Published:Updated:

அடேலினா - சிறுகதை

அவள் அறிமுக எழுத்தாளர் பா.விஜயலட்சுமி ஓவியம்: ஸ்யாம்

பிரீமியம் ஸ்டோரி

ல்ப்ஸ் மலையின் மிதமிஞ்சிய குளிர், கணப்புச் சூட்டைத் தாண்டி போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த அடேலினாவின் உடலை சன்னமாக குலுங்க வைத்தது. கண்கள் மூடி தூக்கத்தில் கனவுகண்டு புன்னகை புரிந்தவளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே ஜன்னல் ஓரத்தில் கைதொடும் தூரமாகக் கிடப்பதைப் போல விரிந்துகிடக்கும் ஆல்ப்ஸ் மலையின் பிம்பத்தை ரசித்துக்கொண்டிருந்தான் கெவின்.

அடேலினா - சிறுகதை

கெவின்... நாற்பது வயதைத் தொட 1,460 நாட்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவன். ஆல்ப்ஸ் மலையின் பனிப்படுகைகளில் உருண்டு, புரண்டு ஐஸ்கட்டிகளை ஆராய்ச்சி செய்பவன் -  ‘கிளேசியர் ரிசர்ச் சயின்ட்டிஸ்ட்’.

அவனிடம் பயிற்சியாளினியாக வேலைக்குச் சேர்ந்தவள் அடேல். பாம்பு முதல் அமேசான் தவளைகள் வரை விஷ ஆராய்ச்சியில் கைதேர்ந்தவள். கெவினின் அறிவார்ந்த பேச்சையும், பனிக்கட்டிகளை அவன் ஆராயும் லாகவத்தையும், வேலையின் மீதான காதலையும் கண்டவளுக்கு அவள் மனதும் அவன் பின்னேயே பனிபடர்ந்த பாறைகளின் இடையில் பூத்துக்குலுங்கும் இளஞ்சிவப்பு நிற அல்ஃபினா மலர்களாகப் படர்ந்துகொண்டே சென்றது.

‘திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று தடாலடியாக ஒருநாள் கேட்டவள், உடனடியாக அவனை இழுத்துக்கொண்டு போய் சர்ச்சில் நிறுத்தி டக்கென்று தன்வசமாக்கிக் கொண்டாள். இதோ... வாழ்க்கை மலைப்பயணம், ஆர்கிட் மலர் தேடுதல், பனி ஆராய்ச்சி என்று நிற்காமல் மெல்லிய தென்றல் போல கடந்துகொண்டே இருக்கிறது.

இனி மீண்டும் அவர்களின் அறை... இருவரும் இன்று செய்ய வேண்டியிருப்பது மிக முக்கியமான பணி. விஞ்ஞானிகள் குழுவின் நீண்ட ஆராய்ச்சியில் கிடைத்த ஒரு விஷயம், எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. ஆல்ப்ஸ் மலைப்பகுதியின் பனிப்பாறைகளில் சிலநாட்களாக ஒரு விபரீத மாற்றம்.  பனிப்பாறைகளில் வெடிப்புகளும் பிளவுகளும் ஒரே சீராக நேர்க்கோட்டு வரிசையில் பரவிவருவது செயற்கைக்கோள் படங்களின் மூலமாகத் தெரியவந்தது.

இது ஏதாவது வெளிநாட்டு சதியா, இயற்கையின் அபாயகர மாற்றமா என்பதை ஆராயத்தான் கெவினும் அடேலும் பயணமாகிறார்கள். மேலும் மூன்று விஞ்ஞானிகளுடன் இணைந்து புறப்பட்டவர்கள் அப்பகுதியைச் சென்றடைந்தபோது இருள் சூழ்ந்திருந்தது. காற்றுடன் பனியின் சாரலும், பனிக்குள் நுழைந்து வரும் ஊதக்காற்றின் மெல்லிய சீழ்க்கை ஒலியும் அச்சமூட்டிக் கொண்டிருந்தன.

ஒரு வாரமேனும் வேலை நீளக்கூடும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளுடன் வந்திருந்தார்கள். உடனடியாக கூடாரம் அமைத்து தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டனர். கெவினோ, ‘நான் சூழ்நிலையை கண் காணித்துவிட்டு வருகிறேன்’ என்று துள்ளலுடன் கிளம்பிவிட்டான்.

இரவின் நிசப்தத்தையும் தாண்டி எல்லோரும் நெடிய தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, விடியும் தறுவாயிலும் கெவின் திரும்பிவராததால் அடேலுக்கு வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது. பொழுதும் நன்றாக விடிந்துவிட்டதால், பனிப் பாறைகள் வைரத்துண்டு களாக வெயிலின் பிடியில் ஜொலித்துக்கொண்டிருந்தன. `கெவின்... கெவின்' என்று கூச்சலிட்டுக்கொண்டே அலைந்துகொண்டிருந்தவர் களின் தேடுதலை கெவின் வீணாக்கவில்லை. ஒரு வெடிப்பின் ஆரம்பத்தில் படர்ந்து கிடந்த செடிகளின் நடுவே உருண்டு விழுந்து கிடந்தான் அவன்.

அடேலினா - சிறுகதை

‘கெவின்ன்ன்ன்’ என்று அடேல் அலறியதில் பனிக் கட்டிகள் உருகி வழிந்தே விடும் அளவுக்கு அதிர்ந்தன. உடனடியாக கெவினை மீட்டு அதிவேகமாக மலையைக் கடந்து கீழே வந்து, மருத்துவமனையில் சேர்க்கும் வரை அடேலின் உயிர் அவளிடமில்லை. மருத்துவர்கள் அவனுடைய மயக்கத்துக்குக் காரணம் தெரியாமல் தவித்தனர். அவனோ சரியாக ஒரு மணி நேரத்தில் படுக்கையில் எழுந்து அமர்ந்தான். அவனது முகம் மிகக் கொடூரமாகக் காட்சியளித்தது.

விறுவிறுவென்று வெளியே வந்தவன், அடேலிடம், ‘வீட்டுக்குக் கிளம்பலாம்’ என்று எதுவும் சொல்லாமல் இழுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். மருத்துவர்கள் அழைப்பதைக்கூட காதில் போட்டுக் கொள்ளவில்லை. வந்த வனிடம் துளிக்கூட சிரிப்பில்லை. அடேலை வெறித்துப் பார்த்தவன் ‘எனக்குப் பசிக்குது’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டான்.

அதேநேரம் சக விஞ்ஞானி களையும் இனம்புரியாத ஒரு பதற்றம் சூழ்ந்திருந்தது. விஞ்ஞானிகள் அமைப்பின் தலைவரான மார்க்ஸர் டேவிட் சொல்லிய விஷயமும், அவருடைய ஆய்வு முடிவுகளும் எல்லோரையும் சிலையாக்கி நிற்க வைத்தன. அடேலிடம் அதைச் சொல்லியே ஆக வேண்டும் என்று அவளுடைய தோழி ஃப்ளோராவுக்கு மனது அடித்துக் கொண்டது. உடனடியாக தன் எண்ணத்தை நிறைவேற்றக் கிளம்பியும் விட்டாள்.

கெவினுடைய வீட்டுக்குள் ஃப்ளோரா நுழைந்தபோது அடேல் அங்கில்லை. சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே அவள் பெட்ரூமுக்குள் நுழைந்தபோது கெவின் தலைமுதல் பாதம் வரையில் போர்வையை இழுத்துப் போர்த்திப் படுத்திருந்தான்.

அடேலினா - சிறுகதை

அதேநேரம்... ஏதோ வாங்குவதற்காக வெளியில் சென்றிருந்த அடேலுக்கு வந்த செல்போன் அழைப்பு அவளை ரத்தம் உறைய வைத்தது. கெவின் உருண்டு விழுந்த புதர்ப்பரப்புதான் பனிப்பாறை வெடிப்புக்கும், அவனுடைய நிலைமைக்கும் காரணம் என்று மறுபுறம் அவளுக்கு விவரித்துக் கொண்டிருந்தார் மார்க்ஸர்.

‘கெவின் உருண்டு விழுந்த அந்த ஆர்க்கிட் மலர்களில் வசிக்கும் ஒரு வகை பூச்சிகள்தான் அந்தப் பெருவெடிப்புக்குக் காரணம் அடேல். அவற்றின் குணாதிசயமே இயல்பான ஒருவரின் குணத்தை நேர்மாறாக மாற்றுவதுதான். அழிந்து போய்விட்ட உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட அந்தப் பூச்சி   இப்போது மீண்டும் உருவாகியிருப்பது எப்படி என்பது தெரியவில்லை. ஆனால், அவற்றின் முட்களில் இருக்கும் விஷமானது, பனிப்பாறைகளின் அடியில் தங்கிவிட்டதால், அது ஒரே நேர்க்கோடாக பாறைகளில் வெடிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. கட்டியாக இருக்கும் பனியையும் உருக்க ஆரம்பித்துள்ளது. அதில் கால்தவறி விழுந்த கெவின் அந்த விஷத்தை 6 மணி நேரத்துக்கும் மேலாகவே சுவாசித்துள்ளான். அவன் உடல் முழுவதும் பரவியுள்ள அந்த விஷம், அவனைக் கொல்லாது. ஆனால், கெவின் இனி மனிதனில்லை. அன்பு, பாசம் போன்ற குணங்கள் இனி அவனிடம் இருக்காது. அவனை பழைய நிலைக்கு மாற்றுவது கடினம். நீ பத்திரமாக இரு அடேல். அவன் எதை வேண்டுமானாலும் செய்வான்’ என்று அவர் எச்சரித்துக் கொண்டிருக்கும்போதே, அடேல் போனை கைநழுவ விட்டுவிட்டாள்.

அவசர அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய அடேல் வெகுநேரமாகத் தட்டியும் கதவுகள் திறக்கப்படவில்லை. பயந்து போனவள் பின்பக்க வழியாக வீட்டுக்குள் விரைந்தாள். அங்கே கண்ட காட்சி அவளை உறைய வைத்தது. உடல் முழுவதும் நகத் தீற்றல்களுடன் சோபாவில் பிணமாகக் கிடந்தாள் ஃப்ளோரா. சற்றுக்கூட அசையாத கருவிழிகளுடன் அமர்ந்திருந்த கெவின், ‘எனக்கு ஜினபி வேண்டும்’ என்று கடினக் குரலில் கேட்டான். ஆழ்ந்து மூச்சை விட்ட அடேல் விரைந்து உள்ளே சென்றாள்.

சரியாக 20 நிமிடங்களில் திரும்பி வந்தவள் அவனுக்கு ஜினபியை கோப்பைகளில் ஊற்றிக் கொடுத்தாள். கிட்டத்தட்ட நான்கு கோப்பை ஜினபியை உட்செலுத்தினான் கெவின். மீண்டும் ஒரு குவளைக்காகக் கீழே குனிந்தவனின்  கண்களில் பட்டது அந்தக் காகிதம். எடுத்துப் படித்தவனின் கண்கள் சிறிது கூட அசையவோ, அதிர்ச்சியை வெளிக்காட்டவோ இல்லை.

“உன்னுடைய ஜினபி நிரம்பிய மதுக்கோப்பையில் சரியாக இருபத்து நான்கு துளிகள் மெர்க்குரி கலந்திருக்கிறேன் கெவின்... இந்த உலகில் நான் அதிகமாக நேசித்தது உன்னைத்தான். ஆனால், உன்னால் நேசிக்கப்பட்டவர்கள் உன்னாலேயே மரணமடைவதை நான் விரும்பவில்லை. நானும் போகிறேன் கெவின். நீ பாதியில் விட்டுப் போகும் ஆராய்ச்சியை முடித்து உயிர்களைக் காப்பாற்றும் பொறுப்பை முடித்துவிட்டு நானும் உன்னிடமே வந்துவிடுவேன். வலியில்லாத நீண்ட, நெடிய தூக்கம் உனக்கு வாய்க்கட்டும்...”

கடிதத்தைப் படித்து முடிக்கும் முன்னரே அவனது இதயம் துடிக்க மறந்திருந்தது. எல்லாவற்றுக்கும் சாட்சியான லிம்மட் நதி அந்தக் கரிய இரவில் குளிரை அணைத்துக்கொண்டு சலனமற்று உறங்கத் தொடங்கியிருந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு