Published:Updated:

மண்ணைப் புதைத்த பெருமழை... மீட்டெடுக்கிறது நம்பிக்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மண்ணைப்  புதைத்த பெருமழை... மீட்டெடுக்கிறது  நம்பிக்கை!
மண்ணைப் புதைத்த பெருமழை... மீட்டெடுக்கிறது நம்பிக்கை!

அன்றும் இன்றும்பொன்.விமலா, ஜெ.நிவேதா, ம. சக்கர ராஜன், ச.புகழேந்தி

பிரீமியம் ஸ்டோரி

டந்த வருடம் இதே தினங்களில் சென்னை, கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது மழையும் வெள்ளமும். நிலம் எங்கே என தெரியாத அளவுக்கு காணும் இடமெங்கும் நீரால் மட்டுமே சூழ்ந்திருந்தது. மண் தெரியாத அளவுக்கு மழை மண்ணைப் புதைத்தது போல் அமைந்தன காட்சிகள். உடுத்தியிருந்த ஆடை தவிர, பணம், நகை, வீடு என தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்தாலும், உயிர் பிழைத்தால் போதும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர் பலர். அவர்களில் சிலர் தங்களின் அப்போதையை வலியையும், தற்போதைய நிலையையும் பகிர்கிறார்கள் இங்கு!

மண்ணைப்  புதைத்த பெருமழை... மீட்டெடுக்கிறது  நம்பிக்கை!

ஜெனிஃபர் எட்வினா, பார்ஸன் நகர், மேற்கு சைதாப்பேட்டை:

“எனக்கு நவம்பர் 24, 2015 குழந்தை பிறந்தது. ஆனா, ஏழாவது மாசமே பிறந்ததால, பிறந்த உடனேயே குழந்தையை வேற ஒரு ஹாஸ்பிட்டல்ல இன்குபேட்டர் கேர்ல வைக்க தூக்கிட்டுப் போயிட்டாங்க. `ஒரு மாசம் குழந்தை அங்கதான் இருக்கும், அப்பப்போ நீங்க போய் பார்த்துக்கலாம்'னு சொன்னாங்க. ஒரு வாரத்தில் ஹாஸ்பிட்டல்ல இருந்து நான் வீட்டுக்கு வந்துட்டேன்.

அடுத்த நாள் ஹாஸ்பிட்டல்ல போய் என் கணவர் குழந்தையைப் பார்த்துட்டு வர நினைச்சுட்டு இருந்தப்போ, அன்னிக்கு நைட் வெள்ளம் வந்துச்சு. எங்க வீட்டுல தரைத் தளம் முழுக்க மூழ்கிடுச்சு. காலையில குழந்தையைப் போய்ப் பார்க்கமுடியாதபடி வெள்ளம் முடக்கிருச்சு. ஹாஸ்பிட்டல்ல இருந்து, `குழந்தையைப் பார்த்துக்க யாராச்சும் வாங்க'னு போன் வந்துட்டே இருந்த நிலையில, சார்ஜ் இல்லாம போன் கட் ஆயிருச்சு. துக்கம் நெஞ்சை அடைச்சது. பிறகு, என் கணவர் நீச்சலடிச்சே ஆஸ்பத்திரிக்குப் போயிட்டார். இங்க வீட்டுல நாங்க எல்லோரும் மொட்டை மாடியில ஹெலிகாப்டர் மூலமா போட்ட உணவு, தண்ணிக்காக கையேந்தி நின்னோம். சிசேரியன் தையல் அவஸ்தை, பசினு பட்ட கஷ்டம் நிறைய நிறைய. தண்ணி வத்தி... அஞ்சு நாள் கழிச்சுதான் என்னால அங்க போக முடிஞ்சது. பிறந்த நொடி பார்த்த என் பையனை, 10 நாட்கள் கழிச்சுதான் பார்த்தேன். அதுவரை அவனை அக்கறையா பார்த்துக்கிட்ட டாக்டர், நர்ஸுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தீராது.''

மீனாட்சி, எம்.ஜி.ஆர் நகர்:


``எங்க ஏரியாவுல ஆஸ்பெஸ்டாஸ் போட்ட தரைத்தள வீடுகள்தான் அதிகம். எங்க வீடுகளுக்குள்ள இடுப்பளவு தண்ணி வர, வீட்டுல இருந்த பொருட்கள் தண்ணியோட போயிருச்சு. சில பொருட்களை மட்டும் காப்பாத்தி, மேடான பகுதியில இருந்த எங்க ஹவுஸ் ஓனர் வீட்டுல வெச்சோம். பக்கத்து தெருவுல இருந்த எங்கக்கா வீட்டுல தங்கினோம். என் கணவரோட பைக் ரொம்ப பாழாயிடுச்சு. தச்சுத் தொழில் செய்றவருக்கு, ஒன்றரை மாசம் எந்த வேலையும் இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டோம். வெள்ள நிவாரணப் பணி, நிவாரணத் தொகை 5,000 ரூபாய்னு எதுவுமே எங்களுக்குக் கிடைக்கல.''

மண்ணைப்  புதைத்த பெருமழை... மீட்டெடுக்கிறது  நம்பிக்கை!

சரிதா, பீமாராவ் நகர், கடலூர் மாவட்டம்:

``எனக்கு ரெண்டு பசங்க. அந்த நாளை நெனச்சாலே, இப்போகூட அழுகைதான் வருது. நல்ல மழை. கரன்ட் இல்ல. வீட்டுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா தண்ணி வர ஆரம்பிக்க, பசங்களை பக்கத்து வீட்டு மாடிக்கு அனுப்பிட்டு நான் தண்ணிய அள்ளி வெளிய ஊத் துனேன். ஆனா, ஒரு கட்டத்துல வீடே மூழ்கிப்போக, நானும் மாடிக்குப் போயிட்டேன். அங்கேயும் 5 அடி உயரத்துக்குத் தண்ணீர் வந்துடுச்சு. குழந்தைங்களை உயரத்துல உட்கார வெச்சுட்டு, கழுத்தளவு தண்ணியில நின்னுட்டு இருந்தோம். காப்பாத்த வந்த படகைப் பார்த்ததும்தான் நம்பிக்கையே வந்துச்சு. எல்லாத்தையும் விட்டுப் போக மனசில்லை. ஆனா,  உயிர் பிழைச்சா போதும்னு ஓடினோம். போனது போனதுதான். இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ நாங்க பழைய நிலைமைக்கு வர்றதுக்கு!''

ஷீஜா, மணப்பாக்கம், காஞ்சிபுரம்:

``குடிக்க தண்ணிகூட இல்லாத நிலை. திடீர்னு கரன்ட்டும் போயிடுச்சு. தண்ணியும் இல்லாம வெளிச்சமும் இல்லாம, மெழுகு வத்திகளோட வாழ்ந்தோம். கீழ எட்டிப் பார்த்தா, பார்க்கிங்ல இருந்த எங்க கார் வெள்ளத்துல மூழ்கிடுச்சு. ஹெலிகாப்டர் மூலமா கொடுத்த பிரெட்டும் தண்ணியும்தான் உயிரைக் காப்பாத்துச்சு. மூழ்கின காரில் இருந்து வீடுவரை, மழை ஏற்படுத்தின நஷ்டங்களை கொஞ்சம்  கொஞ்சமா இன்னும் சரிசெய்துட்டே இருக்கோம்.''

சரஸ்வதி, கடலூர்:


``வெள்ளத்தால வீடெல்லாம் மூழ்கிப்போக, எல்லாரும் ஒரே இடத்துல இருக்க வேண்டிய நிலைமை. பக்கத்துல இருந்த ரயில்வே அதிகாரிங்க, ஒரு ரயிலை நிறுத்தி அதுல நிறையபேர் தங்க ஏற்பாடு செஞ்சு தந்தாங்க. மாதவிடாய்ப் பிரச்னைகளை சமாளிக்க பெண்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. ஒரே எடத்துல பெரியவங்க, குழந்தைங்க, சாப்பாடு, மலம்னு சகிக்க முடியாத நிலைமை. யார்கிட்டயும் கை நீட்டாத நாங்க, சாப்பாட்டுல இருந்து உதவிப் பொருட்கள்வரை எல்லாத்துக்கும் கைநீட்டினோம். வீட்டுல மாத்துத் துணிகூட இல்லாம, யாராச்சும் பழைய துணி தருவாங்களானு நின்னதை எல்லாம் நினைச்சா, இப்பவும் கண்கலங்குது.''

மண்ணைப்  புதைத்த பெருமழை... மீட்டெடுக்கிறது  நம்பிக்கை!

மும்தாஜ், கடலூர் மாவட்டம்:

``20 வருசமா விவசாயம் செஞ்சிட்டிருக்கேன். வயலுக்குத் தண்ணி பாய்ச்சி, உழவு ஓட்டி, நாத்து விட்டு, அண்டை வெட்டி, மறுபடியும் உழவு ஓட்டி, நடவு நட்டு, பயிர் வெச்சதையெல்லாம் அந்தப் பாழாப்போன மழை வந்து மொத்தமா அழிச்சிடுச்சு. ஒன்றரை லட்சம் செலவு பண்ணி, அஞ்சு ஏக்கர்ல வெதச்சிருந்தோம். விடிஞ்சு வந்து பார்த்தப்போ விளைஞ்ச நெல்லைக் காணோம், வயலையே காணோம். ஒரே வெள்ளக் காடு. தாழ்வான பகுதிங்கிறதால 10 நாள் கழிச்சும் தண்ணி வடியல. வட்டிக்குக் காசு வாங்கி, நகைய அடகு வெச்சு, மோட்டார் மூலமா வயல்ல இருந்த தண்ணியை இறைச்சோம். ஜே.சி.பி-க்கு மணிக்கு ரெண்டாயிரம்னு கொடுத்து சரிஞ்சு இருந்த மண்ணை சரி பண்ணினோம்.  இருந்த கொஞ்ச நஞ்ச நாற்ற வெச்சு பரவலா எல்லா இடத்துலயும் மறுபடியும் நடவு நட்டோம். இப்படி பயிர் பிரிச்சு வேலை செய் றதுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15,000 ஆச்சு. மொத்தத்துல, ரெண்டு லட்சத்துக்கும் மேல செலவு பண்ணி 50,000தான் கிடைச்சது. இன்ன வரைக்கும் கடனையும் அடைக்க முடியல, நகையையும் மீட்க முடியல.''

லதா, வரதராஜபுரம், காஞ்சிபுரம்:

``என் கணவர் வெளிநாட்டுல வேலை செய்றார். வீட்டுல நான், என் மகள் அக்‌ஷயா, 80 வயசான எங்கம்மா. டிசம்பர் வெள்ளத் தப்போ, ரோட்டு மட்டத்துல இருந்து 6 அடி உயரத்துல இருந்த எங்க வீட்டுக்குள்ள தண்ணி வரும்னு நினைச்சுக் கூடப் பார்க்கல.

மீட்புப் படகு வந்தப்போ, தாம்பரத்துல ஏதாச்சும் தங்க இடம் பார்க்கலாம்னு, மகளையும் அம்மா வையும் அங்கேயே விட்டுட்டு, நான் மட்டும் அங்க இருந்து கிளம்பினேன். தாம்பரத்துல ஒரு ஹோட்டல்ல ரூம் போட்ட என்னால, என் மகளையும் அம்மா வையும் அங்க அழைச்சுட்டு வர முடியாதபடி, வரதராஜபுரத்துல மாட்டிக்கிட்டாங்க. 10 கழிச்சு தண்ணி வடிஞ்சதும்தான் என்னால அங்க போக முடிஞ்சது. ஆசையா கட்டின வீடு அலங்கோலமா இருந்ததைப் பார்த்து அழுதுட்டேன். அதுக்கு அப்புறம் அங்க நான் போகவே இல்ல. பக்கத்து தெருவுல ஒரு வாடகை வீட்டுல இருக்கோம். ரெண்டு லட்சம் வரை செலவு. அதைவிட, அந்த வெள்ளம் மனசுக்குத் தந்த மிரட்சி நிறைய.''

  படங்கள்: எஸ்.தேவராஜன், மா.பி.சித்தார்த், பெ. கெசன்ட்ரா இவாஞ்சலின், அ.சரண்குமார், அ.அருணசுபா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு