லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

மொட்டை மாடியில் விளையும் சிறுதானியங்கள்!

மொட்டை மாடியில் விளையும் சிறுதானியங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மொட்டை மாடியில் விளையும் சிறுதானியங்கள்!

புதுமுயற்சிதுரை.நாகராஜன் - படங்கள்: பா.அருண்

மொட்டை மாடியில் விளையும் சிறுதானியங்கள்!

சாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் கேடுகளை கொஞ்சம் கொஞ்சமாக நாம் உணரத்தொடங்கியதன் விளைவு... இயற்கை விளைபொருட்களைத் தேடி வாங்க ஆரம்பித்துவிட்டோம். அதன் அடுத்தகட்டமாக இயற்கை காய்கறிகளை உற்பத்தி செய்யும் நோக்கில், மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டங்களை அமைத்து வருகிறார்கள். பெரும்பாலானோர், வீட்டுத்தோட்டங்களில் காய்கறி, கீரைகள் மற்றும் மூலிகைகளை வளர்ப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களில் கொஞ்சம் வித்தியாசமாக மாடித்தோட்டத்தில் சிறுதானியங்களை விளைவித்து வருகிறார், சென்னை, ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த சுபஸ்ரீ. 

மாடித்தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவரை சந்தித்தோம். ``நான் எம்.எஸ்.ஸி., ஃபிசிக்ஸ் முடிச்சிருக்கேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வமுண்டு. 8 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு சித்த மருத்துவர்கிட்ட உதவியாளரா வேலை பார்த்தேன். அதனால மூலிகைகள்மேல ஆர்வம் வந்ததால மூலிகைச் செடிகளை வீட்டில் வளர்க்க ஆரம்பிச்சேன். என்கிட்ட, கொடிப்பசலைக்கீரை, வெட்டிவேர், திப்பிலி, ஓமவல்லினு 150 வகையான மூலிகைகள் இருக்கு. அதோட, காய்கறிகள், கீரைகள்னு மாடியில வளர்த்துட்டிருக்கேன். மாடித்தோட்டத்தை பராமரிக்கிறதுக்கு எனக்கு முக்கியமான வழிகாட்டி `பசுமை விகடன்'தான்'' என்ற சுபஸ்ரீ தொடர்ந்தார்.

``ஆரம்பத்துல செடிகளுக்கான இடுபொருட்களை வெளியில் இருந்து தான் வாங்கிட்டு இருந்தேன். செடிகள் அதிகமாகவும் நானே பஞ்சகவ்யா தயாரிச்சுக்கிறேன். காய்கறி, மூலிகைகளை எல்லாம் வெற்றிகரமா விளை விச்சதுக்கு அப்புறம் சிறுதானியங்களைப் பயிரிடலாம்னு யோசனை வந்தது. ஆறு மாசத்துக்கு முன்னாடி, தொட்டிகள்ல கம்பு, சோளத்தை விதைச்சேன். அது சரியா விளையலை. அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு திரும்பவும் விதைச்சப்போ, ஓரளவு விளைய ஆரம்பிச்சிருக்கு. மாடியில ஒண்ணு ரெண்டு செடிகளைத்தான் வளர்க்க முடியுங்கிறதால குறைஞ்சளவுதான் மகசூல் கிடைக்கும்'' என்றவர் தோட்டம் அமைப்பது பற்றி சொன்னார்.

மொட்டை மாடியில் விளையும் சிறுதானியங்கள்!


``மாடித்தோட்டத்துல காய்கறிகள், சிறுதானியங்கள் எல்லாத்துக்குமே நாட்டு விதைகளை வாங்கி விதைக்கிறது நல்லது. ஆர்கானிக் ஷாப்கள்ல நாட்டு விதைகள் கிடைக்குது. 600 சதுர அடி பரப்பளவுள்ள மாடியில் 50 பைகள் வெச்சு தோட்டம் போடலாம். செடி வளர்ப்பு பைகளை வாங்கி... அதுல மாட்டு எரு, மண்புழு உரம், வேப்பம்பிண்ணாக்கு, செம்மண் எல்லாத்தையும் கலந்து நிரப்பணும். பிறகு, நமக்கு வேண்டிய விதைகளை விதைக்கலாம். மொத்தமும் சிறுதானியமாகூட விதைக்கலாம். எதுவா இருந்தாலும், ஒரு தொட்டிக்கு மூன்று விதை கணக்குல விதைக்கணும். ஒவ்வொரு பைக்கும் ஒன்றரை அடி இடைவெளி விடணும்.

காய்கறிகளுக்கு மண்ணைக் காயவிடக் கூடாது. சிறுதானியங்களுக்கு மண் காய்ஞ்சதும் தண்ணீர் விட்டா போதும். பூவாளி மூலமா தண்ணீர் விட்டா தான் அளவா தண்ணீர் விட முடியும். தண்ணீர் அதிகமானா உரங்கள் கரைஞ்சு வெளியேறிடும். சிறுதானியங்களை வெயில் படுற இடங்கள்லதான் வளர்க்கணும். பயிர்களுக்கு வாரம் ஒருமுறை பஞ்சகவ்யா கொடுக்கணும். பஞ்சகவ்யா இயற்கை அங்காடிகள்ல கிடைக்கும். இது கிடைக்கலனா, ரெண்டு, மூணு நாள் வரைக்கும் புளிச்ச மோர்ல வெல்லத்தைக் கரைச்சி விட்டு பாசனத்துல சேர்த்துக் கொடுக்கலாம். இலைவழியாவும் தெளிக்கலாம். நடவு செஞ்ச 3-ம் வாரம் அடியுரமாக வேப்பம்பிண்ணாக்கு, மண்புழு உரம் கொடுக்கணும். சரியாப் பராமரிச்சா 75 முதல் 90 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம்.

சிறுதானியம் முளைக்கும்போது... பறவைகள், எலிகள் வர ஆரம்பிச்சுடும். அதனால, கவனமா இருக்கணும். வாரம் ஒரு முறை தொடர்ந்து பஞ்சகவ்யா தெளிச்சா அந்த வாசனைக்கு அணில்கள் வராது. 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக் கணும். பசுமைக்குடில் அமைச்சா பறவைகள்ட்ட இருந்து பயிர்களைக் காப்பாத்தலாம்.'' என்ற சுபஸ்ரீ நிறைவாக,``விஷமில்லாத காய்கறிகளுக்காக மாடித்தோட்டம் போடறதுமாதிரி சிறுதானியங்களையும் நாமளே வளர்த்தா ரசா யனம் இல்லாத சத்தான தானியங்கள் நமக்குக் கிடைக்கும். அதனால ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்'' என்று நிதர்சனம் சொன்னார்!