Published:Updated:

திருக்கார்த்திகையை கொண்டாடுவது ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருக்கார்த்திகையை கொண்டாடுவது ஏன்?
திருக்கார்த்திகையை கொண்டாடுவது ஏன்?

- விளக்குகிறார் குருக்கள் கீர்த்திவாசன்அ.அச்சணந்தி - படங்கள்: கா.முரளிபக்தி

பிரீமியம் ஸ்டோரி
திருக்கார்த்திகையை கொண்டாடுவது ஏன்?

தீபாவளி முடிந்த அடுத்த மாதத்தில் வரும் கார்த்திகை தீப திருவிழா ஒரு சிறிய தீபாவளி பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு  டிசம்பர் மாதம் 12-ம் தேதி அன்று திருக்கார்த்திகை வருகிறது. இந்த திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவது ஏன்  என்பதை விளக்குகிறார் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் குருக்கள் கீர்த்தி வாசன்.

“திருவாரூரில் பிறக்க முக்தி, காஞ்சிபுரத்தில்  வாழ்ந்தால் முக்தி, சிதம்பரம் கோயிலைத் தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி... அந்த வகையில் திருவண்ணாமலையை மனதில் நினைத்தாலே முக்தி அளிக்கக்கூடிய வல்லமை இந்தத் திருத்தலத்துக்கு உண்டு.  அந்தளவுக்கு கருணை மனம் கொண்டவர் இங்கு கோயில் கொண்டிருக்கும் அண்ணாமலையார். அவரது ஜோதிமயமான வடிவத்தைத்தான் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தின்போது வழிபடுகிறோம்.

ஒருமுறை பிரம்மாவும் விஷ்ணுவும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிவன் பிரமாண்டமாக விண்ணுக் கும் மண்ணுக்கும் ஜோதிப் பிழம்பாக உருவெடுத்தார். ‘யார் சிவனின் அடியையோ... முடியையோ முதலில் காண்கிறார்களோ அவர்களே பெரியவர்’ என்று விண்ணொளி ஒன்று கேட்டது. போட்டியில் பிரம்மாவும், விஷ்ணுவும் தோற்க, தங்கள் தவறை உணர்ந்து சிவனிடம் ``எல்லோரும் வணங்கி வழிபடுவதற்கு ஏற்ற உருவத்தை தாங்கள் எடுக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையையும் வைக்கவே, தற்போது இருக்கும் திருவண்ணாமலையாகவே மாறினார். அதனால்தான் மலையையே லிங்கமாக பாவித்து மக்கள் அனைவரும் கிரிவலம் வருகிறார்கள் என்பதாக புராணம் கூறுகிறது.

சிவபெருமானின் கண்களை பார்வதி தேவியார் ஒருமுறை விளையாட்டாக மூடி விடவே பூலோகம் முழுவதும் இருள் மயமானது. அதனால் கோபமடைந்த சிவன், பார்வதி தேவியை பூலோகம் சென்று தன்னை வழிபட வேண்டும் என்று பணித்தார். காஞ்சிபுரத்துக்கு வந்து மணலால் சிவலிங்கம் செய்து வழிபடுகின்றாள் அம்பாள். அடுத்து திருவண்ணாமலைக்கு வரும் அம்பாள்  கௌதம முனிவரின் வழிகாட்டலின்படி சிவபூஜைக்கும் தவத்துக்கும் ஆயத்தமானாள். தொடர்ந்து, ‘மடக்கு’ எனப்படும் பாத்திரத்தில் தீபத்தை ஏற்றி கையில் ஏந்தியபடி அண்ணாமலையைச் சுற்றி  கிரிவலம் வந்து வழிபடுகிறார்.

திருக்கார்த்திகையை கொண்டாடுவது ஏன்?

ஈசானலிங்கத்தை நெருங்கி வழிபடும் போது அம்பாளின் பக்தியில் சிவன் மனம் கனிந்து  ரிஷப வாகனத்தில் வந்து தனது இடபாகமாக ஏற்று சிவசக்தியாக காட்சி தருகின்றார். உலக மக்களையெல்லாம் காக்கும்  அம்பாளோ, `தாங்கள் எனக்கு மட்டும் காட்சி அளித்தால் போதாது... அனைவருக்கும் காட்சி அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கவே, ஆண்டுக்கு ஒருநாள் ஜோதி ஸ்வரூபமாக காட்சியளிப்பதாகவும், அந்த ஜோதியை தரிசிப்பவர்களின் 21 தலை முறையும் முக்தியடையும்; அந்த நாள்தான் கார்த்திகை தீபத்திருநாள். அந்த நாளில் தன்னை வந்து தரிசிப்பவர்களின் சகல பாவங்களும் நிவர்த்தி யடையும் என்று அருள் வாக்களிக்கிறார். இதுவே கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத் தில் வரும் ‘மகா ஜோதி’ எனப்படுகிறது.

திருவண்ணாமலையில் 10 நாட்கள் நடை பெறும் தீப திருநாள் நிகழ்ச்சியின் இறுதி நாள் ‘மகா தீபம்’ மலை மீது ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை கோயிலில் சுயம்புலிங்கமான அருணாசலேஸ்வரருக்கு ‘பரணி தீபம்’ ஏற்றப்படும். மாலையில் ஒரு சில நிமிடங்களே ஆனந்த தாண்டவத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிப்பார். அப்போது ‘கோயிலில் தீபம்’ ஏற்றப்படும். அதேநேரத்தில் சங்கொலி முழங்க மலை மீது கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.

திருக்கார்த்திகையை கொண்டாடுவது ஏன்?


கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்துக்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டுவிடக் கூடாது.  இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். விளக்கை குளிர்விக்கும்போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது. பூவின் காம்பினால் அணைக்கலாம்.  தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.   தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும்” என்கிறார் கீர்த்திவாச குருக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு