Published:Updated:

மனுஷி - 6 - பெண்களின் இயல்புகள்!

மனுஷி - 6 - பெண்களின் இயல்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மனுஷி - 6 - பெண்களின் இயல்புகள்!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - 6 - பெண்களின் இயல்புகள்!

வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா வந்து போகும் ஃபேஸ்புக் தோழி எமி, சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்திருந்தாள். அவளை ஆரத்தழுவி வரவேற்று, காபி எடுத்து வருவதற்காக கிச்சனுக்குள் சென்றேன். என் பின்னாடியே கிச்சனுக்கு வந்துவிட்டாள். அங்கு சமையலுக்குத் தேவையான பொருட்கள் இருந்த ஷெல்ஃபை, தன் நீல நிறக் கண்கள் விரிய விழித்துப் பார்த்து, ‘`எப்படி இவை அனைத்தின் பெயர்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள்?’’ என்று வியப்புடன் கேட்டாள்.

‘`இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. முன்பெல்லாம் எங்கள் வீடுகளில் பெண்களுக்கு ஏழு வயது ஆகும்போதே, இவை அனைத்தைப் பற்றியும் விளக்கி, கையாளவும் பழக்கினார்கள்’’ என்றேன்.

‘`என்னது... ஏழு வயதில் இருந்தா?’’ என்று வியப்பு மாறாமலே கேட்டாள்.

‘`ஆமாம். 7 வயது முதல் 12 வயது வரை உள்ள பெண்கள் எந்த வேலையாக இருந்தாலும் சட்டென்று புரிந்துகொள்ளவும், பழகிக்கொள்ளவும் செய்வார்கள்’’ என்று அவளைப் புன்னகையுடன் பார்த்தேன். தொடர்ந்து, ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்று ஒரு பழமொழியே உண்டு. அதனால்தான் அந்த வயதில் உள்ள பெண்குழந்தைகளுக்கு மிகவும் எளிய பயிற்சிகளான கோலமிடுவது, பூ தொடுப்பது, செடிகளுக்கு நீர் வார்ப்பது போன்றவற்றை சொல்லித் தந்தனர்’’ என்றேன்.

‘`இந்தப் பயிற்சிகளால் என்ன பயன்?’’ என்று எமி கேட்டாள். ‘`இப்படிப்பட்ட பயிற்சிகளால் அந்தக் குழந்தைக்குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. உதாரணமாக, தான் தண்ணீர் ஊற்றி வளர்த்த செடியில் பூக்கும் மலரைப் பார்க்கும்போது, அந்தக் குழந்தை தன்னிடம் உள்ள படைப்புத் திறனை அறிந்துகொள்ளும்’’ என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, பக்கத்து வீட்டு மாமி வந்தார்.

மாமியை எமிக்கு அறிமுகப்படுத்தினேன். மாமி வரும் போதே எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு வந்திருப்பார்போல. நான் பாதியில் நிறுத்திய உரையாடலை மாமி தொடர்ந்தார்.

‘`குழந்தைகளுக்குக் கோலம் போட அளிக்கும் பயிற்சியானது, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நன்மைகளை அந்தக் குழந்தைக்குக் கிடைக்கச் செய்கிறது. வீட்டு வாசல் முன்பாகக் கோலமிடுவதால், ஆன்மிக ரீதியில் சொல்வதனால் `லக்ஷ்மி கடாட்சம்' ஏற்படுகிறது. அதிகாலை வேளையின் தூய்மையான காற்றை சுவாசிக்க முடிகிறது. அதுமட்டுமல்ல... பச்சரிசி மாவில்தான் கோலம் போடவேண்டும் என்ற மரபும் உண்டு. அந்த மாவு பல ஜீவன்களுக்கு உணவாகவும் பயன்படுகிறது’’ என்ற மாமியிடம், ‘`வேறு எதாவது நேரடி நன்மை இருக்கிறதா?’’ என்று கேட்டாள் எமி.

‘`ஏன் இல்லாமல்..? அறிவியல்ரீதியாகவும் பல நன்மைகள் உண்டு. குனிந்து கோலம் போடுவது, நம் கழுத்து மற்றும் கைகளுக்கு நன்மை அளிக்கிறது. இது யோகாசனத்தில் ஒரு பகுதியாகவே வருகிறது. கோலம் போடுவதற்கு ஒருமித்த கவனம் வேண்டும். இதனால் சிந்தனைத் திறன் மேம்படும்’’ என்று மாமி சொன்னதைக் கேட்டபோது, எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

‘`மற்றொரு விஷயமும் இருக்கிறது. முன்பெல்லாம் பெண்குழந்தைகளிடம் தாமரைப் பூவைக் கொடுத்து, அதன் இதழ்களை விரிக்கச் சொல்வார்கள். தாமரைப் பூவின் இதழ்களை ஒருமுறை விரித்துவிட்டால், அதை மறுபடியும் பழைய நிலைக்கு மாற்ற முடியாது. இதழைக் கிழியாமலும் விரிக்கவேண்டும். எனவே, பெண் குழந்தைகள் அந்தச் செயலை மிகவும் கவனமாகச் செய்வார்கள். அதனால், ஒரு செயலை கவனத்துடனும், ஒருமுகப்பட்ட மனதுடனும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அந்தச் சின்ன வயதிலேயே அவர்கள் மனதில் அழுத்தமாகப் பதிகிறது’’ என்று நான் சொன்னதும், எமி ஆச்சர்யத்தில் கண்களை மலர விரித்தாள்.

‘`சிந்தனைத் திறன் பெருகுவது மட்டுமல்ல... கோலம் போடுவது, பல்லாங்குழி விளை யாடுவது ஆகியவை கைகளுக்கும் கை விரல்களுக்கும் சிறந்த பயிற்சிகளாக விளங்கு வதால், அவர்களுக்குக் கைநடுக்கமே வருவ தில்லை. இதனால் அவர்கள் தையல் வேலை, எம்ப்ராய்டரி பின்னுதல், தட்டச்சு செய்தல் போன்றவற்றிலும் சிறந்து விளங்க முடிகிறது.’’

மாமி சொன்னதைக் கேட்ட எமி, ‘`இங்கு பெண்களுக்கே அதிக சடங்குகள் செய்வது ஏன்? அவர்களை ஒருவிதத்தில் கட்டுப்படுத்தி வைக்கத்தானே?’’ என்று கேட்டாள்.

``நிச்சயமாக அப்படி இல்லை’’ என்ற மாமி, ஒரு சில சடங்குகளை உதாரணம் காட்டினார்...

‘`எங்கள் குடும்பங்களில் எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும், தானியப் பயிர்கள் முளைவிட்டிருக்கும் பாலிகைக் கும்பங்களை பெண்களைக்கொண்டே எடுப்பார்கள். காரணம், அவர்கள் விதைத்த தானியங்கள் விளைவதுபோல, தங்கள் வம்சத்தையும் விருத்தி செய்ய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

வீட்டுப் பிராணிகளைப் பராமரிக்கும் பொறுப்பும் பெண்களுடையதுதான். இதனால் ஜீவகாருண்யம் அவர்கள் மனதில் இயல்பாகவே அமைந்துவிடுகிறது’’ - மாமி இப்படி சொல்லி முடிக்கவும், ‘` `ஆநிரை கைப்பிடி' என்று என் பாட்டி சொல்லிக்கொண்டு இருப்பாள். அதற்கு என்ன அர்த்தம் மாமி?’’ என்றேன் நான்.

‘`பசுவுக்கு ஒரு பிடி புல்லைக் கொடுக்கும் போது, அது நம் கைகளை தன் நாக்கால் வருடும். அப்படிச் செய்வது நமக்கு லக்ஷ்மி கடாட்சத்தைக் கொடுக்கும். அதைத்தான் ஆநிரை கைப்பிடி என்பார்கள்...’’ என்று சொன்ன மாமி, ‘`கலை, விளையாட்டு, செடிகள் - செல்லப் பிராணிகள் வளர்ப்பு போன்றவற்றில் பெண்குழந்தைகளைச் சிறுவயதில் இருந்தே இறக்கிவிடுவதே வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் அவர்களால் நுட்பமாகப் புரிந்துகொள்வதற்காகத்தான். இதனால் அவர்களின் உடலும் ஆரோக்கியமாகும்’’ என்று பெண்களின் முக்கியத்துவம் பற்றி அழகாக விளக்கிய மாமியை அணைத்துக் கொண்டேன். பளிச்சென்று தன் மொபைலில் அதை போட்டோ எடுத்தாள் எமி. சரிதான்... உடனே தன் ஃபேஸ்புக்கில் இதைப் போட்டுவிடுவாள்!

(இன்னும் உணர்வோம்!)

பழைமையான சமையல் புத்தகம்!

லகின் மிகப்பழைமையான சமையல் புத்தகம் ஒன்றை நம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அது இன்றுள்ள புத்தகம் போல காகிதத் தாளில் இல்லை. ஆதிகால களிமண் பலகைகளால் ஆனது. 2004-ல் யேல் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள், கியூனிஃபார்ம் எழுத்துகள் உள்ள மூன்று களிமண் பலகைகளைக் கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொன்றிலும் சமையல் பற்றிய குறிப்புகளே காணப்படுகின்றன.

மூன்றிலும் மொத்தமாக 35 வகையான சமையல் குறிப்புகள் உள்ளன. இவை, பழைய பாபிலோனிய காலத்தின் இடைப்பகுதியில் தொகுக்கப்பட்டதாகும். இதுதான் உலகிலேயே மிகப் பழைமையான சமையல் கலைப் புத்தகம். இதன் வயது சுமார் 3,700 ஆண்டுகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz