Published:Updated:

மனுஷி - 4 - பொம்மையல்ல... பொக்கிஷம்!

மனுஷி - 4 - பொம்மையல்ல... பொக்கிஷம்!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 4 - பொம்மையல்ல... பொக்கிஷம்!

சுபா கண்ணன், ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - 4 - பொம்மையல்ல... பொக்கிஷம்!

சுபா கண்ணன், ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - 4 - பொம்மையல்ல... பொக்கிஷம்!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 4 - பொம்மையல்ல... பொக்கிஷம்!

“பெண்ணுலகிற்கு இயல்பாய் அமைந்துள்ள குணம், தொண்டு, கடமை முதலியவற்றை நோக்குழிப் பெண்ணுலகு முதன்மை பெற்று விளங்குவது நன்கு புலனாகும். ஆணுலகின் போற்றிற்கும், மனவளத்துக்கும், நலத்துக்கும் பிற ஆக்கத்
துக்கும் நிலைக்களனாயிருப்பது பெண்ணுலகு என்பது எவரும் அறிந்த ஒன்று. இவ்வெற்றிவாய்ந்த பெண்ணுலகிற்கு முதன்மை வழங்குவதனால் நேரும் இழுக்கு ஒன்றுமில்லை!”

- ‘பெண்ணின் பெருமை’யில் திரு.வி.க.

மனுஷி - 4 - பொம்மையல்ல... பொக்கிஷம்!

அமெரிக்காவிலிருந்து வரும்போது, பரத் தன் மருமகளுக்காக மெத்து மெத்தென்ற ரப்பர் பொம்மைகளை வாங்கி வந்திருந்தான். இங்கே குழந்தையின் கையில் அரக்கு நிறத்தில், கடினமான மரப் பொம்மை இருந்ததைப் பார்த்துவிட்டு முகம் சுளித்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அம்மா, நகைகள் பற்றிச் சொன்னே, அது ஓகே! ஆனா, குழந்தைக்கு கலர்ஃபுல்லா, சாஃப்ட் பொம்மைகளை வாங்கித் தராம, எகிப்திய மம்மி மாதிரி இப்படிக் கல்லு போல ஒரு மரப்பொம்மையை வாங்கித் தந்திருக்கியே, இதை என்னால ஏத்துக்கவே முடியலை!” என்றான்.

“அட அசடு! இது மரப்பாச்சிப் பொம்மை. அந்தக் காலத்துல குழந்தைகளுக்கு முதன்முதல்ல இந்த பொம்மையைத்தான் விளையாட வாங்கித் தருவாங்க. ‘அசடும் ஆறு மாசம்’னு சொல்லுவா என் அம்மா. அதாவது, எவ்ளோ அசடான அம்மாவா இருந்தாக்கூட, குழந்தை பிறந்து முதல் ஆறு மாசம் வரைக்கும் அதை அவளால நல்லபடியா வளர்த்துட முடியும். முதல் மூணு மாசத்துல குழந்தை முழிச்சு முழிச்சுப் பார்த்து, விரல் சூப்பி, முகம் பார்த்துச் சிரிக்கத் தொடங்கும். அதுவரை அதை வளர்க்கப் பெரிய சாமர்த்தியம் எதுவும் தேவையில்லை. அதன்பிறகு, குப்புறக் கவிழ்ந்து, உடம்பைத் தரையில தேய்ச்சுத் தேய்ச்சு நீச்சலடிச்சு நகரத்தொடங்கும் போதுதான் ஆபத்து! கைக்கெட்டியதை எல்லாம் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளத் தொடங்கும். இதுக்காகவே மரப்பாச்சி பொம்மைகளை குழந்தைக்குத் தருவாங்க!” என்றாள் அக்கா.

“சரி, நான் கேட்டதுக்கு பதில் வரலையே?” என்றான் பரத்.

“அவசரப்படாதே! இன்றைய குழந்தை வளர்ப்பு ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ன சொல்றாங்க? குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள் கூர்மையான முனைகள் இல்லாம இருக்கணும்; செயற்கை ரசாயன வர்ணங்கள் பூசினதா இருக்கக்கூடாது... குழந்தைங்க அந்தப் பொம்மைகளை வாயில வெச்சுக் கடிக்கும்போது, அந்த ரசாயனங்கள் குழந்தையின் வயித்துக்குள்ள போய் நோயை உண்டாக்கும்னு சொல்றாங்க இல்லையா? இதை அன்னிக்கே நம்ம முன்னோர் யோசிச்சு, அதுக்கேத்த மாதிரிதான் மரப்பாச்சிப் பொம்மையைத் தயார் பண்ணியிருக்காங்க.

மரப்பாச்சிப் பொம்மைகளைக் குழந்தைகள் கடிக்கலாம்... சுவைக்கலாம். சொல்லப்போனா, இதைச் சுவைக்கிறதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். குழந்தைக்கு உடம்பு சரியில்லேன்னா, மரப்பாச்சிப் பொம்மை யைத் தண்ணீரில் ஊற  வெச்சு, நெத்தியில் லேசா தேய்ப்பாங்க. இதுல கூர்முனைனு எதுவும் இல்லே. எல்லா பக்கமும் மழுக்கப்பட்டுதான் இருக்கும். இதுல செயற்கை ரசாயன வர்ணம் பூசப்படறதும் இல்லை.

மரப்பாச்சிப் பொம்மை யில அப்படி என்ன சக்தின்னு நீ யோசிக்கலாம். செம்மரம், கருங்காலி, ஈட்டி மாதிரியான மரக்கட்டை களில்தான் மரப்பாச்சிப் பொம்மைகளைத் தயாரிக் கிறாங்க. இந்த மரங்கள்ல மருத்துவக் குணங்கள் இருக்கிற
தால குழந்தைகளுக்குப் பாதிப்பு எதுவும் வராது. இப்பத்தான் மரப்பாச்சி வழக்கொழிஞ்சு போக ஆரம்பிச்சிடுச்சே. எங்க அப்பா, அம்மா தாத்தா, பாட்டி காலத்திலெல்லாம் மரப்பாச்சி பொம்மைகளும் குடும்பத்துல ஓர் அங்கமாகவே இருக்கும்.
இன்னிக்கும் சில கிராமங்கள்ல, கோயிலுக்கு மரப்பாச்சிப் பொம்மைகளைக் கொடுத்து, கஷ்டம்  தீரணும்னு வேண்டிக்கிற வழக்கம் இருக்கு. சில குடும்பங்கள்ல, நவராத்திரி கொலுவில் மரப்பாச்சிப் பொம்மைகளைக் கண்டிப்பா பார்க்க முடியும். இந்தத் தலைமுறைக்குதான் அதன் மகத்துவம் தெரியாமப் போயிடுச்சு. மரப்பாச்சிப் பொம்மைகள் செய்யும் குடும்பங்களும் குறைஞ்சு போச்சு.

மரப்பாச்சிங்கிறது வெறும் பொம்மையல்ல... அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நாம் தரும் பொக்கிஷம். இன்றைய சமூகம் அந்தப் பொக்கிஷத்தை தொலைச்சுட்டுதுன்னுதான் சொல்லுவேன்!” என்று ஆற்றாமையுடன் சொல்லி முடித்தாள் என் அக்கா.

உண்மைதான்! மார் நீச்சல் போடும் நேரத்தில் குழந்தைக்கு உற்ற துணை மரப்பாச்சிப் பொம்மைன்னா, அடுத்து முட்டி போட்டுத் தவழும் பருவத்தில் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிச்சது யானை விளையாட்டு. பெரியவங்களே முட்டி போட்டு, குழந்தையைத் தங்கள் முதுகுல உட்கார வெச்சுக்கிட்டு, ‘யானை யானை… அழகர் யானை, அழகரும் சொக்கரும் ஏறும் யானை, குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சுதாம், பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்!’னு பாடிக்கிட்டே தவழ்ந்து வரும்போது, குழந்தையும் அதுக்கேத்த மாதிரி தலையை ஆட்டுறதைப் பார்க்க அவ்ளோ அழகா இருக்கும்!

சின்னச் சின்ன பாடல்கள் வழியா, மொழியைத் திரும்பத் திரும்பக் கேட்கும் குழந்தை அந்த மொழியை ரொம்ப வேகமா கத்துக்கும். அதனாலேயே நிறையப் பாடல்கள் பாடிப் பாடியே குழந்தைகளைக் கொஞ்சினாங்க நம்ம பெரியவங்க. குழந்தை தன் கைகளைச் சேர்த்துக் குட்டிக் கூடை மாதிரி காண்பிக்க, அதுல மெள்ளக் குத்துகள் விட்டு, ‘அம்மா குத்து, திம்மா குத்து, தாத்தா குத்து, பாட்டி குத்து, பேரன் குத்து, பிள்ளையார் குத்து, பிடிச்சுக்கோ குத்து’ன்னு பாடும்போது, குழந்தையின் மனசில் மொழி மட்டுமல்ல... தாத்தா பாட்டிங்கிற உறவுகள், கடவுள் பக்தி, ‘பிடிச்சுக்கோ’ன்னு சொல்லும்போது அம்மா கையைச் சட்டுனு பிடிச்சுக்கணும்கிற செயல் வேகம் எல்லாமே பதியும்.

ஒரு வயசு பூர்த்தியாகுறதுக்குள்ள குழந்தைக்கு ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல தெரிஞ்சிருக்கும். இதுவே, அடுத்த ஆறு மாசத்தில் இரண்டாயிரமா ஆகும். மூணு வயசு வரை மொழியறிவு அதிகம் வளர்வதால், குழந்தை நிறைய மொழிகளை ரொம்பச் சுலபமா கற்கும். குழந்தையின் ஏழு வயசுக்குள், அதன் அப்பாவின் வேலை விஷயமா அவங்க குடும்பம் நாலு நாடுகள்ல வசிக்க நேர்ந்தால், அந்தக் குழந்தை அந்த நாலு மொழிகளிலும் சரளமா பேசக் கத்துக்கும். இதுல, பெண் குழந்தைகளின் கற்றல் வேகம் இன்னும் அதிகம்னு சொல்றாங்க கல்வியாளர்கள். குறிப்பா, மொழி அறிவு (language intelligence), இசை அறிவு (music intelligence), மற்றவருடன் பழகுதல் (inter personal skill) ஆகிய திறன்களில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் சிறந்து விளங்கு வாங்களாம்.

பேச்சு, செயல்ல மட்டுமில்லே… ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கிட்டு, அதற்கடுத்து செய்யவேண்டிய காரியங்களை வகைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, விரைவாகச் செய்து முடிப்பதில் வல்லவர்கள் பெண் குழந்தைகள்!

(இன்னும் உணர்வோம்!)

ராசாத்தியின் மரப்பாச்சி!

கண்ணே வாடி ராசாத்தி
இந்தா ஜோடி மரப்பாச்சி
புரட்டாசி மாதம் திருப்பதி போய்
உருட்டாம் போக்கில் படியேறி
சுத்திச் சுத்தி வந்தேண்டி
சாமி தரிசனம் பண்ணேண்டி
கொள்ளைக் கொள்ளையாய்க் கோடி சாமான்
கொட்டியிருக்கக் கண்டேண்டி
கொத்துச் சலங்கையின் விலை கேட்டேன்
கொசுறு போட்டான் கடைக்காரன்
சல்லிசாகக் கிடைச்சுது
சாதிசந்தன மரப்பாச்சி
அருமை மருமாள் விளையாட
அத்தை தந்த மரப்பாச்சி
இந்தா கண்ணே வாங்கிக்கோ
இடுப்பிலே அழகா தாங்கிக்கோ!

இந்தப் பாட்டு நம்மை பால்யத்துக்கே கை பிடித்துக் கூட்டிச் செல்கிறதுதானே?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism