Published:Updated:

புகுந்த வீட்டைப் புகழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புகுந்த வீட்டைப் புகழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும்!
புகுந்த வீட்டைப் புகழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும்!

பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்சந்திப்புபிரேமா நாராயணன், படம்: த.ஸ்ரீநிவாசன்

பிரீமியம் ஸ்டோரி

ண்மைக்காலமாக வாட்ஸ்அப்பில் வந்த சொற்பொழிவு வீடியோக்களில் அதிகமாகப் பகிரப்பட்டதும், கேட்கப்பட்டதும் ஜெயந்தஸ்ரீயுடையதாகத்தான் இருக்கும். நீங்களும் கேட்டிருக்கலாம், இவருடைய மதுரமான குரலை! சரியான ஏற்ற இறக்கங்களுடன், சொல்ல வந்த விஷயத்தை மிக எளிமையாகச் சொல்லி ரசிகர்களின் மனதில் பதிந்தவர்... முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன். நட்பு வட்டத்தில் செல்லமாக ‘ஜேபி’!

கோவை பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர் ஜெயந்தஸ்ரீ. பீளமேட்டைத் தாண்டி, அமைதியான பகுதி ஒன்றில், சோலைவனம் போன்றிருந்த அவருடைய இல்லத்தில் சந்தித்தோம். போர்டிகோவிலும் உள்ளும் புறமும் ரகவாரியாக பூனைகள். அவற்றின் பெயர்கள் கூட மிக வித்தியாசமாக... மாயாவி, விருமாண்டி, ஈட்டி, பச்சைக் கண்ணி...

புகுந்த வீட்டைப் புகழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும்!

‘‘ஆமாம்... பூனைப் பட்டாளம்! இங்கே பிரசவம் பார்க்கப்படும்’னு என் நெத்தியில் எழுதியிருக்கோ என்னவோ, அவை ஈன்ற குட்டிகள் ஏராளம்! ஒண்ணொண்ணும் ஒவ்வொரு விதம். இதோ இவளுக்குப் பேர் பச்சைக் கண்ணி. கண்களே முகமாய் இருக்கிற மாதிரி எவ்வளவு பெரிய கண்ணு பாருங்க!’’ அழகாகச் சிரித்தபடி ஆரம்பிக்கிறார் ஜெயந்தஸ்ரீ.

‘‘அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. அம்மா இல்லத்தரசி. நாங்க மூணு பிள்ளைங்க. ரொம்ப தோழமையான குடும்பம். கல்கி முதல் மஞ்சரி வரை இயல்பாகப் பேசக்கூடிய வீடு. பாட்டி வீடும் அப்படியே. எம்.ஏ., பி.எட் முடிச்சுட்டு கோவையில் ஆசிரியை ஆனேன். அதன் பிறகுதான் கல்லூரி வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆச்சு, 35 வருஷங்கள் ஓடிப்போச்சு!’’ என்னும் இவர், தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றவர். ஜெயந்தஸ்ரீயின் கணவரான முனைவர் பாலகிருஷ்ணனும் ஆசிரியப் பணியில் இருந்தவர்தான். ஒரே மகன் திருமணமாகி, மனைவி, குழந்தையுடன் சென்னையில் வசிக்கிறார்.

‘‘எங்களுடையது காதல் திருமணம். அவர் கேரளா. முழுக்க முழுக்க தென்னிந்திய சைவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், அசைவம் சமைக்கிற வீட்டுக்கு மருமகளானேன். அங்கே எந்தக் கட்டுப்பாடும் இல்லை. நான் நானாகவே இருக்க முடிஞ்சுது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஒரு சின்ன வெளி (ஸ்பேஸ்) இருந்தே ஆகணும். ஆரோக்கியமான தாம்பத்யத்துக்கு அந்த ஸ்பேஸ் ரொம்பவே அவசியம். அதைத்தாண்டி, கால் நகம் பட்டால்கூட பிரச்னைதான்.

`கணவரிடம் நல்ல குணங்களைப் பார்த்தால், அவருடைய பெற்றோரைப் பாராட்டு'ன்னு பொதுவாக நான் சொல்லுவேன். அந்த ‘கிரெடிட்’டை கணவரின் தாய், தந்தைக்கு கொடுத்திட்டா, புகுந்த வீட்டில் உரசலே ஏற்படாது. நான் வாய்க்கு வாய் என் மாமியாரைப் பாராட்டுவேன், இவரை நல்ல குணங்களோடு வளர்த்து எனக்குத் தந்ததற்காக! என் மாமியார் எனக்கு நல்லதொரு தோழி. அவர் இறந்தபோது, மிக நெருக்கமான தோழியை இழந்ததுபோல உணர்ந்தேன். ஒரு நல்ல தோழமைக்கு இடையே வயசோ, உறவோ, மொழியோ எதுவுமே வராது.

எனக்கு ரெண்டு நாத்தனார்கள்; ஒரு மருமகள். மூணு பேருமே அபாரமான பெண்மணிகள். அவங்களும் எனக்கு அருமையான தோழிகள். என் மாமியார்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக்கிறேன். உங்க மருமகள்கிட்ட,‘என் பிள்ளை என்ன சொல்றான்?’ என்று கேக்கிறதைவிட, ‘ஏம்மா, என்ன சொல்றான் உன் வீட்டுக்காரன்?’ என்று கேட்டுப் பாருங்க... மருமகள்களின் சந்தோஷ மும் கர்வமும் உச்சம் தொடும்’’ - வீணையின் நாதம் போல, சுருதி பிசகாமல் சரளமாகப் போகிறது ஜெயந்தஸ்ரீயின் பேச்சு. நிறுத்த மனசில்லாமல் கேட்கத் தோன்றுகிறது.

``நான் கல்லூரி மாணவியாக இருந்தப்போ, விகடன் பொன்விழா ஆண்டு மலரில் மாணவர் பக்கத்தில் என்னுடைய கதை பிரசுரமாகி, பரிசுக்குத் தேர்வானது. பரிசு பெற்ற 10 பேரில், ஒரே பெண் நான். விகடனின் முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் சார் முன்னிலையில் எழுத்தாளர் சுஜாதாதான் பரிசு கொடுத்தார். ‘பாரதி’ என்ற பெயரில் எழுதினேன். எல்லாக் காலங்களிலுமே எழுத்து மேல் தீராத ஆர்வம் இருந்தது.

படிச்சு முடிச்சு, ‘திசைகள்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தேன். இயக்குநர் வசந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கார்த்திகா ராஜ்குமார், யூகி சேதுன்னு எல்லோருடைய அறிமுகமும் நட்பும் கிடைச்சுது. ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஆசிரியப் பணியில் மூழ்கியதும் எல்லாம் விட்டுப்போச்சு. ஒரே அஞ்ஞாத வாசம்.

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு, மரபின் மைந்தன் முத்தையா நடத்தும்  ‘ரசனை’ இலக்கியப் பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தொடராக எழுதுவது போலத்தான் மேடைகளில் பேசுவதும். சொல்லப்போனா, என்னுடையது மேடைப்பேச்சு இல்லை. ஒரு கம்யூனிகேஷன். தகவல் பரிமாற்றம்தான். எனக்குன்னு பாணிகள் கிடையாது. இப்போ உங்ககிட்ட எப்படிப் பேசிட்டிருக்கேனோ, அப்படித்தான் மேடையிலும் பேசறேன். அதில் மேடைப் பேச்சுக்கான இலக்கணங்கள் இருக்குமா தெரியல... என் அனுபவங்களைத் தாண்டி வெளியே போனது கிடையாது. நான் பேசுவதைக் கேட்டு, யாராவது ஊக்கமடைந்தாலோ மாறினாலோ ரொம்ப நல்லது. அவங்களுக்கு நன்றி. ஒரு காலத்தில் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது என்னிடம். எனக்கு அதோடு இருக்கப் பிடிக்கல. அதை விட்டு வரணும் என்கிற அளவுக்கு மூச்சு முட்டித்தான் வெளியே வந்தேன்’’ என்று சின்னச் சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் ஜெயந்தஸ்ரீ.

``நம்மைச் சுத்தி எப்போதும் அற்புதமான மனிதர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனா, நாமதான் எதையும் பார்க்கிறதில்லை. போலியான ஒரு மாயையில் மயங்கிக் கிடக்கிறோம். கண்ணுக்குத் தெரியாம இருக்கிறவங்ககிட்டே சந்தோஷமா பேசிக்கிட்டு, கண்ணுக்கு எதிரில் இருக்கிறவங்களிடம் பேசுறதைத் தவிர்க்கிறோம்’’ என்று வருந்தும் இந்தப் பேராசிரியை, பெண்களுக்கான வலிமையான வார்த்தைகள் சில பகிர்ந்தார்.

‘‘இன்றையப் பெண்களுக்கு நிறைய கல்வி கிடைச்சிருக்கு. ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் கிடைச்சிருக்கு. நம்மிடம் தீப்பெட்டியும் இருக்கு... திரியும் இருக்கு... ஆனா, அதை, வெச்சு எத்தனை விளக்கை இதுவரை ஏத்தி இருக்கோம்? நமக்குக் கிடைச்ச கல்வியை வெச்சு என்ன நல்லது பண்ணியிருப்போம்? 90 சதவிகித மார்க் வாங்கி, எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் படிச்ச பொண்ணுகூட, வீட்டில் ஃப்யூஸ் போயிட்டா ‘அப்பா வரட்டும்’னு காத்திருக்கிறா. அப்போ படிச்சு என்ன பிரயோஜனம்?

படிச்ச பெண் இருக்கிற வீடு, தெரு, ஊர், நாட்டில் என்ன வித்தியாசம் பார்க்க முடியுது நம்மால? படிச்சு வீட்டுக்கு சம்பாதிச்சா மட்டும் போதாது. நாட்டுக்கு என்னால என்ன பண்ண முடிஞ்சுது? ஒரு கழிப்பறை கட்ட குரல் கொடுக்க முடிஞ்சாகூட போதுமே. பெண்கள் இன்னும் ஆழமாகச் சிந்திக்கணும். படிச்சுட்டு என்ன செய்யப்போறோம் என்பதில் நல்ல தெளிவு இருக்கணும். படிப்பறிவில்லாத பெண் பிரச்னையாகப் பார்க்கும் விஷயத்தை, படிச்ச பெண் சவாலாகப் பார்க்கிறாள். வீட்டில் படிச்ச பெண் இருந்தால் வித்தியாசம் தெரியணும். அப்போதான் அவங்களுக்கு ‘எம்பவர்மென்ட்’ வந்திருச்சுன்னு அர்த்தம்!’’ என்று கட்டைவிரல் உயர்த்திச் சிரிக்கிறார் கன்னம்குழிய.

புதிதாய்ப் பிறந்த உணர்வில் விடைபெற்றோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு