லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

தாயுமானவர்... தந்தையுமானவர்!

தாயுமானவர்... தந்தையுமானவர்!
பிரீமியம் ஸ்டோரி
News
தாயுமானவர்... தந்தையுமானவர்!

ஆண்கள் தினம் - ஆண்கள் தினம்ஆர்.வைதேகி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

‘அவளுக்கென்ன.... புருஷன் உள்ளங்கையில வெச்சுத் தாங்கறான்...’ எனச் சொல்வதைக் கேட்டிருப்போம். திருப்பூரைச் சேர்ந்த கவிதாவை அவரின் கணவர் சுரேஷ் மெய்யப்பன் நிஜமாகவே அப்படித்தான் தாங்குகிறார். மாற்றுத்திறனாளி கவிதாவுக்கு சுரேஷ், கணவர் மட்டுமல்ல... தாயுமானவர்... தந்தையுமானவர்!

தாயுமானவர்... தந்தையுமானவர்!

``2 வயசுல போலியோ தாக்கினதுல என்னால சுயமா இயங்க முடியாத நிலை. பத்தாவது படிக்கிறவரை அம்மாதான் என்னைத் தூக்கிட்டுப் போய் ஸ்கூல்ல விட்டுட்டுக் கூட்டிட்டு வருவாங்க. ரோட்டரி கிளப்புல மாற்றுத்திறனாளிகளுக்கு மூணு சக்கர வண்டி கொடுக்கிறதாகவும், எனக்கும் சைக்கிள் தேவைப்படுமானும் கேட்டு என் அத்தைப் பையன், அவனோட நண்பன் சுரேஷ் மெய்யப்பனைக் கூட்டிட்டு வந்தான். ‘ஓட்டத் தெரியாது... எனக்கு வேணாம்’னு சொல்லியும் சுரேஷ் கேட்கலை. ‘வாங்கி வெச்சுக்கோங்க... தேவைப்பட்டா பயன்படுத்திக்கலாம்’னார். ‘நாளைக்கு ரெடியா இருங்க... நானே வந்து கூட்டிட்டுப் போறேன்’னும் சொன்னார். அடுத்தநாள் ஆட்டோவோட வந்து அழைச்சுட்டுப் போனார். போட்டோ எடுக்கணும்னு சைக்கிள்ல என்னைத் தூக்கி உட்கார வைக்கிறப்ப, சுத்தி இருந்தவங்க சரியா பிடிக்காம விட்டுட்டாங்க... விழுந்துட்டேன். மறுபடி என்னை ஏத்தி உட்கார வைக்க முயற்சி பண்ணினபோது, சுரேஷ்தான், ‘வேணாம்... கஷ்டப்படுத்தாதீங்க... சும்மா சைக்கிளைப் பிடிச்சிருக்கிற மாதிரி போட்டோ எடுத்தா போதும்’னு சொன்னார். திரும்பவும் வீடு வரை கொண்டு வந்து விட்டவர், ‘எப்ப என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க’னு சொல்லி நம்பர் கொடுத்தார். ‘உங்களுக்குக் கல்யாணம் பண்ணினாலோ, குழந்தை பிறந்தாலோ பிரச்னைகள் வருமா? அதைப் பத்தி டாக்டர்கிட்ட கேட்டிருக்கீங்களா’னு கேட்டப்ப எனக்குப் பிடிக்கலை. திட்டி அனுப்பிட்டேன்....’’ - ஊடலில் மலர்ந்த உறவை விவரித்தபடி ஆரம்பிக்கிறார் கவிதா.

``ரெண்டு நாள் கழிச்சு மறுபடி வந்தார். ‘சைக்கிள் ஓட்டினீங்களானு கேட்க வந்தேன்’னார். அப்படியே அவரோட குடும்பத்தைப் பத்தின விஷயங்களையும் சொன்னார். ‘என்கிட்ட எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க?’னு கேட்டேன். ‘உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கறேன். உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு’ன்னார். ‘ரெண்டு நாள் முன்னாடிதான் சந்திச்சிருக்கோம். அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றீங்க... ஒருநாள் ரெண்டு நாள் என்னைத் தாங்கலாம்... வாழ்க்கை முழுக்க முடியாது’னு சொன்னேன். ‘மனசுக்குப் பிடிச்சிருச்சு... அவ்வளவுதான்’னு சொன்னவர்கிட்ட, ‘இவ்வளவு பேசறீங்கல்ல... தில்லு இருந்தா உங்கம்மாவைக் கூட்டிட்டு வந்துப் பேசுங்க...’ன்னேன். ‘வரேன்’னு சொல்லிட்டுப் போனவரை ஆளையே காணலை!

ஒரு வாரம் கழிச்சு மறுபடி வந்தார்... எங்கம்மா, அப்பா எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு, ‘உங்க பொண்ணை மகாராணி மாதிரி பார்த்துப்பேன்’னார். எங்க வீட்ல யாருக்கும் நம்பிக்கை இல்லை. அதனால சம்மதமும் இல்லை. எனக்கும் அவர்மேல ஈடுபாடே வரலை. அதற்கு அடுத்த வாரம் அவங்கம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்தார். அதுவரை அவங்கம்மாவுக்கு என் நிலைமை தெரியாது. என்னைப் பார்த்ததும் கதறிக் கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க. ‘எனக்கு நீ ஒரே பையன்... எப்படிடா இப்படியொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பேன்’னு கத்தினாங்க... அவருக்கு அம்மாவை சமாதானப்படுத்தறதா, என்னை சமாதானப்படுத்தறதானு தெரியலை. அத்தனை களேபரத்துலயும் என்னை பாடச் சொன்னார்.

நான் ‘ஜானகி தேவி... ராமனைத் தேடி...’யும், ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’னும் பாடினேன். கண்ணைத் துடைச்சுக்கிட்டு, அவங்கம்மா எனக்கு குங்குமம் வச்சு, பூ வெச்சு, ‘நீதான் என் மருமகள்... என் பையனை உனக்குப் பிடிச்சிருக்கா’னு கேட்டாங்க. ‘என்னை மாதிரி ஒரு பெண்ணை உங்க பையனுக்கே பிடிச்சிருக்கிற போது, அவரை எனக்குப் பிடிக்காதா’னு கேட் டேன். எல்லா பிரச்னைகளும் சரியாகி, கல்யாணம் முடிஞ்சது!’’

இந்த இடத்தில் சுபம் போட்டிருக்க வேண்டிய கவிதா - சுரேஷ் வாழ்க்கையில் திடீர் திருப்பம்...

‘‘கல்யாணமான அடுத்த மாசமே கர்ப்பம் ஆனேன். அதுவும் என்னை மாதிரிதான் பிறக்கும்னு எல்லாரும் அந்தக் குழந்தையைக் கலைக்கச் சொன்னாங்க. ‘உனக்கு ஏதாவது ஆயிடுமோனு பயமாருக்கு... அதனால இந்தக் குழந்தை நமக்கு வேணாம்’னு சொன்னார் என் கணவர். என்னால தாங்கவே முடியலை. வேற வழியில்லாம மனசைக் கல்லாக்கிக்கிட்டு, கருவைக் கலைக்க மாத்திரை எடுத்துக்கிட்டேன். ஆனாலும், ஒண்ணும் ஆகலை. வீட்டுக்குள்ளயே இருக்கிறதாலதான் ஒண்ணும் ஆகலைனு அழகுமலை கோயிலுக்குக் கூட்டிட்டுப் போனார். 70 படிகள்லயும் என்னைத் தூக்கிட்டுப் போய் சாமி கும்பிட்டதும், அங்கயே விட்டுட்டு, ‘நீயே கீழே வந்துடு’னு சொல்லிட்டார். கடவுளை வேண்டிக்கிட்டே உட்கார்ந்தும் நகர்ந்தும் அத்தனை படிகள்லயும் இறங்கி வந்தேன். அப்படியும் கர்ப்பம் கலையலை. மறுபடி டாக்டரை பார்க்கப் போனோம். ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு, ‘குழந்தை ரொம்ப நல்லாருக்கு... ஆனா, அது எப்படித் திரும்பும்.... அதை நீ எப்படிப் பெத்தெடுக்கப் போறேன்னுதான் கவலையா இருக்கு’ன்னாங்க டாக்டர். என்னால முடியும்னு நம்பினேன். அதேமாதிரி நல்லபடியா குழந்தை பிறந்தது. எங்க பையன் விஷ்வபாரதி, இப்ப பத்தாவது படிக்கிறான்...’’ - நம்பிக்கையே பெரிய ஆயுதம் என்பதை நம்ப வைக்கிறார் கவிதா.

தாயுமானவர்... தந்தையுமானவர்!

‘‘நான் என்ன ஆசைப்பட்டாலும் மறுக்காம நிறைவேத்துவார். அப்படித்தான் ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சியில பேசணும்னு ஆசைப்பட்டேன். 3 தடவை செலக்ட் ஆகலை. நாலாவது முறையும் கூட்டிட்டுப் போனார். அந்த 50-வது எபிசோட்ல பேசி ஜெயிச்சேன். அதைப் பார்த்துட்டு ஒரு கம்பெனி எம்.டி. எங்களுக்கு ஒரு வீட்டை அன்பளிப்பா கொடுத்தார்.

மேல படிக்கணும்னு ஆசைப்பட்டேன். கர்நாடக சங்கீதம் கத்துக்கணும்னு ஆசை வந்தது. அதிகாலையில 5 மணிக்கு கிளாஸ். கொஞ்சமும் அலுத்துக்காம எனக்கு முன்னாடி எழுந்து எல்லா வேலைகளையும் முடிச்சு, என்னையும் தயார்படுத்தி, பாட்டு கிளாஸுக்கு கூட்டிட்டுப் போவார் என் கணவர். மியூசிக் கத்துக்கிட்டு, இப்ப நான் பாட்டு கிளாஸ் எடுக்கறேன். பி.ஏ. இங்கிலீஷ் லிட்ரச்சர் படிக்கிறேன்.

மூணு மாசத்துக்கு முன்னாடி எனக்கு ரத்தப்போக்கு அதிகமாகி, கர்ப்பப்பை நீக்கற ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷனுக்குப் பிறகு என் தங்கச்சி வீட்ல ரெஸ்ட் எடுத்திட்டிருந்தேன். என்னைப் பார்க்க வந்துட்டுத் திரும்பும்போது என் கணவருக்கு ஆக்சிடென்ட் ஆகி, கை, கால் எலும்புகள் ஃபிராக்சர். மூணு மாசம் படுத்த படுக்கையா கிட்டார். வீல் சேர்லதான் இயங்க வேண்டியிருந்தது. ‘நீ எவ்வளவு கஷ்டப்படறேன்னு இப்ப புரியுது...’னு அந்த நிலைமையிலயும் என்னைப் பத்தி யோசிக்கிற அந்த மனசுதான் எங்களை இன்னும் அதே காதலோட இணைச்சு வெச்சிருக்கு.

என் கணவர் நிறைய பள்ளிக் கூடங்கள்ல தமிழ் சிறப்பாசிரியரா இருக்கார். காலையில எழுந்தா, மனைவி காபியோட காத்திருக் கணும்... புருஷனோட தேவைகளைப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கணும்னு எதிர்பார்க்கிற ஆண்கள் மத்தியில, தன்னோட பரபரப்பான வேலை களுக்கு இடையிலயும் என்னை கவனிக்கிற அவரோட அன்பை என்னனு சொல்றது? எனக்கு பல் விளக்கி விடறது, தலைக்கு குளிப் பாட்டி விடறது, தலை சீவி விடறது, பீரியட்ஸ் டைம்ல கவனிச்சுக்கிறதுனு எல்லா வேலைகளையும் இத்தனை வருஷங்களா முகம் சுளிக்காம பண்ணிட்டிருக்கார்.

இத்தனை வருஷங்களுக்குப் பிறகும் எங்களோட காதலர் தினம், முதல் காதலர் தினம் மாதிரியே இனிப்பா இருக்கு. கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்னுதான் சொல்லணும்...’’

- கண் கலங்குகிறது கவிதாவுக்கு.

அன்பாலே அழகான வாழ்க்கை அது!