Published:Updated:

கல்லிலே ஒரு கவிதை!

கல்லிலே ஒரு கவிதை!
பிரீமியம் ஸ்டோரி
கல்லிலே ஒரு கவிதை!

உலா போவோமா?ஜி.பிருந்தா

கல்லிலே ஒரு கவிதை!

உலா போவோமா?ஜி.பிருந்தா

Published:Updated:
கல்லிலே ஒரு கவிதை!
பிரீமியம் ஸ்டோரி
கல்லிலே ஒரு கவிதை!
கல்லிலே ஒரு கவிதை!

பாரத மண்ணில் பல இடங்கள் காண்பதற்குத் திகட்டாதவை. மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டுபவை. எத்தனை முறை பார்த்தாலும் முழுப் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முடியாத வகையில் ஆச்சர்யங்களை அளித்துக்கொண்டே இருப்பவை. அவற்றில் ஒன்றுதான் `கோனார்க்' சூரியனார் கோயில். தூரத்தில் கோபுரம்போல தெரிந்தாலும் நெருங்க நெருங்க பிரமாண்டமாக விரிகிறது. `கல்லில் ஒரு கவிதை’ என்று தாகூரால் புகழாரம் சூடப்பட்ட பெருமைக்குரியது இக்கோயில். அங்குலம் அங்குலமாகச் செதுக்கப்பட்டுள்ள இந்தக் கல்லாலான மாளிகை அபரிமிதமான அழகுடன் திகழ்கிறது. ஆற்றல் மற்றும் பேரொளி காரணமாக வற்றாத களஞ்சியமாகவே சூரியக்கடவுள் குறிப்பிடப்படுகிறார். வேதங்கள் சூரியனை உலகின் ஜீவாதாரமாக விவரிக்கின்றன. சூரியதலங்களுக்குச் சென்று அவரைத் தரிசித்து அங்குள்ள புண்ணியத் தீர்த்தத்தில் மூழ்கி எழுவோருக்குப் பார்வையின்மை மற்றும் சருமநோய்களிலிருந்து மீட்சி கிடைப்பதாக நம்பப் படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணனின் மகனான சம்பா, சாபம் காரணமாகத் தொழு நோயால் பீடிக்கப்பட்டிருந்தான். அவன் பூரிக்கு வடகிழக்கில் உள்ள கடற்கரைக்கு ஆதித்யனைத் தொழுவதற்காக வந்தான். இங்கு தாமரை மேல் வீற்றிருக்கும் சூரியனின் சிலையை அவன் காணப்பெற்று துதி செய்து சாபம் நீங்கப் பெற்றான். நன்றியறிதலாக ஒரு கோயிலும் கட்டினான். அதனால் இது கோணாதித்ய தலம் (kona - மூலை, arka - சூரியன்) என்று பெயர் பெற்று, பின்னாளில் கோனார்க் என்று மருவியிருக்கிறது.

உள்ளூர் கதையும் உண்டு!

ஒடியாவின் இலக்கியங்களில் காணப்படும் கதையில் `தராமா' என்ற சிறுவனின் புகழ் சொல்லப் படுகிறது. அவன் இந்தக் கோயிலைக் கட்டிய தலைமைச்சிற்பியின் மகன். 12 வருடங்களுக்கு 12,000 சிற்பிகள் இந்த மகோன்னத வடிவத்தை உண்டாக்கப் பாடுபட்டனர். கிட்டத்தட்ட முடியும் நேரத்தில் கோபுரத்தின் உச்சியில் ஒரு குவி மாடத்தை (பெரிய காந்தக்கல்) எவராலும் பொறுத்த முடியவில்லை. கடுங்கோபம் கொண்ட மன்னன் கெடு வைத்தான். மறுநாள் காலைக் குள் பணி முடியவில்லை என்றால் எல்லோருடைய தலையும் தரையில் உருளும் என்றான். தந்தையைக் காக்கப் புறப்பட்டான் தனயன் தராமா. அன்றிரவே கோபுரத்தின் உச்சிக்குச்சென்று குவி மாடத்தைப் பொருத்தினான். திரும்பிப் பார்த்தான். கீழே கடலின் அலைகள் அவனை வாவென்றழைத்தன. மறுநாள் காலை சூரியனின் கிரணங்கள் அந்த மாடத்தின் மீது பட்டு, பளபளவென அந்தக் கல் ஜொலித்தது. ஆனால், எங்கு தேடியும் அந்தச் சிறுவன் கிடைக்கவில்லை.

கல்லிலே ஒரு கவிதை!

சூரியனார் கோயில்

பதின்மூன்றாவது நூற்றாண்டில் கலிங்க வம்சத்தைச் சேர்ந்த நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட கோயில் இது. கலிங்கக் கட்டடக் கலையின் கடைசிச் சான்று இதுதான். கதிரவனைக் குதிரைகள் பூட்டி இழுத்துச்செல்லும் பிரமாண்டத் தேராகவே இது சித்தரிக்கப்பட்டுள்ளது. உதயசூரியனின் முதல் கிரணம் நேராக மூலவரின் (அர்க்க தேவன்) விக்கிரகத்தின் மேலே விழுவதுபோல கட்டப்பட்டது. உச்சிவேளை மற்றும்  அந்திமப் பொழுதின் கிரணங்கள் கோயிலில் மற்ற இடங்களில் உள்ள சிலைகள் மீது விழும். 

பச்சைக் கல்லினால் ஆன (chlorite) மூசா விக்கிரகம், பூரி அரசரால் எடுத்துச்செல்லப்பட்டு, இப்போது கொல்கத்தா  அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

பல நூற்றாண்டு காலம் இந்தக் கோயில் கேட்பாரற்று மணலால் பாதியளவு மூடிக்கிடந்தது. 1905-ல் மணல் அகற்றப்பட்டது. கோயிலின் உயரம் 230 அடி வரை இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கணக்கிட்டனர்.  1869-ல் பிரதான கோபுரம் மேலிருந்து சரிந்து விழுந்து விட்டது. இப்போது மீதமிருப்பதும், நாம் காண்பதும் ஜக்மோகனா என்கிற முன்னதைவிட சிறிய கோபுரத்தையே. இதுவும் அழிந்துவிடாமல் காப்பதற்காக, அதன் கீழ் பகுதியை மணலால் நிரப்பி வாசலையும் மூடிவிட்டனர். சமீபகாலம் வரை இது கடற்கரைக்கு அருகில்தான் இருந்தது. அதனால் மாலுமிகளுக்கு திசை காட்டும் கருவியாகவே இருந்தது. இக்கோயிலை ‘கருப்பு பகோடா’ என்றும் பூரி கோயிலை ‘வெள்ளை பகோடா’ என்றும்  அழைத்தனர். 24 ராட்சத சக்கரங்கள் (12 சக்கரங்கள் இரு புறமும்), 7 பெரிய தயார் நிலையுள்ள குதிரைகளுடன் உடைய கல் தேராக இது காட்சி அளிக்கிறது. 

கல்லிலே ஒரு கவிதை!

ஒரே கல்லால் செய்யப்பட்ட பெரிய உருளைகள் காலம், இணக்கம், நிறைவான வாழ்க்கை, பரிபூரணத் தன்மை மற்றும் இயக்கத்தைச் சுட்டுகிறது. ஒவ்வொரு சக்கரமும் இரு வாரங்களையும், ஒவ்வொரு குதிரையும் ஒரு நாளையும் குறிக்கும். கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும் 20 படிகளாவது ஏறினால்தான் செல்ல முடியும். அரசு தர்பார், உச்ச நிலையில் உள்ள காதல் தம்பதி, நடன மகளிர், பல்வேறு மிருகங்கள், போர்க் காட்சிகள், செடி கொடிகள், ஒப்பனை செய்துகொள்ளும் மகளிர், வாத்தியம் இசைப்போர், குடும்பக் காட்சிகள், தேவர்கள், கடவுளர்கள், உல்லாசக் கன்னிகைகள், பல்வேறு கோணங்களில் மனிதர்கள், கப்பலோட்டிகள் என மானுடத்தின் சகல பக்கத்தையும் காட்டும் சிற்பங்கள் விரவியுள்ளன.

கல்லிலே ஒரு கவிதை!

கோனார்க் வாழ்க்கையின் ஒளிவுமறைவு அற்ற கொண்டாட்டம். உள்ளே நுழைந்தவுடன் இரண்டு யானைகளை அழுத்தும் சிங்கங் கள்... இதைத் தாண்டினால் மிக நுண்ணிய வேலைப்பாடு உடைய சிற்பங்கள் கொண்ட நாட்டிய அரங்கம். இதற்கும் அடுத்து வருவதுதான் ஜக்மோகன். இதுவே தலைவி ஆசான் அல்லது புகுமுக மண்டபம். ஒவ்வொரு பக்கமும் ஏறுவதற்குப் படிகள். இதன் எல்லா பக்கங்களிலும் பெரிய பெரிய சிலைகள். கோபுரத்தின் மேல் பட்டை பட்டையாகச் சுற்றப்பட்டுள்ளது போன்ற அமைப்பு. உச்சத்தில் நெல்லிக்காய் போன்ற வட்ட அமைப்பு. அங்கேயும் எல்லா பக்கமும் ஜால்ரா போன்ற வாத்தியங்களுடன் இசை விற்பன்னர்கள்.

வளாகத்தின் வடமூலையில் நவக்கிரகக் கோயில் உள்ளது. இச்சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டவை. இன்னுமொரு கோயில் தென்மேற்கு மூலையில். முன்னர் சாயா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

மனிதனுடைய மொழியை கல்லின் மொழி வெல்கிறது என்ற தாகூரின் கருத்து கோனார்க்கில் உண்மையாகிறது. கோயிலை மூன்று முறை சுற்றி வருகிறேன். இதை எப்படி வர்ணிப்பது? எப்படி அந்தக் கலைஞர்களைப் பாராட்டுவது? என்னிடம் வார்த்தைகள் இல்லை. கோயிலின் முன்வந்து மண்டியிட்டு வணங்குகிறேன். இதுதான் என்னால் தர முடிந்த நன்றி!

கல்லிலே ஒரு கவிதை!

எங்கு? எப்படி?

கோனார்க் செல்ல ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து பஸ் போக்குவரத்து உள்ளது. பயணம் செய்ய ஒரு மணி நேரம் ஆகும். புவனேஸ்வருக்கு சென்னையில் இருந்து நேரடி விமானப் போக்குவரத்து உள்ளது. இங்கு செல்பவர்கள் அருகில்  உள்ள பூரியில், பிரசித்திப்பெற்ற ஜெகன்நாதர் ஆலயத்துக்கும் சென்று வரலாம்.