Published:Updated:

குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?
குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?

தேவை அதிக கவனம்பொன்.விமலா, படம்: மா.பி.சித்தார்த்

பிரீமியம் ஸ்டோரி

ர்வசாதாரணமாக நடக்கின்றன குழந்தைக் கடத்தல் சம்பவங்கள். இந்தச் சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது பெற்றோர் மற்றும் பள்ளியின் கடமை. அதற்கான முன்னெடுப்பைச் செய்திருக்கிறது, சென்னை கிண்டியில் உள்ள பிஸிக்ஸ் பிசினஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம். இவர்கள் தயாரித்துள்ள SOP, குழந்தைக் கடத்தலுக்கு கடிவாளம் இட்டிருக்கிறது.

அதென்ன SOP?

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள், நுகர்வோரின் அடிப்படைத் தேவைகளைப் புரிந்துகொண்டு செயலாற்ற, பல செயல் திட்டங்களை மேற்கொள்கின்றன. நெறிமுறைப்படுத்தப்பட்ட அந்த செயல் திட்டமே SOP (Standard Operating Procedure) என்று அழைக்கப்படுகிறது. நிர்வாகச் செயல்பாட்டுக்கான SOPகளை, கமர்ஷியலாக பல நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன.

குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?

அப்படி பள்ளிகளுக்கான தங்கள் SOP-யில், பல்வேறு கள ஆய்வுகள்  மமற்றும் திட்டமிடல்களுக்குப் பிறகு, மாணவர்களின் பாதுகாப்புக்கான நிர்வாக அம்சங்களை பலப்படுத்தி, அதை இணையத்தில் இலவசமாக வழங்கியிருக்கிறது இந்த நிறுவனம். பொதுவாக, இதுபோன்ற SOP-க்கான கட்டணம் என்பது குறைந்தது லட்சங்களில் ஆரம்பிக்கும் என்கிற நிலையில், 32 பக்கங்கள் கொண்ட தங்களின் ‘ஆன்ட்டி கிட்னாப் (Anti- kidnap)’ SOP டாக்குமென்ட்டுகளை, விரும்பும் பள்ளிகள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அக்கறையுடன் வரவேற்கிறார்கள் அதன் பிரம்மாக்களான பாரதி, அன்பு, சுபா, சுகந்தா ஆகிய நான்கு இளம்பெண்கள்!

‘`காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தை மாலை வீடு வந்து சேரும் வரை அதற்குப் பாதுகாப்பளிக்கும் வழிமுறை களை மேற்கொள்வது குறித்து, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கான செயல்வடிவத்தை கொடுப்பதே எங்கள் நோக்கம். இதுவரையிலான குழந்தைக் கடத்தல் சம்பவங்களின் அடிப்படையில், கடத்தல் எப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்தோம். குழந்தைக் கடத்தல் தொடர்பாக கூகுளில் சுமார் 5 லட்சம் செய்திகள் இருந்ததைத் தெரிந்து கொண்டோம்’’ என அதிர்ச்சியான தகவல் தந்து ஆரம்பித்தார், குழுவுக்குத் தலைமை ஏற்றிருக்கும் பாரதி.

‘`குழந்தைக் கடத்தலுக்கு முக்கியக் காரணம்... பெற்றோர்தான். முன்பின் தெரியாதவர்களைவிட குழந்தைக்கு நன்கு பரிச்சயப்பட்டவர்களாலேயே குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படுகிறார்கள் என்பது எங்கள் ஆய்வு மூலம் புரிந்தது.
டிரைவர் முன்பாக வீட்டின் பணம் மற்றும் நகை இருப்பு பற்றி பேசுவது, பணியாட்கள் முன்பாக பணத்தை எண்ணுவது, அவர்களை வங்கி சம்பந்தமான வேலைகளுக்கு அனுப்புவது, பெருமைக்காக சொத்து விவரங்களைப் பொதுவெளிகளில் பேசுவது... இவையெல்லாம் அவர்களுக்கு அந்தப் பணத்தின் மேல் ஆசையைத் தூண்டும் செயல்கள். இது மட்டுமல்ல... பள்ளி, டியூஷன் என குழந்தை எங்கு, எப்போது செல்கிறது என்பதில் இருந்து, அதன் விருப்பு வெறுப்புகள் வரை பொதுவெளியில் பகிரும்போது, குழந்தையைக் கடத்தும் செயலை எளிமையாக்கியும் தருகிறார்கள் பெற்றோர்.

நாங்கள் குழந்தை கடத்தல்களுக்குக் காரணமாகிற 19 சூழல்களைக் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளையும் SOP ஆவணத்தில் சேர்த்திருக்கிறோம். குறிப்பாக, பணத்துக்காகவும், முன் விரோதத்துக்காகவும், குழந்தையின்மை, நரபலி உள்ளிட்ட இதர காரணங்களுக்காகவும் குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகிறார்கள்’’ என்கிறார் பாரதி.

‘`குழந்தைக் கடத்தல் எந்தெந்த சூழல்களில் எல்லாம் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டதுடன், என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால் அவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்பது குறித்தும் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. உதாரணமாக, ஒரு குழந்தை எப்போதும்  அதிக அளவு பாக்கெட் மணியை பள்ளிக்கு எடுத்துச் செல்வது, பெற்றோர் இல்லாமல் மாதத்தில் குறிப்பிட்ட ஓரிரு நாட்களில் பள்ளிக்குத் தனியாகச் செல்வது, படிப்பு, வீட்டுப்பாடம் ஆகியவற்றின் மீது உள்ள அச்சம், வெறுப்பால் பள்ளிக்குச் செல்ல பயந்து வேறு எங்காவது செல்வது... இப்படியான சூழல்களை எல்லாம் தவிர்த்திருந்தால் பல குழந்தைக் கடத்தல்களைத் தடுத்திருக்கலாம்’’ என்று சொல்லும் அன்புவை தொடர்ந்து பேசுகிறார் சுபா.

குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?

“கடத்தல் சம்பவங்கள் மட்டுமல்ல... மழைக்காலத்தில் மின் வயர்கள் அறுந்து விழுவதால் ஏற்படும் விபத்துகளில் இருந்து தீ விபத்துகள் வரை, குழந்தைகள் தொடர்பான பல துர்சம்பவங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததாலேயே நடக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட எங்கள் SOP-ஐ பள்ளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டு கிறோம். சி.சி.டி.வி உள்ளிட்ட சில உபகரணங்கள், பணியாட் கள் என்பது போல, இதன் பொருட்டு பள்ளித் தரப்புக்கு பெரிய செலவு இருக்காது. ஆனால், அதை மீறிய பொறுப்பு இருக்கிறது’’ என்கிறார் அழுத்தமாக.

இவர்களின் இந்த புராஜெக்ட் உருவாக்கத்தை மக்களிடம் தெளிவான முறையில் கொண்டு செல்லும் பொறுப்பு, குழுவில் சுகந்தாவுடையது. ‘`இந்த புராஜெக்டை www.fhyzics.com இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறோம். இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அதிக அளவில் மக்களைச் சென்றடைய முயல்கிறோம்’’ என்பவரைத் தொடர்ந்து, நிறைவாகப் பேசினார்  பாரதி.

‘`இந்தத் தளத்தில் அப்லோடு செய்திருக்கும் எங்கள் SOP-ஐ பொதுமக்களின் பார்வைக்கு இலவசமாகக் கிடைக்கும் வகை யில் வடிவமைத்திருக்கிறோம். சூழலுக்கு ஏற்ப அதை அப்டேட் செய்துகொண்டே இருப்போம். கூடிய விரைவில் இலவச ஆப் (APP) கொண்டு வருவோம். இந்த புராஜெக்ட்டின் வெற்றி, மக்கள் சொல்லப்போகும் ஃபீட்பேக்கில்தான் இருக்கிறது. அடுத்த சில வெள்ளிக்கிழமை களில் மாலை 3 முதல் மாலை 4 மணி வரை விருப்பம் உள்ளவர்களுக்கு SOP குறித்து இலவச வழிகாட்டல் அளிக்கவும் முடிவெடுத்துள் ளோம். விருப்பம் உள்ளவர்கள் எங்கள் இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்யலாம்’’ என்கிறார் அவர்.

குழந்தைகளின் பாது காப்புக்காக அக்கறையுடன் இவர்கள் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம்!

பாரதி குழுவினர் குழந்தைக் கடத்தலை தடுக்க வழங்கியுள்ள ஆலோசனைகளில் சில இங்கே...

* தேவைக்கு அதிகமான பணத்தை பாக்கெட் மணியாக பள்ளிக்குக் கொடுத்தனுப்ப வேண்டாம்.

* தங்கம், வெள்ளி, உள்ளிட்ட உயர்ந்த மதிப்புள்ள ஆபரணங்களைக் குழந்தைகளுக்கு அணிவித்து பள்ளிக்கு அனுப்புவது கூடவே கூடாது.

* குழந்தைகளுக்கு வீட்டு முகவரி, குடும்பத்தில் உள்ளவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை எவ்வளவு சீக்கிரத்தில் சொல்லித்தர முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லித் தரவும்.

* ரத்த வகை, அலர்ஜிக் மருந்துகள் உள்ளிட்ட குழந்தைகளின் மருத்துவத் தகவல்களை அறிந்து வைத்திருப்பது அவசர நேரத்தில் உதவும்.

* உங்கள் அனுமதியில்லாமல், உங்களுக்குத் தெரியாமல் குழந்தைகள் எங்கும் செல்லாதவாறு கண்காணிப்பது முக்கியம்.

* குழந்தைகளின் தினசரி செயல்பாடுகளிலும், பழக்கவழக்கங்களிலும் திடீர் மாற்றம் எதுவும் தென்படுகிறதா என்பதை பள்ளியும் பெற்றோரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால், இருதரப்பும் உடனடியாக அதுபற்றி தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும்.

* புதிய நபர்கள், மூன்றாம் நபர்களிடம் எந்த அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம் தொடர்ந்து அறிவுறுத்தவும்.

* பழக்கமில்லாதவர்களின் வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது, அவர்கள் தரும் உணவுப் பொருட்களை வாங்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு