Published:Updated:

ஐ.நா சபையில் மிருதங்கம் வாசிக்கணும்! - பாரம்பர்ய இசைக் கருவிக்கு முக்கியத்துவம் வேணும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஐ.நா சபையில்  மிருதங்கம் வாசிக்கணும்! - பாரம்பர்ய  இசைக் கருவிக்கு முக்கியத்துவம் வேணும்!
ஐ.நா சபையில் மிருதங்கம் வாசிக்கணும்! - பாரம்பர்ய இசைக் கருவிக்கு முக்கியத்துவம் வேணும்!

மியூசிக் சிஸ்டர்ஸ்சாஹா

பிரீமியம் ஸ்டோரி

ங்கீதத் துறையில் சகோதரிகளுக்கா பஞ்சம்? வாய்ப்பாட்டு தொடங்கி, தாளவாத்திய வாசிப்பு வரை எத்தனையோ சிஸ்டர்ஸை பார்த்திருப்போம். அந்த வரிசையில், அஸ்வினி - அஞ்சனி சகோதரிகள் வித்தியாசமானவர்கள். அக்கா அஞ்சனி வீணைக் கலைஞர். தங்கை அஸ்வினி மிருதங்கக் கலைஞர். நாதமும் தாளமுமாக வாழ்க்கையிலும் இணைந்திருக்கிறார்கள். இருவருக்கும் 2 வயது வித்தியாசம். இசை ரசனையிலோ, லட்சியங் களிலோ அந்த இடைவெளி இன்றி இணைந்தே இருக்கிறார்கள்!

ஐ.நா சபையில்  மிருதங்கம் வாசிக்கணும்! - பாரம்பர்ய  இசைக் கருவிக்கு முக்கியத்துவம் வேணும்!

அஞ்சனியும் அஸ்வினியும், அம்மா ரமா ஸ்ரீனிவாசனிடம் இருந்தே சங்கீத பால பாடத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘`அம்மா பாடகி. அவங்க பாடும்போது கேள்விஞானத்துல நானும் சங்கீதம் கத்துக்கிட்டேன். பக்கத்து வீட்டுல இருந்தவங்களுக்கு திடீர்னு வேற ஊருக்கு மாற்றலான தால, அவங்களோட வீணையை எங்ககிட்ட கொடுத்துட்டுப் போனாங்க. அம்மாகிட்ட பாட்டு கத்துக்கிட்ட ஒருத்தர் அம்மாவுக்கு வீணையில சில விஷயங்களைக் கத்துக் கொடுத் தாங்க. ஸ்கூல்லேருந்து வந்ததும் அம்மா என்கிட்ட வீணையைக் கொடுத்து வாசிச்சுப் பார்க்க சொல்வாங்க. 7 வயசுல நானாகவே வீணையில புதுப் பாட்டு வாசிக்க ஆரம்பிச்சேன். வீட்டுக்கு வர்றவங்க, போறவங்களுக்கெல்லாம் வாசிச்சுக் காட்டுவேன்.

அப்படி ஒருத்தர் மூலமா ‘இசைமழலைகள்’ அபஸ்வரம் ராம்ஜி அங்கிளோட அறிமுகம் கிடைச்சது. அவரோட நிகழ்ச்சிகளில் வாசிச்சேன். அப்புறம் வீணை காயத்ரியோட அம்மா கமலா அஷ்வத்தாமாகிட்ட வீணை கத்துக்க ஆரம்பிச்சு, இப்பவும் தொடர்ந்திட்டிருக்கேன்... நங்கநல்லூர் ராகவேந்திரா கோயில்ல 9 வயசுல என்னோட முதல் கச்சேரி நடந்தது. மும்பையில ஷண்முகானந்தா ஆடிட்டோரியத்துலயும் மியூசிக் அகடமியிலயும் வாசிச்சது மறக்க முடியாத அனுபவங்கள். துபாய், மலேசியானு வெளிநாடுகள்லயும் நிறைய கச்சேரிகள் பண்ணியிருக்கேன். இதுவரை நானும் அஸ்வினியும் சேர்ந்து 1,200 கச்சேரிகள் பண்ணியிருப்போம்...’’ என்கிற அஞ்சனி, தனி ஆவர்த்தனங்களும் செய்கிறார். கடந்த 9 வருடங்களாக நடக்கிற வீணைத் திருவிழாவிலும் தவறாமல் பங்கேற்கிறார்.

பி.காம் முடித்த அஞ்சனிக்கு, அடுத்து எம்.ஏ. மியூசிக் படிப்பதும், இசைக்காகவே வாழ்வதும்தான் லட்சியங்களாம்.

‘`ஆசைகள் இருந்தாலும் யதார்த்தம் வேற மாதிரி இருக்கு. இன்னைக்கு எங்களை மாதிரி இளம் கலைஞர்களுக்கு சபாக்களில் வாய்ப்புகள் கிடைக்கிறது பெரிய போராட்டமா இருக்கு. அதுவும்  இசைக்கருவிகள் வாசிக்கிற வங்களுக்கு அரிதாகத்தான் வாய்ப்புகள் கிடைக்குது. எல்லா சபாக்கள்லயும் வாய்ப்பாட்டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. பார்வையாளர்களும் வாய்ப்பாட்டு கேட்கறதுலதான் ஆர்வமா இருக்காங்க. அது மாறணும். மக்களை கவனிக்க வைக்கணும்னு ஜுகல் பந்தி, ஹிந்துஸ்தானியோட சேர்த்து வாசிக்கிற மாதிரியான புதுமையான முயற்சிகளை பண்ணிட்டிருக்கேன். வீணைங்கிறது பாரம்பர்யமான இசைக் கருவி. அதுக்கு இன்னும் நிறைய அங்கீகாரம் வரணும்... வரும்...’’ - நம்பிக்கையுடன் சொல்கிற அக்காவைத் தொடர்கிறார் தங்கை.

‘`அம்மா பாடும்போது நான் ஏதாவது டப்பாவை எடுத்து வெச்சுக்கிட்டு உட்கார்ந் துடுவேன். அம்மா பாடறதுக்குப் பொருத்தமா தாளம் போடுவேன். எனக்குள்ள நல்ல ரிதம் சென்ஸ் இருக்கிறதை கவனிச்ச அம்மா, தெருவோரங்கள்ல விற்கற டோலக் ஒண்ணு வாங்கிக் கொடுத்தாங்க. அப்ப எனக்கு 6 வயசிருக்கும். வீட்ல என்ன விசேஷம்னாலும் எல்லாரும் பாடுவாங்க. நான் டோலக் வாசிப்பேன்; தாளம் தப்பினதே இல்லை.

ஐ.நா சபையில்  மிருதங்கம் வாசிக்கணும்! - பாரம்பர்ய  இசைக் கருவிக்கு முக்கியத்துவம் வேணும்!

மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தியை அம்மாவும் நானும் ஒரு முறை சந்திச்சோம். அவர் முன்னாடி அம்மா பாட, நான் மிருதங்கம் வாசிச்சேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு அவர் எனக்கு மிருதங்கம் சொல்லிக் கொடுக்க சம்மதிச்சார். நானும் அஞ்சனி மாதிரிதான்... கத்துக்க ஆரம்பிச்ச அஞ்சாவது மாசத்துலேருந்து கச்சேரி பண்ணிட்டிருக்கேன். எம்.எஸ். அம்மாவோட மகள் ராதா விஸ்வநாதனுக்கு, என்னோட குருவோட சேர்ந்து காஞ்சிபுரம் மடத்துல வாசிச்சது மறக்க முடியாதது. டெல்லி தமிழ் சங்கத்துல நடந்த ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியில டிரம்ஸ் சிவமணி, என் குருவோட மகன் டி.கே.ஜெயராமன்... இவங்களோட எல்லாம் வாசிச்சிருக்கேன். சமீபத்துல ‘ஹம்பி ஃபெஸ்டிவல்’ல அனுராதா பால்னு ஒரு பெரிய பெண் தபேலா கலைஞர்கூட வாசிச்சேன்... இப்படி பெருமையா சொல்லிக்க நிறைய விஷயங்கள் இருந்தாலும், ஒவ்வொரு வாய்ப்புமே போராட்டத்துக்குப் பிறகுதான் கிடைக்குது. காரணம் நான் ஒரு பெண்.

மிருதங்கத்தை ஆண்களுக்கான இசைக் கருவியாத்தான் பார்க்கறாங்க. மிருதங்கம் வாசிக்க கைகள்ல நிறைய பலம் வேணும். உண்மைதான். அதைவிட அதிகமா மனபலம் அவசியம். என்கிட்ட இந்த ரெண்டுமே இருக்கு. `ஒரு பெண் நமக்கு பக்க வாத்தியம் வாசிக்கிறதா?’ என்ற எண்ணத்துல ஆண் கலைஞர்கள் என்னைக் கூப்பிடறதில்லை. அதுகூட எனக்குப் பெரிசா தெரியலை. ஆனா, பெண் கலைஞர்களுமே பக்க வாத்தியத்துக்கு ஆண் கலைஞர்கள்தான் வேணும்னு கேட்கறாங்க. அதுதான் வருத்தமான விஷயம்...’’ - அஸ்வினியின் நிதர்சன வார்த்தைகளில் நிஜமான வலி!

‘`இந்த விஷயங்கள் எதுவும் என்னை சோர்ந்து போகச் செய்யாது. திறமையும் உழைப்பும் ஒருநாளும் தோற்காதுங்கிறதை நம்பறேன். ஐக்கிய நாடுகள் அமைப்புல இதுவரை எம்.எஸ். அம்மா மட்டும்தான் கச்சேரி பண்ணியிருக்காங்க. அங்கே அவங்களுக்கு என்னோட குரு வாசிச்சிருக்கார். அதே இடத்துக்குப் போய் நானும் வாசிக்கணும். மிருதங்கம்னா அஸ்வினினு பேர் வாங்கணும்...’’

- ஆயிரம் ஆசைகள் அஸ்வினிக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு