லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

என் வாழ்க்கையில் எத்தனை அற்புதங்கள்!

என் வாழ்க்கையில் எத்தனை அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
என் வாழ்க்கையில் எத்தனை அற்புதங்கள்!

டாக்டர் நர்த்தகிவெ.நீலகண்டன்

முதன்முதலில் கலைமாமணி விருது பெற்ற திருநங்கை... முதன்முதலில் தேசிய விருது பெற்ற திருநங்கை... முதன்முதலில் பாஸ்போர்ட் பெற்ற திருநங்கை... இப்படி பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான நாட்டியக்கலைஞர் நர்த்தகி நடராஜுக்கு மேலும் ஒரு மகுடம்... `மதிப்புறு முனைவர்' (டாக்டர்) பட்டம் பெற்ற தமிழகத்தின் முதல் திருநங்கை! சங்க இலக்கியங்களையும் நவீன கவிதைகளையும் தமிழிசையையும் நடனத்தில் பயன்படுத்தி பெருமை சேர்ப்பதையும், பால்திரிபு நிலைக் குழப்பங்களைக் கடந்து வெற்றிகரமான முன்மாதிரியாக விளங்குவதையும் பாராட்டி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அண்மையில் நர்த்தகிக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.

என் வாழ்க்கையில் எத்தனை அற்புதங்கள்!

ரயிலிலும் தெருவிலும் யாசித்து வாழ்பவர்களாக திருநங்கைகளைப் பார்த்துப்பழகிய பொது சமூகத்துக்கு நர்த்தகி ஒரு பேராச்சர்யம். நர்த்தகியின் சொந்த ஊர் மதுரை, அனுப்பானடி. அப்பா பெருமாள் பிள்ளை. அம்மா சந்திரா. 10 பிள்ளைகளில் ஐந்தாவதாகப் பிறந்தவர் நர்த்தகி. சிறுவயதிலேயே பாலினக் குழப்பத்தை உணரத் தொடங்கிய நர்த்தகிக்கு ஒரே ஆறுதல் நடனமே. அது இயல்பாகவே அவரின் உயிரில் ஊறியிருந்தது. அருகிலேயே இருந்த மற்றொரு திருநங்கையான சக்தி, நர்த்தகிக்கு உற்ற தோழியானார். அவரும் நடனத்தின் மீதி ஈர்ப்புள்ளவரே.

வீட்டுச்சூழல் மகிழ்ச்சிக்கு உரியதாக இல்லாத நிலையில், நர்த்தகியும் சக்தியும் மீரா என்னும் மூத்த திருநங்கையிடம் சரணடைந்தார்கள். இருவரையும் மகளாக தத்தெடுத்து வழிகாட்டினார் மீரா.

“வீட்டை விட்டு வெளியே வர்ற திருநங்கைகள் படுற துயரமும் அவஸ்தையும் ரொம்பவே கொடுமையானது. ஆனா, அந்த துயரத்தோட நிழல்கூட எங்க மேல விழாம காப்பாத்தினாங்க மீராம்மா. தெருவில எல்லாரும் விநோதமான உயிரினங்களைப் பார்க்கிற மாதிரி எங்களைப் பாப்பாங்க. ஆனா, நாங்க மனதளவுல தேவதைகளா உணர்ந்தோம். இந்த உலகமே எங்களுக்காகப் படைக்கப்பட்டதுங்கிற உணர்வோட வாழ்ந்தோம். மீராம்மா எல்லாவிதத்திலயும் எங்களுக்கு ஆதரவா இருந்தாங்க. அவங்க கௌரவமா சமையல் வேலை செஞ்சு பிழைக்கிறவங்க. ஒரு தாய்ப்பறவையா இருந்து எங்களைப் பாதுகாத்தாங்க. மீராம்மா ஒரு வரம்னா, சக்தி எனக்குக் கிடைச்ச இன்னொரு வரம். பெரிய பணக்காரக் குடும்பத்தில இருந்து வந்தவ அவ. மதுரையில மட்டும் 10 ஜவுளிக்கடைங்க அவங்களுக்கு இருக்கு. ஆனா, நான்தான் அவளோட உலகம்னு நினைச்சு, இன்னைக்கும் எனக்கு தாயா இருக்கிறா. 

என் வாழ்க்கையில் எத்தனை அற்புதங்கள்!

நாட்டியக்கலையில, எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு திருநங்கை தனி அடையாளத்தோட ஜெயிக்க முடிஞ்ச துன்னா, அதுக்குப் பின்னால ரத்தமும் சதையுமான வலி, வேதனை, அவமானம்னு ஆயிரம் கதை இருக்கு. ஆனா, அதெல்லாம்தான் எனக்கு மனஉறுதியையும், தன்னம்பிக்கையையும் விதைச்சுச்சு.

இன்றைக்கும் என்னால் நம்ப முடியாத வியப்பு, அந்த பால்யகால நடனம்தான். யாரும் ஊன்றாத விதை. ஒருவிதமான தேவ நடனம். நான் எனக்குள் இருந்த பெண்மையை உணர்வதற்கு முன்பாகவே நடனத்தை உணர்ந்துட்டேன். நானும் சக்தியும் பள்ளிக்கூடத்தை கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு ஓடிடுவோம். சினிமா முடிஞ்சு வெளியில வர்றப்போ, பத்மினியா, வைஜெயந்திமாலாவா, குமாரி கமலாவா, சரோஜாதேவியா திரும்புவோம். யாரும் இல்லாத ஒரு இடத்துக்குபோய் சினிமாவுல பார்த்த நடனத்தை ஆடிப் பார்ப்போம்.

வைஜெயந்திமாலா எனக்கு ஆதர்சம். அவங்க மேல பெரிய பைத்தியமே எனக்கு உண்டு. அவங்க நடனம் கத்துக்கிட்ட குருகிட்டயே நானும் நடனம் கத்துக்கணும்கிறது சிறுவயசுல என் அடிமனசில ஊறிக்கிடந்த லட்சியம். கிட்டப்பாபிள்ளைதான் அவங்க குருன்னு தெரியவந்த பிறகு, வைராக்கியத்தோட தஞ்சாவூருக்கு பஸ் ஏறினோம் நானும் சக்தியும். எங்களை ஏற இறங்க பார்த்த குரு, `இப்ப எனக்கு நேரமில்லை. கொஞ்ச நாள் கழிச்சு வாங்க, பாக்கலாம்'னு சொல்லி அனுப்பிட்டார். ஆனா, நாங்க விடலே. ஒரு வருஷம்... தின மும் அதிகாலையில அவர் வீட்டுக்கு முன்னாலபோய் நின்னுடுவோம். ராத்திரிதான் அங்கிருந்து கிளம்பு வோம்.  கிட்டத்தட்ட தவம் மாதிரி தான். ஒரு கட்டத்துல, எங்க குரு மனம் இரங்கினார். குரு-சிஷ்யை உறவா இல்லாம, அப்பா-மகள் உறவாத்தான் எங்க உறவு இருந்துச்சு. தஞ்சை நால்வரோட சங்கதிகளை கத்துக்க குறைஞ்சது 6 வருடங்கள் ஆகும். ஆனா, ஒரே வருடத்தில எங்களுக்குக் கத்துத்தந்தார். சிதம்பரம் நாட்டி யாஞ்சலி நிகழ்ச்சியில என்னை அரங்கேற்றம் செய்ய வெச்சு, நடராஜை நர்த்தகியா மாத்தினார்.

எங்க குரு, மிகப்பெரிய ஆளுமை. மற்ற மாணவிகள் வைரமும் தங்கமும் தட்சணையா தரும்போது, நாங்க கோதுமை மாவைக் கொண்டு போய் கொடுப்போம். மகிழ்ச்சியா வாங்கிக்குவார். எந்தவிதத்திலயும் வேறுபாடு பார்க்க மாட்டார்.

என் வாழ்க்கையில் எத்தனை அற்புதங்கள்!

15 வருஷம் குருகுல வாசம். அப்பாவா, அம்மாவா, குருவா, கடவுளா இருந்த கிட்டப்பா பிள்ளையோட மரணத்துக்குப் பிறகு நானும் சக்தியும் நிலைகுலைஞ்சிட்டோம். திரும்பவும் பழைய நிலைக்கே வந்தமாதிரி இருந்துச்சு. ஆனா, குரு கொடுத்த நடனம் உயிர்ல ஊறியிருந்துச்சு. தஞ்சாவூர்ல இருந்து சென்னை வந்தோம். ரேவதி சங்கரன் போல நல்ல மனிதர்களோட உதவியும் வழிகாட்டுதலும் கிடைச்சுச்சு.

நாட்டியத்தில என் தேடலும்  பாணியும் வேறு மாதிரியானது. தேவதாசிகள்னு சொல்லப்படுற இறைமகளிர் ஆண்டவனுக்காக ஆடிய நடனத்தோட இன்னொரு வடிவம்தான் பரதம். நான் அதோட பழைமையைத் தேடித் தேடி ஓடுறேன். தேவாரம், திருவாசகம் பாடல்களுக்கும் நடனமாடி அடித்தட்டு பாமர மனிதருக்கும் கொண்டுபோய் சேத்தேன்.

இப்போ பல ஆயிரம் மேடைகளைக் கடந்தாச்சு. நாங்க நடத்தும் `வெள்ளியம்பலம் அறக்கட்டளை நடனக் கலைக்கூட'த்துல பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மாணவி கள் இருக்காங்க. எட்ட நின்னு பாத்து ரசிச்ச பெரும் நாட்டியக் கலைஞர்கள் என்னை அரவணைச்சு வாரிசா அங்கீகரிக்கிறாங்க. என் வாழ்க்கையில நடந்த குறிப்பிடத்தக்க அற்புதம், என் ஆதர்சமாக இருக்கும் வைஜெயந்திமாலா அம்மா என் நடனத்தைப் பார்த்து பாராட்டினது. சென்னை நாரதகானா சபாவுல மூன்று மணி நேரம் என் நாட்டிய நிகழ்ச்சி நடந்துச்சு. நானே எதிர்பாராத வகையில அம்மா வந்து முழு நடனத்தையும் பார்த்து ரசிச்சாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் மேடைக்கு வந்து, `நர்த்தகி வடிவத்துல பார்க்கிறேன்'னு என்னை பாராட்டினாங்க...

ஒரு திருநங்கையா நான் படைக்கப்பட்டது ஏதோ ஒரு திட்டமிட்ட காரணம்தான்னு உணர்றேன். அம்மாவால புறக்கணிக்கப்பட்ட என்னை என் மாணவிகள் எல்லோரும் அம்மான்னு கூப்பிடும்போது எனக்குள்ள தாய்மை பொங்குது. 

சமூகத்தோட விளிம்பில தொங்கிக்கிட்டு தவிக்கிற பிற திருநங்கைகளுக்கு நான் தரப்போற செய்தி என் வாழ்க்கைதான். எல்லோருமே ஏதோ ஒரு காரணத்துக்காக படைக்கப்படுறோம். அந்த காரணத்தை தேடி கண்டு பிடிக்கிறதுலதான் நம்மோட வெற்றி இருக்கு...!” - உணர்வு பூர்வமாகப் பேசுகிறார் டாக்டர் நர்த்தகி நடராஜ்!