லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

எனக்கு மழை பிடிக்கும் - ஆனால்...

எனக்கு மழை பிடிக்கும் - ஆனால்...
பிரீமியம் ஸ்டோரி
News
எனக்கு மழை பிடிக்கும் - ஆனால்...

வாழ்வை மாற்றிய புத்தகம்ஆர்.வைதேகி

எனக்கு மழை பிடிக்கும் - ஆனால்...

‘`என்னுடைய சித்தப்பா ராஜுவும், அவரின் நண்பர் லெஸ்லீயும் ஆங்கில இலக்கியப் பேராசிரியர்களாக இருந்தவர்கள். ஆங்கிலக் கவிதைகள் பற்றி அவர்கள் பேசும்போது ஏற்பட்ட ஆர்வத்தில் நானும் கவிதைகள் வாசிக்க ஆரம்பித்தேன். அப்படி எனக்கு அறிமுகமானவர் எமிலி டிக்கின்சன். 9, 10-ம் வகுப்புகளில் எமிலியின் கவிதைகளை வாசித்தபோது எனக்கு ஒன்றும் புரிபடவில்லை. அதற்காகவே பதினொன்றாம் வகுப்பில் அட்வான்ஸ்டு இங்கிலீஷ் பிரிவு எடுத்தேன்.

வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் என் அம்மாச்சியின் மரணம்.  அந்த வாடை, அந்த அழுகை, இனிமேல் அந்த நபர் திரும்பி வரமாட்டார் என்கிற அதிர்ச்சி என அந்த உணர்வுகள் எல்லாமே புதியவை...

அதையடுத்து 2002-ல் என் தம்பியின் மரணம்... மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தவன், மருந்து எடுத்துக்கொண்டிருந்தான். சரியாகி விடும் என நம்பினேன். ஒருநாள் அதிகாலையில் அவனது இறப்புச் செய்தியுடன் வந்தது தொலைபேசி அழைப்பு. அதிகாலையில் வருகிற தொலைபேசி அழைப்பு துர்செய்தியைக் கொண்டுவருகிற பறவையைப் போன்றது.

எனக்கு மழை பிடிக்கும் - ஆனால்...இந்த இரண்டு மரணங்களும் என்னை ரொம்பவே பாதித்திருந்தன. என் கனவுகளிலும் அடிக்கடி பாம்பு தீண்டுகிற மாதிரியும், மரணம் நிகழ்கிற மாதிரியும் வரும்.

எமிலியின் கவிதைகள் பலதும் மரணம் பற்றியே இருக்கும். உயிர்களைக் கொண்டு போகிற திருடனாக கடவுளைப் பார்த்தவர் எமிலி. கடவுள் நம்பிக்கையில் வந்தவர்களிடம், அதிலும் கடவுள்களை ஆண் சார்ந்து பார்க்கிற சமுதாயத்திடம், கடவுளைக் கள்வன் என்று சொல்கிற தைரியத்தை நான் எமிலியிடம் பார்த்தேன். இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகும் நான் என் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை இழந்திருக்கிறேன். அவை எல்லாம் எனக்கு மரணமாகவே பட்டன.

நாம் எல்லோருமே மரணத்தை பயம் சார்ந்து அணுகுகிறோம்... இந்த உலகில் எல்லா உயிர்களிடத்தும் மரணம் இருக்கிறது என்பதை ஏனோ யோசிப்பதில்லை. ஒவ்வொரு  மரணத்துக்குப் பிறகும் ஒரு பிறப்பிருக்கிறது என்பதையும் உணர்வதில்லை. எமிலியின் கவிதைகளை வாசித்த பிறகு எனக்கு அது புரிந்தது. மரணத்தைப் பற்றிய என் பார்வை மாறியது. தனிமைக்கு, எண்ணங்களுக்கு, பொருட்களுக்கு, நட்புகளுக்கு... இப்படி எல்லாவற்றுக்குமே மரணம் உண்டு.மௌனத்தைக்கூட வார்த்தைகளின் மரணமாகப் பார்க்கிறேன் நான். தினம் தினம் ஒரு நாள் இறக்கிறது; ஓர் இரவு இறக்கிறது. ஒரு விடியல் பிறக்கிறது; ஓர் உறவு இறந்து, இன்னொன்று துளிர்க்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு ‘மழைக்காலக் குறிப்புகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதினேன். என் இறப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது அது. எனக்கு மழை பிடிக்கும். ஆனால், என் மரணம் மழை நாளில் நிகழக்கூடாது. நசநசவென்ற குடையும், சகதி படிந்த கால் தடங்களும் என் மரணத்தில் இருக்கக்கூடாது. நல்ல இசை ஒலிக்க, அது அமைதியாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். ‘மரணம் எனக்காக நின்றது’ என்றும், ‘சாகும் தறுவாயில் ஒரு பூச்சியின் ரீங்காரம்

எனக்கு மழை பிடிக்கும் - ஆனால்...

ஒலித்தது’ என்றும் எழுதிய எமிலியின் படைப்புகளைப் படித்த பிறகு ஏற்பட்ட தாக்கம் இது.

‘இனியும் ஏன் எழுத வேண்டும்?’ என அடிக்கடி எனக்குச் சலிப்பு ஏற்படுவதுண்டு. எழுதுதல் என்பது என் கனவு. அதையே என் தொழிலாகவும் மாற்றிக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில் வந்தவள் நான். ஆனால், தமிழ்ச் சமூகத்தில் எழுத்து என்பதைத் தொழிலாக, சோறு போடுகிற விஷயமாக வைத்துக் கொள்ள முடிவதில்லை. எழுத்தில் வாழ்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்களா என்பதே கேள்விக்குரிய விஷயம்தான். இங்கே படைப்பு என்பது பேசப்படுவதில்லை. படைப்பாளிகள் பேசப்படுகிறார்கள். அதற்கு, சுயவிளம்பரமும் சந்தைப்படுத்திக் கொள்கிற திறமையும் அவர்களுக்கு அவசியமாகிறது. அது தெரியாமல் தோற்றுப் போக வேண்டிய நிலையை சந்திக்கிற ஒவ்வொரு முறையும் `இனி எழுதி என்ன செய்யப் போகிறோம்?' என எரிச்சல் வருவதுண்டு. ஆனால், எழுத்து மட்டும்தான் நான் விரும்பிய உலகில் என்னை சஞ்சரிக்க வைக்கும். என் எழுத்து என்பது கல்வெட்டு போன்றது. எனக்குப் பிறகு சாலையைக் கடக்கும் பெண்கள், இப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார்... இந்த இடங்களில் இடறியிருக்கிறார்... இந்த பிரச்னைகளை சந்தித்திருக்கிறார் என என்னைக் கடந்து போக அந்தக் கல்வெட்டு அவசியம். எழுத வேண்டாம் என நினைக்கிற ஒவ்வொரு முறையும் எமிலியின் படைப்புகள்தான் எனக்கு உந்துதலாக இருக்கின்றன; மீண்டும் எழுதத் தூண்டுகின்றன. அவர்தான் என்னை இன்னமும் கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்...’’