Published:Updated:

‘சென்டிமென்ட்’களின் தேசம்!

‘சென்டிமென்ட்’களின் தேசம்!
பிரீமியம் ஸ்டோரி
‘சென்டிமென்ட்’களின் தேசம்!

உள்ளதைச் சொல்கிறேன்விக்னேஸ்வரி சுரேஷ் - ஓவியம்: ராமமூர்த்தி

‘சென்டிமென்ட்’களின் தேசம்!

உள்ளதைச் சொல்கிறேன்விக்னேஸ்வரி சுரேஷ் - ஓவியம்: ராமமூர்த்தி

Published:Updated:
‘சென்டிமென்ட்’களின் தேசம்!
பிரீமியம் ஸ்டோரி
‘சென்டிமென்ட்’களின் தேசம்!
‘சென்டிமென்ட்’களின் தேசம்!

‘நேரா போய், இடது பக்கமா திரும்பி, முதல் வலதை எடுக்கணும்...’ 

அட... இது ஏதோ வீட்டுக்குப் போவதற்கான வழியாக இருந்தால்தான் பரவாயில்லையே... வீட்டுக்குள் போகும் வழியைத்தான் வாஸ்துபடி மாற்றியமைத்திருக்கிறார் உறவினர் ஒருவர். இன்னும் தன் இல்லத்தின் ஒவ்வோர் அங்குலத்திலும் ஏதோ ஒரு சென்டிமென்ட் வைத்திருக்கிறார். அப்படி  ஓர் உறவினரையோ, நண்பரையோ நாம் எல்லோருமே கடந்திருப்போம்.

இந்தியா, ‘சென்டிமென்ட்’களின் தேசம். எல்லா வண்ணங்களிலும் தாயத்து கட்டிக்கொண்டு விளையாடும் விளையாட்டு வீரர்கள், ராக்கெட் அனுப்புவதற்குமுன் சின்னதாகப் பூஜை போடும் விஞ்ஞானிகள், திரைப்படத்தின் முதல் காட்சியில் பிள்ளையாரை அறிமுகப்படுத்தும் சூப்பர் ஸ்டார்கள், `சென்டிமென்ட் வேறு, பகுத்தறிவு வேறு’ என்று தெளிவாக இயங்கும் அரசியல்வாதிகள் என பல சுவாரஸ்ய மனிதர்களை உருவாக்குகின்ற நாடு இது. சாமான்யர்களை மட்டும் சென்டிமென்ட் விட்டுவைக்குமா என்ன?

பால்யத்தில் எத்தனையோ நட்புகள் எனினும், எல்லா பரீட்சைக்கும் ஒரே உடையை அணிந்துவந்த தோழி இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறாள். குங்குமம் கொட்டிவிட்டால், பால் பொங்கிச் சிந்திவிட்டால், வீட்டில் மங்கல காரியம் நடக்கும் என்ற வயதானவர்களின் சென்டிமென்ட்டுகளுக்கு பின்னால், நல்ல உளவியல் ஆறுதல் கிடைக்கிறது. வெளியே கிளம்புகையில் கால் இடறினால், உள்ளே வந்து தண்ணீர் குடித்துவிட்டு சற்றுநேரம் அமர்ந்துவிட்டுச் செல்லச் சொல்லும் பாட்டி, இப்போது என்னோடு இல்லை. எனினும் அந்த சென்டிமென்ட் என்னுடனேதான் இருக்கிறது.  நல்ல நாள் பார்த்து காரியத்தைத் தொடங்குகையில், அதில் வெற்றி கிட்டும் என்பதற்கான நம்பிக்கையை ஆரம்பத்திலேயே பெற்றுவிடுகிறேன்.

கோயிலுக்குப் போனால், வண்டி நிறுத்த ரசீது, செருப்பு டோக்கன், சிறப்பு தரிசனச் சீட்டு என சகலத்திலும் அந்தந்தக் கோயில் சாமி படத்தை அச்சடித்துத் தருகிறார்கள். தூக்கி எறிய மனது வருவதில்லை. சேர்த்து சேர்த்து வைத்துக்கொண்டாலோ, கைப்பை குப்பையாக மாறுகிறது. அவசரத்துக்கு எதையாவது தேடினால், கடலுக்குள் கடுகு தேடின கதையாகிறது. இதே சென்டிமென்ட்தான் சாமி காலண்டர்களுக்கும். வருடம் முழுவதும் ஆசி வழங்கிய முருகனை ஜனவரி பிறந்ததும் போதும் என்றா சொல்ல முடியும்? ஆக, வரவேற்பறையிலிருந்து சாமி அறைக்கு மாறுகிறார், காலண்டர் முருகன்.

நம் குழந்தை என்றால், ஒரே கோணத்தில் எடுக்கப்பட்ட நாலு புகைப்படமெனினும் எதையும் தூக்கிப்போட மனம் வருவதில்லை. கல்யாணம் முடிந்து முதன்முதலில் ராமேஸ்வரம் போனபோது வாங்கின சிப்பியிலான அலங்காரப் பொருள், தம்பியின் கல்யாணப் பத்திரிகை, குழந்தையின் முதல் கவுன் என எதுவும் இம்முறையும் இடத்தை காலிப்பண்ணப் போவதில்லை. நம்மைப்போன்ற சென்டி மென்ட் ஆசாமிகளுக்கு, அலமாரியை அடுக்குவதென்பது பொருட்களை இடம் மாற்றுவதோடு முடிகிறது.

என் தோழிக்கு நியூமராலஜி பைத்தியம் பிடித்துக்கொண்டது. குழந்தை பிறந்ததும் ‘ஞி’ அல்லது ‘க்‌ஷ்’ என்று தொடங்கும் பேர்  வைக்கச் சொல்லி வீட்டுக்கு வருபவர்களை அலற வைத்தாள். இப்படி பெயர் வைத்தால், நாட்டை ஆளுவான் என்று ஜோசியர் சொன்னாராம். ஏதாவது சீன, கொரிய நாடாக இருக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே பெயர் வைத்துவிட்ட குழந்தைக்கும் பெயருக்குப்பின் ஏகப்பட்ட ஆங்கில ‘ஏ’ சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். பெயர் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தால் வாயை மூடவே ஐந்து நிமிடம் ஆகிறது. இப்்போதைய ஆசிரியப்பணியின் சவாலே, கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஆ, இ, ஐ, ஓ-க்களை மீறி மாணவர்கள் பெயரைச் சரியாக உச்சரிப்பதுதான்!

சென்டிமென்ட்டில் பல வகை உள்ளன. மேலே சொன்னதெல்லாம் யாருக்கும் பாதிப்பில்லாத வகையைச் சார்ந்தவை. ஆனால், சாதாரணமாகப் பிறக்க வேண்டிய குழந்தையை ஜோசியர் சொல்லும் நாள், நட்சத்திரப்படி அறுவை சிகிச்சை செய்து பிரசவிக்கும் சென்டிமென்ட்கள் திகிலூட்டக் கூடியவை. முப்பது வருடம் கழித்து, இவ்வாறு பிறந்த குழந்தைகளில் எத்தனை பேர் அம்பானி ஆகியிருக்கிறார்கள் என்றொரு கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அதற்கும் முன்பாக, அப்படி நாள் குறித்துத் தருவது, `கருவில் இருப்பது ஆணா, பெண்ணா’ என்று கண்டறிவது போல, இதையும் சட்டப்படி குற்றம் என்றே அறிவித்துவிடலாம்.

இதுபோலவே கைம்பெண்கள், குழந்தை இல்லாதவர்களிடம் சமூகம் பார்க்கும் பல சென்டிமென்ட்கள் குரூரமானவை. சக மனிதரின் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காத எந்த ஒரு பழக்கமும், காட்டுமிராண்டித்தனமானதுதான். நினைத்தால் நம்மால் சிறு மகிழ்ச்சியைப் பிறருக்குக் கொடுக்க முடியும் என்பதே மானிடராகப் பிறந்ததற்கான சிறப்பு.

நம்மைச் சுற்றி சென்டிமென்ட்டுகளுக்கு பஞ்சமே இல்லை. எனினும், வேப்பமரத்தை தெய்வமாக வணங்குவது, ஒரு தென்னையை வெட்டினால் இரண்டு தென்னம்பிள்ளையை நட வேண்டும் என்பது, நெல் விளையும் மண்ணைச் செருப்பு காலோடு மிதிக்கக் கூடாது, ஒரு பிள்ளையாகப் பிறந்தவர்கள் பூரானை அடிக்கக்கூடாது, குழவிக்கூட்டைக் கலைக்கக்கூடாது போன்றவை மனதுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. இவற்றைத் தொடங்கியவர்கள் இயற்கையின்பால் மிகப்பெரிய காதல் கொண்டிருந்திருக்க வேண்டும். இவற்றைப் பகுத்தாய்ந்து பார்ப்பதைவிட, அப்படியே ஏற்பதே சிறந்ததாகத் தோன்றுகிறது.

புதிதாக ஏதாவது சென்டிமென்ட்டை சேர்க்க முடியுமாகின், நெகிழி (பிளாஸ்டிக்) பயன்படுத்தினால் ஆயுள் குறையும், சாலையில் எச்சில் துப்புபவரைப் பார்த்தால் போன காரியம் விளங்காது, தண்ணீரை வீணாக்கினால் அடுத்த பிறவியில் ஒட்டகமாகப் பிறப்போம் என்று பயமுறுத்தி வைக்கலாம். ‘அல்லவை நீக்கி, நல்லவை சேர்த்து’ என்பது சென்டிமென்ட்களுக்கும் பொருந்தும்தானே?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism