்சிதை மாற்றம் சீராகும். எடைக்குறைப்பும் எளிதாகும்.

2. இலக்கை நிர்ணயித்திடுங்கள்


உங்களின் பி.எம்.ஐ. அளவு எவ்வளவு எனக் கண்டறியுங்கள். அதை இலக்காகக் கொண்டு குறைக்க வேண்டிய எடை அளவு எவ்வளவு எனக் கணக்கிடுங்கள். அதற்கு ஏற்ப உண்ணும் அளவைத் திட்டமிடுங்கள். ஒரே மாதத்தில் 10 கிலோ குறைப்பது என்பது எல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. எடை எப்படி சிறிது சிறிதாக ஏறியதோ, அப்படி சிறிது சிறிதாகத்தான் குறைக்க முடியும். மாதம் இரண்டு கிலோ குறைப்பது என்பது சாத்தியமே. எனவே, அதற்கேற்ப உணவைத் திட்டமிடுங்கள்.

3. கலோரி... கவனம்!


கலோரிகள் அதிகமாகும்போது அவை உடலில் கொழுப்பாகத் தங்கி எடை அதிகரிக்கும். உடலில் சேரும் கலோரியை எரிப்பது என்பது எடைக்குறைப்புக்கு மிக முக்கியமான விஷயம். ஆகவே, அன்றன்று சேரும் கலோரியை அன்றன்று எரிப்பது நல்லது. எந்த மாதிரியான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியில் எவ்வளவு கலோரி எரிக்கப்படும் என்று தெரிந்துகொண்டு பயிற்சியில் ஈடுபடுங்கள்.

4. சாச்சுரேட்டட் கொழுப்பு தவிர்க்கவும்

குறைவான கொழுப்பு உள்ள உணவுகளை உண்ணுங்கள். எருமைப் பால் போன்றவற்றில் கொழுப்பு அதிகம் என்பதால், அவற்றைத் தவிர்க்கலாம். லோ-சேச்சுரேட்டட் பால் பயன்படுத்தலாம். தினசரி இரண்டு டீஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தலாம். நல்ல கொழுப்பு உள்ள மீன் போன்ற உணவுகளை உண்ணலாம். இவை, கெட்ட கொழுப்பை நீக்கி உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்தைக் கொடுத்து, எடைக் குறைப்பை சாத்தியமாக்குகின்றன. ரெட் மீட் எனப்படும் சிவப்பு மாமிசங்களையும் தவிர்க்கலாம்.

5. சர்க்கரைக்கு தடா!

வெள்ளை சர்க்கரையில் வெறும் கலோரி மட்டுமே நிறைந்துள்ளது. சத்துகள் ஏதும் இல்லை. அதைத் தவிர்க்கலாம். பொதுவாக, நம் உடலுக்குத் தேவையான சர்க்கரை நாம் உண்ணும் பழங்கள், உலர் பழங்கள் போன்றவற்றிலேயே கிடைத்துவிடும். சர்க்கரை தேவை என்றால் ஓரளவு பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். எடைக் குறைப்புக்கு சர்க்கரை விரோதி என்பதை மறக்காதீர்கள்.

6. தண்ணீர் அருந்துங்கள்

தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். தினசரி ஆறு வேளையாக தண்ணீர் அருந்தும் நேரத்தைப் பிரித்துக்கொண்டு, உணவு உண்ட அரை மணி நேரம் கழித்து நீர் பருகலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை, கொழுப்பைக் கரைத்து உடலை ஃபிட்டாக்கும்.

இந்த விதிகள் அடிப்படியானவை. இவற்றோடு தினசரி உண்ண வேண்டிய உணவுகளை ஒரு சார்ட் வடிவில் தயாரித்துக்கொள்வது நல்லது. உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் கிடைக்கும்படியான ஒரு சமச்சீரான டயட்டை தினசரி ஐந்து அல்லது ஆறு வேளை உணவாகப் பிரித்துத் திட்டமிடுவதன் மூலம் எடையைத் திட்டமிட்டுக் குறைக்க முடியும்.

எடைக் குறைப்புக்கான மாதிரி டயட் சார்ட் அடுத்த இதழில்!

- டயட்டை தொடர்வோம்...