Published:Updated:

ஆர்வம் இருந்தால் லட்சங்களைத் தொடலாம் - சக்சஸ் ஸ்டோரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆர்வம் இருந்தால் லட்சங்களைத் தொடலாம் - சக்சஸ் ஸ்டோரி
ஆர்வம் இருந்தால் லட்சங்களைத் தொடலாம் - சக்சஸ் ஸ்டோரி

புடவை டிசைன்களில் கலக்கும் சித்ரலேகா தாஸ்!ஸ்ரீலோபமுத்ரா

பிரீமியம் ஸ்டோரி
ஆர்வம் இருந்தால் லட்சங்களைத் தொடலாம் - சக்சஸ் ஸ்டோரி

‘எந்தக் கடையில் வாங்கினீர்கள்?!’ என்று பார்ப்பவர்கள் எல்லோரும் வியந்து கேட்கும் வகையில் கலைநயத்தோடு புடவைகளைத் தயாரிக்கிறார், புனே நகரில் வசிக்கும் சித்ரலேகா தாஸ். தனது 60 வயதில் புடவைகளைத் தயாரிக்க ஆரம்பித்து, மூன்று வருடங்களுக்குள் ஒரு பிராண்டை உருவாக்கி, தற்போது லட்சங்களில் வருமானத்தை அள்ளும் சித்ரலேகா தாஸ், இரண்டு பேரக்குழந்தைகளின் பாட்டி. ஆனாலும் எண்ணத்திலும் வார்த்தைகளிலும் எனர்ஜி வெளிப்படுகிறது.

``சிறு வயதில் இருந்தே பலவித டிசைன்களில் புடவைகள் உடுத்துவதில் விருப்பம் அதிகம். என்னிடம் இருந்த புடவைகளைக் கத்தரித்து கலைநயத்தோடு மாற்றங்கள் செய்து, விருப்பத்துக்கு ஏற்றபடி தைத்து புதிய டிசைன் புடவையாக உடுத்திக்கொள்வேன். இதற்காகவே 30 வருடங்களுக்கு முன் 700 ரூபாயில் தையல் மெஷின் ஒன்றை வாங்கினேன். வித்தியாசமான என் புடவைகளைப் பார்த்து குடும்ப நண்பர்களும் தோழிகளும் பொறாமைப்படுவார்கள். ‘உனக்கு மட்டும் எப்படி இவ்ளோ அழகா, ரசனையா தைக்க வருது' என்று பாராட்டித் தள்ளுவார்கள் என்றவர், அதன்பிறகு குடும்ப வாழ்க்கையில பிஸியாகியிருக்கிறார்.

‘‘இசையில் பட்டம் பெற்றேன். அவ்வப்போது எங்கள் ஊரில் நடக்கும் துர்கா பூஜை சமயத்தில் இசைக் கச்சேரிகளை நடத்தி வந்தேன். கிடைக்கும் நேரங்களில் பல வண்ணங்களில் சித்திரங்கள் வரைந்து என் பொழுதுகளைப் போக்கினேன். திருமணத்துக்குப் பிறகு கணவரின் ராணுவப் பணியினால் பல நகரங்களில் வாழவேண்டிய சூழ்நிலை. அப்போது இசைப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா மற்றும் ராணுவப் பள்ளிகளில் பணிபுரிந்தேன். இசைப் பணி, குழந்தைகள் வளர்ப்பு, பேரக் குழந்தைகளை கவனிப்பது என குடும்பக் கடமைகளுக்கிடையே என் உடை ஆர்வத்தை தொடர முடியவில்லை. என் கணவர் ராணுவப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற சூழலில், மீண்டும் புடவை டிசைன்கள் தயாரிப்பதில் முழு நேரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

ஆர்வம் இருந்தால் லட்சங்களைத் தொடலாம் - சக்சஸ் ஸ்டோரி

என் இயல்பிலேயே இருந்த கலை ஆர்வம், பல ரகங்களில் புடவைகளைத் தயாரிக்க எனக்கு உதவியாக இருக்கிறது. உறவினர்கள், அக்கம் பக்க வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் எனது புடவைகளைப் போட்டிபோட்டுக் கொண்டு வாங்கி ஊக்கமும் உற்சாகமும் தந்தனர். அவர்கள் மூலமாகவே என் வீட்டில் ஆரம்பித்த பிசினஸ் படிப்படியாக வளர ஆரம்பித்தது. என் டிசைன்கள் பிரபலமடைய, `ஏன் கண்காட்சி வைக்கக் கூடாது' என்று தோன்ற, என் கணவரும் மகனும் உதவியதில் மும்பையில் புடவைக் கண்காட்சி ஒன்றை நடத்தினேன். நல்ல வரவேற்பு. படிப்படியாக தொழில் வளர ஆரம்பித்தது. ஃபேஷன் டிசைனர் ஒருவரை பணிக்கு அமர்த்தினேன்.  என் வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்த பெண்ணையே, தொழிலில் உதவி செய்ய முழுநேரமாக பணிபுரிய அமர்த்தினேன்’’ என்றவரின் பிசினஸ் வெற்றிப் பாய்ச்சல் 100 அடியானது.

``என் முகநூல் கணக்கில் என்னுடைய டிசைன்களை படங்களுடன் பதிவிட்டேன். பார்த்தவர்கள் எல்லோரும் ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அது தந்த ஊக்கத்தில் ஃபிளிப்கார்ட் மற்றும் சில வணிக இணையதளங்கள் மூலமாக என் பொருட்களை விற்றேன். இப்போது www.sujatra.com வலைதளத்தை சொந்தமாக ஆரம்பித்து விற்பனை செய்கிறேன். புரொஃபஷனல் மாடல்களை அறிமுகப்படுத்தி நேர்த்தியான புடவை டிசைன்களை இணையதளத்தில் பதிவிடுகிறேன்” என்கிறவர், தன் வீட்டின் ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றியிருக்கிறார்.

ஆர்வம் இருந்தால் லட்சங்களைத் தொடலாம் - சக்சஸ் ஸ்டோரி

``ஸ்டோர் மற்றும் டெலிவரி என நிர்வாக வேலைகளை என் கணவர் கவனிக்கிறார். என் மகன் பிரபல ரேமண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவன். இப்போது எனக்கு உதவியாக கலம்காரி ரகங்களை ஆந்திராவில் இருந்தும், மதுபனி டிசைன்களை பீகாரில் இருந்தும், அஜ்ரக் வகைகளை குஜராத்தில் இருந்தும் கொள்முதல் செய்யும் பணியைக் கவனிக்கிறான்’’ என்றவர், தன் கிரியேட்டிவ் வேலைப்பாடுகள் பற்றி சொன்னார்.
``இன்றைய இளம்தலைமுறைப் பெண்களின் ரசனைக்கேற்ப ஜார்ஜெட், ஷிபான், சந்தேரி சில்க் மற்றும் காட்டன் ரகங்களில் டிசைன்களை உருவாக்குகிறேன். ஒவ்வொரு மாதமும் 60 - 80 டிசைன்களை அறிமுகப்படுத்துகிறேன்” என்று சொல்லும் சித்ரலேகா தாஸ், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், குவைத், மலேசியா, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் வசிக்கும் தன் வாடிக்கையாளர்களுக்கும் தன் டிசைனர் புடவைகளை ஏற்றுமதி செய்வது ஹைலைட்.

``இரு மாதங்களுக்கு ஒருமுறை புனே, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு நகரங்களில் புடவை கண்காட்சிகளை நடத்துகிறேன். எட்டு லட்ச ரூபாய் அளவுக்கு ஒவ்வொரு மாதமும் விற்பனை நடக்கிறது’’ என்று மிக எளிமையுடன் சொல்கிறார்... பெரிய முதலீடு ஏதும் இன்றி திறமையை மட்டும் நம்பி தொழிலை ஆரம் பித்து, குறுகிய காலத்துக்குள் சிகரம் தொட்டிருக்கும் சித்ரலேகா தாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு