லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

கம்பஞ்சோறு தந்த திடகாத்திரம்! - பாட்டி காலத்து உணவு

கம்பஞ்சோறு தந்த திடகாத்திரம்! - பாட்டி காலத்து உணவு
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பஞ்சோறு தந்த திடகாத்திரம்! - பாட்டி காலத்து உணவு

கட்டுரை, படங்கள்: கே.குணசீலன்

``எனக்கு மொத்தம் 4 பிள்ளைங்க. எல்லாரும் வெளியூர்ல இருக்காங்க. வாழ்ந்த கிராமத்த விட்டுட்டு போகமுடியாம நான் தனியாவே இருக்கேன்...'' எனும் தரணியம்மாளுக்கு வயது 75. இவர் திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் வசித்து வருகிறார்.

கம்பஞ்சோறு தந்த திடகாத்திரம்! - பாட்டி காலத்து உணவு

``அந்தக் காலத்தில் கேழ்வரகு, கம்பு, தினை, வரகு அரிசி, குதிரை வாலி இப்படி சிறுதானியங்கள்ல செய்யுற உணவுங்கதான் எப்பவும் இருக்கும். நான் தினை அரிசியில சாதம், அதிரசம், லட்டு, கேழ்வரகில் புட்டு, இடியாப்பம், அடை, வடை, வரகு அரிசியில் சாதம், கூழ், மாவு உருண்டை விதம்விதமான உணவுங்க செய்வேன். 

அதுவும் கம்புல சாதம்  வடிச்சு, அதுக்கு மீன் குழம்பு இல்லைன்னா கறிக்குழம்பு வெச்சு சாப்பிட்டா, நாக்குல தண்ணி சொட்டும். இந்த மாதிரி உணவை சாப்பிட்டுதான் யாரோட உதவியும் இல்லாமல் நடமாடுறேன். தினமும் சரியா நாலு மணிக்கெல்லாம் எழுந்து வீட்டு வேலைகளை முடிச்சுட்டு நிலத்துக்குப் போயி பருத்தி விவசாயம் பாத்துட்டு வருவேன்.

என் பிள்ளைங்க எல்லாம் `எதுக்கும்மா இந்த வயசுல கஷ்டப்படுற? பேசாம எங்ககூட வந்து இருங்க'ன்னு கூப்பிடறாங்க. ஆனா, எனக்கு என்னங்க கொற, நல்லா ஆரோக்கியமாதான் இருக்கறேன். என்னைப் பொறுத்தவரை  இதுதாங்க சொர்க்கம். இப்ப இருக்க புள்ளைங்க சாப்பிடறதுல எல்லாம்  மாவு சத்துதான் அதிகமா இருக்கு. அதனாலதான் சர்க்கரை வியாதியெல்லாம்கூட வருதுன்னு சொல்றாங்க. ஆனா, சிறுதானிய உணவுலதான் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்பும் சத்துன்னு எல்லாமே இருக்குன்னு சொல்றாங்க.  

என்னோட   புள்ளைங்களுக்கு இதெல்லாம் கொடுத்து வளர்த்து விட்டுட்டேன். ஆனா, பேரக்குழந்தைங்களுக்கு இந்தமாதிரி சத்தான உணவு கிடைக்கறது இல்லன்னு வருத்தமா இருக்கு. நான் அவங்களை பார்க்க போகும்போதெல்லாம், சிறுதானிய பலகாரங்கள் செஞ்சு எடுத்துட்டு போவேன். அவங்களும் அதை ஆசையா சாப்பிடு வாங்க. நீங்க எல்லாம்கூட இதுமாதிரி சத்தா சாப்பிட்டு ஆரோக்கியமா இருங்கப்பா" என நம்மிடம் அக்கறையுடன் சொன்னவர், சிறுதானியத்தை பயன்படுத்தி இரண்டு உணவுகளையும் செய்து காட்டினார். உங்களுக்காக பாட்டி கைப்பக்குவத்தில் அந்த உணவுகள் மேலே இடம்பிடித்துள்ளன.

தினை லட்டு..

(மொத்தம் இருபது லட்டு செய்வதற்கு)

கம்பஞ்சோறு தந்த திடகாத்திரம்! - பாட்டி காலத்து உணவு

தேவையானவை: தினை - 1/2 கிலோ, சீனி (சர்க்கரை) - 400 கிராம், ஏலக்காய் - நான்கு, நெய் - தேவையான அளவு, முந்திரி (நெய்யில் வறுத்தது) - சிறிதளவு.

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தினையைப்போட்டு வாசனை வரும் அளவு வறுக்க வேண்டும். பிறகு மிக்ஸியில் போட்டு தூளாக பொடி செய்ய வேண்டும். பின்னர் தினை மாவை சல்லடையில் சலிக்க வேண்டும். சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து இரண்டையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின்பு நெய், முந்திரி, ஏலக்காய் சேர்த்துக் கிளறி, கையால் உருண்டையாக உருட்டினால்... தினை லட்டு ரெடி.

வரகு அரிசி புலாவ் (5 பேருக்கு)

தேவையானவை: வரகு அரிசி - 1/2 கிலோ, கேரட் (நறுக்கியது)  - 100 கிராம், பீன்ஸ் (நறுக்கியது) - 100 கிராம், பச்சைப்பட்டாணி - 100 கிராம், பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 5, தக்காளி - 1 (நறுக்கியது), இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - தேவையான அளவு, கொத்தமல்லித்தழை, புதினா இலை - தேவையானஅளவு, மிளகாய்த்தூள் - தேவையானஅளவு, நெய் - தேவையானஅளவு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

கம்பஞ்சோறு தந்த திடகாத்திரம்! - பாட்டி காலத்து உணவு

செயல் முறை: வரகு அரிசியை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலி வைத்து சூடான பிறகு நெய் மற்றும் எண்ணெய் விட வேண்டும். அதன் பிறகு பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலைகளை போட்டு நன்றாக பொரிகிற அளவுக்கு வதக்க வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, புதினா, பச்சைப்பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை போட்டு வதக்க வேண்டும். பின்னர் கேரட் மற்றும் பீன்ஸை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு கிளற வேண்டும். பின்னர் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறிய பிறகு தேவையான அளவு ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்னர் வரகு அரிசியை அதில் போட்டு உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டிய பிறகு இறக்கினால், வரகு அரிசி புலாவ் ரெடி.