Published:Updated:

45 வயதில் எனக்கே எனக்காக ஒரு சைக்கிள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
45 வயதில் எனக்கே எனக்காக ஒரு சைக்கிள்!
45 வயதில் எனக்கே எனக்காக ஒரு சைக்கிள்!

சைக்கிள் காதலிகள்சாஹா - படங்கள்: மீ.நிவேதன்

பிரீமியம் ஸ்டோரி
45 வயதில் எனக்கே எனக்காக ஒரு சைக்கிள்!

டகவியலாளராக, ஆவணப்பட இயக்குநராக, நிஜமான பெண்ணியவாதியாக கீதா இளங்கோவனை பலரும் அறிந்திருப்பார்கள். ட்ரெக்கிங் போவது, மாரத்தானில் ஓடுவது, சைக்கிளிங் செய்வது... இப்படி அவரது இன்னொரு முகமும் சுவாரஸ்யமானது!

விடுமுறை அதிகாலைகளில் மெரினா கடற்கரை ஓரம் எட்டிப் பார்த்தால் கீதாவை சைக்கிளுடன் மடக்கலாம். தனது குறுந்தகவல்களில் குறிப்பிடுவதைப் போலவே கீதாவுடனான ஒவ்வொரு சந்திப்பிலும்  நிறைய அன்பும் மகிழ்ச்சியும்!

சாமானியப் பெண்களின் வாகனமாக மட்டுமே அறியப்பட்ட சைக்கிளை, சுவாரஸ்ய பயண அனுபவத்துக்கான அடையாளமாகவும் பார்க்க வைக்கிறார் கீதா. இவரது சைக்கிள் காதலைக் கேட்கிற யாருக்கும் மிதிவண்டியின் மீது மோகம் பிறக்கும்.

‘`ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவள் நான். அந்த ஆர்வத்துலதான் மாரத்தான்ல ஓடிக்கிட்டிருந்தேன். ஆனா, தினமும் ஓட்டப் பயிற்சி பண்றது நடைமுறையில சாத்தியமில்லை. சைக்கிள் ஓட்டறது சின்ன வயசுலேருந்தே எனக்குப் பிடிச்ச விஷயம். வீட்டுக்குப் பக்கத்துலயே பள்ளிக்கூடம்... வீட்டுச் சூழல்னு சில காரணங்களால அப்ப எனக்கு சைக்கிள் கிடைக்கலை. ஃப்ரெண்ட்ஸோட சைக்கிளை வாங்கி ஓட்டுவேன். காலேஜ் படிக்கிறபோது சைக்கிள் ஓட்டினதோட சரி... அப்புறம் கிட்டத்தட்ட 15 வருஷங்களுக்கு சைக்கிளுக்கும் எனக்கும் தொடர்பில்லாமப் போச்சு. டூ வீலர், கார்னு ஓட்ட ஆரம்பிச்சதால சைக்கிள் ஓட்டறதுக்கு வாய்ப்பில்லாமலும் போனது...’’ என்கிற கீதா, மீண்டும் சைக்கிள் மிதிக்க ஆரம்பித்த கதை அழகானது!

‘`என்னோட தோழி சவுண்டம்மாள் தினமும் தேனாம்பேட்டை யிலேருந்து பீச் வரைக்கும் சைக்கிள் ஓட்டிட்டுப் போயிட்டு வருவாங்க. அந்த 45 நிமிஷத்தை அவங்களுக்கான உடற்பயிற்சியா ரொம்ப முனைப்போட செய்திட்டிருந்தாங்க. அவங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவங்களைப் பார்த்து மறுபடி எனக்குள்ள சைக்கிள் ஆசை துளிர்த்தது. 45 வயசுல எனக்கே எனக்காக ஒரு சைக்கிள் வாங்கினேன். முதல்ல நுங்கம்பாக்கத்துல குடியிருந்தோம். அங்கருந்து பீச் வரைக்கும் ஓடுவேன். அப்புறம் அயனாவரத்துக்கு வீடு மாறிப் போனதும், பீச்சுக்கு வரணும்னா டூவீலர்லதான் வரணும்கிற நிலைமை. அப்பதான் சைக்கிள்ல வந்தா என்னனு தோணினது. சனி, ஞாயிற்றுக் கிழமைகள்ல காலையில 5.30 மணிக்கு அயனாவரத்துலேருந்து பீச்சுக்கு சைக்கிள்ல போயிட்டு வர ஆரம்பிச்சேன்.

போக, வர மொத்தம் 28 கிலோமீட்டர். ஒன்றரை மணி நேரமாகும். 45 நிமிஷம் சைக்கிள் ஓட்டிக்கிட்டுப் போய், பீச்ல நிறுத்திட்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு, ஒரு காபி குடிச்சிட்டு மறுபடி 45 நிமிஷத்துல வீட்டுக்கு வருவேன். அந்த எக்ஸ்பீரியன்ஸ் செம ஜாலியா இருக்கும்!

45 வயதில் எனக்கே எனக்காக ஒரு சைக்கிள்!

வாக்கிங் போறோம்... இடையில முடியலைனா பஸ்ஸோ, ஆட்டோவோ பிடிச்சு வந்துடலாம். சைக்கிள்ல அது முடியாது. என்னவானாலும் சைக்கிள் ஓட்டிக்கிட்டுத்தான் திரும்பணும். அந்த சவால் எனக்குப் பிடிச்சிருந்தது. குளுகுளு காற்று முகத்துல பட்டபடி, உலகத்துக்கு நெருக்கமா ஃபீல் பண்ண வைக்கிற சைக்கிள் பயணத்தை நான் ரொம்பவே என்ஜாய் பண்றேன்...’’ - ‘விண்ட் ஆன் மை ஃபேஸ்’ அனுபவத்துக்கு (‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் வருவது போல!) ஆர்வம் கூட்டுகிறது கீதாவின் விவரிப்பு.

``டூ வீலர்லயோ, கார்லயோ போறபோது, சைக்கிள்காரங்க குறுக்கே வராங்கனு திட்டு வோம். ஆனா, சைக்கிள்ல போறபோதுதான் அவங்க கஷ்டம் தெரியுது. இந்தப் பார்வை எளிய மக்களோட வாழ்க்கையைப் புரிஞ்சுக்கவும் உதவியா இருக்கு. நம்மூர்ல ஒரே பிரச்னை ட்ராஃபிக். சைக்கிளுக்கு தனிப்பாதை இல்லை. அதுக்கு பயந்துக்கிட்டே பலரும் சைக்கிளை எடுக்கிறதில்லை. நிதானமா ஓட்டினா இதுக்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை...’’ - ஆலோசனையும் தருகிறார்.

``ஆர்வத்துக்காக சைக்கிள் ஓட்டினாலும், அது மறைமுகமா என்னோட ஆரோக்கியத்துக்கும் உதவியா இருக்கு. சைக்கிள் ஓட்டறவங்களுக்கு கால்கள் ஸ்ட்ராங்காகும். வெயிட் போடாது. வாரத்துல ரெண்டு நாள் சைக்கிளிங் பண்றது மூலமா அந்த வாரம் முழுக்கத் தேவையான எனர்ஜி எனக்குக் கிடைக்குது. ‘பீரியட்ஸ் டைம்லகூடவா சைக்கிள் ஓட்டுவீங்க’னு சிலர் கேட்கறதுண்டு.

பீரியட்ஸ் டைம்ல ஸ்கிப்பிங் பண்ணக்கூடாது, ஓடக்கூடாது... கர்ப்பப்பை பலவீனமாகிடும்னு சொல்றதெல்லாம் சும்மா கதை... நாம எவ்வளவு ஆரோக் கியமா இருக்கோமோ, அந்தளவுக்கு நம்ம கர்ப்பப்பையும் ஆரோக்கியமா இருக்கும். காலேஜ் படிக்கிறபோதே மத்த பொண்ணுங்க எல்லாம் பீரியட்ஸ் டைம்ல ரெஸ்ட் எடுக்கணும்னு நினைப்பாங்க. நான் அப்பதான் இன்னும் திமிரோட சைக்கிள் ஓட்டுவேன். அந்த விஷயம் நம்மளை முடக்கிடக்கூடாதுனு நினைப்பேன்.  எல்லாத்துக்கும் மனசு தான் காரணம்...’’ - கீதாபதேசம் செய்கிறவருக்கு சைக்கிள் விரும்பி களை இணைக்கிற ஐடியாவும் இருக் கிறது.

``எனக்கு ரெகுலரா ட்ரெக்கிங் போகற பழக்கம் உண்டு. முதல் முறை தனியாதான் போனேன். அப்புறம் ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்தாங்க. இப்ப எங்க ட்ரெக்கிங் குரூப்ல 8 பேர் இருக்காங்க. அதே மாதிரி சைக்கிளிங்க்குக்கும் ஒரு குரூப் ஆரம்பிக்கிற ஐடியா இருக்கு. இப்ப மெரினா பீச் வரைக்கும் போற சைக்கிளிங் தூரத்தை அடுத்து பெசன்ட் நகர் பீச் வரைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ற யோசனையும் இருக்கு...’’ என்கிறார்.

இணைந்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு