Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்: என்னுயிரே... என்னுயிரே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அவள் கிளாஸிக்ஸ்: என்னுயிரே... என்னுயிரே!
அவள் கிளாஸிக்ஸ்: என்னுயிரே... என்னுயிரே!

இன்னிசை

பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ்: என்னுயிரே... என்னுயிரே!

‘சொட்டச் சொட்ட நனையுது தாஜ்மகால்... குடையொண்ணும் வேணாம் வா கிளியே...’  -

லேட்டஸ்ட்டாக, எல்லாரும் முணுமுணுக்கும் ‘சூப்பர்ஹிட்’ பாடல் இதுதான்! இந்தப் பாடலைப் பாடியிருக்கும் ஸ்ரீநிவாஸின் குரல் ஏற்கெனவே பிரபலம்தான். ‘படையப்பா’ (மின்சாரப்பூவே), ‘உயிரே’ (என்னுயிரே), ‘மின்சாரக் கனவு’ (மானாமதுரை மாமரக் கிளையிலே) உள்பட பல படங்களின் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இவர். ஸ்ரீநிவாஸை சென்னை, அண்ணாநகரிலுள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினோம்.

``மெல்லிசை மற்றும் சினிமாப் பாடல்கள் பாட விரும்புவோர் இந்துஸ்தானி மியூஸிக் கற்றுக்கொள்வது நல்லது. ‘வாய்ஸ் கல்ச்சர்’ எனப்படும் குரல்வள மேம்பாட்டுக்கு மிக அருமையான பயிற்சி கிடைக்கும். பாடலின் நுணுக்கமான ஏற்ற இறக்கங்களைக் குழைவாகக் குரலில் கொண்டுவர முடியும்...” என்கிற ஸ்ரீநிவாஸ். கர்னாடக சங்கீதம் - இந்துஸ்தானி இசை இரண்டையுமே சுற்றிருக்கிறார்.

``எங்கள் குடும்பத்தில் இந்த ஃபீல்டுக்கு வந்த முதல் ஆள் நான்தான். கெமிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, ஜெர்மன் நிறுவனம் ஒன்றின் மும்பை கிளையில் வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். ஆனால், மனசு பூராவும் மியூஸிக் மயம்தான்! போதாக்குறைக்கு, ஹரிஹரன் வேறு என்னைத் தூண்டிவிட்டுக்கிட்டே இருந்தாரு. 80-களில் அவருடைய கஸல் மியூஸிக் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரைப் பார்க்கப் போகும்போதெல்லாம் ‘மியூஸிக்கில் இவ்வளவு ஆர்வமும் குரல் வளமும் வெச்சுக்கிட்டு ஏன் வேஸ்ட் பண்றீங்க’னு கேட்டுக்கிட்டே இருப்பார். அப்படித்தான் ஒருமுறை மெட்ராஸுக்கு ‘டூர்’ போட்டுட்டு வந்து இளையராஜாவைச் சந்தித்தேன்...

அடுத்த ஒரே வாரத்தில் என்னை ‘ரிக்கார்டிங்’குக்காக கூப்பிட்டார் இளையராஜா. என்னுடைய துரதிர்ஷ்டம்... அப்போ பார்த்து எனக்கு தொண்டை கட்டிட்டுப் பேசவே முடியாம போயிடுச்சு. அதை அப்புறம் நேரில் விளக்கியதும், ‘வேற சான்ஸ் இருந்தா பார்ப்போம்’னாரு இளையராஜா. அப்புறம் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை...

அவள் கிளாஸிக்ஸ்: என்னுயிரே... என்னுயிரே!

இளையராஜா சார் என்னை ‘மைக்’ முன்னாடி பாடச் சொல்லி நிராகரித்திருந்தால்கூட வேதனைப்பட்டிருக்க மாட்டேன். அந்த நேரத்தில்தான் ‘ரோஜா’ படம் ரிலீஸ் ஆச்சு. புத்தம்புதுசா ஃபீல்டில் நுழைந்து, ‘யார் இவர்?’னு கேட்க வைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரைப் போய்ப் பார்த்தப்பதான் எனக்கு பிரேக் கிடைச்சது...”

அதன்பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட ஹிட் பாடல்கள் பாடியிருக்கிறார் ஸ்ரீநிவாஸ்.

`‘ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு அனுபவம். ‘படையப்பா’வில் ‘மின்சாரப் பூவே’ பாடலை முதலில் ஹரிஹரன்தான் பாடறதா இருந்தது. ஆனால், ரஜினிக்கு அது சரியாகப்படவில்லை என்று என்னைப் பாட வைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். நான் பாடும்போதும் நிறைய திருத்தங்கள் சொன்னார். படத்தில் பார்த்தபோதுதான் அதன் எஃபெக்ட் தெரிந்தது! அந்த அளவு ரசிகர்களின் நாடி பிடித்து வைத்திருக்கிறார் அவர்.
‘என்னுயிரே’ பாடியதும் வித்தியாசமான அனுபவம். ஷாரூக்கான் ஹீரோ... அந்த கேரக்டருக்கு ஏற்ற மாதிரி ஆக்ரோஷமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அநாயாசமாகப் பாடவேண்டியிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமில்ல... தேவா, பரத்வாஜ் என்று பல இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றி இருக்கிறேன்...” என்கிற ஸ்ரீநிவாஸுக்குப் பிடித்த பாடகர் பாகிஸ்தானின் மெஹ்தி ஹசன்.

குரல் வளத்தைப் பாதுகாக்க ஸ்பெஷல் கவனம் எதுவும் எடுப்பதில்லையாம் ஸ்ரீநிவாஸ்!

‘`தினமும் காலை முக்கால் மணி நேரம் பாடி சாதகம் செய்வேன். ஐஸ்க்ரீம், கூல்டிரிங்க்ஸ் எல்லாம் கூட அப்பப்ப சாப்பிட்டுக்கிறதுதான்...” என்கிற ஸ்ரீநிவாஸுக்கு சரண்யா, சுனந்தா என்று இரு பெண் குழந்தைகள், மனைவி சுஜாதா - ஹோம்மேக்கர்.

- எஸ்.கல்பனா

(டிசம்பர் 10, 1999)

ங்கீதத்தில் ஆர்வமும் பின்னணிப் பாடகியாக வேண்டுமென்ற எண்ணமும் உள்ள பெண்களுக்கு ஸ்ரீநிவாஸ் வழங்கும் டிப்ஸ்:

* திறமை இருந்தால் மட்டும் போதாது. தன்னம்பிக்கையும் வேண்டும்.

* தினமும் விடியற்காலையில் சாதகம் செய்வது நல்லது. குறிப்பிட்ட ஒரு மியூஸிகல் நோட் அல்லது ராகம் எடுத்துக்கொண்டு, அதிலேயே ஆலாபனை செய்யப் பழக வேண்டும்.

* நிறைய மியூஸிக் கேட்க வேண்டும். ஆனால், சினிமாப் பாடல்கள் வேண்டாம். கிளாஸிக்கல் மியூஸிக், கஸல் போன்றவற்றைக் கேட்பது நல்லது.

* விமர்சனங்களை ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் உள்ள நல்லவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். நம் பாடலில் என்ன குறை என்பதைத் தெரிந்து கொள்ளவும், திருத்திக்கொள்ளவும் விமர்சனங்கள் நல்ல வாய்ப்பளிக்கும்.

* ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்தாலும் மனம் தளராமல் மேலும் மேலும் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.

* இசையமைப்பாளர்களிடம் சான்ஸ் கேட்பதாக இருந்தால், கூடவே நீங்கள் பாடிப் பதிவுசெய்த சி.டி-யைக்கொண்டு செல்லுங்கள். வெரைட்டியான பாடல்கள் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு