Published:Updated:

“உங்கள் வண்டி நம்பர் தெரியுமா?!” - கரிசனம் ப்ளீஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“உங்கள் வண்டி நம்பர் தெரியுமா?!” - கரிசனம் ப்ளீஸ்
“உங்கள் வண்டி நம்பர் தெரியுமா?!” - கரிசனம் ப்ளீஸ்

விக்னேஸ்வரி சுரேஷ் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
“உங்கள் வண்டி நம்பர் தெரியுமா?!” - கரிசனம் ப்ளீஸ்

பெண்கள் வாகனம் ஓட்டுவது பற்றி நிறைய கேலிகள் உண்டு.   இது பற்றி பேசிக்கொண்டிருக்கையில், ‘ஆண்கள் அளவுக்கு பெண்கள் தங்கள் வாகனத்தை நேசிப்பது கிடையாது. சர்வீஸுக்கு விடுவதோடு சரி, வண்டியை துடைக்கக்கூட மாட்டார்கள். இவ்வளவு ஏன், எத்தனை பெண்களுக்கு அவர்கள் சொந்த வண்டி நம்பர் தெரியும் என்கிறாய்?’ என்று நண்பன் புகைந்தான். அவனை எப்படியும் மூக்குடைக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களிடமும் வண்டி நம்பர் கேட்டுப் பார்த்தேன். ஆச்சர்யமாக, பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் வண்டி நம்பர் நினைவில் இல்லை. அல்லது வெறும் நம்பர் மட்டும் சொல்கிறார்கள்.

வாகனம் ஓட்டுவதில் பல தவறுகள் இருபாலாருக்கும் பொருந்தும் என்றாலும், சிலவற்றை பெண்கள்தான் அதிகம் செய்கிறோம் என்று அடித்துச் சொல்கிறார்கள். சுட்டிக்காட்டும்போது திருத்திக்கொள்ளலாம்தானே?!

* ‘சைட் மிரர்’ பார்க்காமல் பெண்கள் வண்டி ஓட்டுவதுதான் புகார் எண் 1. இறங்கும் தறுவாயில் முகத்தை சரிபார்க்க மட்டும் வண்டியின் கண்ணாடியைப் பயன்படுத்துவது சரியானதல்ல.

* இண்டிகேட்டரை பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதிமொழி எடுத்திருக்கிறோமா என்ன? சட்டென்று இடமோ வலமோ திரும்பி பின்னால் வருபவருக்கு அதிர்ச்சி தருவதைவிட, இண்டிகேட்டர் போட்டு, ‘நாங்களும் நல்ல ஓட்டுநர்கள்தான்’ என்று அதிர்ச்சி தருவோம்.

* நாம் கால்களைத் தேய்த்துக்கொண்டே வண்டி ஓட்டினால், பின்னால் வருபவருக்கு நிறுத்தப்போகிறோமா, தொடர்ந்து ஓட்டப் போகிறோமா என்று தெரியாமல் மண்டை காயும். கொஞ்சம் கரிசனம் ப்ளீஸ்.
 தலையை மூடும் துப்பட்டா, ஹெல்மெட் ஆகுமா கேர்ள்ஸ்? துப்பட்டாவுக்கும் ஹெல்மெட்டுக்குமான வித்தியாசம்... உயிர்! தலைக்கவசம் அணிவோம் தவறாமல்.

* முன்னால் போகும் காரை ஓட்டுவது ஒரு பெண் என்பதை தூரத்தில் இருந்தே கண்டுபிடித்துவிடலாமாம். ‘சடன் பிரேக்’ போடுவதில் நம்மை மிஞ்ச முடியாது என்று கிண்டலடிக் கிறார்கள். நோட் இட்.

* வண்டி பராமரிப்பில் நமக்கு ஃபெயில் மார்க்தான் என்பது கணிப்பு. ஒன்று நினைவுக்கு வருகிறது... வண்டியின் இருக்கையை சுத்தம் செய்வதற்கென்று என் தோழி ஒரு வழி வைத்திருந்தாள். ‘நீ வண்டி ஓட்டேன்’ என்பாள். சரிதான் என்று முன்னால் அமர்ந்தால், ‘இல்ல வேணாம்... அப்படியே பின்னாடி நகரு. நானே ஓட்றேன்’ என்று மனதை மாற்றிக்கொள்வாள். கொஞ்சம் கவனித்ததில், வண்டி துடைக்க துணி எடுத்துவராதபோது இந்த டெக்னிக்கை அவள் பயன்படுத்துவது தெரிந்தது. ஏம்மா ஏன்..?! வீட்டையே பராமரிக்கும் நம்மால், வண்டியை முடியாதா என்ன?

“உங்கள் வண்டி நம்பர் தெரியுமா?!” - கரிசனம் ப்ளீஸ்

பெண்களின் டூ வீலர், ஃபோர் வீலர் தவறுகளைப் பட்டியலிட்டுவிட்டோம். இனி நம் தேசம் சாலைகளில் செய்யும் தவறுகளையும் பேசிவிடுவோம்.

* பெரும்பாலான பேருந்துகளில், லாரிகளில் ‘பிரேக் லைட்’ எரிவதில்லை. பேருந்து நிறுத்தங்களில், தூரத்தில் பேருந்தைக் கண்டதும் மக்கள் பாதி ரோட்டுக்கே வந்துவிட,  ஓட்டுநர் அவர்களையும் தாண்டி நட்டநடு ரோட்டில் நிறுத்திவிடுகிறார். இரண்டு வாகனங்கள் போகக்கூடிய அளவுள்ள சாலை என்றாலும், பேருந்து இப்படி நட்டநடுவில் நிற்பதால் பின்னால் வரும் அத்தனை வாகனங்களும் ஸ்தம்பிக்கின்றன.

* ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் வேன், மினி லாரி அருகில் செல்வீர்களானால், இந்த அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். எப்போது ஓட்டுநர் கதவை படார் என்று திறப்பார் என்று சொல்வதற்கில்லை. நம்மீது இடிக்கா விட்டாலும், அந்த அதிர்ச்சியி லிருந்து மீளவே சில நொடிகள் ஆகும்.

* லாரி ஓட்டு பவர்கள் வேறு வகை. அவர்கள் இண்டிகேட்டராக நினைத்துக்கொள்வது க்ளீனர் பையனின் சின்ன கையைத்தான். ஏற்கெனவே சில பல அலங்காரப் பொருட் கள், மந்திரித்த கயிறுகள் லாரியின் பக்க வாட்டில் தொங்கிக் கொண்டி ருக்கையில், இருட்டில் சட்டென்று நீண்டு மறையும் அந்த கையை பார்ப்பதற்கென்று கண்களுக்கு விசேஷ சக்தி தேவைப்படுகிறது. இத்தனை இடைஞ்சல்களையும்மீறி நெருக்கமாகப் பின் தொடர்பவர்களுக்கு லாரியின் பின் நுட்பமான செய்தி இருக்கிறது - ‘பரலோக ராஜ்ஜியத்திற்கு சமீபத்திருங்கள்!’

* நம்மூரில் ஹார்ன் அடிப்பதையெல்லாம் சிலர் ஏதோ வேண்டுதல் போலவே செய்கிறார்கள். வெயில், புகை இதற்கு நடுவில் நின்றுகொண்டே இருக்க யாருக்கும் ஆசையில்லை. ‘நாளைக்கு தானா சாகப்போற கிழவிய இன்னைக்கு போட்டுத்தள்ள போறீயா?’ என்பாரே வடிவேலு, அதுபோல அடுத்த நொடி நகரப்போகும் வாகனங்களுக்கு எதற்காக இத்தனை இரைச்சல்?

* தெரு திரும்பும் இடத்தில் வண்டியை நிறுத்தக்கூடாது என்பதை ஓட்டுநர் உரிமத் தேர்வுப் பாடங்களில் ஒன்றாக சேர்க்கலாம். மக்களைச் சொல்லிக் குற்றமில்லை. டீ கடைகளை சாலை முடிவில் அல்லது ஆரம்பத்தில் வைப்பதில் உள்ள சிக்கலை இன்றுவரை எந்த அரசாங்க அதிகாரியாவது கவனித்திருப்பார்களா தெரியாது.

மொத்தத்தில், இந்தியச் சாலைகளில் வண்டி ஓட்டுவதென்பது ஒரு கலை. ஒரு சாகசம். பல நுண்ணுணர்வுகளையும் சோதிக்கும் மற்றும் வளர்க்கும் வல்லமை கொண்டது. முன்னால் போகும் நபரின் உடல் மொழியைக் கவனித்து, அவர் திரும்பப்போகும் திசையை கணிப்ப தெல்லாம் உலகில் வேறு எங்கும் சாத்தியமா தெரியாது. குறுகலான சாலைகள், நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகும் வாகன நெரிசல் என நம்மை எரிச்சலடையச் செய்ய இங்கே நிறைய காரணிகள் இருக்கின்றன.

எனினும், போக வேண்டிய இடத்துக்கு முன்னதாகவே கிளம்பி, வண்டியை நிதானமாக ஓட்டுவது, சாலை விதிகளைப் பின்பற்றுவது, குறைவாக ஹார்ன் பயன்படுத்துவது என பயணத்தை நமக்கும் பிறருக்கும் இனிமையாக்க சாத்தியங்கள் இல்லாமல் இல்லை.

சமீபத்தில் தோழி வண்டி வாங்கியிருந்தாள். ‘ஊருக்குள்ள எனக்கு அறிவுரை சொல்லாத ஆளுன்னு இனி யாரும் இல்ல, நீ ஏதாவது சொல்றியா?’ என்று சிரித்தாள். ‘கொஞ்சம் கருணையோடு ஓட்டு, போதும்’ என்றேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு