Published:Updated:

“இங்கிலீஷ் சரியா பேசத் தெரியாது! அதனால என்ன?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“இங்கிலீஷ் சரியா பேசத் தெரியாது! அதனால என்ன?”
“இங்கிலீஷ் சரியா பேசத் தெரியாது! அதனால என்ன?”

ரசனையும் முயற்சியும்பாலு சத்யா, படங்கள்: பா.காளிமுத்து, சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி

தினாறுக்கு பன்னிரண்டு அடி... பல நேரங்களில் இந்தச் சின்னஞ்சிறு வரவேற்பறைதான் பரதக்கலைஞர் லட்சுமி ராமசுவாமியின் குழந்தைகள் பரதப் பயிற்சியை மேற்கொள்ளும் மேடை!

நடனப் பாரம்பர்யம் இல்லாத கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பம்... ஆனாலும்,  பரதக்கலையின் மேல் உள்ள வேட்கையும், தமிழ்ப் பற்றும், முயற்சியும் லட்சுமி ராமசுவாமியை உயரம் தொட வைத்திருக்கிறது. ‘பாலசரஸ்வதி நினைவு விருது’, `யுவ கலா பாரதி’, `நிருத்ய வித்யா ரத்னா’ என நீள்கிற விருதுகள். ஐங்குறுநூறு, திருவரங்கக் கலம்பகம், பாரதியார் பாடல், நற்றிணை, புறநானூறு, புதுக்கவிதை எனக் கருக்களைத் தேடித் தேடி நடனத்தில் காட்சிப்படுத்துபவர். பரதத்தில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காகவே ஸ்ரீமுத்ராலயா’ என்கிற நடனப்பள்ளியை ஆரம்பித்து, பரதம் கற்றுக்கொடுத்துவருகிறார்.

``நான் பரதம் கத்துக்கப் போனப்போ அம்மா ஆர்வமா அனுப்பினாங்க. அப்பாவுக்கு இஷ்டம் இல்லை. ஆனா, தடுக்கவும் இல்லை. எனக்குத் திருமணப் பேச்சு வந்தப்போ அம்மா, `இனிமே நீ நாட்டியம் கத்துக்கிட்டு என்ன பண்ணப் போறே? விட்டுடு’னு பின் வாங்கினாங்க. ஆனா, அப்பா அப்போ ஆதரவு கொடுத்தார். பெண்கள் எந்தக் கலையைக் கத்துக்கணும்னாலும் குடும்பத்தோட ஆதரவுதான் முதல்ல அவசியம்.

என் பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு அம்மாவோட தாலியை அடகுவெச்சுத்தான் செலவு செஞ்சோம். கஷ்டம்னு வரும் போதெல்லாம், `டான்ஸ் நமக்குத் தேவை தானா’னு தோணும். அம்மாவோட தாலிக் கொடியும் ஞாபகத்துக்கு வரும். உடனே, `அவ்வளவு கஷ்டப்பட்டு அம்மா நம்மை முன்னுக்குக் கொண்டு வந்திருக்காங்களே... எந்தப் பிரச்னையா இருந்தாலும் தாங்கிக்கணும், எதிர்கொள்ளணும்’கிற எண்ணம் வரும்...’’

சரி... கணவர் வீட்டில் ஆதரவு எப்படி? 

``கல்யாணம் முடிஞ்சுது. என் கணவருக்கு பரதம், பாட்டு, ஓவியம் எதுலயும் பரிச்சயம் கிடையாது. ஆனா, ‘உனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா, நீ தாராளமா பண்ணு’னு சொல்லிட் டார். இதை மாமனார், மாமியாரும் ஏத்துக் கிட்டது பெரிய விஷயம்.

“இங்கிலீஷ் சரியா பேசத் தெரியாது! அதனால என்ன?”

எனக்கு சித்ரா விஸ்வேஸ்வரன், பத்மா சுப்ரமணியம், கலாநிதி நாராயணன் போன்ற நல்ல ஆசிரியர்கள் கிடைச்சாங்க. அதனாலதான் என்னால நாட்டியத்தை நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சுது’’ என்கிறவர், திருமணத்துக்குப் பிறகு வீட்டையும் பார்த்துக்கொண்டு, பரதமும் கற்றுக்கொண்டது பெரியகதை.

``ஒரு டான்ஸ் கிளாஸ் பிரம்ம முகூர்த்தத் துலதான் நடக்கும். அதாவது, அதிகாலை 5 மணியில இருந்து 6:30. வீட்ல கைக்குழந்தை... கணவருக்கு மார்க்கெட்டிங் வேலை. வீட்டுவேலையைப் பகிர்ந்துக்கவோ, குழந்தையைப் பார்த்துக்கவோ ஆள் கிடையாது. காலையில 4:30 மணிக்கு கிளாஸுக்குக் கிளம்பணும்னா, 2:30 மணிக்கே எந்திரிச்சு வேலைகளை முடிச்சாகணும். முதல்ல குழந்தைக்குத் தேவையான சமையல், கிளாஸ் முடிஞ்சு வந்ததும் கணவருக்கு சமையல். 9:30 மணிக்கு திரும்பவும் டான்ஸ் கிளாஸ். பையன் வளர்ந்ததுக்கு அப்புறம் இன்னும் கூடுதலா கஷ்டம். அவனுக்கு 1:30 மணிக்கு ஸ்கூல் விடும். 2 மணிக்கு வேன்ல இருந்து வீட்டுக்குக் கூட்டிட்டு வருவேன். ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம். ஹோம்வொர்க் லிஸ்ட் பார்த்து, புக்ஸ் எல்லாம் அவனோட பேக்ல எடுத்து வைப்பேன். திரும்ப 4 மணியில இருந்து 7:30 மணி வரை கிளாஸ். அது முடியும் வரைக்கும் பையனை அங்கேயே ஓரமா உட்கார வெச்சுடுவேன். வீட்டுக்கு 8:15-க்கு வருவோம். திரும்ப டின்னர்... துணி துவைச்சு, பாத்திரம் தேய்ச்சு முடிச்சு படுக்க ராத்திரி 10:30 மணிக்கு மேல ஆகிடும்.

எப்பவாவது என் கணவர், ‘நீ ஏன் இந்த ஃபீல்டை தேர்ந்தெடுத்தே’னு கேட்பார். அதுல நியாயமும் இருக்கு. நான் நல்லா படிச்சேன். கணக்குல சென்டம். டான்ஸுக்கு வராம ஏதாவது ஒரு ஆபீஸ் வேலைக்குப் போயிருந்தா சனி, ஞாயிறு லீவு கிடைச்சிருக்கும். இப்போ சம்பளமும் கிடையாது... லீவும் கிடையாது!குடும்பத்தோட நாங்க வெளியே போனதில்லை. முதன்முறையா நாங்க போனது எங்களோட 25-வது திருமண நாளின் போதுதான். இந்தத் துறையில நான் சம்பாதிச்சது பேரை மட்டும்தான்!

உண்மையில் ஒரு கிளாஸிக் கல் டான்ஸர்ஸை வெச்சு எல்லாரும் இங்கே சம்பாதிக் கிறாங்க... (சிரிக்கிறார்...) ஒரு நாட்டிய நிகழ்ச்சின்னா இசைக்கலைஞர், பாடகர், மேக்கப்மேன், டெய்லர், நகை வாடகைக்குக் குடுக் கிறவர், காஸ்ட்யூம் செய்றவர் அத்தனை பேருக்கும் சம்பாத்தியம் உண்டு... நாட்டியம் ஆடுற வங்களைத் தவிர...’’ என்கிற லட்சுமி இன்னொன்றையும் சொல்கிறார்...

 ``பாழும் கிணத்துல ஒருத்தன் விழுந்துட்டானாம். நடுவுல கயிற்றைப் புடிச்சிக்கிட்டு தொங்குறான். கீழே பாம்பு. மேலே புலி. அப்போ ஒரு தேன்கூட்டுல இருந்து ஒரு சொட்டு தேன் அவன் நாக்குல வந்து விழுந்துதாம். அவ்வளவு கஷ்டத்துலயும் அவன் `ஆஹா...’னு நாக்கைச் சப்புக்கொட்டி அந்த ருசியை ரசிச்சானாம். என்னைப் போன்ற கலைஞர்களுக்குக் கிடைக்கிற பாராட்டுகள், விருதுகள் எல்லாமே அந்தத் தேன் மாதிரிதான்... ஓர் அங்கீகாரம்!

“இங்கிலீஷ் சரியா பேசத் தெரியாது! அதனால என்ன?”

நான் கிராமத்து அன்புச் சூழ்நிலையில வளர்ந்தவ. சென்னை புதுசு. டான்ஸ் கிளாஸ்ல நான் இங்கிலீஷ்ல பேச மாட்டேன்கிறதாலயே எனக்கு மரியாதைக் குறைச்சல். நான் பஸ்ல வர்றவ என்கிறதால பல ஸ்டூடன்ட்ஸ் என்னைத் திரும்பியே பார்க்க மாட்டாங்க. இந்தச் சமூகத்துக்கு கார், வசதி, வாய்ப்பு, செல்வாக்கு எல்லாம் வேண்டியிருக்கு. இப்பவும் என் பெயரைச் சொன்னா ரெண்டு பேருக்குத் தெரியும்னா அதுக்குக் காரணம், ஒண்ணு, தெய்வ கடாட்சம். இன்னொண்ணு, என் விடா முயற்சி'' என்கிற லட்சுமி, அமெரிக்காவின் மரியாதைக்குரிய `ஃபுல்பிரைட் ஃபெலோஷிப்' வாங்கியிருக்கிறார்!

ஒரு டான்ஸருக்கு வரக் கூடாத பிரச்னை ஒன்றும் லட்சுமிக்கு வந்திருக்கிறது.  ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்,  ஒரு விபத்தில் இவரது முழங்கால் மூட்டு தசை பாதிப்பு அடைந்து விட்டது. சர்ஜரி செய்து, கடுமையான முயற்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் பிறகு, மீண்டும் சலங்கை கட்டியிருக்கிறார்.

``சான்ஃபிரான்சிஸ்கோவுல  ஒரு புரோக்ராம். கூட எகிப்தைச் சேர்ந்த பெல்லி டான்ஸ் குழு வினரும் ஆடினாங்க. அவங்க குழுவுல ஒரு பெண் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா, குண்டா இருந்தாங்க. அவங் களைப் பத்தி சொன்னப்போ அதிர்ந்து போயிட்டேன். அந்தப் பெண் ஏழு மாத கர்ப்பமாம். `எங்க பாரம்பர்யத்துல எல்லா பெண் குழந்தைகளுக்குமே பெல்லி டான்ஸ் கத்துக் கொடுப்போம். அது வயிற்றுப் பகுதிக்கு ஒரு வகையான சிகிச்சை. இப்படி பெல்லி டான்ஸ் பயிற்சி பெற்றவங்க யாருக்கும் இடையில கரு கலைஞ்சு போனதே இல்லை'ன்னு ஆச்சர்யப்படுத் தினாங்க. இது ஓர் உதாரணம்தான். நடனம் கிறது ஒரு வகையில எக்சர்சைஸும்கூட. நாட்டியம் மட்டுமில்லை... இசை, ஓவியம்னு எதாவது ஒரு கலையில பெண்குழந்தைகள் தொடர்ச்சியா ஈடுபடறது நல்லது. இதனால் மனஅழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

இங்கே நம்ம ரசனையை வளர்க்கறதுக்கு கல்வி முறையில இடம் இல்லை. `பாரு... அந்த பூ எத்தனை அழகு; அந்தக் குருவி கத்துறது நல்லா இருக்குல்ல; உன் கை அசைவே நாட்டியம் மாதிரி இருக்கே...’னு சொல்லிக் கொடுக்குறதே இல்லை. அடுத்த தலைமுறைக் குழந்தைகள் ரசனையே இல்லாம போயிடுவாங்க. மார்க்குக்காக பாடத்தைத் திணிச்சு, திணிச்சு குழந்தைகளைப் பழக்கிட்டோம். குழந்தைகிட்ட என்ன திறமை இருக்குனு பார்த்து பெற்றோர்தான் ஊக்குவிக்கணும்’’ - அழுத்தமாகச் சொல்கிறார் லட்சுமி ராமசுவாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு