Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்: வெற்றிக்குப் பின்னால் என் கணவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அவள் கிளாஸிக்ஸ்: வெற்றிக்குப் பின்னால் என் கணவர்!
அவள் கிளாஸிக்ஸ்: வெற்றிக்குப் பின்னால் என் கணவர்!

கௌரவம்

பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ்: வெற்றிக்குப் பின்னால் என் கணவர்!

தென்னிந்தியப் பாடகர்கள் யாருக்கும் கிடைக்காத ஒரு கௌரவம் சுதா ரகுநாதனுக்குக் கிடைத்திருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்க தினத்தன்று பிரதமர் பேசி முடித்தபிறகு, சுதா ரகுநாதன் ‘வந்தே மாதரம்’ பாடினார். மாலையில் ‘சாந்தி நிலவ வேண்டும்’, ‘பாரதநாடு பழம்பெரும்நாடு’ ஆகிய பாடல்களைப் பாடினார் சுதா ரகுநாதன்.

‘`என் வெற்றிகள் அத்தனைக்கும் காரணம் இவர்தான்” என்று சுதா சுட்டிக்காட்டுவது தன் கணவர் ரகுநாதனைத்தான்! மாளவிகா, கௌசிக் என்று இரு குழந்தைகள் இத்தம்பதிக்கு!

மனைவியின் புகழ் மூலம் தான் அடையாளம் கண்டுகொள்ளப்படுவது குறித்து எந்த காம்ப்ளெக் ஸும் இல்லாத கலகலப்பான நபர் ரகுநாதன்!

‘`ஆறேழு வருஷம் முன்னே‘வளர்ந்து வரும் கலைஞர்’ என்கிற முறையில் சங்கீத வாய்ப்புகள் எல்லாவற்றையும் ஏற்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். எல்லாவற்றையும் என் கணவர் சமாளித்து ஒத்துழைப்பு கொடுத்ததால்தான் இந்த அளவு முன்னேற முடிந்தது...’’

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் ரகுநாதன், தனக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி விடக் கூடாது என்பதற்காகவே பிரமோஷன் வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம்!

‘`கணவன் - மனைவி இருவருமே வேலைதான் முக்கியம் என்று இருந்தால், குடும்பம் என்னாவது? சுதா அற்புதமான இசைக்கலைஞர் என்பதையும், புகழ் வெளிச்சத்தில் இருப்பவர் என்பதும் உண்மை. அந்த வகையில், வெளியூர் மற்றும் வெளிநாட்டுக் கச்சேரிகளுக்காக சுதா செல்ல நேரும்போது - குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதை நான் சுமையாக நினைக்கவில்லை.

ஆண்கள் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ என்று சொல்லிக் கொள்ள ஏன் வெட்கப்பட வேண்டும்?! அதுவும் சுதா மாதிரி ‘கிரியேட்டிவ் துறை’களில் இருப்பவர்களுக்கு மன அமைதி முக்கியம். ‘அடுத்து என்ன ராகம் பாடலாம்?’ என்று யோசிக்க வேண்டிய வரைப் போய், ‘அடுத்த வேளை டிபன் என்ன பண்ணலாம்?’ என்று யோசிக்கவிடலாமா? அதனால் தான் வீட்டுவேலைகளை நானே பார்க்க ஆரம்பித்தேன்...” - வியக்க வைக்கிறார் ரகுநாதன்!

‘`தினமும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்தால் ஒரு மணி நேரத்தில் சமைத்து முடித்து குழந்தைகளை ஸ்கூலுக்குக் கிளப்பி, எட்டரை மணிக்கு ஆபீஸுக்கு ரெடியாகி விடுவேன்... சுதா ஊரிலிருக்கும் நாட்களிலும் நான்தான் சமையல். குழந்தைகளுடன் அவள் வீட்டில் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பங்களே அரிது. அப்போது அவளை அடுப்பங்கரையில் இருக்கச் செய்வானேன்!” என்று அடுத்த ஆச்சர்யத்தைத் தருகிற ரகுநாதன், சுதாவின் கச்சேரிகளுக்கு அவ்வளவாகப் போவதில்லையாம்.

‘`ரசிகர்களுக்கும் சுதாவுக்கும் இடையிலான உறவில் அநாவசியமாக நான் தலையிடுவதாகத் தோன்றுகிறது. ரசிகர்கள் அவளை சூழ்ந்துகொண்டால், எனக்கு ஒருவேளை எரிச்சல் வரலாம்! நான் கோபப்பட்டு ஏதாவது சொல்லப் போய், அதனால் அவள் கரியருக்கு ஏதும் பாதிப்பு வரக்கூடாதில்லையா? அதோடு, எப்படிப்பட்ட சூழ்நிலையும் அவளுக்கே ஹாண்டில் பண்ணிக் கொள்ளத் தெரியும்... அதனால்தான் நான் போவதில்லை...’’

நான்கைந்து வருடங்களுக்கு முன், சுதா விசாகப்பட்டினத்தில் கச்சேரிக்காகப் போயிருக்க, சென்னையில் அவரது மாமனார் (ரகுநாதனின் தந்தை) இறந்துவிட்டாராம்.

‘‘ஆனால், ரகு உடனே எனக்கு தந்தி கொடுத்துப் பதற்றப்படுத்தவில்லை. கச்சேரி எல்லாம் முடிந்து சென்னை வந்தபிறகுதான் விஷயமே தெரியும். ரொம்பவே மனம் கலங்கிப் போனேன்” என்கிறார் சுதா.

ரகுநாதனுக்கு சங்கீத ஞானம் எந்த அளவு?

``கல்யாணமான புதுசுல ஒருமுறை வீணை வாசிச்சேன். திடீர்னு பார்த்தால், அபஸ்வரம் தாளமுடியாமல் சுதா மயக்கமாகி விழுந்திருந்தாள். அதோடு வீணைக்கு கும்பிடு...” - ரகுநாதன் ஜோக்கடிக்க... ‘`சும்மா டபாய்க்கிறார்... ஓரளவு நல்லாவே பாடுவார்...” என்கிறார் சுதா.

‘`எங்களுக்குள்ளேயும் பல விஷயங்களில் முரண்பாடு ஏற்படும். நாங்கள் இருவருமே ஸ்ட்ராங்கான தனித்தன்மை படைத்தவர்கள். ஆனால், ஒருவர் கோபமாக இருக்கிறப்போ, இன்னொருத்தர் தணிந்து போய்விடுவோம். அதனால் சீக்கிரம் பேலன்ஸ் ஆகிவிடும்’’ என்கின்றனர் சூப்பர் தம்பதி சுதா - ரகுநாதன்!

(மார்ச் 31, 2000)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு