லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

இது அவஸ்தை இல்லை... அலாதி அனுபவம்!

இது அவஸ்தை இல்லை... அலாதி அனுபவம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இது அவஸ்தை இல்லை... அலாதி அனுபவம்!

ஆண்கள் தினம் - முழுநேர அப்பாசாஹா

``குழந்தையைப் பார்த்துக்கிறதுக்கு ஆள் இல்லை. அம்மாகிட்டயோ, மாமியார்கிட்டயோ விட்டுட்டு வேலைக்குப் போகறதுல விருப்பமில்லை. வேலையா, குழந்தையாங்கிற கேள்வி வந்தபோது, குழந்தைதான் பெரிசா தெரிஞ்சது. வேலையை விட்டுட்டேன்...’’

வீட்டு வேலை செய்கிற பெண் முதல் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் வரை இப்படி முடிவெடுப்பதைப் பார்த்திருப்போம். குழந்தைக்காகவும் குடும்பத்துக்காகவும் படிப்பு, பதவி என்கிற கிரீடங்களைத் துறக்கத் துணிவது பெண்களின் இயல்பு.

ஓர் ஆண் இப்படி முடிவெடுத்தால்? ‘கி அண்ட் கா’ போன்று சினிமாவாக எடுக்க வேண்டுமானால் அதெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கலாம். நிஜத்தில் ஹவுஸ் ஹஸ்பண்டாகவே இருந்தாலும், அதை வெளியில் சொல்லிக்கொள்கிற தைரியம் ஆண்களுக்கு உண்டா?

இது அவஸ்தை இல்லை... அலாதி அனுபவம்!

அப்படியொரு தைரியசாலி சுமன்குமார். பெங்களூரைச் சேர்ந்த இவருக்கு எழுத்தாளர் (‘ரங்கா ஹாஃப் பேன்ட்ஸ்’ நூலின் ஆசிரியர்), ஸ்டாண்ட் அப் காமெடியன் என நிறைய முகங்கள் இருந்தாலும் `முழுநேர அப்பா' என்கிற அடையாளத்திலேயே அதிக பெருமைகொள்பவர்!

``நானும் என் மனைவி சித்ராவும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட வங்க. நான் பி.காம்... சித்ரா டாக்டர். எம்.பி.பி.எஸ் முடிச்சதும் அவங்களுக்கு டி.எம் படிக்க கொல்கத்தாவுல ஸீட் கிடைச்சது.  அப்ப எங்க மகள் ஆத்யாவுக்கு ஒன்றரை வயசு. ‘நீங்களும் என்கூட வர்றதுன்னா, நான் போறேன்’னாங்க என் மனைவி. எனக்கு அவங்க படிப்பும் எதிர்காலமும்தான் பெரிசா தெரிஞ்சது. ஐ.டி வேலை எப்போ வேணா கிடைக்கும். டி.எம் ஸீட் எல்லாருக்கும் கிடைச்சிடாது. 2011-ல என்னோட ஐ.டி வேலையைத் தூக்கிப் போட்டுட்டு, கொல்கத்தா கிளம்பிட்டோம்...’’ - அசத்தலாக ஆரம்பிக்கிறார் சுமன்குமார்.

`` `உத்யோகம் புருஷ லட்சணம்' என்பது மாதிரி வேண்டாத  விஷயங்களைத் தேவையில்லாம உருவாக்கி வெச்சிருக்காங்க. இவங்க பார்வையில உத்யோகம்னா, காலையில எழுந்து, சாப்பாடு கட்டிக்கிடடு, 9 டு 5 ஆபீஸ் போயிட்டு வீட்டுக்கு வர்றது மட்டும்தானா? நான் வீட்ல இருந்து புத்தகம் எழுதறேன். படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதறேன். ஸ்டாண்ட்அப் காமெடியனா எனக்குனு ஒரு இடத்தைத் தக்க வெச்சிருக்கேன். பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகு உத்யோகம் மனுஷ லட்சணமா மாறிடுச்சு...’’ - சூப்பர் பன்ச் வைக்கிற சுமன், நிஜமான பெண்ணியவாதி.

‘’நான் கடைசியா வேலை பார்த்த மூணு இடங்கள்லயும் எனக்கு பெண்கள்தான் மேனேஜர்ஸ். என் வாழ்க்கையிலயும் எப்போதும் நான் ஸ்ட்ராங்கான பெண்களால சூழப்பட்டிருந்திருக்கேன். பாட்டி, அம்மா, மனைவினு எல்லார்கிட்டயும் லீடர்ஷிப் குவாலிட்டீஸை பார்த்து வியந்திருக்கேன்...’’ என்கிறவர், இப்போது முழுமையான முழுநேர அப்பா!

``என்னோட இந்த முடிவுல சாதகங்களும் பாதகங்களும் சமமாவே இருந்திருக்கு. முதல் மூணு மாசம் எனக்கு இந்த லைஃப் ஸ்டைல் செட் ஆகலை. வேலை பார்த்துப் பழகின எல்லாருக்கும் மாசம் பிறந்தா, சம்பளம் கிரெடிட் ஆகியிருக்கானு பார்க்கிற பெரிய போதை இருக்கும். அந்தப் பணம் இல்லாம கஷ்டப்பட்டிருக்கேன். ஆனா, அதுலேருந்து என்னால சீக்கிரம் வெளியில வரவும் முடிஞ்சது.

எனக்குப் பெண் குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும். எங்களுக்குக் குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே பெண்ணாதான் இருக்கும்னு பெண் குழந்தை டிரெஸ்சா வாங்கி வெச்சேன். ரெண்டு பேரும் வேலைக்குப் போகணும்னா குழந்தையை என் அம்மாகிட்டயோ, மாமியார்கிட்டயோ விடணும்.  குழந்தையோட முதல் சில வருடங்கள்ல குழந்தைக்கும் பெற்றோருக்குமான அந்த பந்தம் ரொம்ப முக்கியமானது. அது மிஸ் பண்ணக்கூடாததுனு நம்பினேன். வேலையை விட்டுட்டு அவளை நானே பார்த்துக்கிறதுனு முடிவெடுத்தேன்.

பொதுவாகவே ஆண்களுக்குப் பொறுமை கம்மி. குழந்தையைப் பார்த்துக்கிற விஷயத்துல கொஞ்சம்கூட பொறுமையை எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்துல நானும் அப்படித்தான் இருந்தேன். அவளைத் தூங்க வைக்கவும் அவளுக்குப் பருப்பு சாதம் ஊட்டவும் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன். ஆனா, அதெல்லாம் அவஸ்தைகள் இல்லை... அலாதியான அனுபவங்கள்னு அப்புறம்தான் உணர்ந்தேன்.

இது அவஸ்தை இல்லை... அலாதி அனுபவம்!

அவ முதல் முதல்ல பேசினது, முதல் அடி எடுத்து வெச்சதுனு எதையுமே நான் மிஸ் பண்ணலை. இதையெல்லாம் அம்மாக்கள் மட்டும்தான் அனுபவிக்கணும்னு இல்லையே... அப்பாவா இந்த அனுபவத்தை எல்லா ஆண்களும் அவசியம் அனுபவிக்கணும்கிறது என் ஆசை. வேலையை விட்டுட்டுதான் செய்யணும்னு இல்லை. 3 மாசம் லீவு எடுத்துக்கிட்டு செய்யலாம். பிரசவமான மனைவிக்கு தினம் ரெண்டு மணி நேரம் பிரேக் கொடுத்துட்டு, அவங்களைத் தூங்கவும் அவங்க வேலைகளைப் பார்க்கவும் உதவியா இருக்கலாம்.

வீட்ல நான்தான் சமைக்கிறேன். மூணு வருஷங்களுக்கு முன்னாடி, `நிரந்தர வருமானமில்லையே... சேமிப்பும் கரைஞ்சுக்கிட்டே இருக்கே'ங்கிற மன அழுத்தம் எனக்கு இருந்தது. புத்தகம் எழுதி, பிரபலமாகிறது லட்சத்துல ஒருத்தருக்கு வேணா நடக்கலாம். நமக்கு எப்போ அதெல்லாம் சாத்தியம்?'னு கவலைகள் என்னை துரத்தினபோது, அதுலேருந்து விடுபட சமையல்ல என் ஆர்வத்தைத் திருப்பினேன். இன்னிக்கு எனக்குப் பிடிச்ச விஷயங்கள்ல சமையலும் ஒண்ணு. சமைக்கிறது, பாத்திரம் தேய்க்கிறது, குழந்தையைப் பார்த்துக்கிறதுனு எந்த வேலையும் என்னை சிறுமைப்படுத்தறதா நினைச்சதே இல்லை. பெண்டாட்டியை அடக்கி வெச்சிருக்கிறவன்தான் ஆம்பிளைங் கிற பட்டம் எனக்குத் தேவையில்லை. எனக்கு உறவுகள் முக்கியம்.

என் குழந்தை விளையாடும்போது, அவளோட ஃப்ரெண்ட்ஸ், ‘எங்கப்பா மேனேஜரா இருக்கார்... உங்கப்பா என்ன பண்றார்’னு கேட்பாங்க. ‘எங்கப்பா எழுத்தாளர். ஒருநாள் எனக்காகவும் ஒரு புக் எழுதித் தரேன்னு பிராமிஸ் பண்ணி யிருக்கார்’னு சொல்ற அளவுக்கு அவளுக்குப் பக்குவம் இருக்கு.

ஹவுஸ் ஹஸ்பண்டா இருக்கிற துங்கிறது ஆண்களோட தனிப் பட்ட சாய்ஸ். ஆனா, அப்பாவா குழந்தையோட முதல் வருஷங்கள்ல கூட இருக்கிறது யாரும் தவறவிடக் கூடாத அனுபவம்...’’ - அவசிய அட்வைஸ் தருகிறார்.

அப்பப்பா!