Published:Updated:

“நடனம் தெரியாதவர்களுக்கும் பிடிக்கும்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நடனம்  தெரியாதவர்களுக்கும் பிடிக்கும்!”
“நடனம் தெரியாதவர்களுக்கும் பிடிக்கும்!”

வாழ்வை மாற்றிய புத்தகம்ஆர்.வைதேகி - படம்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி

``இது என் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் மட்டுமல்ல... வாழ்க்கை முழுவதும் என்னுடனே இருக்கப் போகிற பொக்கிஷமும்கூட!

பரதநாட்டிய ஜாம்பவான்கள் பத்மபூஷண் தனஞ்செயன் - அவருடைய காதல் மனைவி சாந்தா தனஞ்செயன் இருவரும்தான் எனக்கு நாட்டிய குரு. அவர்களின் முதல் மாணவி என்கிற பெருமையும் எனக்கு உண்டு. 1969 முதல் இன்று வரை அவர்களுடனான எனது நட்பும் உறவும் தொடர்கிறது. அவர்களது வாழ்க்கையின் பெரும்பான்மை நேரங்களில் நானும் உடன் இருந்திருக்கிறேன். அவர்களது போராட்டங்களையும் சாதனைகளையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். ஆனாலும், அவர்களைப் பற்றி நான் அறிந்த, அறியாத பல தகவல்களைத் தந்து வாழ்க்கையின் மீதான புரிதலை விசாலப்படுத்திய புத்தகம் என்றால், அது ‘மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் - எ லைஃப் இன் டான்ஸ்’ - தனஞ்செயன் மாஸ்டரின் வாழ்க்கை வரலாறு!

முதல் முறையாக ஒரு சுயசரிதைப் புத்தகம் கூட திரைப்பட ஸ்கிரிப்ட் மாதிரி பரபரப்பாகவும், புரட்டப் புரட்ட சுவாரஸ்யங்களுடனும், பலவகைப்பட்ட உணர்வுக் கலவையுடனும் இருக்கும் என்றால் நம்புவீர்களா? அதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு!

இதை எழுதிய துள்சி பத்ரிநாத்தும் மாஸ்டரின் மாணவிதான். ஓர் ஆசிரியரைப் பற்றி மாணவி புத்தகம் எழுதினால் எப்படி இருக்கும்? நிறைய பயத்துடன் அவரைப் பற்றிய சாதகமானதும் நல்லதுமான விஷயங்களை மட்டும்தானே பதிவு செய்யத் தோன்றும்? துள்சி அப்படிச் செய்யவில்லை. ஆசிரியரின் கோபத்தையும் சோர்வையும்கூடப்  பதிவு செய்திருக்கிறார்.

“நடனம்  தெரியாதவர்களுக்கும் பிடிக்கும்!”

‘மாஸ்டரைப் பற்றித்தான் நமக்கு எல்லாம் தெரியுமே... புதிதாக இந்தப் புத்தகத்தில் என்ன இருக்கப் போகிறது’ என்கிற எண்ணத்துடன்தான் புத்தகத்தைக் கையில் எடுத்தேன். உடன் இருந்து கண்கூடாகப் பார்த்த நிகழ்வுகளைவிட, அவற்றை எழுத்தின் வாயிலாகப் படிக்கிற போது ஏற்பட்ட தாக்கம் பெரிதாக இருந்தது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இன்று நடன உலக ஜாம்பவானாகத் திகழும் அவரது வாழ்க்கைப் பாதையைப் படிக்கிறபோது, ஒரு முழுநீள குடும்பத் திரைப்படம் பார்த்த திருப்தி ஏற்பட்டது. குறிப்பாக, அவருடைய காதல் அத்தியாயங்கள்... சாந்தா அக்காவிடம் அவர் காதலைச் சொன்னது, இருவரும் அதை வெளிப்படுத்திக்கொள்ளாமலேயே வளர்த்தது, திருமணத்தில் இணைந்து, இன்றுவரை அந்நியோன்யமான தம்பதியாக வாழ்வது என அந்த அத்தியாயங்கள், ஒவ்வொரு கணவனும் மனைவியும் படிக்க வேண்டியவை. குடும்ப வாழ்க்கை என்பது வெறுமனே சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல, இதயத்தாலும் உணர்வுகளாலும் இணைந்திருப்பது என்பதை எனக்குப் புரிய வைத்த அத்தியாயங்கள் அவை.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு தவறுகள் செய்வதற்கான வாய்ப்புகள் தானாக அமையும். சூழலின் மேல் பழியைப் போட்டுவிட்டு தவறுகள் செய்ய நினைப்பவர்கள் மத்தியில், `எந்நிலையிலும் நான் தடம் புரள மாட்டேன்' என உறுதியாக இருந்த தனஞ்செயன் மாஸ்டரின் வைராக்கியம் பிரமிக்க வைத்தது.

`நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு பணபலமோ, செல்வாக்கோ இல்லை. வெற்றியோ, அங்கீகாரமோ சாத்தியமா?' என்கிற கேள்வி, என்னைப் போலவே பல கலைஞர்களுக்கும் இருக்கும். மாஸ்டரின் புத்தகத்தைப் படித்தாலே, வெற்றிக்கான சூத்திரம் புரியும். ‘உண்மையும் உழைப்பும் இருந்தால் உனக்கான இடம் நிச்சயம் கிடைக்கும். தாமதமாகலாமே தவிர, கிடைக்காமல் போகாது’ என்கிற மந்திரத்தை மாஸ்டரின் புத்தகத்தில்தான் கற்றுக்கொண்டேன்.

நான் நடனப் பள்ளி ஆரம்பித்த போதும் மாஸ்டரின் வாழ்க்கை தான் எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. ஆசிரியருக்கான ஒழுக்கங்களையும், மேடை நிர்வாகம் என்கிற மிகப்பெரிய கலையையும் அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். கலையை பணம் பார்க்கிற வேலையாகப் பார்க்காமல், பாமர மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பைக் கற்றுக் கொண்டேன். இஸ்திரி கடை வைத்திருப்பவரின் குழந்தைகளுக்கும், பால் போடுகிறவரின் குழந்தைகளுக்கும் பரதநாட்டியத்தை இலவசமாகக் கற்றுக் கொடுக்கிற அந்த எண்ணம் என்னையும் அறியாமல் எனக்குள் புகுந்ததற்கும் மாஸ்டரே காரணம் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிற போதுதான் புரிந்தது.

`நடனக் கலைஞரின் சுயசரிதைதானே... அதில் சாமானியர்களுக்கு என்ன இருக்கிறது?' என்கிற கேள்வி வரலாம். இந்தப் புத்தகம் அப்படிப்பட்டதல்ல. நடனம் தெரியாதவர்களுக்கும் பிடிக்கும்; வாழ்க்கையைப் புரிய வைக்கும்!

ஒரு நல்ல புத்தகம் எப்படி இருக்க வேண்டும்? மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்விதத் தில் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் ‘மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ்’, வலிகளும் போராட்டங்களும் சந்தோஷங்களும் சங்கடங்களும் கோபங்களும் நம்பிக்கைகளும் நிறைந்த ஒரு முழுமையான புத்தகம். மொத்தத்தில், என் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பிரதிபலிப் பதாக அமைந்த இந்தப் புத்தகத்தைப் பலமுறை வாசித்துவிட்டேன். வாசித்துக் கொண்டிருக்கி றேன். ஒவ்வொருமுறை வாசிக்கிறபோதும் புதிதாக ஏதோ ஒன்றை கற்றுக்கொள்கிறேன்... புரிந்துகொள்கிறேன்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு