Published:Updated:

வீடு... அலுவலகம்... இணையம் சமாளிப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீடு... அலுவலகம்... இணையம் சமாளிப்பது எப்படி?
வீடு... அலுவலகம்... இணையம் சமாளிப்பது எப்படி?

உழைக்கும் மகளிர்வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

பிரீமியம் ஸ்டோரி

ன்று பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கக் குடும்ப பெண்கள் பணிக்குச் செல்பவர்களாகவே உள்ளனர். மாமியார், மாமனார், குழந்தைகள், கணவர் என அனை வரையும் கவனித்துக் கொண்டு அலுவலக வேலைகளையும் செய்து கொண்டு என காலில் சக்கரம்தான் கட்டப்பட்டிருக்கிறது அவர்களுக்கு!

வீடு... அலுவலகம்... இணையம் சமாளிப்பது எப்படி?

அதிகாலை எழுந்து காப்பி போட்டு, டிபன், சமையல் தயார் செய்து டிபன் கேரியரில் அடைத்து, கணவனை அலுவலகம் அனுப்பி, குழந்தைகளைத் தயார் செய்து, சாப்பிட வைத்து, பள்ளிக்கு அனுப்பி மாமனார் - மாமியாருக்கு வேண்டியதை செய்து கொடுத்து, தானும் கிளம்பி அலுவலகம் செல்வது என அப்பப்பா... என்ன ஒரு வேகம்... அர்ப்பணிப்பு!

இவர்களது 20 - 30 ஆண்டுகால கடின உழைப்பே, குடும்ப நிர்வாகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. குடும்பப் பிரச்னை, வேலைப்பளு, குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்விகள் ஆகியவற்றின் காரணமாக இவர்கள் நாளுக்குநாள் சந்திக்கும் மனஅழுத்தம் அதிகமே.

வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? நிர்வாகத் திறனை வளர்க்க என்னென்ன செய்ய வேண்டும்? குடும்பத் தையும் வேலையையும் எவ்வாறு சமமாகக் கையாள வேண்டும்? குடும்ப நபர்களை எப்படி அனுசரித்துச் செல்ல  வேண்டும்? எப்படி இதன்மூலம் மனஅழுத்தத்தைத் தவிர்க்க முடியும்? அலசுவோம்!

அலுவலகத்தில்...

பெண்கள் தங்கள் நிர்வாகத்திறனை எப்படி எல்லாம் பணியில் செயல் படுத்தலாம் என்பதை மனிதவள மேலாண்மைத் துறைத் தலைவர் அலமேலு வைத்யநாதன் பகிர்கிறார்...

``மனிதவள மேலாண்மைத் துறையைப் பொறுத்தவரை உணர்வு பூர்வமான அறிவும் அமைதியும்தான் முக்கியம். அது பெண்களிடம் இயல்பான ஒரு குணாதிசயமாகவே அமைந்துள்ளது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் ஒரு பிரச்னையைப் பலமுறை ஆராய்ந்து தெளிவாகக் கையாள்கிறார்கள்.

வீட்டில் - குடும்ப உறுப்பினர்களின் தேவை அறிந்து சூழலுக்குத் தகுந்தாற்போலச் செயல்பட எல்லாப் பெண்களாலும் முடியும். அதைத்தான் மனிதவள மேலாண்மை என்ற பெயரில் பெரிய நிறுவனங்களின் நிர்வாகம் செய்து வருகிறது.

ஒரு பெண் நிர்வாகத்தில் சிறப்பா கச் செயல்படும்போது, அவள் மற்றவர் களுக்கு முன்உதாரணமாகவும் இருக்க முடியும்... மனஅழுத்தத்தையும் தவிர்க்க முடியும்'' என்கிற அலமேலு வைத்யநாதன், அதற்கான டிப்ஸும் அளிக்கிறார்.

• உயர்பதவி வகிக்கும் பெண்கள், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பாரபட்சம் பார்க்காமல் நடுநிலையாக இருப்பதே முக்கியப் பண்பு.

• ஆண்-பெண் என்று பாராமல் அனைவருடனும் இயல்பாகப் பழக வேண்டும்.

 

• வேகமாகச் செயல்படுவதுடன் விவேகமாகவும் செயல்பட வேண்டும்.

 

• முன்பின் தெரியாத நபர்களிடம் பத்து நிமிட உரையாடலிலே அவரது வேலைத்திறன், குணம் ஆகியவற்றை அளந்திடத் தெரிய வேண்டும்.

 

• குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கலாம்.

 

• உடை என்பது எளிமையாகவும், அதேநேரத்தில் பிறர் மதிப்பளிக்கும் விதத்திலும் கண்ணியமாக அணிய வேண்டும்.

 

• தெரியாத ஒன்றைத் தெரியாது என்று சொல்வதைவிட, அதைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதுதான் நிர்வாகத்திறனில் வெல்வதற்கான வழி.

பாதுகாப்புக்கு...

``பெண்கள் தங்கள் வேலை செய்யும் இடங்களிலும் சமூக வலைதளங்களிலும் பாது காப்பாக செயல்பட்டாலே மனஅழுத்தத்தை எளிதில் தவிர்க்கலாம்?'' என்று சொல்லும் உளவியல் நிபுணர் டாக்டர் குஷாலி மணிகண்டன் தரும் டிப்ஸ்...

வீடு... அலுவலகம்... இணையம் சமாளிப்பது எப்படி?

சென்னை போன்ற பெருநகரங்களில் இரவு வேலை முடித்து தனியாக வாடகை டாக்ஸிகளில் செல்லும் பெண்கள் முன்பின் அறிமுகமில்லாத ஓட்டுநருடன் பயணம் செய்கின்றனர். அப்போது செல்போனில் உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசியபடியே பயணிக்க வேண்டும்.

• லிஃப்ட்களில் அறிமுகமில்லாத ஆணுடன் பயணிக்கும்போது எல்லா ஃப்ளோர்களிலும் லிஃப்ட் நின்று நின்று போகும்படி செய்திட வேண்டும். லிஃப்ட் குறிப்பிட்ட இடைவெளியில் திறக்கும் என்பதால் தவறான எண்ணம் கொண்ட ஆண்கள் மனதில் பயம் ஏற்படும்.

• இன்றைய சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கு உரிய தாகிவிட்டது. ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் பல பிரைவஸி ஆப்ஷன்கள் இருந்தாலும், ஃபேக் ஐடிக்கள் மூலம் ஏமாற்றுப் பேர்
வழிகள் உலவுகிறார்கள். தெரியாத வர்கள் ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் கொடுக்கும்போது, அதனை ஏற்கக் கூடாது. இதுபோன்ற தொல்லை கள் அதிகமானால், அறிமுகம் இல்லாதவர்கள் ரிக்வஸ்ட் கொடுக்க முடியாதபடி பிரைவஸி பாலிசியை மாற்றிட வேண்டும்.

 

• இன்று பெண்களிடம் குறிப்பாக கல்லூரி மாணவிகளிடம் செல்ஃபி மோகம் அதிகமாகக் காணப்படுகிறது. விதவிதமான செல்ஃபிகளை எடுத்து, ஃபேஸ்புக் பக்கங்கள், `வாட்ஸ் அப் டிபி' போன்றவற்றில் பதிவிடுகிறார்கள். வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு மட்டும் `டிபி' தெரியும் வகையில் செட்டிங்ஸை மாற்றி அமைக்க வேண்டும்.

• ஃபேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களிலும் பெண்களின் படங்கள் நெருங்கிய நண்பர்கள், நம்பகமான உறவினர்கள் ஆகியோருக்கு மட்டும் தெரியும்வகையில் அமைத்திட வேண்டும்.

 

• புதிதாக பெருநகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆண்களோடு பழக வேண்டி இருக்கும். குறிப்பாக, தலைமைப் பதவியில் இருக்கும் ஆண்களிடம் பேசும் போது துணிவாகவும் சத்தமாகவும் பேசிப் பழக வேண்டும். இதனால் ஆண்களின் தவறான பார்வை நீங்கும்.

• அறிமுகம் இல்லாதவர்களோடு தனியாக பைக்கில் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவர்களது வீட்டுக்குத் தனியாக செல்லக்கூடாது. போக வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது காம்பஸ், பெப்பர் ஸ்ப்ரே போன்ற பாதுகாப்பு சாதனங்கள் ஹெண்ட் பேக்கில் இருப்பது அவசியம்.

• திருமணமான பெண்கள் ரயில், பேருந்து, ஷேர் ஆட்டோக்களில் வழக்கமாகச் செல்லும்போது அதேநேரத்தில் பயணிக்கும் சக மனிதர்களை நண்பர் களாக்கிக் கொள்ள வேண்டும். இதே போன்று வேலைநிமித்தமாக அடிக்கடி செல்லும் இடங்களிலும் நம்பிக்கையான நபர்களை அறிமுகப்படுத்திக்கொள்வது  நல்லது.

மாமியார் Vs மருமகள்

`திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வாழ வரும் மருமகளை எவ்வாறு நடத்த வேண்டும்? எப்படி இருவருமே மன அழுத்தத்திலிருந்து தப்ப முடியும்? என்பதுபோன்ற கேள்விகளுக்கு தன் அனுபவத்திலிருந்தே பாடம் நடத்துகிறார் அலமேலு நாச்சியார்...

``என் கணவர் அலுவலக வேலை யிலிருந்து ஓய்வுபெற்று வீட்டில் இருக்கிறார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் 3 வருடங்களுக்கு முன் திருமணமாகி ஹைதராபாத் சென்றுவிட்டாள். மகன் ஒரு வழக்கறிஞர். 4 வயது பேரன். 
பரபரப்பான காலைவேளையில் செய்யவேண்டிய வீட்டுவேலைகளை நானும் மருமகளும் பிரித்துக் கொள்வோம். இதனால், மருமகள் டென்ஷன் இல்லாமல் அலுவலகம் சென்று வேலைகளைச் செய்ய முடிகிறது.

வீடு... அலுவலகம்... இணையம் சமாளிப்பது எப்படி?

மாலை அலுவலகம் முடிந்து களைப்பாக வீட்டுக்கு வரும் மருமகளை,  உடனே சமையல், வீட்டுவேலைகள் செய்யச் சொல்லக்கூடாது. அதனால் நானே கணவருக்கும் மருமகளுக்கும் காபி தயாரித்து கொடுத்துவிடுவேன்.

வீட்டில் மகளுக்கு எவ்வளவு உரிமை கொடுக்கப்பட்டதோ, அதே உரிமை மருமகளுக்கும் கொடுக்கப்படவேண்டும். உதாரணமாக... என் மகள் நான் தொலைக்காட்சி சீரியல் பார்க்கும் நேரத்தில், வேறு ஏதாவது நிகழ்ச்சி பார்க்க நினைப்பாள். உரிமையுடன் என்னிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கி மாற்றிக் கொள்வாள். இப்படி மகள் அம்மாவிடம் உரிமை எடுத்துக் கொள்வதுபோல, மருமகள் கேட்கத் தயங்கும்போது மாமியார்தான் புரிந்து செயல்பட வேண்டும்.

தலைமுறை இடைவெளியை இன்று பல வீடுகளில் மாமியார்கள் புரிந்து கொள்வதில்லை. எங்கள் காலத்தில் படித்து பட்டம் பெற்ற வேலைக்குச் செல்லும் மருமகள்கள் குறைவு. வேலைக்குச் செல்பவர்கள் சம்பளத்தை முழுவதுமாக மாமனாரிடமோ, வீட்டு பெரியவர்களிடமோ ஒப்படைத்துவிடுவார்கள்.

இன்றைய பெண்கள் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்கிவிடுவதால், அவர்கள் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை தனக்காகச் செலவு செய்ய நினைக்கிறார்கள். இதனை வீட்டுப் பெரியவர்கள் புரிந்துகொண்டு, ஆடம்பரச் செலவு எனக் கருதாமல் அனுமதிக்க வேண்டும்.

புகுந்த வீட்டில் மருமகள்களுக்கான இதுபோன்ற சிறுசெலவுகள் அனுமதிக்கப்படாததால்தான், வீண் மனஅழுத்தங்களும், விரிசல்களும் உருவாகுகின்றன.

மருமகளும் தனக்கு பிறந்த வீட்டில் இருந்த பொருளாதார சுதந்திரம், இங்கு பறிபோய் விட்டதாக நினைக்கக் கூடாது. என் மருமகள் தன் தாயாருக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை அனுப்பிக் கொண்டிருக்கிறாள். என் மகனும் நானும் இதை பெருமையோடு பார்க்கிறோம்.

சேமிப்பின் அவசியத்தை இளம்தலை முறைக்கு உணர்த்தவேண்டும். வார இறுதியில் சினிமா, பூங்கா, ஷாப்பிங் மால் என சென்று வரலாம்தான். ஆனால், அவர்கள் எதிர்கால சேமிப்புக்காக வைத்திருக்கும் தொகையை ஆடம்பரத்துக்காக செலவழிக்கக் கூடாது. இதனை தெளிவுபடுத்துவதில் தவறில்லை. ஆனால், ஊதிப் பெரிதாக்கக் கூடாது.

நாகரிகமாக வளர்ந்த பெண்கள் பெரியவர்கள் முன்னிலையில் துடுக்காக பேசுபவர்களாக இருப்பார்கள். தனியாக அழைத்து, நாசூக்காக இதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.  திருமணங்கள் போன்ற விசேஷங்களுக்குச் செல்கையில் உறவினர் அல்லது நண்பர்கள் முன்னிலையில் எக்காரணம் கொண்டும் மருமகளைக் குறைத்து பேசிவிடக்கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக பேறுகாலத்தில் மாமியாரைத்தவிர மருமகளுக்கு வேறு நெருக்கமான உறவு யாரும் கிடையாது. பேறுகாலத்தில் மகளாகவே நினைத்து மருமகளுக்கு மாமியார் உதவ வேண்டும்.   இந்த உதவிகளை மருமகள் ஒருபோதும் மறக்க மாட்டாள் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்!''

இனி நோ டென்ஷன்! நோ ஸ்ட்ரெஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு