லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

பட்டதாரிப் பெண்ணின் சிறுதானிய விவசாயம்!

பட்டதாரிப் பெண்ணின் சிறுதானிய விவசாயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பட்டதாரிப் பெண்ணின் சிறுதானிய விவசாயம்!

பாரம்பர்யம்ஜி.பழனிச்சாமி, படம்: க.தனசேகரன்

`வெள்ளி முளைக்கையிலே,
வெள்ளச்சோளம் குத்தையிலே,
அள்ளி முடிஞ்ச கொண்டை
அவிழாமல் பாத்துக்கடி!'


- என்று தொடங்கும் இந்த நாட்டுப்புறப் பாடல் சொல்லும் உண்மை இதுதான். அந்தக்கால பெண்கள் அதிகாலை எழுந்து சோளம், கம்பு, தினை, சாமை, வரகு... போன்ற சிறுதானியங்களில் ஏதாவதொன்றை உரலில் போட்டு உலக்கை கொண்டு குத்துவார்கள்.  பிறகு, அவற்றைப் புடைத்து மண்பானையில் இட்டு விறகு அடுப்பில் சமைத்து வயிறார உண்டு நூறு வயது வரை வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் உடல் இரும்பு கணக்காக உரமேறி இருந்ததற்குக் காரணம், பாரம்பர்ய சிறுதானிய உணவுகள்தான். குறிப்பாக பெரும்பாலான பெண்கள், சுகப் பிரசவம் மூலம் பிரசவித்ததற்குக் காரணம் உணவும், உடலுழைப்பும்தான். ஆனால், பசுமைப்புரட்சியின் விளைவால் ஊடுருவிய வீரிய நெல் ரகங்கள், சிறுதானியங்களுக்கு வேட்டுவைத்துவிட்டன. அப்படி இருந்தாலும்... இன்னமும் பல விவசாயிகள் சிறுதானியங்களை விடாமல் விவசாயம் செய்து வருகிறார்கள்.

அப்படி ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், பாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்யா.

பட்டதாரிப் பெண்ணின் சிறுதானிய விவசாயம்!

களத்து மேட்டில் காய்ந்துகொண்டிருந்த சிறுதானியங்களில் ஈரப்பததத்தை சோதனை செய்துகொண்டிருந்த சத்யாவைச் சந்தித்தோம்.

``எனக்கு பொறந்த வீடு, புகுந்த வீடு ரெண்டுமே விவசாயக் குடும்பம்தான். நான் எம்.பி.ஏ படிச்சு முடிச்சதும் நிறைய இடங்கள்ல வேலை வாய்ப்பு கிடைச்சது. ஆனாலும், விவசாயத்து மேல ஆர்வம் அதிகமா இருந்ததால வேலைக்குப் போகலை. பாரம்பர்ய முறையில் இயற்கை விவசாயம் செய்யணும்னுதான் ஆசை இருந்தது. கல்யாணம் ஆனதுக்கப்பறம் என் கணவர் குடும்பத்துலயும் விவசாயம் செய்றதுக்கு சரினு சொல்லிட்டாங்க. அதனால, 10 வருஷமா விவசாயம் செய்துட்டுருக்கேன்.
எங்களுக்கு 15 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல நெல், கரும்பு, வாழை, நிலக்கடலைனு இயற்கை முறையில சாகுபடி செய்யறோம். அதோட சிறுதானியங்களை அழிஞ்சுடாம காப்பாத்தணும்னு அதையும் சாகுபடி செய்றோம். இந்த வருஷம் கம்பு, கேழ்வரகு, சாமை, மூணையும் அரை அரை ஏக்கர்லயும் பத்து சென்ட்ல தினையையும் விதைச்சோம். எல்லாமே நாட்டு ரகங்கள்தான். எல்லாத்தையும் அறுவடை பண்ணியாச்சு" என்ற சத்யா தொடர்ந்தார்.

``தினையை மட்டும் குறைவான பரப்புல விதைச்சதுக்கும் ஒரு காரணம் இருக்கு. எங்க பகுதியில கிளிகள் அதிகமா இருக்கு. எந்த சிறுதானியத்தை விதைச்சாலும் கிளிகள் கூட்டமா வந்து சாப்பிட ஆரம்பிச்சுடும். அதுகளை விரட்டவே முடியாது. கிளிகளுக்கு ரொம்ப பிடிச்ச தானியம் தினை. தினை வயல்ல இருந்தா வேற எந்த தானியத்தையும் கிளிகள் கண்டுக்கிறதில்லை. அதனால மத்த மூணு தானியங்களையும் காப்பாத்தத்தான், தினை விதைச்சோம். ஆனா, குருவிகளுக்கும் சிறுதானியங்கள் பிடிக்கிறதால தேடி வரும். அதெல்லாம் சாப்பிட்டது போக மீதிதான் நமக்கு. அப்படி சாப்பிட வர்ற கிளிகள், குருவிகள் மகசூல் பாதிப்பை ஏற்படுத்தினாலும்... அதுக வயல்ல இருக்குற புழு, பூச்சிகளையும் பிடிச்சு சாப்பிடுறதால நமக்கு நல்லதுதான்.

நாங்க விதைச்ச சிறுதானியங்கள் எல்லாமே விதைச்ச 90-ம் நாள்ல இருந்து 120 நாட்கள்ல அறுவடைக்கு வரக்கூடிய பயிர்கள். கம்பை, பங்குனிப்பட்டத்தில் விதைச்சு ஆனியில் அறுவடை செஞ்சோம். மத்த மூணையும், கார்த்திகைப்பட்டத்தில் விதைச்சு பங்குனியில் அறுவடை செஞ்சோம். ஒண்ணொண்ணையும் அரை ஏக்கர்ல விதைச்சதுல, 400 கிலோ கம்பு, 900 கிலோ கேழ்வரகு, 200 கிலோ சாமை கிடைச்சது. 10 சென்ட்ல விதைச்ச தினையில் கிளிகளுக்குப் போக 20 கிலோ கிடைச்சது" என்ற சத்யா சிறுதானியங்களின் பயன்பாடு குறித்துச் சொன்னார்.

"குழந்தை குட்டினு 10 பேர் கொண்ட கூட்டுக்குடும்பம் எங்களுது. தினமும் எங்க சாப்பாட்டில் சிறுதானியம் இருக்கும். சாமை அரிசியில் சோறு வடிச்சு சாப்பிடுவோம். அதுல, அரிசியை விட ஏழு மடங்கு நார்ச்சத்து இருக்கு. வளரிளம் பெண்கள் கட்டாயம் சாமைச் சோறு சாப்பிடணும். ரத்த சோகை வராமல் தடுக்கும் சக்தி இதுக்கு உண்டு. இதைச் சாப்பிட்டா நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கிறவங்களுக்கும் சூடான சூழலில் வேலை பார்க்கிறவங்களுக்கும் உடல் சூடு அதிகரிக்கும். அந்த மாதிரியானவங்க, வெயில் காலங்கள்ல கம்பங்கூழ், மோரில் ஊறவைத்த கம்பங்களி சாப்பிட்டா உடல் சூடு குறையும். மனச்சோர்வு போயிடும். குளிர்காலங்கள்ல சூடான கம்பு சாதத்தில், கொள்ளுசாறு ஊத்தி, தேங்காய் எண்ணெய் விட்டு சாப்பிடலாம்.

அரிசி, கோதுமையைவிட சத்தானது, கேழ்வரகுதான். புரதம், தாதுஉப்பு, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து எல்லாம் இதில் இருக்கு. உப்புமா, வடை, தோசைனு நிறைய டிஷ் செய்யலாம். இது, குடல் புண்ணை ஆற்றும். சூட்டைக் குறைக்கும். எலும்பை உறுதிப்படுத்தும்.

தினையிலயும் புரதம் அதிகம். இதய நலனுக்கு ஏற்ற உணவு. முறுக்கு, இனிப்பு உருண்டை மாதிரி பலகாரங்கள் செய்யலாம்" பயன்பாடுகள் குறித்தும் பெருமையோடு சொன்ன சொன்ன சத்யா, ``மூணு வருஷமா மாப்பிள்ளைச் சம்பா ரக நெல்லையும்  சாகுபடி செய்துட்டுருக்கோம். இப்போ 2 ஏக்கர்ல நடவு செய்திருக்கோம். தை மாசத்துல இது அறுவடைக்கு வந்திடும். இதுவும் பாரம்பர்ய நாட்டு ரகம்தான். அறுவடை செஞ்ச மாப்பிள்ளைச் சம்பா நெல்லை அரிசியா அரைச்சுதான் விற்பனை செய்றோம்.

நாங்க பாரம்பர்ய ரகங்களை மட்டும் பயிர் பண்றதால விதைக்காக அலையுறதேயில்லை. 10 வருஷமா எங்க வயல்ல விளைஞ்ச தானியங்களைத்தான் விதைச்சுட்டு இருக்கோம். இதுதான் பாரம்பர்ய நாட்டு ரகங்களோட மகிமை. விவசாயிகள் எல்லாருமே கொஞ்ச இடத்துலயாவது சிறுதானியங்களை விதைச்சு, அதைச் சாப்பிட்டு ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கணுங்கிறதுதான் என்னோட ஆசை'' என்றார் அக்கறை பொங்க!