Published:Updated:

விலங்குகளை நேசிக்க குழந்தைகளைப் பழக்குங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விலங்குகளை நேசிக்க குழந்தைகளைப் பழக்குங்கள்!
விலங்குகளை நேசிக்க குழந்தைகளைப் பழக்குங்கள்!

ஆதரவுபா.நரேஷ் - படங்கள்: மா.பி.சித்தார்த்

பிரீமியம் ஸ்டோரி
விலங்குகளை நேசிக்க குழந்தைகளைப் பழக்குங்கள்!

‘`உங்களுக்குத் தெரிந்த 3 விலங்குகளின் பெயர்களை சொல்லுங்கள் என்றால், நாய், மாடு, குதிரை என்பீர்கள். நான் ராக்கி, ஷர்மி, வருண் என்பேன். விலங்குகளின் மீதான அன்பு என்பது அவற்றை அங்கீகரிப்பதிலிருந்து தொடங்குகிறது’’ என்கிற டாக்டர் ஷிராணி, கைவிடப்பட்ட விலங்குகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்! 

சென்னையில் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கும் ‘பீப்புள் ஃபார் அனிமல்ஸ்’ என்கிற விலங்குகள் காப்பகத்தின் நிறுவனர் இவர். ஷிராணியுடன் இந்த சேவையை இணைந்து செய்துவருகிறார் அவருடைய நண்பர் ஆண்டனி.

‘`இங்கிருக்கும் ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு கதை உண்டு. தெருநாய்களைக்கூட எளிதில் பழக்கிவிடலாம். கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்களைக் கட்டுப்படுத்துவதுதான் கடினம். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட அவற்றைக் கையாள்வது சில நேரங்களில் உயிருக்குக்கூட ஆபத்தாகலாம். இருந்தாலும், அவற்றின் மேல் நாங்கள் கொண்டுள்ள அன்பே எங்களைக் காக்கிறது'' எனும் ஷிராணியின் காப்பகத்தில் 500 -க்கும் மேற்பட்ட நாய்கள், 200 நாட்டு மாடுகள், 25 குதிரைகள், 11 கழுதைகள் மற்றும் பன்றிகள், பறவைகள், பூனைகள், நாய்கள் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுகின்றன.

இங்கே நாய், பூனை, கோழி எல்லாமே ஒரே கூண்டில் அமைதியாக இருக்கின்றன. ஒரு விலங்கினத்தால் மற்றொன்றுக்கு ஆபத்து நேர்வதில்லையாம்!

மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் உள்ளே வந்துகொண்டிருக்க, அவற்றைப் பார்த்தபடி  பேச்சைத் தொடர்கிறார் ஷிராணி.

விலங்குகளை நேசிக்க குழந்தைகளைப் பழக்குங்கள்!

‘`எங்கள் காப்பகத்தில் பெரும்பாலும் விலங்குகளை யாரும் முறைப்படி வந்து ஒப்படைப்பதில்லை. வாசலில் கட்டிவைத்துவிட்டுச் செல்வார்கள், சுவர் வழியாக தூக்கி எறிந்துவிட்டுச் செல்வார்கள். அதனால் ஏற்படும் காயங்களிலிருந்து அவை விடுபடுவதற்கே நிறைய காலம் ஆகும். விலங்குகளைப் பராமரிக்க முடியவில்லை என்று எங்களிடம் கொடுத்துவிட்டுச் செல்பவர்களிடம் பராமரிப்புக் கட்டணம் எதுவும் கேட்பதில்லை. கைவிடப்பட்ட விலங்குகளை எங்களிடம் ஒப்படையுங்கள், அவை குறித்த தகவல்களை அளியுங்கள் என்பதை மட்டுமே கோரிக்கையாக வைக் கிறோம்.

இங்கு இருக்கும் 200 நாட்டு மாடுகளும், கறிக்காக வட மாநிலங்களுக்கு அனுப்பப் பட்டவை. பயணத்தின்போது கொடுமையாகக் கையாளப்பட்டவை. மிகவும் சிரமப்பட்டுதான் இவற்றை மீட்டோம். இவற்றைப் பாதுகாப்பதும் தொடர் போராட்டம்தான். அடியாட்கள் கத்திகளுடன் வந்து டாக்டரையும் வேலையாட் களையும் மிரட்டி மாடுகளை கடத்திச்செல்ல முயன்றனர். இதோ... இந்த சிவப்புக் காளை மட்டும் பிடிகொடுக்காமல் அரை மணி நேரம் ஆட்டம் காட்ட, அதற்குள் காவலர்கள் வந்ததால் உயிர் பிழைத்தோம். இல்லையென்றால் இன்று எங்களையும் இந்த மாடுகளையும் நீங்கள் பார்க்கமுடியாது'' என்றபடியே காப்பகத்தைச் சுற்றிக் காண்பிக்கிறார் ஷிராணி. அவரைப் பார்த்ததுமே வாஞ்சையாக வந்து முகத்தை தேய்க்கும் குதிரைகளும், செல்லமாக உரசிவிட்டுப் போகும் பூனைகளும், தாவி வந்து ஏறிக்கொள்ளும் நாய்களுமாக அத்தனை அழகாகிறது அந்த இடம்.

‘`சினிமாக்களில் விலங்குகளைப் பயன்படுத்த வேண்டுமானால், முறையாக அனுமதி பெற்று, பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால், பெரும்பாலான சினிமாக்காரர்கள் இதை கடைப்பிடிப்பதில்லை. தவிர, கடத்தப்படும் விலங்குகள், சர்க்கஸில் துன்புறுத்தப்படும் விலங்குகள், நிறுவனக் காவலாளிகளால் துரத்தி அடிக்கப்படும் விலங்குகள் என்று அனைத்துக்காகவும் போராடி, பாதுகாத்து வருகிறோம்.

விலங்குகளை நேசிக்க குழந்தைகளைப் பழக்குங்கள்!

சென்னை வெள்ளத்தின்போது, இந்த விலங்குகளைக் காக்க மிகவும் போராடினோம். `ஆர்ஜே' பாலாஜி மற்றும் அவருடன் வந்த சில இளைஞர்கள், உயரமான சுவர்கள் எழுப்பியதோடு, இதர கட்டுமானங்களிலும் மிகவும் உதவியாக இருந்து, எங்களை மீண்டு எழச்செய்தனர்.

இங்கிருக்கும் விலங்குகளின் உணவுக்கு மட்டுமே மாதம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. காயப்பட்ட, நோயுற்ற விலங்குகளுக்கான மருத்துவச் செலவு மாதம் 2 லட்சம் ரூபாயைத் தாண்டிவிடுகிறது. ஆகவே, முடிந்த அளவு உதவி செய்யுங்கள். பணத்தை விட முக்கியமாக, உங்கள் அன்பை இந்த உயிர்களுக்கும் கொடுங்கள். அந்த அன்பு உங்களுக்கு நல்ல புரிதல்களையும், மேம்பட்ட சிந்தனையையும் அளிக்கும். தயவுசெய்து ஒருமுறை இங்கு வந்து பாருங்கள்” என்று என்று அன்பு அழைப்பு விடுத்தபடி தன் அருகே வரும் குதிரையை வாஞ்சையாக வருடி கொடுக்கிறார் ஷிராணி!

``இதுவே மகிழ் தருணம்!''

கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை, மகன் சமரனுடன் இணைந்து தன் பிறந்த நாளை இங்கு கொண்டாடியிருக்கிறார்.

“நம் சந்தோஷத் தருணங்களை பார்ட்டி, விருந்து என்று செலவழிப்பதைவிட, இந்த விலங்குகளின் உணவுக்காவும் உடல்நலத்துக்காகவும் செலவிட்டால், அதை மிஞ்சிய மகிழ்வும் நிறைவும் வேறெங்கும் கிடைக்காது என்பதை உணர முடியும்.

ஆகவே, விலங்குகளைத் தத்தெடுங்கள். பாவப்பட்ட விலங்குகளைக் கண்டால் இவர்களுக்குத் தெரிவியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நம் குழந்தைகளுக்கு விலங்குகளை நேசிக்கப் பழக்குங்கள்” என்கிறார் தாமரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு