Published:Updated:

“எங்கள் திறமையையே பதிலாகத் தருவோம்!'' - தபேலா ரெத்னாஸ்ரீ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“எங்கள் திறமையையே பதிலாகத் தருவோம்!'' - தபேலா ரெத்னாஸ்ரீ
“எங்கள் திறமையையே பதிலாகத் தருவோம்!'' - தபேலா ரெத்னாஸ்ரீ

தனித்துவம்ஆர்.வைதேகி

பிரீமியம் ஸ்டோரி
“எங்கள் திறமையையே பதிலாகத் தருவோம்!'' - தபேலா ரெத்னாஸ்ரீ

பேலா கலைஞர்களின் பெயர்களை கூகுளில் தேடினால், வருகிற அத்தனையும் ஆண் முகங்கள்! தீவிரத் தேடுதல் வேட்டையில் தென்படுகிறார் ரெத்னாஸ்ரீ. தென்னிந்தியாவின் ஒரே பெண் தபேலா கலைஞர். கேரளாவின் வைக்கம் பகுதியைச் சேர்ந்த ரெத்னா, இன்று முன்னணி ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களுக்கு தபேலா வாசிக்கிற, தவிர்க்க முடியாத கலைஞர். இந்த இடத்துக்கு வருவதற்கான அவரது முயற்சிகளும் பயிற்சிகளும் அசாதாரணமானவை!

‘`என்னோட அண்ணா ஒரு டான்ஸர். அதனால வீட்ல எப்போதும் ஏதாவது ஒத்திகை நடந்துக்கிட்டே இருக்கும். வீடே இசையால சூழப்பட்டிருக்கும். அத்தனை சத்தத்துக்கும் நடுவுல எனக்கு தபேலாவோட சத்தம் தனியா கேட்கும். யாரும் பார்க்காதபோது நானா தபேலா வாசிச்சுப் பார்ப்பேன். எனக்கு அந்த இசைக்கருவி மேல இப்படியொரு அதிரடியான காதல்...’’

- மலையாளம் முந்திக் கொள்கிறது ரெத்னா ஸ்ரீயின் பேச்சில். ஆர்வத்தை மட்டுமே நம்பி தபேலாவைத் தொட்டவராம் இவர்!

‘`முறையான பயிற்சி எதுவும் இல்லாமலேயே பழகினேன். பள்ளிக்கூடத்துல நடக்கிற போட்டிகள்ல பரிசு வாங்க ஆரம்பிச்சேன். எங்கே, யார்கிட்ட பயிற்சி எடுத்துக்கிறது, என்னோட தபேலா திறமையை எப்படி அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போகறதுங்கிற தேடல் தீவிரமா இருந்த நேரம் அது... அப்போ நான் எம்.எஸ்ஸி. கெமிஸ்ட்ரி முடிச்சிருந்தேன். இசைதான் என் எதிர்காலமா இருக்கணும் என்ற ஆசையும் நாளுக்கு நாள் வளர்ந்திட்டிருந்தது.

என்னோட ஆர்வமும் திறமையும் எங்கப்பாவுக்குத் தெரிய வந்தது. அவர்தான் வைக்கம் செல்லப்பன் மாஸ்டர்கிட்ட சேர்த்துவிட்டார். அவர்கிட்ட தபேலா வாசிப்புல அடிப்படையான விஷயங்களைக் கத்துக்கிட்டேன். வைக்கம்ல என் இசைத் திறமையை வளர்த்துக்கிறதுக்கான வாய்ப்புகளோ, சூழலோ இல்லை. செல்லப்பன் மாஸ்டர் என்னை ஹைதராபாத் போகச் சொன்னார். அங்கே கோட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு யுனிவர்சிட்டியில டிப்ளோமா படிப்புல சேர்ந்தேன். ஜெயகாந்த் மாஸ்டர் ரூபத்துல எனக்கு நல்ல குரு கிடைச்சார். அடுத்து மும்பையில உள்ள பிரபல இசைப் பயிற்சி பள்ளியிலயும், கோலாப்பூர்ல உள்ள சிவாஜி யுனிவர்சிட்டியிலயும் எனக்கான கதவுகள் விரியத் திறந்த மாதிரி இருந்தது.

தபேலா வாசிப்புல ஒவ்வொரு ஸ்கூலோட பாணியும் ஒவ்வொரு விதமா இருக்கும். இசைமொழியில அதை `கரானா'னு சொல் றோம். டெல்லி கரானா, அஜ்ராரா கரானா, லக்னோ கரானா, பனாரஸ் கரானா, ஃபருக்காபாத் கரானா, பஞ்சாப் கரானானு  மொத்தம் 6 பாணிகள் இருக்கு. நான் எல்லா பாணிகளையும் கத்துக்கிட்டேன். அதனாலதான் எல்லா பாணி பாடகர்களுக்கும் ஏத்தபடி என்னால வாசிக்க முடியுது...’’ - நினைத்ததை சாதித்த நிறைவு ரெத்னாஸ்ரீயிடம்!

‘`சிலர் ஓப்பன் ஹேண்ட் டெக்னிக்ல வாசிக்கச் சொல்வாங்க. அதுல விரல் வித்தைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். அதை நான் ரொம்பவே என்ஜாய் பண்ணுவேன்...’’ - ரசித்துச் சொல்பவர், இப்போது உஸ்தாத் ஃபையிஸ் கானின் மாணவி. ‘`அவர் பாரம்பர்ய பாணி தபேலா வாசிக்கிறதுல நிபுணர். அதையும் தெரிஞ்சுக்கலாமேனு ஒரு ஆசைதான்...’’ என்கிறவரிடம் கற்றலின் வேட்கையை உணர முடிகிறது.

‘`என்னோட குரு உஸ்தாத் ஃபையிஸ் கான், டி.வி.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீராம் பரசுராம், செங்கோட்டை ஹரிஹர சுப்ரமணியம், சந்தூர் கலைஞர் ஹரிதாஸ், சிதார் கிருஷ்ணகுமார், வீணை சவுந்தர் ராஜன் உள்பட பலரோட கச்சேரிகளுக்கும் தபேலா வாசிச்சிருக்கேன். ஹிந்துஸ்தானி ஸ்டைல்தான் என்னோட ஸ்பெஷல். கர்னாடக சங்கீதம் பாடறவங்களுக்கும் என்னால வாசிக்க முடியும். அதுதான் தபேலாவோட சிறப்பு. சொன்னபடியெல்லாம் கேட்கற அருமையான வாத்தியம் இது...’’ என்கிறவருக்கு மறக்க முடியாத கச்சேரி ஒன்று இருக்கிறது.

‘`அயர்லாந்தைச் சேர்ந்த உஸ்தவ் லால், பியானோவுல ஹிந்துஸ்தானி வாசிக்கிறவர். இந்தியாவுக்கு வந்திருந்தபோது 4 முக்கிய மாநிலங்களில் வாசிச்சார். அவர்கூட தபேலா வாசிச்சதுல அனுராதா பால் மேடமும், நானும் மட்டும்தான் தேர்வாகியிருந்தோம். அது ரொம்பவே பெருமையான தருணம்...’’ - சொல்லும்போதே சிலிர்க்கிறது ரெத்னாவுக்கு!

‘`கடந்த மூணு வருஷங்களா திருவனந்தபுரம் ‘சூர்யா திருவிழா’வுல வாசிக்கிறேன். சென்னையிலயும் மகாராஷ்டிராவுலயும் வாசிக்க தொடர் அழைப்புகள் வந்திட்டிருக்கு... இந்த நிலைமையை அடைய நான் ரொம்பவே போராடியிருக்கேன். ஒரு பெண் தபேலா வாசிக்கிறாங்கன்னா,  ‘தபேலாவா... அதெப்படி அவங்களால வாசிக்க முடியும்?’னு கேட்கறாங்க. அந்தக் கேள்விக்கு எங்களோட திறமையை மட்டும்தான் பதிலா தர முடியும். அதுக்கு ஆண் கலைஞர்களைவிட பல மடங்கு அதிகமா நாங்க உழைக்கணும். நம்பிக்கையை இழக்காம போராடணும். அதனால என்ன? போராடி ஜெயிக்கிறதுதானே சுகம்!’’ என்கிற ரெத்னாவின் வார்த்தைகளில், அவரது தபேலா இசையைப் போலவே அத்தனை கம்பீரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு