Published:Updated:

சாதிக்கப் பிறந்தவர்கள் கையேந்த வேண்டியதில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சாதிக்கப் பிறந்தவர்கள் கையேந்த வேண்டியதில்லை!
சாதிக்கப் பிறந்தவர்கள் கையேந்த வேண்டியதில்லை!

மாற்றம்வெ.நீலகண்டன் - படங்கள்: மீ.நிவேதன்

பிரீமியம் ஸ்டோரி
சாதிக்கப் பிறந்தவர்கள் கையேந்த வேண்டியதில்லை!

“திருநங்கை ஆகணும்னு யாரும் வரம் வாங்கிட்டு வந்து பிறக்கிறதில்லை. ஆணைப் போல, பெண்ணைப் போல நாங்களும் இயல்பான ஒரு பிறப்புதான். ஆனா, சமூகத்துல நாங்க வேடிக்கை பொருள். பெற்றோரால துரத்தப்பட்டு, சமூகத்தால வஞ்சிக்கப்பட்டு, பாவப்பட்ட ஜென்மங்களாவே நாங்க வாழ்ந்து முடியணுமா?'' - ஸ்வேதா சுதாகரின் கேள்வியில் கோபமும் ஆதங்கமும் நிறைந்திருக்கிறது.

சென்னை, கோயம்பேட்டைச் சேர்ந்த ஸ்வேதா, `சாதிக்கப் பிறந்தவர்கள்' என்ற அமைப்பை நடத்துகிறார். அரசிடமும் சமூகத்திடமும் கையேந்தி நிற்காமல், தங்கள் திறமைகளைக் கூர்தீட்டி, அதன்மூலம் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை திருநங்கைகளுக்கு உருவாக்கித் தருகிறார். உலகமெங்கும் இருக்கும் முன்மாதிரி திருநங்கைகளை அழைத்து வந்து அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் செய்கிறார். பல திருநங்கைகளைத் தத்தெடுத்து படிக்க வைக்கிறார். சுயதொழில் தொடங்க நிதி பெற்றுத் தருகிறார். குடும்பத்தை விட்டு விலகி வந்து, பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி விளிம்பில் தவிக்கும் பல திருநங்கைகளுக்கு நற்பாதையை உருவாக்கித் தருகிறார்.

“மத்தவங்களைப் போலவே திருநங்கைகளுக்கும் நிறைய திறமைகள் இருக்கு. நல்லா படிக்கிறவங்க, பாடுறவங்க, நடனம் ஆடக்கூடியவங்க, கைவினைக் கலைகள் தெரிஞ்சவங்க, ஃபேஷன் டிசைனிங்ல ஆர்வம் உள்ளவங்கன்னு நிறைய பேர் இருக்காங்க. ஆனா, குடும்பத்தைவிட்டு வெளியேறி தெருவுக்கு வந்தபிறகு, அவங்களுக்கு அன்றாட வாழ்வே நெருக்கடி ஆயிடுது. திறமைகள் முடங்கிடுது. வாழ ஒரே வழி, கைதட்டி காசு கேட்குறது அல்லது தவறான திசைக்குப் போறது... ஆண்டாண்டு காலமா இப்படித்தான் நடந்துக் கிட்டிருக்கு.

எந்த நிறுவனமும் திருநங்கைகளை வேலைக்குச் சேர்க்கிறதில்லை. அப்படியே சேர்த்தாலும், ஏதோ சேவை மாதிரி நினைக்கிறாங்க. மத்தவங்களை மாதிரி சரிக்குச் சமமா நடத்துறதில்லை. கேலிப்பொருளா, எங்கே போனாலும் திருநங்கைன்னா பாலியல் பண்டம்கிற பார்வைதான் இருக்கு. 

அரசுக்கும் திருநங்கைகள் பற்றி நேர்மையான பார்வை இல்லை. திருநங்கைகளுக்குன்னு வாரியம் ஆரம்பிச்சாங்க. அது என்ன ஆச்சுன்னே தெரியலே. தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 50 ஆயிரத்துக்கும் அதிகமா திருநங்கைகள் இருக்காங்க. சில நூறு பேருக்குத் தான் அடையாள அட்டையே கொடுத்திருக்காங்க. ஓட்டுரிமை கொடுத்திருக்கோம்னு சொல்றாங்க. அதுவும் பேருக்குத்தான். திருநங்கைகளை மூன்றாம் பாலினமா அங்கீகரிக்கணும்னு உச்ச நீதிமன்றமே சொன்ன பிறகும் கூட நம்ம அரசுகள் அதுக்குத் தயாரா இல்லே.

சாதிக்கப் பிறந்தவர்கள் கையேந்த வேண்டியதில்லை!

பல திருநங்கைகள் நல்லாப் படிச்சும், சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டுட்டு வந்தவங்க. சிலபேர் திருநங்கைங்கிற அடையாளத்தால கல்வி நிறுவனங்கள்ல இருந்து இடை நிறுத்தப்
பட்டவங்க. அவங்களை எல்லாம் ஒருங்கிணைச் சேன். திருநங்கைகள் பத்தின சமூக மதிப்பீடு உயரணும்னா, அவங் களை ரோல் மாடலா மாத்தணும். அதற்காகவே `சாதிக்கப் பிறந்தவர்கள்' அமைப்பை மூன்று பாலினங்களைச் சேர்ந்தவங்களையும் சேர்த்து ஆரம்பிச்சேன். `திருநங்கைங்கிறது ஓர் அடையாளம், அது அவமானமில்லை'ங்கிற எண்ணம் முதல்ல நமக்குள்ளேயே வரணும். அதனால, திருநங்கைகளுக்கு கல்வி கொடுக்கறதையே முதன்மைப் பணியா எடுத்துக்கிட்டேன். படிக்க விரும்புற, பெரிய இலக்கு வெச்சிருக்கிற திருநங்கைகளைத் தேர்வு செஞ்சு அவங்க விரும்புற படிப்புல சேர்த்துவிட்டோம். கொஞ்சம் பேர் படிப்பை முடிச்சிருக்காங்க. பலர் படிச்சுக்கிட்டிருக்காங்க. இன்னும் கொஞ்சம் பேர் இந்த வருடம் முடிக்கப்போறாங்க...'' - பெருமிதமாகச் சொல்கிறார் ஸ்வேதா.

சேலத்தைச் சேர்ந்த கவி ஈஸ்வர், பிகாம் படித்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த ஆண்ட்ரியாவும் பட்டதாரி தான். இருவரும் ஸ்வேதாவின் உதவியோடு இப்போது ஃபேஷன் டிசைனிங் படிக்கிறார்கள்.

பாலக்கோட்டைச் சேர்ந்த ஷானா, மேக்கப் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். இன்னும் சிலர் லேப் டெக்னீஷியன் படிக்கிறார்கள். பலர், இடைநின்ற கல்லூரியிலேயே `திருநங்கை' அடையாளத்தோடு மீண்டும் சேர்ந்திருக்கிறார்கள்.

“ஃபேஷன், மேக்கப் மாதிரி துறைகள்ல நல்ல மரியாதையும், நிறைய வருமானமும் கிடைக்குது. திருநங்கைகளோட இயல்புக்கு அது பொருத்தமாவும் இருக்கு. அதனால நிறைய பேரை அந்தத் துறைக்குள்ள கொண்டு போறோம். வேறு படிப்புகளை விரும்புறவங்களுக்கும் அந்த வாய்ப்பை உருவாக்கித் தர்றோம். குறிப்பா, எங்கே சேர்த்தாலும் திருநங்கைங்கிற அடையாளத்தோடுதான் சேர்க்கறோம்'' என்கிற ஸ்வேதா, திருநங்கைகளுக்கான விருது வழங்கும் விழாக்களை சென்னையில் பிரமாண்டமான அரங்குகளில் நடத்துகிறார். எல்லாத் தரப்பு மக்களையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து திருநங்கை சாதனையாளர்களை அறிமுகம் செய்துவைக்கிறார்.

``திருநங்கைகளுக்கு கௌரவ மான வேலை வாய்ப்பு அவசியமா இருக்கு. பல நிறுவனங்கள்ல பேசி திருநங்கைங்கிற அடையாளத் தோட,  இயல்பாகவும், உரிமை யோடும், சுதந்திரமாகவும் வேலை செய்ற சூழலை கொண்டு வர்றது எங்களோட முக்கியமான செயல்திட்டம். அதை அரசுக்கு சமர்ப்பிச்சு நடைமுறைப்படுத்த கோரிக்கை விடுக்கப்போறோம்'' என்கிறவருக்கு இன்னொரு கோரிக்கையும் உண்டு. பள்ளிக் கல்வியில் திருநங்கைகளைப் பற்றிய பாடத்தைச் சேர்ப்பதுதான் அது. திருநங்கைகள் பற்றிய சமூக மதிப்பீடுகள் மாறுவதற்கு இதுவே வழி என அழுத்தமாக நம்புகிறார் ஸ்வேதா.

மாற்றம் வரட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு