Published:Updated:

முதல்வரின் பாதுகாப்புக்குத் தலைமை தாங்கும் முதல் பெண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதல்வரின் பாதுகாப்புக்குத் தலைமை தாங்கும் முதல் பெண்!
முதல்வரின் பாதுகாப்புக்குத் தலைமை தாங்கும் முதல் பெண்!

பெருமைஸ்ரீலோபமுத்ரா

பிரீமியம் ஸ்டோரி
முதல்வரின் பாதுகாப்புக்குத் தலைமை தாங்கும் முதல் பெண்!

சுபாஷினி சங்கரன்... 31 வயதே நிரம்பிய தமிழ்ப் பெண். ஒரு மாநில முதலமைச்சரின் பாதுகாப்புக்குத் தலைமை வகிக்கும் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமைக்குச் சொந்தக் காரர்!

அஸ்ஸாம் மாநில முதல்வராக இருப்பவர் பி.ஜே.பி-யின் சர்பானந்த சோனோவால். இவருடைய பாதுகாப்புப் பணிகளில் விழிப்பும் உழைப்புமாக இருக்கும் சுபாஷினியை, அவள் விகடனுக்காகச் சந்தித்தோம்.

‘`எனது பூர்விகம் கும்பகோணம் அருகில் உள்ள விசலூர். 30 ஆண்டுகளுக்கு முன் மும்பைக்குக் குடிபெயர்ந்தோம். அப்பா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அம்மா குடும்ப நிர்வாகி. அக்கா அமெரிக்காவில் தொழில் புரிகிறார்.

மும்பையில் பள்ளி, கல்லூரிப் படிப்பு. பிறகு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ஈழப் பெண் போராளிகள் குறித்த ஆராய்ச்சியில் எம்.ஃபில் பட்டம் பெற்றேன். 2010-ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று ஹைதராபாத்தில் பயிற்சி பெற்றேன். அப்போதுதான், ஒரு காவல் அதிகாரி தன் பணிப் பிரச்னைகளை உடல் மற்றும் மனரீதியாக எப்படி அணுக வேண்டும் என்பது புரிந்தது’’ என்றார் சுபாஷினி. இவருடைய கணவர் மும்பையில் பணிபுரிகிறார்.

‘`கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அஸ்ஸாம் மாநில காவல் துறையின் பல பொறுப்புகளில் பணிபுரிந்தேன். இம்மாநிலப் பெண்களின் பிரச்னைகளை நேரடியாகக் கேட்டுத்  தெரிந்துகொள்வதற்காக, அஸ்ஸாமிய மொழி கற்றுக்கொண்டேன். பல பெண்கள் தயக்கமின்றி என்னை அணுகி தங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்துகொண்டனர்’’ என்று புன்னகையுடன் சொல்லும் சுபாஷினி, இந்த ஆண்டு அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது சென்சிட்டிவான ஒரு மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்குத் தலைமை தாங்கி திறம்பட நிர்வகித்தார். திறமைக்குப் பரிசாகவே, கடந்த ஜூலை மாதம் முதல்வரின் பாதுகாப்புப்பணி இவருக்கு வழங்கப்பட்டது.

முதல்வரின் பாதுகாப்புக்குத் தலைமை தாங்கும் முதல் பெண்!

‘`ஆரம்பத்தில் சக பணியாளர்களிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஒரு பெண்ணுடைய தலைமையின்கீழ் பணிபுரிய பலர் விரும்பவில்லை. இப்போது நிலைமை மாறியிருக்கிறது. இருந்தாலும், இப்பணி மிகவும் சவாலானது. சர்வதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ள வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரியது அஸ்ஸாம். போதைப் பொருள் கடத்தல், காண்டாமிருகங்களை வேட்டையாடுதல், கலகம், கிளர்ச்சி, சட்டம் ஒழுங்குப் பிரச்னை, சமூக விரோதச் செயல்கள் என அனைத்தையும் மனதில்கொண்டு பணிபுரிய வேண்டும்’’ என்கிற சுபாஷினி, முதல்வர் பாதுகாப்புப் பணி பற்றியும் கூறுகிறார்.

‘`முதல்வரின் பயண வழித்தடத்தைத் திட்டமிடுவது, பாதுகாப்புப் பணி காவலர்களை ஒருங்கிணைப்பது, பயணத் திட்டத்தை விளக்குவது, ரகசியம் காப்பது, ஒட்டுமொத்த பாதுகாப்பையும் கவனத்தில் கொள்வது... இப்படி மிகச் சவாலான பணி இது.  எந்த ஒரு சிறு தவறும் முதல்வரின் பயணத்துக்கும் பாதுகாப்புக்கும் சிக்கலாகிவிடும். அதனால், தினமும் 15 - 18 மணி நேரம் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்பு உணர்வுடனும்  பணிபுரிகிறேன்’’ என்கிற சுபாஷினிக்கு காக்கிச் சட்டை கூடுதல் கம்பீரம் அளிக்கிறது!

சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப குழுக்களை வெவ்வேறு வகையில் மாற்றி அமைத்து, பல்வேறு குழுக்களை ஒருங்கிணைத்து, சிறுசிறு குழுக்களாகப் பிரித்து சமயோசித புத்தியுடன் பணிபுரிவது, பணியில் அறியாமல் தவறிழைப்பவர்களை புன்னகையுடன் அணுகி சுட்டிக்காட்டி நேர்படுத்துவது, சட்ட ரீதியான நடவடிக்கைகளை சரியான நேரத்தில் எடுப்பது என சுபாஷினி யின் பணித்திறன் அவரது துறையின் பாராட்டுகளைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

‘`பிரபலங்களின் வாழ்க்கை வர லாறு படிப்பதும், கிராமியப் பாடல் மற்றும் ஜாஸ் இசை கேட்பதும் எனக்கு விருப்பமான பொழுதுபோக்குகள்’’ என்கிற சுபாஷினி, தன் சீருடைக்குள் இருக்கும் துப்பாக்கியை சரிசெய்தபடி சொல்கிறார்...

‘`இந்திய அளவில் ஒரு சாதனை யாளராக அஸ்ஸாமில் பணிபுரிந் தாலும், ஒரு தமிழ்ப்பெண்ணாக அவள் விகடனுடனான என் சந்திப்பை மிக நெருக்கமாக உணர்கிறேன். அனைத்து ‘முதல்’ சாதனைகளையும் பெண்கள் நிகழ்த்தவிருக்கும் நூற்றாண்டு இது. வாருங்கள் தோழிகளே, வெற்றிகளை வசப்படுத்துவோம்!” 

``இளம் வயதிலேயே இந்த சாதனை!”

மும்பையில் வசிக்கும் சுபாஷினியின் தந்தை சங்கரன் ஐயரிடம் பேசினோம். ‘`கடும் உழைப்பு, பொறுப்பு உணர்வு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் திரண்ட வடிவம் என் மகள் சுபாஷினி. இந்த இளம்வயதிலேயே, மாநில முதல்வரின் பாதுகாப்புப் பணிக்குத் தலைமை தாங்கும் முதல் பெண் என்ற பெருமையை வசப்படுத்தியிருக்கிறாள். சாதனைகள் தொடர வேண்டும்’’ என்கிறார் சங்கரன் பெருமிதத்துடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு