Published:Updated:

“அம்மாக்களே சிறந்த செஃப்!” - சமையல் விமர்சகர் ‘செவாலியே’ ராஷ்மி உதய் சிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“அம்மாக்களே சிறந்த செஃப்!” -  சமையல் விமர்சகர் ‘செவாலியே’ ராஷ்மி உதய் சிங்
“அம்மாக்களே சிறந்த செஃப்!” - சமையல் விமர்சகர் ‘செவாலியே’ ராஷ்மி உதய் சிங்

மு.சா.கௌதமன் - படங்கள்: பா.காளிமுத்துசந்திப்பு

பிரீமியம் ஸ்டோரி
“அம்மாக்களே சிறந்த செஃப்!” -  சமையல் விமர்சகர் ‘செவாலியே’ ராஷ்மி உதய் சிங்

மிக உயர்ந்த பதவி, கைநிறைய சம்பளம் போன்றவற்றை விட்டு விட்டு மனதுக்குப் பிடித்த வேலையை தேர்ந்தெடுத்து, அதில் சாதனை புரிபவர்கள் வெகு சிலர். அதில் ராஷ்மி உதய் சிங்குக்கு நிச்சயம் இடம் உண்டு. இந்திய வருமான வரித் துறையில் இணை ஆணையராக இருந்தவர், உணவுத்துறையின் மீதான ஆர்வத்தில், வேலையை உதறிவிட்டு, சமையல் துறையில் விமர்சகராக இறங்கி, செவாலியே பட்டம் வென்றவர். அவர் எழுதிய சமையல் தொடர்பான புத்தகங்கள் அத்தனை பிரபலம்! ராஷ்மியின் புத்தகங்களில் ‘அரவுண்ட் தி வேர்ல்ட் இன் 80 பிளேட்ஸ்’ மிகப் பிரபலமானது. இவரது லேட்டஸ்ட் புத்தகம் ‘எ வெஜிடேரியன் இன் பாரிஸ்’. சமீபத்தில் சென்னை, ஹம்சா ஹோட்டலுக்கு வந்திருந்தவருடன் ஒரு டின்னர் உரையாடல்.

``நான் சைவ உணவுப் பழக்கம் கொண்டவள் அல்ல. ஆனாலும் சைவ உணவுகள் ஆரோக்கியமானவை என்பதில் அசாத்திய நம்பிக்கை கொண்டவள். நான் எழுதியதில் ‘அரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 பிளேட்ஸ்’தான் என் மனதுக்கு நெருக்கமான புத்தகம். சைவ உணவுக்குப் பழக்கப்படாத, உலகின் மிகப் பிரபல சமையல் கலை நிபுணர்கள் சமைத்த சைவ உணவுகளைக் கொண்டு இந்த புத்தகத்தை எழுதினேன். அதுதான் இதன் ஹைலைட்...’’ என்று சைவ உணவுகளின் புகழ்பாடியபடியே ஆரம்பிக்கிறார் ராஷ்மி. இந்தப் புத்தகத்துக்காக, மிகவும் பிரபலமான செஃப்களை அணுகி அவர்களை சைவ உணவுகளை சமைக்க வைத்த பெருமைக்குரியவர்.

“அம்மாக்களே சிறந்த செஃப்!” -  சமையல் விமர்சகர் ‘செவாலியே’ ராஷ்மி உதய் சிங்


‘‘அவர்கள் எல்லாம் அசைவத்தில் தேர்ந்த செஃப்கள். சைவத்துக்கு பழக்கப்படாதவர்கள். நான் அவர்களை அணுகி, காய்கறிகளை சமைக்க சொல்லி அதில் இருந்து வெளிவந்த மிக அற்புதமான டிஷ்களை உலகுக்கு அறிமுகப்படுத்தினேன். உலகளவில் பெரும்பான்மையான சாதனையாளர்கள் சைவ பிரியர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்கிற உண்மை எனக்கு தெரியவந்தது. ஜார்ஜ் பெர்னாட்ஷா தொடங்கி, அமிதாப் பச்சன் வரை பலரையும் உதாரணங்களாகக் காட்டலாம். என்னுடைய ‘அரவுண்ட் தி வேர்ல்ட் இன் 80 பிளேட்ஸ்’ புத்தகம் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கு நடிகை ஹேமமாலினியை அழைத்திருந்தேன். அவர் தீவிர சைவ உணவுப் பழக்கம் உள்ளவர். `சைவ உணவை எடுத்துக்கொள்வதாலேயே என்னால் 12 மணி நேரம் தொடர்ந்து நடனமாட முடிகிறது' என்று எங்களை ஆச்சர்யப்பட வைத்தார் ஹேமமாலினி” என்கிறவர், உலகிலேயே மிகவும் திறமையான, கடும் கோபக்காரரான செஃப் கோர்டன் ராம்சேவுடன் பயணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘ஆமாம், ‘கோர்டன்ஸ் கிரேட் எஸ்கேப்’ங்கிற நிகழ்ச்சி உலகளவில் மிகப்பிரபலம். கோர்டன் ஒவ்வொரு நாட்டுக்கும் போய் அங்குள்ள உணவுகளை சமைத்து காட்டுகிற நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை வடிவமைத்தவர்கள், கோர்டன் தமிழகத்துக்கு வருகை தந்தபோது அவருடன் பயணிக்க என்னை பரிந்துரைத்தார்கள்.

“அம்மாக்களே சிறந்த செஃப்!” -  சமையல் விமர்சகர் ‘செவாலியே’ ராஷ்மி உதய் சிங்

கோர்டன் மிகப்பெரிய கோபக் காரர் என்பதை அவருடன் பணியாற்றாத் தொடங்கிய சில நாட்களிலேயே நான் உணர்ந்து கொண்டேன். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட புளித்த உணவுகளே காரணம் என்பதை புரிய வைத்தேன். அத்தனை எளிதில் ஏற்றுக் கொண்டுவிடுவாரா உலக மகா ஜாம்பவான்..? எனக்கும் அவருக்கும் வாக்குவாதங்கள் நடந்தன. பிறகு அவரை சில நாட்கள், கோவையில் உள்ள ஓர் ஆசிரமத்துக்கு அனுப்பி சைவ உணவுகளை சமைக்கவும் சுவைக்கவும் வைத்தேன். இறுதியில், என் கருத்தைப் புரிந்துகொண்டார்  கோர்டன்” என்று ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்தெடுத்துப் பேசுகிறார் ராஷ்மி.

‘‘சமையல் துறையின் விமர்சகர் என்பதால் எனக்கு சமைக்க வராது, அதை டேஸ்ட் பண்ண மட்டுமே தெரியும் என்று நினைக்காதீர்கள். எனக்கு சூப்பராகவே சமைக்க வரும். அதைவிட புதுவிதமான ரெஸ்டாரன்ட்டுகளில் சென்று உணவருந்த மிகவும் பிடிக்கும். சமீபத்தில் காஸ்ட்ரநாமிக் ஓபரா என்றழைக்கப்படும் ஒரு புதுவிதமான அனுபவத்தை சில ரெஸ்டாரன்ட்டுகளில் அனுபவித்தேன். நாம் அமர்ந்திருக்கும் டேபிள் வேகமாக நகரும், உணவுகள் திடீரென நம் டேபிளுக்கு வரும். திடீரென நல்ல இசை கேட்கும், நமக்கு பரிமாறிக்கொண்டிருக்கும் வெயிட்டர்கள் ஒன்று திரண்டு திடீரென ஆடத் தொடங்கு வார்கள். புதுவிதமான உணர்வைத் தரும் இம்மாதிரியான ரெஸ்டாரன்ட்டுகள் எனக்குப் பிடிக்கும்” என்பவருக்கு இந்த ஆண்டு பிரான்ஸில் நடந்த விழாவில் உணவுத் துறைக்கு இவர் செய்த அர்ப்பணிப்பு காரணமாக `செவாலியே' என்கிற மிக உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.

“அம்மாக்களே சிறந்த செஃப்!” -  சமையல் விமர்சகர் ‘செவாலியே’ ராஷ்மி உதய் சிங்‘‘நான் சாப்பிடப் போகும் இடம், சுவை, தரம் எல்லாவற்றையும் பார்ப்பேன். ஒருவேளை அந்த ரெஸ்டாரன்ட் சுத்தமாக இல்லையென்றால் சட்டென எழுந்துவிடுவேன். என் உணவுப் புத்தகத்தில் யாருக்காகவும் வளைந்து கொடுத்து அவர்கள் கருத்தை, பலத்தை புகுத்தி எழுதியதில்லை. அதேசமயம் ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு போகும் முன், எந்த முன்முடிவும் இல்லாமல் திறந்த மனதுடன்தான் செல்வேன்” என்கிறவரிடம் `உங்கள் அம்மா சமையலைவிட உங்கள் சமையல் சிறந்தது என்கிற எண்ணம் உண்டா?, என்றால் வெடித்து சிரிக்கிறார். ‘‘சத்தியமாக இல்லை. எனக்கு உலக அறிவு இருக்கலாம். சமைக்கத் தெரியலாம். ஆனால், என் அம்மாவின் சமையலில் இருக்கிற அன்பு என் சமையலில் ஒருபோதும் வந்ததே இல்லை. என் அம்மா மட்டுமில்லை...உலகில் உள்ள ஒட்டுமொத்த அம்மாக்களின் கைமணத்தை தோற்கடிக்க யாராலும் முடியாது” என்று சீரியஸாக மாறுகிறார் ராஷ்மி. ராஷ்மியின் ஒரே மகன் துருவ் உதய் சிங் அமெரிக்காவில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருக்கிறார், கணவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிகிறார்.

‘‘எங்க போனாலும் என் சொந்த மாநிலமான பஞ்சாப் உணவுகள் என்றால் எனக்கு அத்தனை விருப்பம். பல காலமாக உலக அளவில், சிறப்பான சமையல் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் நிபுணர் குழுவில் ஒருவராக இருக்கிறேன். பல நாடுகளில் இருந்தும், பெண்கள் வந்து பரிசு பெற்று போகிறார்கள்.

பெண்கள்தான், தினமும் சமைக்க வேண்டும் என்கிற சட்ட திட்டங்கள் எல்லாம் மேற்கத்திய நாடுகளில் கிடையாது. அப்படி இருக்கும்போது... தினமும் சமைத்து, சமையலில் அதிகமான தேர்ச்சி பெற்ற நம் இந்தியப் பெண்கள் இதுபோன்ற போட்டிகளில் பங்கு பெற்றால் நிச்சயம் வெற்றி பெறலாம். அவர்கள் அதற்கு முன்வரவேண்டும்” என்கிற கோரிக்கையோடு விடை கொடுக் கிறார் ராஷ்மி உதய் சிங்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு