Published:Updated:

கதை சொல்லும் கலை வித்தகி!

கதை சொல்லும் கலை வித்தகி!
பிரீமியம் ஸ்டோரி
கதை சொல்லும் கலை வித்தகி!

அம்மாக்களுக்கும் சுட்டிகளுக்கும்ஸ்ரீலோபாமுத்ரா

கதை சொல்லும் கலை வித்தகி!

அம்மாக்களுக்கும் சுட்டிகளுக்கும்ஸ்ரீலோபாமுத்ரா

Published:Updated:
கதை சொல்லும் கலை வித்தகி!
பிரீமியம் ஸ்டோரி
கதை சொல்லும் கலை வித்தகி!

தீபா கிரண், நம் தமிழ்ப் பெண். இன்று உலக அளவில் கதைசொல்லும் கலையில் பிரபலமானவர்களில் ஒருவர். இரானில் நடைபெற்ற உலக அளவிலான கதைசொல்லும் திருவிழாவில் கலந்துகொண்ட முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்கும் உரியவர். ஹைதராபாத்தில் வசிக்கும் இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். இவருடைய உரையாடலில்கூட கண்கள் கதை பேசுகின்றன!

‘`குழந்தைப் பருவத்தை சென்னை, தி.நகரில் கழித்தேன். அப்பாவும் தாத்தாவும் ‘ஆனந்த விகடன்’ வாசகர்கள். அப்படி ஆர்வமாக அதில் என்ன படிக்கிறார்கள் என்று புரட்டியபோது, விகடன் கதைகள் என் கைகளுக்கும் வந்தன. அப்பாவும் நிறையக் கதைகள் சொல்வார். அம்மாவுக்குப் பூர்வீகம் பாலக்காடு. பல வருடங்கள் மேற்கு வங்கத்தில் வசித்தேன். அதனால் தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், பெங்காலி மற்றும் சில மொழிகளும் தெரியும்.

கதை சொல்லும் கலை வித்தகி!

பி.எஸ்ஸி., நியூட்ரீஷியன் கோர்ஸ் படித்த பின், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அப்போது அகில இந்திய வானொலியில் பகுதி நேரமாகப் பணிபுரிந்ததுடன், ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் நடத்தி வந்தேன். பின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகப் பணியிடங்களில் பணியாற்றினேன்’’ என்கிறவர், தான் கதைசொல்லியான கதையையும் சொல்கிறார்.

‘`2008-ம் ஆண்டு நாசிக் நகரில் முதன்முதலில் ‘ஸ்டோரி டெல்லிங்’ கோடை முகாம் நடத்தினேன். சிறுவயதில் நான் அப்பாவிடம் முறைப்படி பயின்ற பரதநாட்டியம் மற்றும் வீணை, அப்போது எனக்கு உதவியது. புதியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வமும், இயற்கையிலேயே அமைந்திருந்த படைப்பாற்றலும் அந்த முயற்சியில் என்னைக் கைவிடவில்லை’’ என்கிற தீபா, நடனக் கலைஞர்களுக்கே உரிய நளினத்துடன் முகத்தில் பல்வேறு பாவங்களைக் காட்டி, அதை இசையுடன் கோத்து, கதைகள் சொல்கிறார். கதையின் போக்கில் குழந்தைகளில் சிலரை மேடைக்கு அழைத்து, அவர்களையும் கதாபாத்திரங்களில் ஒருவராகப் பங்குபெறச் செய்கிறார். இந்த அணுகுமுறை, குழந்தைகளையும் பெற்றோரையும் எளிதில் கவர்கிறது. பார்வையாளர் மத்தியில் நேரடி யான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

தீபா சொல்கிற தெனாலிராமன் கதைகள் பிரபலமானவை. ராமர், பாலம் கட்டிய கதையில் சிறு அணில்களின் பங்கை அவர் சொல்லும்போது, குழந்தைகளின் முகத்தில் தோன்றும் ஆர்வமும் உற்சாகமும்தான் இந்தக் கலையின் வெற்றி. குழந்தைகளின் கவனத்தை எளிதில் கவரும் வகையில் கதைசொல்லும் பாணி அமைந்தது, தீபாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`கதைசொல்லும்போது, அந்தக் கதையின் சாரம், அதைக் கேட்பவர்கள், கதைசொல்லும் இடம் என அனைத்துமே முக்கியம். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பெரும் புலவர்களின் கதைகளை ‘ஹரிகதா’ பாணியில் சொன்னபோது வயதானவர்களும் ரசித்துக் கேட்டனர். அப்போது தான் இசையால் உலகை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை பிறந்தது.

வியட்நாம், இரான் நாடுகளில் கதைசொல்லி இருக் கிறேன். இரான் நாட்டு வர லாற்றில் ஏராளமான கதைகள் விரவிக் கிடக்கின்றன. அந்த நாட்டு அரசாங்கம் கதைசொல் வதற்கென்றே பலரைப் பணிக்கு அமர்த்தி இருக்கிறது. அவர் களுக்குரிய மரியாதையும் அங்கீகாரமும் அளிக்க, பெரும் தொகையை ஒதுக்குகிறது’’ என்று சொல்லும் தீபா, கதைசொல்லும் பழக்கத்தை வலுப்படுத்தத் தான் எடுத்திருக்கும் முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டார். 

கதை சொல்லும் கலை வித்தகி!

‘`2013-ல் ‘Royal Mistake’ என்ற கதைப் புத்தகத்தை ஆடி யோவுடன் வெளியிட்டேன். நம் பாரத நாட்டு கலாசாரங்களையும் பண்பாட் டையும் கதைகள் மூலம் காக்கும் முயற்சியாக, ‘Story Arts India Hyderabad’ என்ற அமைப்பை உருவாக்கினேன். ஆசிரியர் வகுப்பறைகளில் கதைசொல்வதை வலியுறுத்தும்விதமாக, அவர்களுக்குப் பிரத்யேகப் பயிற்சிப் பட்டறை களை நடத்துகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். பெரும் தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் என்னை குழந்தைகளுக்குக் கதைசொல்ல வேண்டி அணுகுகிறார்கள்.

தெளிவான உச்சரிப்புடன் பாடல்களையும் இடையே சேர்த்து, கை, கால், கண் என உடலையும் பேசச் செய்து, கதைக்கு நடுவே கேள்விகளைக் கேட்டு, குழந்தைகள் யோசிப்பதற்குப் போதுமான நேரம் ஒதுக்கி, கதைசொல்லும்போது... அந்த மழலைகளின் முகத்தில் தெரியும் ஆர்வமும் மகிழ்ச்சியும்தான் இந்தக் கதைசொல்லிக்கு டானிக்!” - புன்னகை பிரியாமல் சொல்கிறார் தீபா கிரண்.

அம்மாக்கள் சுட்டிகளுக்குச் சொல்வதற்காக, தீபா கூறுகிற சில கதைகளை இங்கே அளித்திருக்கிறோம். கதானுபவம் வாய்க்கட்டும்!

கதை சொல்லும் கலை வித்தகி!

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்!

எண்கள் அனைத்துக்குமான ‘ப்ளே டைம்' அது. அதில், பூஜ்ஜியம் எண்ணுடன் நண்பராக இருக்க மட்டும் மற்ற எண்கள் யாருமே விரும்பவில்லை. ‘நீ ஒண்ணுமே இல்ல, நீ ஒண்ணுமே இல்ல’ என்று அதை 1, 2, 3, 4 என மற்ற எண்கள் அனைத்தும் கேலிசெய்தபடி இருந்தன. அதனுடன் விளையாடவும் மறுத்தன. இதனால் ஓர் ஓரத்தில் அமர்ந்து அழுதபடி இருந்த பூஜ்ஜியத்தைச் சூரியன் கவனித்து, அதனிடம் வந்து பேசியது.

‘ஹாய் ஜீரோ! நீ என்னை மாதிரியே ரவுண்டா, அழகா இருக்கே... கவலைப்படாதே. இப்போ என்ன நடக்குதுனு பாரு’ என்று சொன்ன சூரியன், 1, 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9 என, அனைத்தையும் அழைத்தது.

‘உங்கள்ல யாரெல்லாம் ஜீரோகூட ஃப்ரெண்ட் ஆகப் போறீங்க?’

யாரும் முன்வராதபோது, 1 மட்டும் முன்வந்து பூஜ்ஜியத்தின் கைகளைக் கோக்க, அந்த அதிசயம் நடந்தது. 1, 10 ஆக மாறியது. தன்னைவிட 10 மடங்கு பெரிதான மதிப்பு பெற்றது. 9 என்ற அதிக மதிப்புள்ள எண்ணைவிட, அதிக மதிப்பு பெற்றது 1. 

இப்போது வரிசையாக மற்ற எண்களும் ஓடிச்சென்று பூஜ்ஜியத்தின் கரம் பற்றிக் கொண்டன. 2, 20 ஆனது. 3, 30 ஆனது. 4, 40 ஆனது! இப்படியே, 9 வரை, அனைத்து எண்களும் பூஜ்ஜியத்துடன் கைகோத்து, தங்கள் மதிப்பு 10 மடங்கு பெருகியதில் பரவசமாகின. அனைவரும் இப்போது பூஜ்ஜியத் துடன் நண்பர்கள் ஆக ஆர்வமாயின.

சூரியன் சொன்னது, ‘எதற்கும் உதவாதவர் என்று இங்கு யாருமில்லை. கூடி வாழ்ந்தால், மதிப்பு பெருகும்!’

கதை சொல்லும் கலை வித்தகி!

மேகத்தின் ஆசை!

வானத்தில் மிதந்துகொண்டிருந்த பஞ்சு போன்ற அந்த வெண் மேகத்தின் பெயர் புஜ்ஜி. அவளுக்கு அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருப்பதில் அவ்வளவு சந்தோஷம். ஒருநாள், மழைத்துளிகளைப் பார்த்த அவள், தானும் மழையாக விரும்பினாள். என்ன அதிசயம்... புஜ்ஜி மழைத்துளியாக மாறிப்போனாள்.

வானில் இருந்து பூமி நோக்கி மழைத்துளியாக விழுந்தபோது, அவ்வளவு பரவசப்பட்டாள் புஜ்ஜி. அடுத்ததாக, அவள் மண்ணில் விழுந்தபோது, அங்கு சலசலசல என ஓடிக்கொண்டிருந்த நதியைப் பார்த்து வியந்தாள். 

‘நதி இவ்வளவு அழகா? நான் நதியாக வேண்டும்’ என்று புஜ்ஜி விரும்பிய மறு நிமிடம், அவள் நதியாக மாறி நகர்ந்துகொண்டிருந்தாள். தன் இரு கரைகளிலும் வளர்ந்திருந்த செடி, கொடி, மரங்களை ரசித்தவாறு நதியாக நடந்துகொண்டே சென்ற புஜ்ஜிக்கு, தூரத்தில் தெரிந்தது கடல்.

‘எவ்வளவு பிரமாண்டம் இந்தக் கடல்?’ என்று கண்கள் விரித்துப் பார்த்து, அலை களின் ஒலியில் அசந்துபோன புஜ்ஜி, இப்போது கடலாக மாற விரும்பினாள். மீண்டும் அந்த அதிசயம் நடந்தது. புஜ்ஜி இப்போது கடலாக மாறி, பூமி முழுக்கப் படர்ந்து கிடந்தாள். மல்லாக்கப் படுத்திருந்தவள், வானத்தில் மிதந்துகொண்டிருந்த வெண் மேகங்களைப் பார்த்தாள். ‘நான் மேகமானா எவ்ளோ ஜாலியா வானத்தைச் சுத்தி சுத்தி வரலாம்’ என்று ஆசைப்பட்டவள், இப்போது வானம் ஏறி வந்து, மேகமாகிவிட்டாள்!

இதுதான் வாட்டர் சைக்கிள் செல்லங்களா!

கதை சொல்லும் கலை வித்தகி!

தவளைப் பந்தயம்!

அந்தக் காட்டுக்குள் மிகப்பெரிய அரண்மனை இருந்தது. அதன் கோட்டைச் சுவர், மிக மிக உயரமானது. `பட பட படா!'

அன்று அந்தக் காட்டின் விலங்குகள் பலவும் அரண்மனை யின் பின்பக்கக் கோட்டைச் சுவரைச் சுற்றி நின்றன. காரணம், தவளைப் பந்தயம்! ஆஹா!

ஆம்... அந்த வானுயர்ந்த கோட்டைச் சுவரை யார் முதலில் எட்டுகிறார்கள் என்ற போட்டியில் பங்குகொள்ள, அங்கு நூற்றுக்கணக்கான தவளைகள் தயாராக இருந்தன. போட்டி ஆரம்பமானது. தவளைகள் சுவரில் ஏற ஆரம்பித்தன. `பச்சக் பச்சக் பச்சக்!'

வந்திருந்த விலங்குகள் அனைத்தும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தின! ‘ஹேஹே ஜோஜோ ஹேஹே!’

சுவரின் பாதி உயரத்தைத் தாண்டுவதற்குள், பல தவளைகள் முடியாமல் கீழே விழுந்தன. `சொத் சொத் சொய்ங்!'

மூன்று தவளைகள் மட்டும் இறுதியாக முன் னேறிக் கொண்டிருந்தன. ஆனால், கீழே நின்ற விலங்குகளுக்கு, ஒருவேளை அவர்கள் அங்கிருந்து விழுந்தால் அடி பலமாக இருக்குமே என்ற கவலை வந்தது. எனவே, ‘போதும். வேண்டாம். ஒருவேளை விழுந்தால் அடி பலமாக இருக்கும். கீழே இறங்கிவிடுங்கள்’ என்று கத்த ஆரம்பித்தன. அதைக் கேட்டதும் மூன்று தவளைகளில் இரண்டு தவளைகள் மேலே ஏறுவதை நிறுத்தி, பத்திரமாகக் கீழே இறங்கிவிட்டன. ஆனால், ஒரு தவளை மட்டும் தொடர்ந்து மேலே ஏறிக்கொண்டே இருந்தது. `பச்சக் பச்சக் பச்சக்!'

ஒரே நிசப்தம். விலங்குகள் அனைத்தும் பதற்றமும் கவலையு மாக அந்தத் தவளையைப் பார்த்துக்கொண்டிருந்தன. அந்தத் தவளையோ ஒரே குறியாக ஏறி, சுவரின் மேல் பகுதியை வெற்றிகரமாக அடைந்துவிட்டது. `ஹிப்ஹிப் ஹுர்ரே!'
பறவைகள் வானில் பறந்துச்சென்று, அந்தத் தவளைக்கு வாழ்த்துச்சொல்லி, ‘நாங்கள் அவ்வளவு எச்சரித்தும், நீ எப்படி பயமில்லாமல் ஏறினாய்?’ என்று கேட்டன. அதற்குத் தவளை சொன்னது, ‘எனக்குக் காது கேட்காது... நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லையே!’

மற்றவர்களின் பயமுறுத்தல்களுக்குக் காதுகொடுக்காமல் முயற்சியைத் தொடர்ந்துகொண்டே இருந்தால், வெற்றி நிச்சயம் குட்டீஸ்!

கதை சொல்லும் கலை வித்தகி!

தீபாவின் சப்போட்டா கன்று ஏன் வளரவில்லை?! 

தஞ்சாவூரில் இருந்து வந்திருந்த தங்கள் பாட்டியை, திவ்யாவும் தீபாவும் சென்று கட்டிக்கொண்டனர். எப்போதும்போல, அன்றும் அவர் தன் பேத்திகளுக்காக ஒரு சிறப்புப் பரிசு கொண்டுவந்திருந்தார். ‘என்ன பாட்டி அது?’ என்று இருவரும் ஆர்வமாகக் கேட்க, பாட்டி தன் உள்ளங்கையை விரித்து, சப்போட்டா பழ விதைகளைக் காட்டினார்.

‘ஆளுக்கொரு விதை எடுத்து, தோட்டத்தில் ஆளுக்கொரு இடத்தில் புதைத்து வையுங்கள். சில நாட்களில், விதை கன்றாக முளைத்து வரும் பாருங்கள்!’

திவ்யாவுக்கும் தீபாவுக்கும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. செடி வளர்ப்பதில் இதுவரை அவர்களுக்கு அனுபவம் இல்லை என்றாலும், பாட்டி சொன்னவாறே விதையைப் புதைத்துவைத்து, தினமும் தண்ணீர் ஊற்றினர்.

 மூன்று வாரங்கள் கழித்து, திவ்யாவின் விதை முளைவிட்டிருந்தது. அவளுக்கு ஏக குஷி. தீபாவுக்கோ ஒரே அழுகை. ‘என் விதை இன்னும் முளைக்கவில்லை’ என்று அழுதவளை, வீட்டுப் பெரியவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ‘உன் விதை இன்னும் கொஞ்சநாள் கழிச்சு முளைக்கும், பொறுமையா இரு’ என்று அவர்கள் சொன்னதை நம்பி, காத்திருந்தாள் தீபா. ஐந்து வாரங்களுக்குப் பிறகும் விதை முளைக்க வில்லை.

‘தீபா, தினமும் தண்ணீர் ஊத்தினியா?’ என்ற அம்மாவின் கேள்விக்கு, தலையசைத்தாள் தீபா. ‘வெயில் படுற இடமா பார்த்து விதையை வெச்சியா?’ என்ற பாட்டியின் கேள்விக்கும் தலையசைத் தாள் தீபா. ‘இங்கதான் விதையை ஊன்றி வெச்சியா? நல்லா ஞாபகமிருக்கா?’ என்று அப்பா கேட்க, ‘நல்லா தெரியும்பா... இங்கதான். டெய்லி அதை எடுத்து எடுத்து முளைச்சிருக்கானு பார்ப்பேனே..? நேத்துகூடப் பார்த்தேனே!’ - திவ்யா சொன்னதும் பெரியவர்கள் அனைவரும் ஒரு நொடி அதிர்ந்து, பிறகு சிரித்துவிட்டார்கள். தீபாவின் விதை முளைக்காமல் போனதற்கு அவர்களுக்குக் காரணம் தெரிந்துவிட்டது. உங்களுக்கும்தானே குட்டீஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism