Published:Updated:

லட்சியம்... அது நிச்சயமா?

லட்சியம்... அது நிச்சயமா?
பிரீமியம் ஸ்டோரி
லட்சியம்... அது நிச்சயமா?

கே.புவனேஸ்வரி, படம்: மீ.நிவேதன்தீர்மானம் 2017

லட்சியம்... அது நிச்சயமா?

கே.புவனேஸ்வரி, படம்: மீ.நிவேதன்தீர்மானம் 2017

Published:Updated:
லட்சியம்... அது நிச்சயமா?
பிரீமியம் ஸ்டோரி
லட்சியம்... அது நிச்சயமா?

வ்வொரு புதிய ஆண்டின் தொடக்கத்திலும் புதிய திட்டங்களை வகுக்கும் பழக்கம் கொண்ட நாம், அவற்றை வெற்றி பெறச் செய்கிறோமா? என்ன திட்டம் வகுத்தோம் என்பதையே நினைவில்கொள்ள முடியாத சூழல்களும் ஏற்படுவது உண்டு. இதுபோன்ற நெருக்கடிகளை எல்லாம் தகர்த்து, எல்லா நாட்களையும் இனிய நாட்களாக மாற்றி, வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஆளுமைகள் சிலரிடம் இதுகுறித்து பேசினோம்...

லட்சியம்... அது நிச்சயமா?

ஜோதிமணி (காங்கிரஸ்)

 “பொதுவாக புத்தாண்டு தீர்மானங்கள் எதுவும் நான் எடுப்பதில்லை. எனக்கான வேலைகளைத் திறம்பட செய்ய வேண்டும் என்றே எப்போதும் கருதுவேன். ஆண்டின் முதல் நாள் எப்படித் தொடங்குகிறதோ, அவ்வாறே கடைசி நாளையும் மதிப்பீடு செய்வேன். ஆண்டு தொடங்கி என்ன வேலைகள் வந்தாலும் முழு மனதோடு செய்து முடிப்பேன். ஒவ்வொரு நாள் முடிவிலும் என்னுடைய வேலைகளில்  எதனை சிறப்பாக செய்துள்ளேன் என்று நினைவுக்குக் கொண்டு வருவேன். சிறப்பாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன். அரைகுறையாக இருந்தால் அதற்குப் பயிற்சி என்று எடுத்துக் கொள்வேன். என்னைப்பற்றியும்  திட்டங்கள் பற்றியும் மதிப்பீடு செய்ய மற்றொரு வழியும் வைத்துள்ளேன். அதுதான் தியான முறை! தியானத்தின்போது எனது பலவீனங்களை கைவிட்டு, மேம்படுத்த வேண்டியவற்றை மெருகேற்றும் செயல்களைச் செய்வேன்.

நீண்ட காலத் திட்டங்களைச் செய்யும்போது, அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அதுகுறித்த திறனாய்வு நடக்கும். அந்தத் திட்டத்தில் மற்றவர்களும் இருப்பதால் கலந்து ஆலோசிப்பேன்.

பொதுவாழ்வில் உள்ளவர்கள் எப்போதுமே கடமை உணர்வோடு இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். நாங்கள் செய்யக்கூடிய வேலைகளில் நிறைய பேரின் உழைப்பும் நேரமும் இருக்கிறது. அதனால், அதிகபட்ச பொறுப்பு உணர்வோடு செயல்படவே எண்ணுவேன். ஒரு நாள் உறுதிமொழி எடுத்துவிட்டு, வருடக் கடைசியில் எண்ணிப்பார்க்கிற விஷயம் அல்ல இது!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லட்சியம்... அது நிச்சயமா?

ராதிகா (நடிகை)

“சில வருடங்களுக்கு முன்பு எடுத்த தீர் மானங்களைச் சரியான முறையில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். 2017-ல் சில நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். குறிப்பாக சீனா மற்றும் ஸ்பெயின். என் பயணம் சிறப்பாக அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை!''

லட்சியம்... அது நிச்சயமா?

அருள்மொழி (வழக்கறிஞர்)

“பள்ளிகளுக்குச் செல்கிற நாட்களில் தீர்மானம் எடுத்திருக்கிறேன். அதை அப்படியே தொடர்ந்தது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் டைரி எழுத வேண்டும் என்று எண்ணுவேன்.ஒரு மாதம் எழுதுவேன். பிறகு அப்படியே விட்டு விடுவேன்.

இப்போது நான் புதிய ஆண்டுக்காகக் காத்திருப்பதில்லை. கோபம் வந்தால் சில நேரங்களில் கடுமையான சொற்கள் வந்துவிடும். அதை மாற்ற வேண்டுமே... அப்படி நினைக்கிற வற்றை மாற்றுவதற்கு அந்த நாள் முதலே முயற்சி எடுத்துக்கொண்டிருப்பேன்.

படிக்கும்போது எடுக்கிற குறிப்புகளைத் தொகுத்து வைத்துக் கொள்வதில்லை.  அதனால், தேடுவதிலேயே நிறைய நேரம் செலவானது. இப்போது அந்தச் சிக்கலை புரிந்துகொண்டு, எடுத்த குறிப்புகளை தொகுக்கத் தொடங்கி விட்டேன்.

நம்முடைய கருத்துகளைப் பகிர்கிற நிகழ்ச்சிகள், கூட்டங்கள் இருந்தால் அதில் பங்கேற்க விரும்புகிறேன். பெரியாருக்குப் பிடித்த குறளான `குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்' என்கிற நிலையில்தான் என் பயணம் தொடர்கிறது. ஆண்டின் தொடக்கத்திலே புத்தகக் காட்சியில்  பேசியுள்ளேன். அதுவே மிகுந்த மகிழ்வான தருணம்!''

லட்சியம்... அது நிச்சயமா?

வாசுகி (இந்திய ஜனநாயக மாதர் சங்கம்)

“என்னுடைய தீர்மானங் கள் இயக்கம் சார்ந்ததாகவே இருக்கும். உதாரணமாக...  சாதி ஆணவக் கொலைகள் அதிக மாக இருந்ததால் அதற்காக  தனிச்சட்டம் கொண்டு வர முயற்சி எடுத்தேன். அதற்காக தமிழகம் முழு வதும் மாதர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடந் துள்ளன. மார்க்சிஸ்ட்  கட்சியின் சட்ட மன்றக்குழு தலை வராக உள்ள சவுந்திர ராஜனின் பெயரில் தனிநபர் மசோதா ஒன்றும் தாக்கல் செய்துள்ளோம். இப்படி சாதி ஆணவக்கொலைகளுக்கு எதிரான முழக்கங் களை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்கிறோம்.

பெண்கள் மீதான வன்முறையில் தமிழக அரசை கொள்கை ரீதியாக தலையிட வைப்பதற்கான நிர்பந்தத்தை அதிகப்படுத்த எண்ணியுள்ளேன். கோவையில் 83 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை, 8 மாத குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.... இப்படி வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கான   நடவடிக் கைகளில் இந்த ஆண்டு  என்னுடைய  கவனம் இருக்கும்.

மாநில மகளிர் ஆணையத்துக்கு தலைவர் பதவி நிரப்பப்படவில்லை. மாநில மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்கள் நிரப்பப்படவில்லை. இதையெல்லாம் செயல் படுத்துவதற்கான முயற்சியையும் இந்த வருடம் வலுவாக எடுக்க உள்ளோம். ஒரு பாதிப்பு ஏற்பட்டது என்று சொன்னால், அதற்கு புகார் கொடுப்பதும் நீதி கிடைப்பதும் எளிதாக்கப்பட வேண்டும் என்பதைத் தழுவியதாகவும் என் செயல்பாடுகள் அமையும்.''

லட்சியம்... அது நிச்சயமா?

வெண்ணிற ஆடை நிர்மலா (அ.தி.மு.க)

“2015-2016 காலகட்டத்தில் புரட்சித்தலைவி யின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் எனது பிரசாரங்கள் இருந்துள்ளன.  அதேபோல 2017-ம் ஆண்டிலும் புரட்சித்தலைவியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டுசெல்வதில் நான் கவனம் செலுத்துவேன்.

 தனிப்பட்ட முறையில் இன்றுவரை நடனத்தில் என்னுடைய பங்களிப்பு தொடர்ந்துகொண்டே உள்ளது. ஜனவரி மாதத்தில் ஒரு  நடன நிகழ்ச்சியில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளேன். 40 வயதானாலே நடக்கக்கூட முடியவில்லை என்று கூறுபவர்களின் எண்ணங்களை மாற்றும்  விதமாக எனது நடனக்கலையை கொண்டு செல்லத் திட்டமிட்டிருக்கிறேன். எங்களுடைய குடும்ப நண்பரான செம்பை வைத்தியநாத பாகவதரின் உயிர், பாடிக்கொண்டிருந்தபோது தான் பிரிந்தது. அதேபோல என்னுடைய கடைசி காலமும் ஆடியே கழிய வேண்டும் என்பதே எனது லட்சியம்!''

மகிழ்ச்சி, சுயபரிசோதனை, தகவல் மேம்பாடு... இவை மூன்றும் ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் முடிவிலும் தொடர்ந்தால் அனைவருமே லட்சியவாதிகள் என்பதைத்தான் இந்த ஆளுமைகளின் அனுபவங்கள் நமக்குச் சொல்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism