Published:Updated:

தப்பர்த்தம் - அவள் கிளாஸிக்ஸ் 1998

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தப்பர்த்தம் - அவள் கிளாஸிக்ஸ் 1998
தப்பர்த்தம் - அவள் கிளாஸிக்ஸ் 1998

தப்பர்த்தம் - அவள் கிளாஸிக்ஸ் 1998

பிரீமியம் ஸ்டோரி
தப்பர்த்தம் - அவள் கிளாஸிக்ஸ் 1998

ணிலொடு சிநேகம் கொள்ளல்
அபூர்வம். பயந்த ஜந்து.
எண்திசை சுழலும் கண்கள்,
பஞ்சுவால், உணவைப் பற்றும்
இரு கைகள், கொறிக்கும் பற்கள்,
நிசப்தத்தில் கூர்ந்த காது...
பிற உயிர் கொல்லா விலங்கின்
உடல்பூரா உயிர்ப் பதற்றம்.

பூனைகள், ஜோடி அணில்கள்,
வேடர்கள் தவிர
வேறு எவராலும் தொட ஒண்ணாது.
ஒருராமன் அன்பால் தொட்ட
மூவிரல் ஸ்பரிசம் கூட
தழும்பாச்சாம். புராணம் சொல்லும்.

இலைவிழும் ஒலி கேட்டாலும்
குலைபதறி ஒளிய ஓடும் அணிலொடு
சிநேகம் கொள்ளல் அனுபவம்.
ஒருநாள் மதியம்
முற்றத்தில் பெய்த தூறல்
சத்தத்தின் பாட்டில் நெஞ்சு
பாலூற நின்ற தருணம்
கீச்சென்றோர் ஸ்வரத்தைக் கேட்டேன்.

மிகப்பெரும் தூறல் துளிபோல வந்த
ஓர் அணில் என் கண்ணைப்
பார்த்ததில் இருந்த நேசம்
உணர்ந்ததும் சொந்தம் ஆச்சு.

அபூர்வ சொந்தக்காரி
குடிப்பாளா பாலோ, டீயோ?
அறியேன் நான். எனினும்
கொஞ்சம் பாலூற்றிக்
கோப்பை வைத்தேன்.

அதிசயம். நெருங்கியது அணில்.
மனசெல்லாம் பூரிப்பாச்சு.
அணில்வந்து பாலைத் தொட்டால்
என் அன்பு பூர்த்தியாகும்.

பூரிப்பா உலகம்?
அது சிதைவதுதானே நியதி.

அணிலுக்கும் பால் கோப்பைக்கும்
நடுவிலே பேயைப் போல
குதித்தது பூனை ஒன்று.
பால்கிண்ணம் சிந்திப் போச்சு.

உயிர்ப்பூவை நெருப்பு தொட்டு
எரித்தது போல திகைப்பில்
‘ஏய்ய்’ என்றேன் அலறலாக.
பலகிண்ணம் பாலை உண்ட
பூனைக்கு பயமே இல்லை.
அணில்தான் பதறிப் போச்சு.
‘கூப்பிட்டாய், பாலைத் தந்தாய்
தொடப்போனேன். கொல்ல வந்தாய்.’
மணிக்கண்ணால் சாட்டிய குற்றம்
மறையாது மனசில் என்றும்.

முருங்கைப்பூ சிதற,
கொல்லைச் சுவரின்மேல் ஏறி
என்னை துரோகி எனப் பார்த்துவிட்டு
மழைக்குள்ளே மறைந்து போச்சு.

‘என் கூச்சல் உனக்கு அல்ல.
திருடிய பூனைக்குத்தான்.
எனை நம்பு அணிலே’ என்று
எப்படிப் புரிய வைப்பேன்?
அணில்மொழி அறியாப் பாவி.

- ஸோமா வனதேவதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு