லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

குழந்தைகளுக்கும் உண்டு உளவியல் சிக்கல்!

குழந்தைகளுக்கும் உண்டு உளவியல் சிக்கல்!
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகளுக்கும் உண்டு உளவியல் சிக்கல்!

காரணம் அறிவோம்வி.எஸ்.சரவணன் - படம்: கு.நரேன் வள்ளுவன்

குழந்தைகளுக்கும் உண்டு உளவியல் சிக்கல்!

ந்த உலகில் மிகவும் மென்மையானது, மனிதர்களின் மனம்தான். அதிலும் குழந்தைகளின் மனமோ நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மென்மையானது. இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் ஆய்வறிக்கையில், இந்தியாவில் 4 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 12 சதவிகிதத்தினர் உளவியல் சிக்கல் உள்ளவர்களாக இருக்கின்றனர் எனும் அதிர்ச்சியான தகவலைக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையைச்சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் ஜி.கே.கண்ணனிடம் விரிவாகக் கேட்டறிந்தோம்.

குழந்தைகளுக்கும் உண்டு உளவியல் சிக்கல்!


எதனால் உளவியல் சிக்கல்?


* குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களுக்கு, இரண்டு வகைக் காரணங்கள் உண்டு. ஒன்று, உடல்நிலை சார்ந்தது. அடுத்தது, குழந்தைகள் வளரும் சூழல்.

* வளர்ச்சிக்குத் தேவைப்படும் சத்துகள் குறைவது, இரும்புச்சத்து உணவில் கிடைக்காமல் போவது, சரியான வேளைக்கு உணவு எடுத்துக்கொள்ளாதது, விட்டமின் பி12 குறைவாக இருப்பது... இவையெல்லாம் நரம்பு மண்டலத்தைப் பாதித்து உளவியல் சிக்கலை ஏற்படுத்தும்.

* பெற்றோர் மனரீதியான பிரச்னை உடையவர்களாக இருந்தால், மரபணு வழியாக அந்தப் பிரச்னை குழந்தைக்கும் வரக்கூடும்.

* 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தைராய்டு பிரச்னை இருந்தாலும், அதுவும் குழந்தைகளின் உளவியலைத் தீர்மானிக்கும்.

* பெற்றோர் குழந்தைகளிடம் பழகும் விதம் இதில் முதன்மையானது. அம்மா, அப்பா அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது, குழந்தையுடன் அதிக நேரம் செலவிடாதது எல்லாம் இதில் அடங்கும்.

* குழந்தைகளின் உருவத்தைக் கிண்டல் செய்வதும் அவர்களை மிகவும் பாதிப்படையச் செய்யும்.

* குழந்தைகளின் மேனரிசத்தை குறைபாடாகச் சொல்வது, மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் குழந்தையை விமர்சனம் செய்வது போன்றவையும் அவர்கள் பெரியவர்களான பிறகும் ஏதோ ஒரு வகையில் அவர்களைத் தொந்தரவு செய்யும்.

* குழந்தைகள் உடல்ரீதியான கொடுமை களுக்கு உட்பட்டிருந்தாலோ, சிரமமான சூழலில் வளர நேரிட்டாலோ, அவர்களுக்கு உளவியல் சிக்கல்கள் ஏற்படும்.

எவையெல்லாம் அறிகுறிகள்?

* 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்:

  * எப்போதும் பதற்றத்தில் இருப்பது, எதிலும் ஆர்வம் காட்டாமல் மனச் சோர்வடைந் தவர்களாகக் காணப்படுவது, தனக்குத் தேவை யானதை தெளிவாகச் சொல்லத் தெரியாமல் தவிப்பது... அடிக்கடி தலைவலி, வயிற்றுவலி ஏற்படுவது.... காரணமே இல்லாமல் பள்ளிக்குச் செல்ல மறுப்பது, இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் இருப்பது, தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது...

* 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்:

* யார் மீதாவது கோபப்பட்டுக்கொண்டே இருப்பது, எல்லாவற்றின் மீது வெறுப்போடும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பது, படிப்பில் கவனம் குறைவது... போதிய தூக்கம் வராமல் இருப்பது அல்லது அதிக நேரம் தூங்குவது.

* இவை இருந்தாலே உளவியல் சிக்கல் என முடிவு செய்துவிட வேண்டாம். ஆனால், உளவியல் சிக்கலில் இருக்கும் குழந்தைகளிடம் இவை அறிகுறிகளாகத் தென்படும்.

பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது?


குழந்தைகளின் ஒருநாள் ஷெட்யூல் அவர்களின் விருப்பத்தின் அடிப் படையில் அமைவது இல்லை. காலை முதல் இரவு வரை பெற்றோர், ஆசிரியர்களாலேயே அது தீர்மானிக் கப்படுகிறது. அதனால் தன் விருப்பம் தள்ளிப்போவது அல்லது அது கேட்கப்படாமலேயே போவது போன்ற சூழலை எப்படி எதிர் கொள்வது என்று குழந்தைகளுக்குத்  தெரியவில்லை. தேர்வுகள் மற்றும் மனப்பாடப் பகுதிகளுக்கு தரப்படும் நேர நெருக்கடிகளும் ஒருவித மன அழுத்தத்தைத் தருகிறது. விளையாடு வதற்கு நேரம் இல்லாததும் ஒரு காரணம். விளையாட்டின் மூலம் கிடைக்கும் நண்பர்கள், அனுபவம் இவை கிடைக்காமல் போவதுகூட உளவியல் சிக்கலை உருவாக்கும்.

என்னவிதமான பாதிப்புகள்?


படிப்பு, வேலை என எதன் மீதும் கவனம் குவிக்க முடியாமல் போய், மதிப்பெண் குறையும். கூடுதலான நேரம் செலவழித்துப் படிக்கச் சொல்லும்போது மனஅழுத்தம் இன்னும் அதிகரிக்கும். பசி உணர்வு ஏற்படாமல் இருப்பதால், பள்ளிக்குக் கொடுத்து அனுப்பும் மதிய உணவை முழுமையாகச் சாப்பிடாமலோ, கீழே கொட்டியோ விடுவார்கள். இதனால் தேவையான சத்துகள் கிடைக்காமல்  போய் விரைவில் உடல்சோர்ந்துவிடும்.

தீர்வு என்ன?

குழந்தைகளின் செயல்பாடுகளில் வித்தியாசம் தெரிந்தால், மருத்துவ ஆலோசனைக்குச் செல்லத் தாமதிக்கக் கூடாது. ‘மூட் அவுட், ஸ்ட்ரெஸ்தானே... தானா சரியாகிடும்’ என்ற அலட்சியமோ, தயக்கமோ கூடாது. இது அறிவியல் சார்ந்த விஷயம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவரிடம் பேசவும், அவர் கூறுவதைப் பின்பற்றவும் திறந்த மனதோடு செல்ல வேண்டும். பயிற்சிகளின்போது குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எந்த முயற்சியும் குறைந்தது 8 வாரங்களுக்காவது தொடர வேண்டும்.

குழந்தைகளின் மனச்சிக்கலுக்கு 50% சூழலே காரணமாக இருக்கிறது. பிள்ளைகளுடன் பழகுபவர்களைக் கவனித்து, தவறான நபர்களை விலக்க வேண்டும். அதேநேரம் எந்தக் காரணமும் இன்றி ஒரு நபருடன் பழக தடை விதிக்கவும் கூடாது. நண்பர்களுடன் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கண்காணிப்பாகச் செய்யா மல், அவர்களில் ஒருவராக மாறி உரையாட வேண்டும்.

பள்ளிதான் குழந்தைகளின் உளவியல் சிக்கலுக்குக் காரணம் எனத் தெரியவந்தவுடன், பலரும் நினைப்பது குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துவிடலாம் என்பதுதான். அது முழுமையான தீர்வு அல்ல. அந்தப் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் உங்கள் குழந்தையைப் பற்றி மனம் திறந்து பேசுங்கள். குழந்தையின் சிக்கலுக்கு பள்ளி எந்த விதத்தில் காரணமாக இருக்கிறது என்று பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறும்போது, அவர்களே அதற்கான மாற்றங்களைச் செய்யக்கூடும். இது மற்ற குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும்.

குழந்தைகளுடன் நேரம் செலவிடவும்!

குழந்தைகளுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதோடு, எத்தனை நெருக்கமான செயல்களில் இருக்கிறோம் என்பதும் முக்கியமானது. குறை சொல்வதாக இல்லாமல் ‘இப்படிச் செய்யலாமே’ என்கிற அணுகுமுறை நல்லது. குழந்தைகளின் மனநலனை அறிய, உணர்வு பந்தத்தை பலப்படுத்துவதே ஒரே வழி.

குழந்தைகளுக்கும் உண்டு உளவியல் சிக்கல்!

உணவுப் பழக்கமும் உளவியல் பிரச்னையும்...

பீட்ஸா, பர்கர் போன்ற ஜங் ஃபுட் சாப்பிடும் குழந்தை கள் பருமன், சோம்பல், அஜீரணம் உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகளுடன், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது. அனைத்துச் சத்துகளும் சரிவிகிதத்தில் உள்ள உணவுகளே குழந்தை களுக்குக் அளிக்கப்பட வேண்டும்.

கருவில் வளரும்போதே கவனம்!

குழந்தையின் மனநிலையைப் பாதுகாக்கும் பொறுப்பு, அம்மாவின் கருவில் இருந்தே தொடங்கிவிடுகிறது. கருவில் குழந்தை இருக்கும்போது அம்மா அதீதமான மனப்பதற்றத்தில் இருந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். குறிப்பாக ஆண் குழந்தையாக இருக்கும்பட்சத்தில் அது, உடல், மனரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பசுமை நேரம்!

பெற்றோர் வேறு எந்த வேலைகளும் வைத்துக்கொள்ளாமல், செல்போனைக்கூட அணைத்து வைத்துவிட்டு முழுக்க முழுக்க குழந்தைகளுடன் செலவிடும் நேரமே கிரீன் டைம். இந்நேரத்தில், குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டை பெற்றோரும் சேர்ந்து விளையாடலாம். ஆடலாம், பாடலாம். பெற்றோர், பெரியவர் என்பதையெல்லாம் மறந்து குழந்தைகளின் ‘க்ளோஸ் ஃப்ரெண்டா’க மாறி விடவேண்டும். ஆடிக் களைத்த பிறகு ஏதேனும் கொறித்துக்கொண்டே, அவர்களோடு இயல்பாகப் பேச வேண்டும்.

குழந்தைகள் எந்த விஷயங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், வீட்டில், பள்ளியில், மற்ற இடங்களில் அவர்களுக்குப் பிடித்த, பிடிக்காத இடம், நபர்கள் பற்றிப் பேசவேண்டும். அவர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருக்கின்றனவா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், வளர்ந்தபிறகும் தங்கள் உடல் மற்றும் மனநலம் சார்ந்த மாற்றங்களை, அவர்கள் தங்கள் பெற்றோரிடம் தயங்காமல் சொல்வார்கள்.