Published:Updated:

பட்டிக்காடா? பட்டணமா?

பட்டிக்காடா? பட்டணமா?
பிரீமியம் ஸ்டோரி
பட்டிக்காடா? பட்டணமா?

ஆச்சர்யம்ஆர்.வைதேகி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

பட்டிக்காடா? பட்டணமா?

ஆச்சர்யம்ஆர்.வைதேகி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
பட்டிக்காடா? பட்டணமா?
பிரீமியம் ஸ்டோரி
பட்டிக்காடா? பட்டணமா?

பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்ணின் வாசனையை மறந்து, கிரீன் கார்டு வாழ்க்கையைக் கவுரவமாக நினைக்கிறவர்களுக்கு மத்தியில் மலைக்கவைக்கிறார் அபர்ணா கிருஷ்ணன். சென்னையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவருடைய இன்றைய விலாசம்...  பாலகோட்டுப்பள்ளியில் உள்ள தலித்வாடா என்கிற தலித் கிராமக் குடியிருப்பு. தேவைகளைத் துறந்துவிட்டு, விருப்பங்களைத் தேடிச்சென்ற அபர்ணாவின் வாழ்க்கை அதிசயமானது, அசாத்தியமானதும்கூட!

‘`இந்தியாவிலயும் வெளிநாட்டுலயும் மூணு வருஷங்கள் கம்ப்யூட்டர் இன்ஜினீயரா வேலை பார்த்தேன். அந்த வேலையில மனநிறைவைத் தவிர, மத்த எல்லாம் இருந்தது. காந்தியைப் படிச்சதோட விளைவா எனக்குள்ள கிராமத்து வாழ்க்கைக்கான தேடல் அதிகமா இருந்தது. அப்பதான் என்னோட தோழி ஒருத்தங்க நகரத்து வாழ்க்கையை விட்டுட்டுக் கிராமத்துல போய் குடியேறினாங்க. அங்கே அவங்க விவசாயம் செய்துக்கிட்டே, தலித் மக்களோட பிரச்னைகள், விவசாயிகளோட பிரச்னைகள், மனித உரிமைகள்னு பல விஷயங்களுக்காகவும் போராடி னாங்க. நானும் அவங்ககூட கொஞ்ச நாள் தங்கியிருந்தேன். எனக்கும் அந்த வாழ்க்கையின் மேல் ஓர் ஈர்ப்பு வந்தது. அதையே எனக்கான நிரந்தர அடையாளமாகவும் மாத்திக்கிட்டேன்...’’ - அறிமுகம் சொல்கிற அபர்ணா, மனதளவிலும் 100 சதவிகிதம் கிராமத்து மனுஷியாகவே மாறிவிட்டவர். சக மனிதர்களிடம் காட்டுகிற அன்பும் எளிமையுமே அதற்குச் சாட்சி!

பட்டிக்காடா? பட்டணமா?

‘`அங்கேயே வரதப்பநாயுடுபேட்டா பள்ளிக்கூடத்துல குழந்தைங் களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திட்டிருந்தேன். என்னை மாதிரியே கிராமத்து வாழ்க்கைக்கான தேடல்ல அங்கே வந்தவர் நாகேஷ். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். பிறகு ஹரிஜன்வாடா என்ற இடத்துல ஒரு வட்டமான மண்குடிசை வீட்டுக்குக் குடிபோனோம். அந்தக் கிராமத்துல அப்போ அந்தக் குடிசை காலியா இருந்தது. வாடகை வாங்கற பழக்கமெல்லாம் அங்கே கிடையாது. ‘சும்மாத்தானே இருக்கு... நீங்க இருந்துக்கோங்க’னு சொன்னாங்க, அந்தக் குடிசைக்குச் சொந்தக்காரங்க. அங்கேயே கொஞ்சம் நிலம் வாங்கி, விவசாயம் பண்ணிட்டிருந்தோம். எங்கிருந்தோ வந்து திடீர்னு கிராமத்து மக்களோட ஐக்கியமான எங்களை ஆரம்பத்துல அந்த மக்கள் நம்பலை. விவசாயத்துல இறங்கின பிறகுதான் அவங்கள்ல ஒருத்தங்களா ஏத்துக்கிட்டாங்க...’’ என்கிறவர், அதன் பிறகும் கிராமத்து மக்களின் வாழ்க்கை முன்னேற்றங்
களுக்கான விஷயங்களிலேயே தீவிரமாக இயங்கத் தொடங்கியிருக்கிறார்.

‘`அந்த மக்களோட அடிப்படை வாழ்வாதாரமே அங்கே கேள்விக்குரியதாக இருந்தது. அது எனக்குப் பெரிய கவலையைத் தந்தது. அவங்களோட ஆரோக்கியமும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. எனக்கு ஆயுர்வேத மருத்துவம் தெரியும். அது மூலமா அந்தக் குழந்தைங்களைக் கொஞ்சம் சரியாக்கினேன்.

எல்லா வீடுகள்லயும் மாடுகள் இருக்கும். ஆனா, அவங்கக் குடும்பத்துல உள்ளவங்களுக்கு பால் கிடைக்காது. அந்தப் பாலை வித்தாதான் அவங்களுக்கு வருமானமே...  அவங்களோட ஒப்பிட்டுப்பார்த்தா நாங்க வாழறது ஆடம்பர வாழ்க்கை. எங்களுக்கு ரெண்டு வேளை பால் கிடைக்குது. பால் குடிக்காததால அந்தக் குழந்தைங்க ஆரோக்கியமே இல்லாம இருந்தது என்னை உறுத்தினது. ‘நீங்க விக்கற பாலில் கொஞ்சம் உங்களுக்கும் வச்சுக்கோங்க’னு சொல்லி குழந்தைங்களுக்கு பாலில் அஷ்வகந்தியும், இரும்புச்சத்துக்கான லோஹ பஸ்மமும் சேர்த்துக்கொடுக்கிற பழக்கத்தை உருவாக்கினேன். சில மாதங்கள்ல அந்தக் குழந்தைங்களோட உடல்நலம் தேற ஆரம்பிச்சது. குழந்தைகளுக்கான மாதாந்திர மருத்துவச்செலவு குறைஞ்சது...’’ என்கிற அபர்ணாவுக்கு இதை மட்டுமே தனது சாதனை யாகப் பார்க்க முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்டிக்காடா? பட்டணமா?

‘`குழந்தைங்களுக்கான பள்ளிக்கூடங்கள் சரியா இல்லை. ஏதோ படிக்கிறாங்க. பத்தாவதோ, பிளஸ் டூவோ பாஸ் பண்றாங்க. அதிகபட்சமா ஒரு டிகிரியும் வாங்கறாங்க. அதுக்கப்புறமும் அவங்க வாழ்க்கையில பெரிசா எந்த மாற்றங்களும் ஏற்படறதில்லை. எல்லாரையும் படிக்க வச்சு நகரத்துக்கு அனுப்பிட முடியாது. நகரத்துக் குழந்தைங்களுக்கே இன்னிக்கு வாய்ப்புகள் இல்லை. கிராமத்துப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியாகணும். எல்லாரையும் படிக்கவைத்து நகரத்துக்கு அனுப்பிட நினைக்கிறது சரியான முடிவில்லை. அந்த மக்களுக்கு நாகரிகமான ஒரு வாழ் வாதாரத்துக்கான உத்தரவாதம் தரப்பட வேண்டும். விவசாயத்தை விட்டுட்டு அது சாத்்தியமும் இல்லை. 60 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கும்போது அதைப் பலப்படுத்தியே தீர வேண்டியது அவசியமான, அவசரமான நடவடிக்கை. எங்களுக்கு இருக்கிற தொடர்புகளை வச்சு ஏற்கனவே இருக்கிற அரசாங்கத் திட்டங்களை ஒருங்கிணைத்து சரியா நடக்க ஏற்பாடு செய்யறோம்...’’ - அக்கறையாகச் சொல்பவர், கிராமத்துப் பெண்களுக்குத் துணிப்பைகள் தைக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறார். வீட்டுக்கொரு பெண் இந்தத்தையல் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்றாலும், அது அவர்களது பொருளாதார நிலைமையை மாற்றாததில் அபர்ணாவுக்கு வருத்தமே.

‘`மார்க்கெட்டிங் பெரிய பிரச்னையா இருக்கு. எல்லாருமே லாபத்தை நோக்கி ஓடிக்கிட்டிருக்கிறதால, இவங்களோட உழைப்பு அடிமாட்டு விலைக்குப் பேசப்படுது. இவங்களைவிட ரெண்டு ரூபா கம்மியா விற்கத் தயாரா இருக்கிறவங்கக்கிட்ட பிசினஸ் பேசறாங்க. அப்போ இந்த மக்களோட வாழ்க்கையில முன்னேற்றம் வர வாய்ப்பில்லாமப்போகுது. அரசாங்கத்தின்  பல பாலிசிகளும் மக்களுக்கு எதிரானதா இருக்கு.  தண்ணீர் இல்லாம விவசாயம் படுத்திருச்சு. நிறையபேர் பிழைப்புத்தேடி கிராமங்களை விட்டு நகர்ந்துட்டாங்க. அங்கேயும் பெரிய வேலைகள் இல்லை.  கிராமப் பொருளாதாரம் பத்தி மாநில அளவுல செயல்திட்டங்கள் வந்தால் மட்டும்தான் இந்த மக்களோட வாழ்க்கை சரியாகும்.

இத்தனை பிரச்னைகள் இருந்தாலுமே கிராமத்து வாழ்க்கையை விட்டு விலகிச் செல்ல பலரும் தயாராக இல்லை. வழக்கமாக நாம கிராமங்களைப் பத்திக் காலங்காலமா கேள்விப்பட்ட சாதி வெறியோ, ஆணாதிக்க மனப்பான்மையோ அங்கே கொஞ்சமும் இல்லாததுதான் ஆச்சர்யம்!

பட்டிக்காடுன்னு போறப்போக்குல சொல் லிட்டுப் போயிடறோம். ஆனா, கிராமத்து மக்களோட வெள்ளந்தியான மனசும் தாராள குணமும் பிரமிக்க வைக்கும். தனக்கு இருக்கான்னு யோசிக்காம, அடுத்தவங்களுக்கு எடுத்துக்கொடுக்கிற குணம்... அவங்களோட பாரம்பர்ய மருத்துவக்குறிப்புகள், கட்டடக் கலை, கூரை வேயறது, மண்பாண்டங்கள் செய்றது, குடும்பங்களா சேர்ந்து வாழறதுன்னு நிறைய சொல்லலாம்.

எப்பவாவது என்கூட நகரத்துக்கு வரும்போது, அவங்களுக்கு நம்ம வாழற தனிமைச்சூழலோ, பால் முதல் காய்கறிகள் வரைக்கும் சத்தில்லாத உணவுகளோ பிடிக்கிற தில்லை...’’ - அபர்ணாவின் வார்த்தைகள் வியப்பளிக்கின்றன.

பட்டிக்காடா? பட்டணமா?

‘`என் மகள் துரியாவுக்கு இப்ப 16 வயசு. என்கூடவே கிராமத்துலதான் வளர்ந்தா. ஹோம் ஸ்கூலிங் பண்ணிட்டு, ஆயுர்வேதம் கத்துக்கறா. எங்களோட விருப்பம் கிராமத்து வாழ்க்கையா இருந்தாலும் அவ இந்தத் தலைமுறைக் குழந்தையில்லையா? அதனால அவகூட பழகற குழந்தைங்களோட வாழ்க்கைமுறை இவளுக்குள்ள ஒரு டென்ஷனை கொடுக்கலாம். ஆனா, அவளுக்குக் கிடைச்ச பெரிய வரம்னா வலுவான கிராமத்துப் பின்னணி. ஏழை மக்களை நகரத்து மக்கள் பார்க்கிற மாதிரியான பரிதாபத்தோட அவ பார்க்க மாட்டா. பூ விற்கறவங்களை நிஜமான பாட்டியா நினைச்சுப்பா. வீடு பெருக்கிறது, கோலம் போடறதுன்னு எல்லா வேலைகளையும் அவளே செய்வா. நம்ம வேலைகளுக்கு இன் னொருத்தரை நாடறது தப்புனு உணர்ந்து வளர்ந்திருக்கா. அது நகரத்துல வளர்ந்திருந்தா சாத்தியமே ஆகியிருக்காது.

கலாசாரம், பழகற விதங்கள்ல கிராம மக்கள் உயர்ந்து நிற்கிறாங்க. பொருளாதார ரீதியில பின்தங்கின நிலையை மட்டும் சரி செய்துட்டா,  எல்லாமும் சரியாகிடும். தனிப்பட்ட முறையில என்னை மாதிரியான ஆட்களால ஒரு அளவுக்குத்தான் அதை சாத்தியப்படுத்த முடியும். அரசுத் தரப்புலேருந்து ஊக்கமும் உதவிகளும் அவசியம். `கம்போ, சோளமோ இவ்வளவு பயிரிட்டீங்கன்னா, அதை நாங்க வாங்கிக்கிறோம்'னு அரசுத் தரப்புலேருந்து உத்தரவாதம் கொடுக்கப்படணும். அப்போதான் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கிற கிராமத்து மக்களையும், விவசாயிகளை நம்பி இருக்கிற நகரத்து மக்களையும் காப்பாத்த முடியும்...’’

அத்தனை மக்களின் ஆதங்கமாகவும் வெளிப் படுகின்றன அபர்ணாவின் வார்த்தைகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism