Published:Updated:

“இனி எங்கள் வாழ்க்கை அழகாகும்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“இனி எங்கள் வாழ்க்கை அழகாகும்!”
“இனி எங்கள் வாழ்க்கை அழகாகும்!”

வெண்புள்ளிகள் பாதிப்பு உடையவர்களுக்கான சுயம்வரத்தில் நெகிழ்ச்சிவரவேற்போம்ஜெ. எம். ஜனனி, வெ.வித்யா காயத்ரி, படம்: வெ.வித்யா காயத்ரி

பிரீமியம் ஸ்டோரி

வெண்புள்ளிகள் பாதிப்பு உள்ளவர்களுக்கு, சமூகம் தரும் புறக்கணிப்பின் வலி கொடியது. குறிப்பாக, அப்பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் தனக்கான வாழ்க்கைத் துணையாக தன்னைப்போலவே பாதிக்கப்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்விதமாக, சுயவர நிகழ்வுகளை நடத்தி வருகிறது, 'வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் - இந்தியா' என்ற அமைப்பு.

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, சமீபத்தில் மதுரையில் நடத்திய சுயம்வரத்தில், தங்கள் வாழ்வுக்கான வெளிச்சம் தேடி பல ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் வந்திருந் தனர். மண பந்தத்தில் இணைய இசைந்து முதற்கட்ட முடிவு எடுத்த  குடும்பங்களுக்கு, அமைப்பு சார்பில் கவுன்சலிங் கொடுக்கப் பட்டது.

“இனி எங்கள் வாழ்க்கை அழகாகும்!”

சென்னையில் இருந்து வந்திருந்த ஆசிரியர் கவிதா, ``நார்மலான ஒருத்தர் எங்களை திருமணம் செய்துக்க முன்வர்றது கஷ்டம். அப்படியே வந்தாலும், ஒருவேளை கணவர் அன்பானவரா அமைந் தாலும்கூட, புகுந்த வீட்டு உறவுகள் அவமானம், தாழ்வுமனப்பான்மைனு எங்களை எப்படி நடத்து வாங்களோ தெரியாது. ஆனா, என்னை மாதிரியே பாதிக்கப்பட்ட ஒருத்தருக்கும் அவரோட குடும்பத்தும், என் வேதனைகளை நான் சொல்லிப்புரிய வைக்க வேண்டியதில்லை. அவங்களும் அதை உணர்ந்திருப்பாங்க. அப்படி ஒருத்தர் கிடைப்பார் என்ற நம்பிக்கையோடதான் இந்த சுயம்வரத்துல கலந்துக்கிட்டேன். ஜாதி, மதம் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு, நானும் எங்கப்பாவும் இங்க வந்திருக்கோம்'' என்றார்.

கும்பகோணத்தில் இருந்து வந்திருந்தார் பொறியாளர் ப்ரீத்தா. ``பஸ்ல போகும்போது, என் பக்கத்துல வந்து உட்கார்றவங்ககூட என்னை நிமிர்ந்து பார்த்ததும் எழுந்திடுவாங்க. இதில் கல்யாணம் பண்ணிக்க யாரு முன்வருவாங்க? ஆனாலும் எங்க வீட்டுல எனக்கு பல இடங்கள்ல மாப்பிள்ளை பார்த்தாங்க. ஏமாற்றமும் அவமானங்களும்தான் மிச்சம். அப்போதான் இந்த அமைப்பு பற்றியும், சுயம்வரம் பற்றியும் கேள்விப்பட்டோம். என்னை மாதிரியே பாதிக்கப்பட்ட ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கும்போது, பாதுகாப் பான வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையோட வந்தோம். அது நிறைவேறின மாதிரிதான் தோணுது. முதற்கட்ட சந்திப்பு, பேச்சு வார்த்தையில எங்க ரெண்டு குடும்பத்துக்கும் பிடிச்சிருக்கு. எங்க வாழ்க்கையும் அழ காகும்னு காத்திருக்கோம்" என்றார் ப்ரீத்தா.

“இனி எங்கள் வாழ்க்கை அழகாகும்!”

பெங்களூரில் பணிபுரியும் ஐடி ஊழியர் ஆனந்த், ``பொதுவா, மாப்பிள்ளை, பொண்ணுனா பல எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனா, இங்க வந்திருக்கிற எங்களுக்கு எல்லாம் எதிர்பார்ப்புகளைவிட, கல்யாணத்துக்கு அப்புறம் ஒருத்தருக்கு ஒருத்தர் முழுமையான புரிதலோட, அன்போட, ஆதரவோட இந்த சமுதாயத்தில் வெற்றிகரமா வாழ்ந்துகாட்டணும் என்ற வைராக்கியம்தான் அதிகம் இருக்கும்'' என்றார்.

அமைப்பின் செயலாளர் கே.உமாபதியிடம் பேசினோம். ``வெண்புள்ளிகள் என்பது, ரத்த வெள்ளை அணுக்கள் சருமத்துக்கு நிறம் தரும் மெலனோசைட்களை அறியப்படாத காரணங்களால் அழிப்பதால் ஏற்படும் ஒரு நிறமிக் குறைபாடு மட்டுமே. இது நோயல்ல. இது பரவும்தன்மை கொண்டதல்ல. இது மரபுக் கோளாறும் அல்ல. இதை நாங்கள் அரசாணை ஆகவே பெற்றிருக்கிறோம். இந்த விழிப்பு உணர்வை மக்களிடம் கொண்டுசேர்த்து, வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை சமூகப் புறக்கணிப்பில் இருந்து மீட்பதே எங்கள் நோக்கம்.

“இனி எங்கள் வாழ்க்கை அழகாகும்!”

திருச்சி, திருநெல்வேலி என தமிழகத்தின் பல நகரங்களிலும் இதுவரை நான்கு சுயம்வர நிகழ்வுகளை நடத்தியுள்ளோம். எங்கள் அமைப்பு மூலம் இதுவரை 383 திருமணங்கள் முடிந்துள்ளன. அந்தத் தம்பதிகளின் 140 குழந்தைகளில், ஒரு குழந்தைக்குக்கூட வெண்புள்ளி பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மரபு நோயல்ல என்று நாங்கள் வார்த்தைகளால் சொல்வதைவிட, தங்கள் புன்னகையால் பல நூறு மடங்கு வலிமையாகச் சொல்கிறார்கள் அந்தக் குழந்தைகள்.
இன்றைய சுயம்வர நிகழ்வில், ஐந்து திருமணங்கள் நிச்சயக்கப்பட்டுள்ளன. அனைவருக்குமே 30 வயதுக்கு மேல். அந்த 10 பேரின் வாழ்க்கை, இனி பரஸ்பர அன்பாலும் அங்கீகாரத்தாலும் அழகாகவிருக்கிறது.  அவர்களுக்கான வாழ்த்துகளுடன், எங்கள் அமைப்பின் 20 வருடப் பயணத்தை அடுத்தகட்டத்தை நோக்கித் தொடர்கிறோம்'' என்றார்.

அன்பும் மகிழ்வும் சூழட்டும்!

''வாழ்ந்து காட்டுவோம்!"

'வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கம் - இந்தியா' அமைப்பு நான்கு வருடங்களுக்கு முன் திருச்சியில் நடத்திய சுயம்வர நிகழ்ச்சியின் மூலம் வாழ்க்கையில் இணைந்தவர்கள், கோயம்புத்தூரைச் சேர்ந்த நரேஷ்குமார், லாவண்யா தம்பதி. நரேஷ்குமார், ''என் மனைவி ஜாதியில அவங்களை மணம் முடிக்க யாரும் முன்வரல. என் ஜாதியில எனக்குப் பெண் தர யாரும் முன்வரல. எங்களை நிராகரிச்ச ஜாதியில் இருந்து நாங்க வெளிய வந்து கலப்புத் திருமணம் செய்துகிட்டோம்'' என்று சொல்ல, ''ரெண்டு வயசாகுது எங்க பையன் லாவித் இனியனுக்கு. ஆரோக்கியமா இருக்கான். எங்க உறவினர் ஒருத்தருக்கு பெண் பார்த்துட்டு இருக்காங்க. எங்களோட அழகான குடும்பத்தைப் பார்த்த அவர்,  'வெண்புள்ளி ஒரு நோயோ, பரவும் தன்மை கொண்டதோ, மரபோ இல்லைனு இப்போ நான் புரிஞ்சுக்கிட்டேன். வெண்புள்ளிகள் இருந்த பொண்ணா இருந்தாலும் பாருங்கனு வீட்டுல சொல்லியிருக்கேன்'னு சொன்னப்போ, ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்படி பலபேருக்கு விழிப்பு உணர்வு தரும் விதமா வாழ்ந்து காட்டுவோம்" என்றார்  லாவண்யா மகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு