Published:Updated:

மனுஷி - 8 - வாழ்க்கை எனும் விளையாட்டு!

மனுஷி - 8 - வாழ்க்கை எனும் விளையாட்டு!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 8 - வாழ்க்கை எனும் விளையாட்டு!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - 8 - வாழ்க்கை எனும் விளையாட்டு!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - 8 - வாழ்க்கை எனும் விளையாட்டு!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 8 - வாழ்க்கை எனும் விளையாட்டு!

சகிப்புத்தன்மையில் வலிமை நிறைந் தவள் பெண். 

- மகாத்மா காந்தி

ஒரு நாட்டின் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ, அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.  

- ஜவஹர்லால் நேரு

அறிவின் தாயகமாக, அருள்நிறைந்த உள்ளமாக இருப்பவள் பெண்.

- ஜெயகாந்தன்

மனுஷி - 8 - வாழ்க்கை எனும் விளையாட்டு!

காலை எழுந்ததில் இருந்தே மாலினிக்குத் தாயம் விளையாடப் போவதிலேயே கவனம் முழுவதும் இருந்தது. சுரேனின் அம்மா மதிய உணவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக  இருந்தாள். அடுக்களைக்குள் சென்ற மாலினி, ‘`அத்தை, இன்றைக்கு தாயம் விளையாடலாம் என்று சொன்னீர் களே... அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்’’ என்றாள்.

பட்டணத்துப் பெண்ணாக இருந் தாலும், மரபு விளையாட்டுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதில் மாலினிக்கு இருந்த ஆர்வத்தை மனதுக்குள் மெச்சிய சுரேனின் அம்மா, தாயம் விளையாட்டைப் பற்றி மாலினிக்குச் சொல்லியபடி சமையலில் ஈடுபட்டாள்.

‘`கணவன்-மனைவி ஒற்றுமையாக இருப்பதைத் தெரிவிக்க பண்டைய ஓவியர்கள், தம்பதியரைத் தாயம் விளையாடுவதாக வரைவார்கள். திருப்பதி திருமலையில் ஸ்ரீனிவாசரும் பத்மாவதி தாயாரும் தாயம் விளையாடும் சித்திரத்தைப் பார்த்திருப்பாயே?

நிறைய தூண்களில் சிவனும் உமையும் தாயம் விளையாடும் சித்திரங்களையும் சிற்பங்களையும்கூட நீ பார்த்திருக்கலாம்.  பரமபத விளையாட்டும் இதேபோலத்தான். இந்த விளையாட்டுகளில் ஏற்றமும் இறக்கமும் இருந்து கொண்டேதான் இருக்கும். வாழ்க்கை என்பது ஏற்றமும் இறக்கமும் கொண்டதுதான் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள இதுபோன்ற விளையாட்டுகள் உதவுகின்றனதாயம் மற்றும் பரமபதம் - எந்த அளவுக்கு இறைசிந்தனை யுடன் பார்க்கப்பட்டதோ, அதே அளவுக்குச் சூதாட்டமாகவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் நல்லது - கெட்டது கலந்துதான் இருக்கும் என்பதைத் தெரிவிப்பது நம்முடைய மரபு. கெட்டதை ஒதுக்கி நல்லதை எடுத்துக்கொள்வதுதான் நமது மண்ணின் சிறப்பு’’ என்று பேசிக்கொண்டே சமையலை முடித்துவிட்ட சுரேனின் அம்மா, ‘`சரி மாலினி, நீ பாட்டியைக் கூப்பிடு. சாப்பிட்டுவிட்டு தாயம் விளையாடலாம்’’ என்றார்.

மூவரும் சாப்பிட்டுவிட்டு தாயம் விளையாட உட்கார்ந்தனர். அப்போது பாட்டி, ‘`கொஞ்சம் பொறு. யாராவது வந்தால் நாலு பேராக விளையாடலாமே’’ என்றார். பாட்டி சொல்லி முடிக்கவும் சித்ரா வந்து சேரவும் சரியாக இருந்தது.
‘வா சித்ரா’ என்று அவளை வாஞ்சையுடன் அழைத்த பாட்டி, மாலினி பக்கம் திரும்பி, ‘மாலினி, இவள் சித்ரா. சுரேனுக்குத் தங்கை முறை’ என்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, ‘`கிராமங்களில் எல்லோருமே ஏதோ ஒருவகையில் அங்காளி, பங்காளிகளாகவே இருப்பார்கள். வேற்று மதத்தினராக இருந்தாலும் சரி, வேற்று இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நெருங்கிய சொந்தமாகவே பழகுவார்கள். இன்னும்கூட இந்த அழகியல் மாறாமல் எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன’’ என்றார் பாட்டி.

மாலினி, சித்ரா ஓர் அணியாகவும்,  அத்தையும் பாட்டியும்  ஓர் அணியாகவும் விளையாடினார்கள். பழமொழிகள், பாடல்கள், வெட்டு, மலை பிடிப்பதில் போட்டி, வெட்டாட்டமாகவும், பழம் எடுப்பதாகவும் எல்லாமே புதிதாக இருந்தது மாலினிக்கு.

ஆட்டத்தில் நேரம் போனதே தெரியவில்லை. போகும்போது சித்ரா, ‘`பாட்டி, நாளைக்கு கல்லாட்டம் விளையாடலாம். அதில் உள்ள பாடல்களையும் நையாண் `டியையும் அண்ணி பார்த்து கத்துக்கட்டும்’’ என்றாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனுஷி - 8 - வாழ்க்கை எனும் விளையாட்டு!

‘`சித்ரா சொல்லும் கல் லாட்டம் தாயம், பல்லாங்குழி போல அவ்வளவு சுலபமில்லை. ரொம்ப நுணுக்கமாகவும் கவனமாகவும் விளையாட வேண்டிய விளையாட்டு. உன் சேக்காளி (தோழி) யாரை யாவது கூட்டிக்கிட்டு வா’’ என்றார் பாட்டி.

சித்ரா கல்லாட்டம் பற்றி மாலினிக்கு விளக்கினாள்.  

“கல்லாங்காய், கல்லாட்டம், அச்சாட்டம் என்பது நான்கு நான்காக அசங்காமல் கைகாய் எனும் கல்லை மேலே தூக்கிப்போட்டு மற்ற வற்றை எடுப்பது. இதை எடுக்கும் போது `கைமுக்கா, தரை முக்கா’ எனும்படி கையிலோ, தரையிலோ மூன்று காய்கள் இருந்தால் தோற்றவராவர்.

ஏழாங்கல் என்பது சிறுமி கள் ஆடும் விளையாட்டு. இதற்கான பாடல்கள் அருமையாக இருக்கும். பெண் குழந்தை களின் பருவமான அம் மானை பருவம் என்பது இப்படி விளையாடும் பருவமாக நமது இலக்கியத்திலேயே இருக்கிறது.

கவனம் மற்றும் கணிக்கும் திறனுடன் பாடல் இயற்றும் திறனுமாக arithmetic and logical intelligence, linguistics intelligence எனும் இரண்டு எதிர்துருவத் திறமைகள் வெளிப்படும் அற்புத விளையாட்டு இது’’ என்றவள், தொடர்ந்து மாலினிக்கு அம்மானையைப் பற்றியும் விளக்கிக் கூறினாள்.

``கவிதை புனையும் அறிவு பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால், இவ்விளை யாட்டு இலக்கிய வடிவம் பெற்றது. ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு. மூவர், ஐவரெனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு. இது அண்மைக்காலம் வரையில் தஞ்சைப்பகுதியில் விளையாடப்பட்டு வந்திருக்கிறது.

மூன்று பேர் விளையாடுவதாலும், அம்மானைப் பாடல் மூன்று பேர் பாடுவதாக அமைந்துள்ளமையாலும், இதனை மூவர் அம்மானை என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஏதோ ஓரு பொதுவான செய்தியையோ, அரசன் புகழையோ, இறைவன் அருளையோ பாடி அவர்களை அடையவேண்டும் என்பது கருப்பொருள். முதற்பெண், யாரேனும் பாட்டுடைத் தலைவனை மனதில்கொண்டு பொதுவான ஒரு செய்தியைக் கூறிக் காயை வீசிப் பிடித்து ‘அம்மானை’ என்பாள். இரண்டாமவள் அப்பொதுச்செய்தியோடு பொருந்திய ஒரு வினாவைக் கேட்டுக் காயை வீசி ‘அம்மானை’ என்பாள். மூன்றாமவள் அவ்வினாவுக்கு இரு பொருள்படும்படி விடை கூறி, காயை வீசிப் பிடித்து ‘அம்மானை’ என்பாள். இதுவே ‘அம்மானை’ விளையாடும் முறை. சான்றாகத் திருவரங்கக் கலம்பகத்து அம்மானைப் பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலை பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் பாடியுள்ளார். அப்பாடல்...

முதற்பெண் (பொதுச்செய்தி)

`தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளுமானவர்தாம் ஆண் பெண் அலியலர் காணம்மானை’

பொருள்: வண்டுகள் விரும்பும் சோலைகள் சூழ்ந்த திருவரங்கநாதர் எல்லாப் பொருளாகவும் திகழ்வாராயினும் ஆணும் பெண்ணும் அலியும் அல்லர் அம்மானை.

இரண்டாவது பெண் (வினா)`ஆனவர் தாம் ஆண் பெண் அலியலரே யாமாகில் சானகியை கொள்வரோ தாரமாய் அம்மானை?’

பொருள்: அவ்வாறான திருவரங்கர் ஆணும் பெண்ணும் அலியும் அல்லாதவரேயானால் சீதையை மணந்தது ஏன்?

மூன்றாவது பெண் (விடை)

`தாரமாய் கொண்டது மோர் சாபத் தாலம்மானை’

பொருள்: சீதையை மணந்ததும் ஒரு சாபத்தால் அம்மானை. சாபம் - பிருகு முனிவர் சாபத்தால், சிவபிரானது வில்லால் என்னும் இருபொருள்பட விடை கூறி அம்மானைக் காயை வீசிப் பிடித்தாள் (சாபம் என்ற சொல்லுக்கு வில் என்ற பொருளும் உண்டு).’’

(இன்னும் உணர்வோம்!)

பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாங்கள் விரும்பும் தெய்வங்கள், ஆசாரியர்கள், அரசர்கள் ஆகியோரை குழந்தையாகப் பாவித்து பாடுவதாகும். குழந்தையின் மூன்றாவது மாதம் முதல் இருபத்தோராவது மாதம் வரை பத்து பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் பத்து பாடல்கள் பாடுவர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் முதல் ஏழு பருவங்கள் ஒரே மாதிரி இருக்கும். கடைசி மூன்று பருவங்கள் மட்டும் மாறுபடும். பெண்களுக்கான பிள்ளைத்தமிழில் கடைசி மூன்று பருவங்களில் ஒன்றாக அமைந்ததுதான் அம்மானை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism