லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

சோளச்சோறும் தவிட்டுக்குழம்பும்! - பாட்டி காலத்து உணவு

சோளச்சோறும் தவிட்டுக்குழம்பும்! - பாட்டி காலத்து உணவு
பிரீமியம் ஸ்டோரி
News
சோளச்சோறும் தவிட்டுக்குழம்பும்! - பாட்டி காலத்து உணவு

வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்

சோளச்சோறும் தவிட்டுக்குழம்பும்! - பாட்டி காலத்து உணவு

சேலம், தாரமங்கலம் பக்கத்தில் உள்ள அணைமேடு கிராமத்தைச் சேர்ந்த நாச்சாயம்மாள், ‘‘10 வருஷத்துக்கு முன்னாடியே எங்க வீட்டுக்காரர் தவறிட்டாரு. எனக்கு 2 பொண்ணுங்க, ஒரு பையன்னு மூணுமே வீட்டுலதான் பொறந்துச்சுங்க. எல்லாம் கல்யாணம் முடிஞ்சு அவுங்கவுங்க குடும்பம் குழந்தைங்கன்னு நல்லா இருக்காங்க. நான் அந்த காலத்து மனுஷி. இப்ப இருக்குற சாப்பாடு எதுவுமே எனக்கு ஒத்துக்காது. தானிய வகைங்களதான் பொங்கி சாப்பிடுவேன். அதனாலதான் 80 வயசுக்கும் மேல தனிக்குடித்தனமாவே வாழ்ந்துட்டு இருக்கேன்.

இன்னைக்கு வரைக்கும் துணி துவைக்கறது, சமைக்கறதுன்னு எல்லாமே நாந்தான் செஞ்சுக்கறேன், தினமும் செக்குல ஒரு மண்டவெல்லம், 4 படி பருத்திக்கொட்டை, பச்சைப்பயிறு, அவரைக்கொட்டை, புண்ணாக்கு சேர்த்து அரைச்சு 4 மாட்டுக்கு ஊத்துறேன்.  வேலைல எனக்கு சமமா இளங்குமரிகள்கூட போட்டி போட முடியாது. காரணம் அந்த காலத்து உணவு சாமீ...’’ என்றவர் ``தூரத்தில் இருந்து வந்திருப்பீங்க. கொஞ்சம் கம்மங்கஞ்சி இருக்கு... குடிச்சுட்டு பேசலாம்'' என்று நமக்கு கம்மங்கஞ்சி கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார்...

‘‘அந்தக் காலத்துல அவியல், பொரியல் எல்லாம் இருக்காது. எல்லார் வீட்டிலேயும் கம்பு, கேழ்வரகு, சோளச்சோறுதான் செய்வாங்க. ஒரு நாளைக்கு கேழ்வரகுன்னா, மறுநாள் கம்பு இல்லைன்னா சோளச்சோறு செய்வோம். தினை, சம்பா மாசத்துக்கு இரண்டு மூணு முறையும், நெல்லுச்சோறு வருஷத்துக்கு ஒரு முறையும்தான் செய்வோம்.

களி சாப்பாட்டுக்கு கீரைக்குழம்பு, கருவாட்டுக் குழம்பு, நிலக்கடலை சட்னி, புளி சட்னியும், கம்மஞ் சோறுக்கு கத்திரி, தக்காளி சட்னியும், புளிச்சக்கீரையும், சோளச்சோறுக்கு தவிட்டுக்குழம்பும், பருப்புக் குழம்பும் வெப்பாங்க. சோறு, குழம்பு வைக்கும் சட்டி முதல் சாப்பிடும் கிண்ணம் வரை... எல்லாமே மண் பாண்டம்தான். எல்லா குழம்புக்கும் பெரும்பாலும் விளக்கெண்ணெய் ஊத்துவாங்க. அதனால வயித்து பிரச்னையே வராது.

சோளச்சோறும் தவிட்டுக்குழம்பும்! - பாட்டி காலத்து உணவு

இந்தக்காலத்து புள்ளைங்கமாதிரி கொஞ்சமா சாப்பிட மாட்டோம். 2 ஆப்பை களியை நல்லா ஒரு பிடி பிடிச்சுட்டுப் போயி காட்டு வேலை இருந்தா பார்ப்போம். இல்லைன்னா தூக்குச்சட்டியில பழைய சோத்தை தயிர் கலந்து ஊத்திக்கிட்டு, துணியில் உப்பும், சின்ன வெங்காயமும் முடிச்சுக்கிட்டு ஆடுங்களை ஓட்டிட்டு போயிடுவோம். தண்ணிகூட கொண்டு போக மாட்டோம்.

ஆடுங்களை மேய்ச்சுட்டு மதியம் ஓடைக்கரையில மரத்தடி நிழல்ல கூட்டமா உக்காந்துட்டு தூக்குச் சட்டியில  இருக்குற கஞ்சியை நல்லா கரைச்சு வெங்காயத்தை கடிச்சிக்கிட்டு குடிச்சா அப்படியே ஜில்லுன்னு அமுதம் மாதிரி வயித்துல எறங்கும். அப்பப்போ தின்பண்டமா சாப்பிட முளைக்கட்டுன பயறுங்க, வறுத்த கொள்ளு, நரிப்பயறு இல்லைன்னா வேகவெச்ச மொச்சைக்கொட்டை, தட்டைப்பயறு, பாசிப்பயறு இதெல்லாம்தான் கைகொடுக்கும். இதை சாப்பிட்டுட்டு ஓடைத் தண்ணியை அள்ளி குடிச்சா அற்புதமா இருக்கும்' '' என்பவர் தான் அடிக்கடி செய்யும் பலகாரங்கள் பற்றி விளக்குகிறார்...

கம்பு உருண்டை

நல்லா ஊற வெச்ச கம்பும், கருப்பட்டியும் சமமா எடுத்து, இடிச்சு உருண்டை பிடிச்சா... கம்பு உருண்டை தயாராகிடும்.

ஓட்டர (அடை)

தேவைக்கு ஏத்தமாதிரி கேழ்வரகு மாவு எடுத்து, மிளகாய், வெங்காயம் நறுக்கி போட்டு, முருங்கைக்கீரை உருவிப் போட்டு மறக்காம அளவா உப்புக்கல்லு போட்டு, கொஞ்சமா தண்ணி சேர்த்து பிசைஞ்சு, தோசைக் கல்லில் மாவை வெச்சு கையிலயே பதமா தட்டி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு சுட்டெடுத்தா... ஓட்டர (அடை) செஞ்சுடலாம். நீங்க சாப்பிடற ஆம்லெட் மாதிரி நாங்க ஓட்டர சாப்பிடுவோம்.

இப்படியெல்லாம் சத்துணவா சாப்பிட்ட ஆரோக்கியம்தான் இன்னைக்குவரை நோய் நொடின்னு படுக்காம இருக்கேன் சாமீ'' என்ற நாச்சாயம்மாள், ``மாட்டுக்கு தண்ணீர் காட்டுற நேரம் ஆச்சு" என்று தள்ளாத வயதிலும் தளராமல் நடைபோட்டு சென்று மாடுகளுக்கு தண்ணீர் காட்டினார்.