Published:Updated:

சவாலாக எடுத்துக்கொண்டால் சாதிக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சவாலாக எடுத்துக்கொண்டால் சாதிக்கலாம்!
சவாலாக எடுத்துக்கொண்டால் சாதிக்கலாம்!

உற்சாகம்சாஹா

பிரீமியம் ஸ்டோரி

டைகளைத் தாண்டி தடம் பதிக்கிறவர்களை விரல் விடாமலேயே எண்ணி விடலாம். அப்படியொருவர் ரம்யா. ஆண்களின் இசைக்கருவியாக அடையாளப்படுத்தப்படுகிற கடம் வாசிப்பில் கவனிக்கத்தக்க இடத்தில் இருக்கிறார்.

``பாட்டி, அம்மானு எல்லாரும் பாடுவாங்க. அதனால எனக்கும் பாடறதுல ஆர்வம் வந்தது. என் தம்பி மிருதங்கம் வகுப்புக்குப் போகும்போது நானும் கூடப் போவேன். அவனைப் பார்த்து நானும் மிருதங்கம் கத்துக்கலாம்னு தம்பியோட மாஸ்டர் வைத்யா ராஜசேகர்கிட்ட கேட்டேன். ‘கடம் வாசிக்கிற பெண்கள் ரொம்பக் கம்மி. அதனால நீ அதைக் கத்துக்கோ’னு சொன்னார். அப்படித்தான் கடம் கத்துக்க ஆரம்பிச்சேன்...’’

- அறிமுகம் சொல்கிற ரம்யாவுக்கு கடம் வாசிப்பது ஆரம்பத்தில் அத்தனை எளிதானதாக இல்லை.

சவாலாக எடுத்துக்கொண்டால் சாதிக்கலாம்!

‘`கடம் கொஞ்சம் கடினமான வாத்தியம். வாசிக்க ஆரம்பிச்ச புதுசுல கையெல்லாம் சிவந்து தடிச்சுப் போயிடும். அந்தச் சத்தத்தைக் கொண்டு வர நிறைய அழுத்தம் கொடுத்து வாசிக்கணும். அப்படி அழுத்தம் கொடுத்து வாசிக்கலைனா, `பொண்ணுங் களுக்கு இதெல்லாம் தேவையா’ங்கிற கேள்வி வந்துடுமோனு சிரமங்களைப் பொறுத்துக் கிட்டு பயிற்சி எடுத்தேன். என்னாலயும் கடம் வாசிக்க முடியும்கிற நம்பிக்கையைக் கொண்டு வர ஒரு வருஷம் ஆச்சு. அதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு சாதிச்சுக் காட்டினேன். 8-வது படிக்கும்போது முதல் கச்சேரியில வாசிச்சேன். பாடறது, கடம் வாசிக்கிறது தவிர, கீபோர்ட் வாசிக்கிறதும் தெரியும். எல்லாத் திறமை களையும் வளர்த்துக்க மாஸ்டர்தான் ஊக்கப்படுத்தினார்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துல பயோடெக் படிச்சேன். அங்கே ஒரு மியூசிக் குரூப் ஆரம்பிச்சு இன்டர் காலேஜ் இசைப் போட்டிகள்ல எல்லாம் பாடி, பரிசுகள் வாங்கியிருக்கேன்..’’ என்பவர், `டின் விசில்’ என்கிற இசைக்கருவி வாசிப்பதிலும் நிபுணியாம்!

``அது ஒரு ஐரிஷ் இசைக்கருவி. புல்லாங்குழல் மாதிரி இருக்கும். நானாகவே கத்துக்கிட்டு வாசிக்கிறேன். அதுவுமே வாசிக்கிறதுக்கு சிரமமானதுதான். ஆனாலும், பிடிச்சிருந்தது. எல்லோராலயும் செய்ய முடியறதை செய்யறதுல என்ன சாதனை இருக்கு?’’ - தனித்திருப்பதன் பின்னணி சொல்பவர், சென்னையிலும் மும்பையிலுமாக எப்போதும் ஏதேனும் ஒரு இசை நிகழ்ச்சியில் பிஸி!

‘`காலேஜ்ல `கானவர்ஷினி’னு கர்னாடிக் மியூசிக் கிளப் வெச்சிருந்தோம். அது மூலமா நிறைய கச்சேரிகள் பண்ணியிருக்கோம். சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில எம்.எஸ்.அம்மாவுக்கு ஒரு நினைவாஞ்சலி நிகழ்ச்சி பண்ணினாங்க. அதுல நான் கடம் வாசிச்சேன். வயலின் வித்வான் கன்யாகுமாரி மேடம்கூட கீழ் திருப்பதியில 100 இசைக்கருவிகளோட பஞ்சரத்ன கீர்த்தனை வாசிச்சோம்.

2014-ல பி.டெக் முடிச்சுட்டு, எம்.டெக் பண்றதுக்காக மும்பை வந்தேன். இங்கே பிரபல தபேலா கலைஞர் அனுராதா பால் ஸ்ரீஷக்தி’னு ஒரு குழு வெச்சிருக்காங்க. அது மூலமா இந்தியா முழுக்க நிறைய கச்சேரிகள்ல வாசிச்சிருக்கேன். மும்பையில ஷண்முகானந்தா மியூசிக் அகடமி ரொம்பப் பிரபலம். அதுல வாய்ப்பாட்டு கத்துக்கிட்டேன். கச்சேரியில பாடறதுக்கான பயிற்சி அது.

மும்பையில எம்.டெக் படிச்சுக்கிட்டே, மியூசிக் டிப்ளோமாவையும் முடிச்சேன். ரெண்டையும் விட்டுக் கொடுக்க மனசில்லை. எனக்கு சயின்ஸ் ரொம்பப் பிடிக்கும். எம்.டெக் பண்றது சாதாரண விஷயமில்லை. எல்லா வாய்ப்புகளும் கைகூடி வந்ததால அதையும் முடிச்சேன். படிப்புங்கிறது வெறும் தகுதி மட்டுமில்லை, பாதுகாப்பும்கூட!

என்னோட அம்மா, அப்பா சப்போர்ட் இல்லைன்னா இதையெல்லாம் என்னால பண்ணியிருக்க முடியாது. பொதுவா பிள்ளைங்க பத்தாவது வந்துட்டாலே அவங்க படிப்பைத் தவிர வேற எந்த விஷயத்துலயும் ஆர்வம் காட்டறதை பெற்றோர் அனு மதிக்க மாட்டாங்க. ஆனா, எங்கப்பா, என் ஆர்வத்துக்கு மதிப்பு கொடுத்தார். `எப்படிப்பட்ட சூழ்நிலையையும் கையாளத் தெரியணும்’னு சொல்லி வளர்த்தார். பத்தாவது போர்டு எக்ஸாமுக்கு 2 நாள் முன்னாடி ஒரு கச்சேரி வந்தது. `பண்றதா, வேணாமா... படிப்பு இருக்கே'னு அப்பாகிட்ட கேட்டேன். ‘அந்த மூணு மணி நேரத்துலதான் உன் படிப்பு வீணாயிடுமா? நீ நினைச்சா ரெண்டையும் பிளான் பண்ணி முடிக்கலாம்’னு சொன்னார். அம்மா எப்போதும் எனக்கு பெரிய பலம். கணவர் நாராயணன்,  தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கறார். கல்யாணத்துக்குப் பிறகு புகுந்த வீட்டு ஆதரவோட இன்னும் உற்சாகமா கத்துக்கறேன்... வாசிக்கிறேன்.

கடம் என்பது உப பக்க வாத்தியம் (அதாவது முதன்மை வாத்தியம் அல்ல). கர்னாடக சங்கீதத் தைப் பொறுத்தவரையில் மிருதங்கம்தான் பிரதான வாத்தியமா பார்க்கப் படுது. வடக்குல தபேலா அனுராதா பால், பெங்களூருல கடம் சுகன்யா ராம்கோபால் மேடம் மாதிரி, சென்னையில கடம்னா ரம்யானு சொல்ல வைக்கணும். இனி முழு நேரமும் இசை, எம்.ஏ இசையில மேற்படிப்புனு என்னைத் தயார்படுத்திக்கிட்டிருக்கேன்...’’

- திட்டங்களில் தீவிரமாக இருக்கிறார் ரம்யா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு