Published:Updated:

மனுஷி - 7 - இது விளையாட்டல்ல!

மனுஷி - 7 - இது விளையாட்டல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
மனுஷி - 7 - இது விளையாட்டல்ல!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

‘ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென
இனி விழவாயிற்று என்னும் ஊரே.’
(குறுந்தொகை - 295)

‘ஒரு பசு மாடு வைத்திருந்த சாதாரண குடும்பத்தில் மருமகள் வந்தவுடன், குடும்பம் திருவிழா போலப் பலரும்    வந்து விருந்துண்டு போகும் இடமாக மாறிவிட்டது’ என்பது பொருள்.


சென்னையிலேயே பிறந்து வளர்ந்த மாலினிக்கு கிராம வாழ்க்கை முறை பற்றி அதிகம் தெரியாது. திரைப்படங்களில் காட்டப்படும் கிராமங்களை மிகைப் படுத்தியதாகவே நினைப்பாள். தன்னுடன் பணிபுரிந்த சுரேனை கிராமத்துத் தமிழுக்காகவும், வெள்ளை மனதுக்காகவுமே காதலிக்க ஆரம்பித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டாள்.

மனுஷி - 7 - இது விளையாட்டல்ல!

மாலினி இப்போது கருவுற்றிருந்தாள். களைப்பும் சோர்வும் அவளை அதிகமாக வாட்டியதால், தொடர்ந்து வேலைக்குச்் செல்ல இயலவில்லை. மாலினி சிலநாட்கள் ஓய்வாக இருக்கட்டும் என்று விரும்பிய சுரேன், அவளை அம்மா வீட்டுக்குச் செல்லுமாறு அன்புடன் கூறினான். மாலினிக்கும் அந்த நேரத்தில் ஓய்வு தேவைப்படவே, தன் அம்மா வீட்டுக்குச் சென்றாள். ஆனால், மாலினியின் அம்மாவும் வேலைக்குச் செல்வதால், அங்கேயும் அவள் தனியாகத்தான் இருக்க வேண்டியதாயிற்று. இந்நிலையில் மாலினியைக் காண அங்கு வந்த அவள் மாமியார், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அவளைத் தன்னுடன் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல விரும்பினாள். மாலினியும் இதற்குச் சம்மதிக்கவே, சுரேன் அவளை ஊருக்கு அனுப்ப ஒப்புக்கொண்டான்.

ரயிலில் ஏ.சி கோச்சும், அங்கிருந்து வீடு வரை சொகுசு காருமாக திருச்சி அருகிலுள்ள புள்ளம்பாடிக்கு மாலினியும் அவள் மாமியாரும் வந்தடைந்தனர்.

சுரேன் ஒரே மகன் என்பதால், மாலினியை மகள்போலவே பாவிக்கும் மாமனார், மாமியார், சுரேனின் பாட்டி... கால்நடைகள், மற்றும் அழகான இயற்கைச் சூழல், ஆரோக்கியமான உணவு என்று அந்தக் கிராமம் மாலினிக்கு மிகவும் பிடித்திருந்தது. கிராமம் என்பதால், யாராவது ஒருவர் வந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். தனியாக இருப்பது போலவே தோன் றாது இரண்டு நாட்கள் சென்றன.

மதிய உணவுக்குப் பின்பு, மரத்தினால் ஆன ஒரு கட்டையையும், சிறிய கொட்டைகள் சிலவற்றையும் எடுத்து வந்தாள் பாட்டி. அதைப் பார்த்த மாலினி, ‘`இது என்ன பாட்டி?’’ என்று கேட்டாள். மாலினி பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவள் என்பதால், இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவே செய்த பாட்டி மெள்ளப் புன்னகைத்தபடி, ‘இதுவா, இதுதான் பல்லாங்குழி கட்டை’ என்று கூறி, அதை விளையாடும் முறையை மாலினிக்குக் கற்றுத் தந்தாள்.

`இந்த விளையாட்டு புதுமையாக இருக்கிறதே' என்று வியந்த மாலினி விளையாடத் தொடங்கினாள். இரண்டு ஆட்டம் ஆடி முடிக்கவும் மாலை நேரம் வரவும் சரியாக இருந்தது. இந்த இரண்டு மணி நேரமும் தனக்கு வாந்தியும் சோர்வும் இல்லாமல் இருந்ததை மாலினி அப்போதுதான் உணர்ந்தாள். மாமியாரிடமும் பாட்டியிடமும், “எனக்கு இந்த இரண்டு மணி நேரமும் வாந்தியும் சோர்வும் உண்டாகவே இல்லை. எப்படி?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் மாலினி.

பாட்டி உடனே ஒரு புன்முறுவலுடன் கூறத் தொடங்கினாள்... “கர்ப்ப காலத்தில் வாந்தி வருவது எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரச்னைதான். இது படிப்படியாகக் குறையும். `சாப்பிட்டவுடன் வாந்தி வருமே' என்ற எண்ணமே பல பிரச்னைகளையும் கொண்டுவந்துவிடுகிறது. இந்த உணர்வு வராம லிருக்கவே வேறு விஷயங்களில் அவர்களின் கவனத்தைத் திருப்புவோம். இந்த மாதிரியான நேரங்களில் சோர்வாக இருக்கும் என்பதால், எளிய விளையாட்டுகளை விளையாடச் செய்வது வழக்கம். அதில் ஒன்றுதான் இந்தப் பல்லாங்குழி...”

இதைக் கேட்ட மாலினி, “இந்த விளையாட்டை இருவர்தான் விளையாட முடியுமா?” என்று கேட்டாள்.

‘`அப்படி இல்லை. ஒருவர், இருவர், மூவர் என விளையாடக் கூடிய விளையாட்டு இது. ஒருவர் ஆடும் ஆட்டத்தை `சீதையம்மா ஆட்டம்' என்று கூறுவர்’’ என்று பாட்டி கூறவும், ‘`ஒருவர் விளையாடும் விளையாட்டுக்கு சீதையம்மா ஆட்டம் என்று ஏன் பெயர் வந்தது?’’ என்று கேட்டாள் மாலினி.

‘`அதுவா... சீதை ராமனைப் பிரிந்து அசோகவனத்தில் தனித்து இருந்தபோது, அவள் மட்டுமே விளையாடியதால் இதற்கு இந்தப் பெயர்!'' என்ற பாட்டி, தொடர்ந்து பல்லாங்குழி விளையாட்டின் சிறப்புகளைக் கூறத் தொடங்கினார்.
‘`இந்தப் பல்லாங்குழி விளையாட்டு விரல்களுக்கு நல்ல பயிற்சி தரக் கூடியது. நம்முடைய கவனத்தைச் சிதறாமல் ஒருமுகப்படுத்தும் தன்மை இந்த விளையாட்டுக்கு உண்டு. இதை விளையாடுவதால் கை நடுக்கம் ஏற்படுவதில்லை. பகல் நேரத்தில் விளையாடுவதால், நாம் உறங்குவதில்லை. இதனால் இரவில் நன்றாக உறங்க முடிகிறது. அது மட்டுமல்ல... இது அதிக உடல் உழைப்பு தேவைப்படாத விளையாட்டு'' என்று நீளமாகச் சொல்லி முடித்தார்.

சுரேனின் அம்மா தொடர்ந்தார்... “வயதுக்கு வந்த பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் தனது வலி அறியாமல் இருக்கவும், கவனம் வேறு எந்த விஷயத்திலும் சிதறாமல் இருக்கவும் இந்த விளையாட்டை விளையாடச் சொல்வார்கள். இந்த நேரங்களில் உடலை வருத்தாமல், சிந்தனையை வேறு பக்கம் மாற்றுவதற்கு தாயம், கல்லாங்கல் என்று பல விளையாட்டுகளை விளையாடினர்...” 

இதைக் கேட்ட மாலினிக்கு தாயம் விளையாட வேண்டும் என்ற ஆசை தோன்றியது. தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தவும் செய்தாள். அதற்கு அவள் மாமியார், ‘பொழுது போய்விட்டது. நாளை விளையாடலாம்’ என்று  கூறி, மாலினி குடிப்பதற்குப் பால் எடுத்து வர உள்ளே சென்றார்.

பாட்டி தொடர்ந்தார்... ‘`இது மட்டுமில்லை மாலினி, முன்பெல்லாம் வீட்டில் ஏதேனும் பிரச்னை இருந்தால், அரிசியுடன் வெள்ளை உளுந்து அல்லது பாசிப்பருப்பைக் கலந்து அவற்றை மீண்டும் பிரிக்கச் சொல்வார்களாம். அப்படி பிரிக்கும்போது கவனம் அதன் மீதே நிலைத்திருப்பதால், அவர்களின் மனம் ஒருமைப்படும். மனம் ஒருமைப்படுவதால் குழப்பம் நீங்கி, தெளிவு ஏற்படும். இதனால், பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவு எடுக்கவும் அவர்களால் முடியும். எப்போதும் பரபரவெனப் பல வேலைகளைச் செய்யும் பெண்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தவே இதுபோன்ற விளையாட்டுகளை ஏற்படுத்தி உள்ளனர்’’ என்றார் பாட்டி.

இதற்குள் அலைபேசியில் சுரேன் அழைக்க, அவனிடம் பேசுவதற்கு உற்சாகமாகச் சென்றாள் மாலினி!

(இன்னும் உணர்வோம்!)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கவனம் அல்லது கவனகம்

ம்ஸ்கிருதத்தில் அவதானம் என்பார்கள். ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களை கவனத்தில் வைப்பவர் எண்கவனர், அஷ்டாவதானி என அழைக்கப்படுவார். பத்து விஷயங்களைக் கவனத்தில் வைப்பவர் தச கவனர்; தசாவதானி. 100 விஷயங்களை கவனத்தில் வைப்பவரை சத கவனர், சதாவதானி என்போம். பெண்களுக்கு கவனம் என்பது அவர்களுடன் பிறந்தது. அவர்களுக்கு அது இயல்பான விஷயம். ஏற்கெனவே தாங்கள் கவனத்தோடு உள்வாங்கிக்கொண்ட ஒரு விஷயத்தைத் தேவைப்படும் நேரத்தில் மிகச் சரியாக வெளிக்கொண்டு வரும் ஆற்றல் பெண்களுக்கு இயல்பாகவே உண்டு. அவர்களின் கவனத் திறனை மேலும் மேம்படுத்தவே, அதற்கேற்ற மரபு விளையாட்டுகளை நம் முன்னோர் ஏற்படுத்தியுள்ளனர்.