Published:Updated:

அந்த அன்பு அற்புதமானது! - அவள் கிளாஸிக்ஸ் 1999

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அந்த அன்பு அற்புதமானது! - அவள் கிளாஸிக்ஸ் 1999
அந்த அன்பு அற்புதமானது! - அவள் கிளாஸிக்ஸ் 1999

அந்த அன்பு அற்புதமானது! - அவள் கிளாஸிக்ஸ் 1999

பிரீமியம் ஸ்டோரி
அந்த அன்பு அற்புதமானது! - அவள் கிளாஸிக்ஸ் 1999

‘இப்போதே கொட்ட லாமா? இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டுமா?’ என்று கருமேகங்கள் யோசித்துக்கொண்டிருந்த மாலை நேரம்... சென்னை ராஜாஜி ஹாலைச் சுற்றிலும் டீன் ஏஜ் பெண்கள் கூட்டம்... ‘ஹேய், அஜீத் இருக்காண்டீ...’ என்கிற பேச்சுக் குரல்களைக் கடந்து உள்ளே நுழைந்தபோது, ஷாட் முடிந்து ஓய்வில் இருந்தார் அஜீத்.

கழுத்தில் தடிமனான வெள்ளிச் சங்கிலி, கையில் முரட்டு பிரேஸ்லெட், ஒற்றைக் காதில் வளையம், ஒரு வாரத் தாடி சகிதம் பாப் சிங்கர் மாதிரி இருந்தார். கேட்டால், ‘‘சும்மா ஒரு ரௌடி கெட்டப்தான்” என்று சிரிக்கிறார். இப்படி ஒரு சிரிப்பை வைத்துக்கொண்டு ரௌடி என்றால் யாரும் நம்பமாட்டார்கள்!

அந்த அன்பு அற்புதமானது! - அவள் கிளாஸிக்ஸ் 1999

‘‘நான் ரொம்ப சென்ஸிடிவ்” - முகத்தை சீரியஸாக வைத்துக்கொள்கிறார்.

‘‘சின்னச் சின்ன விஷயங்கள்கூட என்னை ரொம்பவும் பாதிக்கும். சட்டுனு சந்தோஷமாவேன்... சட்டுனு கோபப்படுவேன். நான் காட்டாறு மாதிரி... என் அன்பு, கோபம் எதுவானாலும் அளவுக்கு அதிகமாத்தான் வெளிப்படும். என் மேல நிஜமான அன்பு வெச்சிருக்கிறவங்களால மட்டும்தான் என் வெளிப்பாடுகளைப் புரிஞ்சுக்கிட்டு, என்னை ஏத்துக்க முடியும். மத்தவங்க காட்டாத்து வெள்ளத்துல காணாமல்போற புல்பூண்டுகளா என்னை விட்டு மறைஞ்சுடுவாங்க.

‘நீ ஒரு நடிகன்... இப்படி இருக்கக் கூடாது. உன்னோட உணர்வுகளை இப்படி திறந்த புத்தகமாக்கக்கூடாது’னு நிறைய பேர் சொல்றாங்க. ஏன் அப்படின்னு எனக்குப் புரியல. இமேஜ்னா என்ன? நான் ஏன் என்னைப் பற்றி யார்ட்டயும் சொல்லாமல் மறைக்கணும்? போன மூணு வருஷத்து இன்டர்வியூக்களைப் புரட்டினீங்கன்னா அதுல ஹீரா இல்லாத இன்டர்வியூவே கிடையாது யெஸ்... நானும் ஹீராவும் லவ் பண்ணினோம்னு எல்லார்கிட்டயும் சொன்னேன். லவ்தானே பண்ணினேன். லவ்ங்கிறது உயர்ந்த விஷயம் தானே! அதுக்கப்புறமா எங்க ரெண்டு பேருக்கும் சில விஷயங்கள் சரிப்பட்டு வரல. ஸோ பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்ணிட்டோம்...” - சில விநாடிகள் நிதானிக்கிறார்.

‘‘அதுக்காக இனிமே, எனக்குக் காதலே கிடையாதுனு தண்ணியடிச்சுட்டுத் தத்துவம் பேசற ஆள் நானில்லை. எந்தவொரு ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் அதுல நெருடல் வந்துடக்கூடாது. பரஸ்பரம் மரியாதை இருக்கணுமே தவிர, பயம் வந்துடக்கூடாது. என்கூட நடிக்கிற பொண்ணு, லேட்டஸ்ட் பெஸ்ட் செல்லர் நாவல், இந்த உலகம், அதைத் தாண்டின விஷயங்கள்... இப்படி எதைப் பத்தி வேணாலும் பேசற சுதந்திரம் இருக்கணும். முக்கியமா நேர்மை இருக்கணும். அதுதான் லவ்.

தன்னம்பிக்கையுள்ள, தன் மீது மரியாதை கொண்ட பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க ரொம்பவும் நேசிக்கிற ஒருத்தர்கிட்ட உண்மை மட்டும் சொல்லிப் பாருங்க... அந்த அன்பு அற்புதமானதா இருக்கும். ‘டேய்... நீ ரொம்ப நல்லவன்டா’னு உங்க மேலயே ஒரு மரியாதை ஏற்படும். அன்புக்குப் பொய் சொல்லத் தெரியாது!

அந்த எதிர்பார்ப்பில்லாத அன்பை அள்ளி வழங்கறவங்க பெண்கள்தான். வீட்டுல நுழைஞ்சா ‘அம்மா’னு தான் கூப்பிடத் தோணுது. ‘ஒரு வீட்டைக் கட்டறவன் ஆண். அதை இல்லமா உருவாக்கறது பெண்’ என்ற பழமொழி எனக்கு ரொம்பப் பிடிக்கும். பெண் இல்லாத வீடு சவக்கிடங்கு மாதிரி. பெண் நம் ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் எவ்வளவு பரிபூரணமானதாகவும் உயிரோட்டம் நிறைந்ததாகவும் மாத்திடறானு நிறைய நேரங்களில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.”

அந்த அன்பு அற்புதமானது! - அவள் கிளாஸிக்ஸ் 1999

‘பெரிய பைக் பிரியரா இருக்கீங்களே... இதுவரை உங்க பில்லியன்ல எத்தனை பெண்கள் உட்கார்ந்திருப்பாங்க..?’

(ஏதோ உள்ளர்த்தத்துடன் சிரிக்கிறார்) ‘‘இப்படிக் கேட்டீங்கன்னா, என்ன பதில் சொல்றது..? நோ காமெண்ட்ஸ்!”

‘‘ஒரு பெண்ணிடம் முதல் பார்வையில் உங்களைக் கவர்வது..?”

‘‘ம்... நீள முடி! அலை அலையா அடர்த்தியான கூந்தல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம்... கண்கள்! அப்பா... சில கண்களைப் பார்த்தால் பார்த்துட்டே இருக் கலாம் போலிருக்கும். ஏதோ ரகசியத்தை மறைச்சு வெச்சிருக்கிற சில பெண்களின் கண்களில் காந்தம் இருக்கிறது!”

‘‘உங்களோடு நடிக்கிற ஹீரோயின்களை நீங்க இம்ப்ரஸ் பண்ணு வீங்களா..? ரெண்டு, மூணு பேர் உங்களைக் காதலிக்கிறதா சொல்லி யிருக்காங்களே..?”


“நான் எதையும் வெளிப் படையாகப் பேசிடுவேன். கலகலனு நட்பா பழகறது சிலருக்குப் பிடிச்சுப் போய், அவங்களா என்னை லவ் பண்ணினா, அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்..?

எல்லாமே அனுபவங்கள்தான்... இப்போ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன். என் வாழ்க்கை யிலேயே முதன்முதலா திட்ட மிட்டு வேலை பார்த்த ‘வாலி’, எதிர்பார்த்த மாதிரியே வெற்றியைத் தந்திருக்கு! இப்போதான் கதைக்கும் கேரக்டருக்கும் முக்கியத்துவம் தந்து, என்னுடைய யோசனைகளையும் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். ‘நல்லா பண்ணி இருக்கீங்க அஜீத்’னு யாராவது சொன்னா, சந்தோஷத் தோடு பயமும் வருது! நான் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு... எல்லோருமே ஜெயிக்கிறதுக் குத்தானே ஓடிட்டு இருக்கோம். நானும் ஓடறேன்...’’ - சொல்லிக்கொண்டு மோவாயை வருடியபடி வானத்தைப் பார்க்கிறார் அஜீத். பேட்டி நேரத்தின் போதே மழை பெய்து ஓய்ந்திருந்தது.

- தயாமலர், முருகேஷ்பாபு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு