Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்: 9 வகை பொங்கல்

அவள் கிளாஸிக்ஸ்: 9 வகை பொங்கல்
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ்: 9 வகை பொங்கல்

படம்: சொ.பாலசுப்ரமணியன்

அவள் கிளாஸிக்ஸ்: 9 வகை பொங்கல்

படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
அவள் கிளாஸிக்ஸ்: 9 வகை பொங்கல்
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ்: 9 வகை பொங்கல்
அவள் கிளாஸிக்ஸ்: 9 வகை பொங்கல்

விளைச்சலை அறுவடை செய்து சூரிய பகவானுக்குப் படைத்து நன்றி தெரிவிக்க உருவானது பொங்கல் பண்டிகை. புது பச்சரிசியில் வெல்லம் சேர்த்து, பொங்கலிட்டு, 7 வகை அல்லது 9 வகை காய்கறி சேர்த்து குழம்பு வைப்பது வழக்கம்.

நமக்குப் பிரதான உணவு அரிசி என்பதால், அதில் பொங்கல் செய்கிறோம். வடமாநிலங்களில் அவர்களது முக்கிய விளை பொருளான கோதுமை பயன்படுத்துவர். நவகிரக நாயகர்களில் ஒருவ ரான சூரியனுக்கு உகந்த பொருள் கோதுமை தான்!

கிராமங்களில் விட்டு முற்றத்தில் செங்கல் அடுப்பு கட்டி, வெண்கலப் பானை ஏற்றி அதில் பொங்கல் வைப்பார்கள். பாலும் தண்ணீரும் கலந்துவைத்து அது பொங்கி வழியும்போது `பொங்கலோ பொங்கல்’ என்று குரலெழுப்பு வது குஷியான சமாசாரம். இப்போது இடநெருக்கடியால் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்ட நகரங்களில் குக்கரில் பொங்கல் வைப்பது வழக்கமாகிவிட்டது. சர்க்கரைப்பொங்கல்... விட்டால் வெண் பொங்கல் ருசித்த நமக்கு அரிசி, கோதுமை பயன்படுத்தி விதவிதமான பொங்கல் வகைகளை அறிமுகப்படுத்து கிறார் அறுசுவை அரசு நடராஜனின் மருமகள் மாலதி குமார்.

சர்க்கரைப் பொங்கல் (பானையில் பொங்க)

தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், பாசிப் பருப்பு - 100 கிராம், பால் - மூன்றரை கப், வெல்லம் - 600 கிராம், முந்திரி - 10 கிராம், நெய் - 200 கிராம், ஏலக்காய்ப்பொடி, பச்சை கற்பூரம் - சிறிதளவு.

செய்முறை: பருப்பு, அரிசியை வெறும் வாணலியில் சற்று வறுத்து, நான்கைந்து முறை கழுவிக்கொள்ளுங்கள்.

ஒரு வெண்கலப்பானையில் பாலை ஊற்றி இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்ததும் நன்கு கொதித்ததும் அரிசி, பருப்பு கலப்பு கலவையைப் போட்டு விடுங்கள். குழைவாக வெந்ததும் வெல்லத்தைத் தட்டிப் போட்டு கிளறுங்கள் (வெல்லம் பொன்னிறமாகப் பார்த்து வாங்குங்கள்... அப்போதுதான் பொங்கல் நிறம் அழகாக வரும். கருப்பாக இருந்தால் தீய்ந்த வாசம் வரும். வெள்ளை என்றால் உப்பு கரிக்கும்). அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறவும். கெட்டியானதும் இறக்கிவிடுங்கள். ஏலக்காய்ப்பொடி, பச்சை கற்பூரம், நெய்யில் வறுத்த முந்திரி, மீதி நெய் சேர்த்து கிளறிவிடுங்கள்.

குக்கர் முறை

தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், பாசிப் பருப்பு - 100 கிராம்,  வெல்லம் - 600 கிராம், நெய் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 10 கிராம்.

செய்முறை: வாணலியில் பச்சரிசி மற்றும் பருப்பைப் போட்டு கைபொறுக்கும் சூடு வரை வறுக்கவும் (வாணலி கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் அடிபிடிக்கும்). அதை நாலைந்துமுறை தண்ணீரில் கழுவி குக்கரில் போடவும். மூன்று பங்கு தண்ணீர் (நாலரை கப்) சேர்த்து, நான்கு விசில் வரும்வரை வேகவையுங்கள். வேறொரு பாத்திரத்தில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து சூடேற்றுங்கள். வெல்லம் நன்கு கரைந்ததும், வடிகட்டி, கல் மண் நீக்கி, மீண்டும் இளம்பாகு பதம் வரை காய்ச்சுங்கள்.

பிறகு, குக்கரில் உள்ள அரிசி, பருப்பு கலவையைக் கொட்டி. ஏலக்காய்ப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறுங்கள். மீதமுள்ள நெய்யை ஊற்றி, மீண்டும் ஒருமுறை கிளறி இறக்குங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெண் பொங்கல்

தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், பாசிப் பருப்பு - 100 கிராம், நெய் - 200 கிராம்,  முந்திரி - 10 கிராம், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, இஞ்சி - சிறுதுண்டு, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: அரிசி, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் இளஞ்சூடு வரை வறுத்து, நாலைந்து முறை கழுவிக் கொள்ளுங்கள். மூன்று பங்கு தண்ணீர் விட்டு, தேவையான உப்பு சேர்த்து, குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவையுங்கள். வாணலி யில் நெய்விட்டு காய்ந்ததும், பெருங்காயத் தூள், மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து, முந்திரி சேர்த்து வறுத்து, அதோடு குக்கரில் உள்ள கலவையைக் கொட்டிக் கிளறி இறக்குங்கள்.

ரவா பொங்கல்

தேவையானவை: பாம்பேரவை - 200 கிராம், பாசிப் பருப்பு - 100 கிராம்,  மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், இஞ்சி - சிறுதுண்டு, கறிவேப்பிலை - சிறிது, முந்திரி - 10 கிராம், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, நெய் - 200 கிராம், உப்பு - சிறிதளவு.

செய்முறை: பாசிப்பருப்போடு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். வெந்த பருப்புச்சாறு ஒன்றரை கப் இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் அதனுடன் கொஞ்சம் வெந்நீர் சேர்க்கலாம். வாணலியில் 150 கிராம் நெய் விட்டு, ரவையை வாசனை வரும்வரை வறுக்கவும். அதோடு பருப்புச்சாறு விட்டு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். குறைந்தபட்சம் 10 நிமிடமாவது விடாமல் கிளற வேண்டும். அப்போதுதான் நன்கு வெந்திருக்கும். 50 கிராம் நெய்யில் பெருங்காயத்தூள், மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து, முந்திரி சேர்த்து வறுத்து, ரவை கலவையில் கலந்துவிடுங்கள்.

கல்கண்டு பொங்கல்


தேவையானவை: பச்சரிசி  - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 400 கிராம், டைமண்ட் கல்கண்டு - 300 கிராம், பசும்பால் - 400 மி.லி, பச்சை கற்பூரம் - சிறிது, ஏலப்பொடி - சிறிது, குங்குமப்பூ - 5 கிராம், முந்திரி - 10 கிராம், நெய் - 150 கிராம்.

செய்முறை: பாசிப் பருப்பு, பச்சரிசியை வாணலியில் லேசான சூடு வரும்வரை வறுக்கவும். அதை நாலைந்து முறை கழுவி, குக்கரில் போட்டு, பாலுடன் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து, 4 விசில் வரும்வரை வேக வையுங்கள். வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, அதில் சர்க்கரை சேர்த்து, நன்கு கரைந்து கொதி வந்ததும் கல்கண்டைச் சேருங்கள். உடனே குக்கரில் உள்ள அரிசி, பருப்புக் கலவையைக் கொட்டி, குங்குமப்பூ, ஏலப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறுங்கள். முதலில் இளகி, பிறகு இறுகும். நெய்யில் வறுத்த முந்திரி, மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

சேமியா பொங்கல்

தேவையானவை: சேமியா - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 400 கிராம், நெய் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிது, முந்திரி 10 கிராம்.

செய்முறை: பாசிப்பருப்பைக் கழுவி, இரண்டரை கப் தண்ணீர் விட்டு வேகவைத்து ஒன்றரை கப் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். வாணலியில் 100 கிராம் நெய்விட்டு, அதில் சேமியா சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்துக் கொள்ளுங்கள். அதோடு பருப்புச்சாறு சேர்த்து (பருப்புச்சாறு + சேமியா இரண்டும் சூடாக இருக்க வேண்டும்) கைவிடாமல் பத்து நிமிடம் கிளறுங்கள். வேறு ஒரு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர்விட்டு, வெல்லம் சேர்த்துச் சூடாக்கி, வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதை இளம்பாகு பதத்துக்குக் காய்ச்சி, சேமியாவோடு சேர்த்து கிளறி அதோடு, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, மீதி நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

கோதுமை ரவை பொங்கல் (இனிப்பு)

தேவையானவை: சம்பா கோதுமை ரவை (பெரியது) - 100 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 300 கிராம், நெய் - 150 கிராம், முந்திரி - 5 கிராம், ஏலக்காய்த் தூள் - சிறிது.

செய்முறை: பாசிப்பருப்பைக் கழுவி இரண்டரை கப் தண்ணீர் விட்டு வேகவைத்து ஒன்றரை கப் சாறு எடுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் 100 கிராம் நெய் விட்டு, ரவையை வறுக்கவும். அதோடு பருப்புச்சாறு சேர்த்து 15 நிமிடம்வரை கைவிடாமல் கிளறுங்கள். வேறு ஒரு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, வெல்லம் சேர்த்து சூடாக்குங்கள். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, திரும்ப அடுப்பிலேற்றி இளம்பாகு பதத்துக்குக் காய்ச்சி, அதை ரவை கலவையோடு சேர்த்து, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, மீதமுள்ள நெய் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

கோதுமை ரவை பொங்கல் (காரம்)

தேவையானவை: சம்பா கோதுமை ரவை (பெரியது) - 100 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், நெய் - 100 கிராம், பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை, முந்திரி - 10 கிராம், கறிவேப்பிலை - சிறிது, இஞ்சி - சிறுதுண்டு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, ரவையை வறுத்துக் கொள்ளவும். அதை குக்கரில் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, 3 விசில் வரும்வரை வேக வையுங்கள். பாசிப்பருப்புடன் ஒரு கப் தண்ணீர் விட்டு, குழைய வேகவையுங்கள். நன்கு வெந்ததும் அதை ரவை கலவையுடன் சேர்த்து, உப்பு, பெருங்காயத்தூள், மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றை கலந்து இறக்குங்கள்.

புளி பொங்கல்

நெல்லை மிஷினில் கொடுத்து அரிசியாகப் பிரித்தெடுக்கும்போது, சில அரிசிகள் உடைந்து குருணையாக விழும். அதை வீணாக்காமல் செய்வது புளி பொங்கல்.

தேவையானவை: அரிசி நொய் (குருணை) - 200 கிராம், புளி - 25 கிராம், மிளகாய் வற்றல் - 10, பெருங் காயத்தூள் - 2 சிட்டிகை, கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 ஸ்பூன், நல்லெண்ணெய் - 150 கிராம், கறிவேப்பிலை சிறிது, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: அரிசியைக் கழுவி வையுங்கள். புளியைத் தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து, ஒவ்வொரு கப் தண்ணீர் விட்டு 3 முறை கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயம் போட்டு கரைந்ததும், மிளகாய் வற்றலைப் போடவும். மிளகாய் சிவந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, புளி தண்ணீரை ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, அதில் அரிசி போட்டு 3 விசில் வரும்வரை விட்டு இறக்கவும்.

பெங்காலி பொங்கல்

தேவையானவை: சம்பா கோதுமை ரவை (சிறியது) - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், புளி - 10 கிராம், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 10, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, சமையல் எண்ணெய் - 100 கிராம், கறிவேப்பிலை - சிறிது, பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர் (சேர்த்து) - கால் கிலோ, நெய் - 1 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: காய்களை ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கி வேகவைத்து தண்ணீரை வடித்துவிடுங்கள். பாசிப்பருப்பை 3 கப் தண்ணீரில் வேக வையுங்கள். வெந்த பருப்புச் சாறு 2 கப் இருக்க வேண்டும். வாணலியில் நெய்விட்டு ரவையை வறுத்துக் கொள்ளுங்கள். அதோடு பருப்புச்சாறு, அரை கப் புளிக்கரைசல், சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் வரை, கைவிடாமல் கிளறுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயம் சேர்த்து மிளகாய்வற்றல், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து, அதோடு வேகவைத்த காய்களை சேர்த்து வதக்கி, அதை ரவை கலவையில் கொட்டிக் கிளறி இறக்குங்கள்.

- ஜி.கோமளா

சமைத்து வழங்கியிருப்பவர்: ஆதிரை வேணுகோபால்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism